என் வீட்டுத் தோட்டத்தில்...வீட்டில் தோட்டம் வளர்க்க வேண்டும். ஆனால் இடம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்து மாடித்தோட்டம் போடுபவர்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள். “அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாய  குடும்பம். எனவே தோட்டம் பற்றிய சிந்தனை எனக்குள் எப்போதும் உண்டு. படிப்பு, வேலையென நகரத்து வாழ்க்கைக்குள் வந்த பிறகு தோட்டம் எல்லாம் சாத்தியமா எனத் தோன்றியது.

ஆனாலும் இயற்கை முறையில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் பற்றிய சிந்தனை எப்போதும் இருந்ததால் அதற்கான வாய்ப்பை தேடத் தொடங்கினேன். அப்போதுதான் மாடித் தோட்டம் பற்றி நிறையத் தெரியவந்தது. மடிப்பாக்கத்தில் சொந்த வீடு வாங்கிய பிறகு செயலில் இறங்கிவிட்டேன்” என பேசத் துவங்கிய கவிதா மனிதவள மேம்பாடு குறித்து முதுநிலை பட்டம் பெற்று பணியில் இருக்கிறார்.

“இந்த தட்பவெப்ப நிலைக்கு இதுதான் வளரும் அதுதான் வளரும்னு நினைப்போம். ஆனால் செடி வளர்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்தால் எந்தச் செடியாக இருந்தாலும் நன்றாகவே வளர்கிறது” என்கிறார். “ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 6 செடிகளுடன் துவங்கி இந்த மாடித்தோட்ட முயற்சியில் இறங்கினேன். இன்று என்னிடம் 105 விதமான பல்வேறு செடிகள் உள்ளன” என்கிறார் புன்னகையுடன்.

“மண் தொட்டிகள் மிகவும் கனமாக இருக்கும் என்பதற்காக, மாடித்தோட்டத்தில் செடி வளர்ப்பதற்கென, பல்வேறு வடிவில், பல அளவில், தார்ப்பாயால் தயாரிக்கப்பட்ட, நல்ல தரமான பைகள் கிடைக்கின்றன. இவை அளவிற்கேற்ப 55ல் இருந்து 150 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. இதன் பயன்பாடு ஐந்து வருடம் வரை வருகிறது. இந்தப் பைகளின் கீழே சின்னச் சின்னத் துளைகள் இருக்கும்.

அதிகமாக விடப்பட்ட தண்ணீர் அதன் வழியே வெளியேறிவிடும். பைகளின் கொள்ளளவு பொறுத்து 3 முதல் 5 செடிகளைக் கூட ஒரே பையில் வைக்கலாம். கீரை மாதிரியான கொத்துச் செடிகளுக்கு, அதற்கேற்ற உயரம் குறைவான அகலமான பைகள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. மரமாக வளரக் கூடிய செடிகளுக்கு, அதற்கேற்ப உயரத்தில் பை உள்ளது. மாடித் தோட்டத்தில் விடப்படும் தண்ணீர் தரைதளத்தை பாதிக்காத அளவுக்கு Drainage cells இப்போது கிடைக்கிறது.

இதன் மேல் பைகளை வைத்துவிட்டால், தண்ணீர் தேங்காமல் வழிந்து துளைகளின் வழியே சென்றுவிடும். வெயில் செடிகளில் நேரடியாக தாக்காத வண்ணம் தடுப்புகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு மேலே கவர் செய்துவிட்டால், வெயிலின் தாக்கம் நேரடியாக செடிகளில் படாமல், தடுப்பானது பாதியாகக் குறைத்து வழங்கும். மேலும், நம் வருமானத்துக்கு ஏற்றபடி, மாடித் தோட்டத்திற்கான பட்ஜெட்டை ஒதுக்கலாம். நான் மாதம் ஆயிரம் ரூபாயினை என் தோட்ட பராமரிப்பிற்காக செலவு செய்கிறேன்” என்கிறார்.

மூலிகைச் செடிகளில் துளசி, இரண்டு விதமான வெற்றிலைக் கொடி, முடக்கத்தான், வல்லாரை, தூதுவளை, சித்தரத்தை, பிரண்டை, கற்பூரவல்லி, மஞ்சள், இஞ்சி ஆகியவை உள்ளன. குளிர்பிரதேச காய்கறிகளான உருளைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட் என எல்லாமே இவர் வளர்க்கிறார். காய்கறிகளில் வெங்காயம், நாட்டு கத்தரிக்காய், முள்ளுக் கத்தரி, வெள்ளைக் கத்தரி, வெண்டையில் இரண்டுவிதமான நிறத்தில் உள்ள வெண்டைச் செடி, புடலை, அவரை, சுண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய் செடியில் இரண்டு வண்ணங்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை வளர்க்கிறார். அவற்றில் இருந்து தேவைப்படும் சமயத்தில் சமைப்பதற்கான காய்களை எடுத்துக்கொள்கிறார்.

“கீரை வகைகளில் பாலக்கீரை, புளிச்ச கீரை, முளைக் கீரை, அரைக்கீரை, சிறு கீரை மற்றும் வெளிநாட்டில் கிடைக்கும் லெட்யூஸ் இலை போன்ற கீரை வகைகளும் என் மாடித் தோட்டத்தில் உள்ளது. மரங்களில் எலுமிச்சை மற்றும் கொய்யா மரம் உள்ளன. அவற்றில் காய்களும் காய்க்கத் துவங்கியுள்ளன. திராட்சைக் கொடி உள்ளது. திராட்சைக் கொடியை நம்மிடம் அடையாளம் காட்டினார். பெரம்பூரில் உள்ள எனது நண்பர் ஒருவர் வீட்டின் மாடி முழுவதும் திராட்சை தோட்டம் வைத்து அழகாக பராமரிக்கிறார்” என்று கூடுதல் தகவலையும் தந்தார்.

பூக்களில் மல்லிகை, பலவண்ண ரோஜா செடிகள், ஆர்க்கிட் மற்றும் பல்வேறு அழகிய குரோட்டன்ஸ் செடிகளையும் வைத்துள்ளார். அவற்றில் நண்பர்கள், உறவினர்கள் அன்பளிப்பாகத் தந்த செடிகளையும் நினைவாக வைத்துள்ளார். கேக்டஸ் பிளான்ட் எனப்படும் சூட்டைத் தணிக்கும் செடியும் இவரிடம் உள்ளது. இதன் விலை சற்று அதிகம் என்றாலும் மென்பொருள்துறை போன்ற உடல் சூட்டை தரும் வேலைகளில் ஈடுபடுவோர் இந்தச் செடியை கணிப்பொறியின் அருகில் வைத்து வேலை செய்தால், நம் உடல் உஷ்ணத்தால் பாதிப்படையாமல், அதில் இருந்து வரும் அதிர்வைத் தடுக்கும் சக்தி கொண்டது என்றும் விளக்குகிறார்.

லெமன் கிராஸ் என்னும் செடி கொசு அதிகம் வராமல் தடுக்கும் என்பதுடன் அந்த இலையில் தேனீர் தயாரித்து குடித்தால் எலுமிச்சை மனத்துடன் அந்த தேனீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று விளக்கம் தந்தார். விதைகளையோ, சின்ன நாற்றுகளையோ பைகளில் வைப்பதற்கு முன்பு அதில் கோக்கோ பிட், தேங்காய் நார் சக்கை, வெர்மி கம்போஸ்ட், மாடித் தோட்டத்திற்கு ஏற்ற லேசான மண் என எல்லாவற்றையும் கலந்து வைக்க வேண்டும்.

தினமும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் கழிவுகளை தூக்கி எறியாமல் இதில் கொட்டி வைத்துவிட்டால் நாளடைவில் மக்கி உரமாக மாறிவிடும் என்கிறார். “எனது மாடித்தோட்டத்திற்கு தேவையான உரத்தை ஏரோபிக் கம்போஸ்ட் முறையில் நானே சொந்தமாக தயாரிக்கிறேன்” என அதன் வடிவமைப்பு, உரம் தயாரிப்பு முறைகளை விளக்குகிறார். இதில் கிடைக்கும் உரத்தை எடுத்து தொட்டிகளில் இட்டால் செடிகளின் வளர்ச்சிக்கு வலுவாக இருக்கும்.

இத்துடன் ஆட்டுச் சாணம், மாட்டுச் சாணம், வெர்மி கம்போஸ்ட் உரங்களையும் செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். பூச்சிக்கொல்லியான ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்து மாட்டுக்கோமியம், பஞ்சகவ்யம், வேப்பெண்ணெய், 3ஜி என அழைக்கப்படும் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்த கலவையை தண்ணீரில் கலந்து, பூச்சிகளை சாகடிக்கும் மருந்தாக பயன்படுத்துவதே சிறப்பு. இதுவே இயற்கையான பூச்சிக்கொல்லி முறை என்கிறார்.

“இவற்றை நான் எனது மாடித் தோட்டத்திற்கு பூச்சியின் தாக்குதல் இருக்கும்போது பயன்படுத்துகிறேன். மாடித்தோட்டம் தொடர்பாக எங்கே எதைப் பார்த்தாலும் உடனே வாங்கிவிடுவேன்” எனக் கூறுகிறார். “சமூக வலைத்தளமான முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் உள்ள நட்பு வட்டம் மூலமாக உபயோகமான தகவல்களை பகிர்ந்துகொள்வோம். இது எங்களின் தோட்ட வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பசுமை நிறைந்த விதவிதமான இந்தச் செடிகளுடனும், மலர்களுடனும் நமது நேரத்தை செலவிடும்போது மனதுக்கு இதமாக இருப்பதுடன் வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முக்கியமாக ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகவும் இருக்கிறது. எனது குடியிருப்பில் உள்ள குழந்தைகளையும் இணைத்துக்கொண்டு தோட்ட வேலைகளான விதைபோடுவது, நாற்று நடுவது, தண்ணீர் விடுவது, உரமிடுவது போன்ற வேலைகளை செய்யும்போது குழந்தைகளும் ஆர்வமுடன் செடி வளர்ப்பில் ஈடுபடுவதுடன் செடிகளின் வளர்ச்சியை கண்டு ரசிக்கிறார்கள்” என முடித்தார்.

- மகேஸ்வரி