உலகை வியக்க வைக்கும் 9 வயது சிறுமி



ஸ்ரீநகரில் இருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில், பந்திபூரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 9 வயதான தாஜாமுல். இவரின் தந்தை கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்வதன் மூலம், இந்திய பணத்தில் ரூ.10,000 மாத சம்பளம் பெறுகிறார். இந்தச் சிறுமி தனது சிறுவயதில் இருந்தே குத்துச்சண்டை பயிற்சியை தொடங்கினார். கடந்த ஆண்டு ஜம்முவில் நடந்த மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

2015ல் இந்திய தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தாஜாமுல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 13 வயது போட்டியாளரை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். தாஜாமுல் 2014ல் உள்ளூரில் உள்ள ஒரு தற்காப்புக் கலை பயிற்சி அகாடமியில் குத்துச்சண்டை பழகத் தொடங்கினார்.
 
“நான் விளையாட்டு அரங்கத்திற்கு அருகே நடந்து கொண்டிருந்தேன். பல இளவயது சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பயிற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்கள் குஸ்தி சண்டை போடுவதை நான் பார்த்தேன். எனது தந்தையிடம் கூறி, நானும் அங்கு சேர வேண்டும் என்றேன். அவர் அனுமதித்தார். என்னை எதிர்த்துப் போட்டியிடும் நபரைக் கண்டதும் நான் சிறிது பயந்தேன்.

ஆனால் இந்தச் சண்டையில் வயதும் உடல் அமைப்பும் ஒரு விஷயமே இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நான் மிகக் கவனமாக இருப்பேன். எனது சிறந்த திறனை வெளிப்படுத்துவேன் என்று எண்ணினேன்,’’ என்கிறார் தாஜாமுல். இந்த மாத முற்பகுதியில், தாஜாமுல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஐந்து நாட்களில் ஆறு வெற்றிகளைப் பெற்றார். சுமார் 90 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், அவர் சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற வீராங்கனைகளை எதிர்த்துச் சண்டையிட்டு வென்று சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
 

- ஜெ.சதீஷ்