என் சமையலறையில்இப்போது ஆவாரம் பூ பூக்கும் காலம். ஆவாரம் பூவை ஒரு பிடி பறித்து சூடான நீரில் போட்டு எடுத்து பருப்புடன் பூண்டு, வெங்காயம், சீரகம், மிளகாய் சேர்த்து வேகவைத்து உப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடலில் அதிகப்படியான கொழுப்பு கரைகிறது. இதயவலி குணமாகிறது. ரத்தக் குழாய்களில் உண்டாகும் வைரஸ் தொற்றுநோய் சரியாகிறது.

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பூண்டு, உளுத்தம்பருப்பு, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நல்ெலண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும். சாதம், இட்லி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

- சு. கண்ணகி, மிட்டூர்.

* தக்காளிப் பழத்தை உப்புத் தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் சீக்கிரம் அழுகிப் போகாது.
- பி.கவிதா, கோவிலாம்பூண்டி.

* காளான் ஃப்ரஷ்ஷாக இருக்க பிளாஸ்டிக் கவருக்குப் பதிலாக பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
- ரெ. கயல்விழி, வடுகப்பட்டி.

* அடைக்கு ஊற வைக்கும்போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைத்தால் அடை மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.

* அரிசி களைந்த தண்ணீரில் சிறிது உப்புபோட்டு நறுக்கிய பாகற்காய் துண்டுகளை கால் மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்துவிட்டுச் சமைத்தால் பாகற்காய் கசக்காது.
- பா. கார்த்திகா, காஞ்சிபுரம்.

* புளிக்குழம்பு செய்யும்போது 1/4 டீஸ்பூன் வெந்தயம் போட்டுத் தாளித்தால் குழம்பின் மணம் தூக்கலாக இருக்கும். டேஸ்ட்டும் கூடும்.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

* கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் அடியோடு நீங்குவதோடு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவுகிறது.
- திருமதி. நா. செண்பகா, பாளையங்கோட்டை.

* சப்பாத்தி மாவு மீந்து விட்டால் அதன் மீது ஓரிரு சொட்டுகள் எண்ணெய் தடவி ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாது.ஃப்ரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவை மைக்ரோவேவ் ஓவனில் 30 வினாடிகள் வைத்து எடுத்தால் மிகவும் மிருதுவாகி விடும்.

* தக்காளி சாதம் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும்.

* பருப்பு ரசத்துக்கு இரண்டு பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும்போது போட்டால் ரசத்தின் சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.
- எம்.ஏ. நிவேதா, திருச்சி.

* வாரத்தில் ஒரு வேளைக்காவது சுண்டைக்காய், வாழைத்தண்டு, மணத்தக்காளி, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

* தொடர்ந்து தண்ணீர் படும் தரைப்பகுதியில் கறை போன்று காணப்பட்டால், சுண்ணாம்பை சிதறி தேய்த்துக் கழுவுங்கள்.
- ஹெச். ராஜேஸ்வரி, மாங்காடு.

* ஒரு பிடி முடக்கத்தான் இலை, சீரகம் சேர்த்து அரைத்து தோசை மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டால் வாத நோய் குணமாகும்.
- சு. கண்ணகி, மிட்டூர்.

* அடுப்பு சமையல் மேடை எல்லாம் பிசுபிசுப்பாக இருந்தால் சாதாரண துணியால் துடைத்துவிட்டு, பிறகு சலவை சோடாவை வெந்நீரில் கலந்து பிசுக்கு உள்ள இடங்களில் தடவி, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சிடும்.
- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.