இது கேமரா கண்காயத்ரியின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அழகியல் தன்மையோடு சூழலை கண் முன் நிறுத்துகின்றன. திருமண நிகழ்வுகளில் மண மேடைக்கு எதிரே கேமராவை நிறுத்தி வைத்து எடுக்கப்படும் சம்பிரதாயமான புகைப்பட முறையை விட எல்லோரது விருப்பத் தேர்வாகவும் மாறி விட்டது கேண்டிட் போட்டோகிராஃபி. சொந்தபந்தங்கள் சூழ நடைபெறும் சுப நிகழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் படம் பிடிப்பதுதான் கேண்டிட் போட்டோகிராஃபி.

இத்துறைக்குள் தற்போது பெண்களின் வருகை அதிகரித்திருக்கிறது. பெண்களால் களமாடக்கூடிய துறை கேண்டிட் போட்டோகிராஃபி என்கிறார் காயத்ரி. ‘‘புகைப்படத்துறை மீதான ஆர்வம் என் இயல்பிலேயே இருந்தது. இருந்தாலும் வேலைக்கான படிப்பு என்பதற்காக சிங்கப்பூரில் கணிப்பொறியியல் படித்து விட்டு அமெரிக்காவில் வேலை பார்த்தேன். அந்த வேலை மீதான பிடிப்பு இல்லாமல் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பினேன். புகைப்படத்துறையில்தான் இயங்க வேண்டும் என்று தோன்றியது.

புகைப்படக் கலைஞர் அமர் ரமேஷின் ஸ்டுடியோ ஏ-வில் இணைந்து புகைப்படத்தொழில்நுட்பம் கற்றுக் கொண்டேன். உண்மைத் தன்மையை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். என்ன இருக்கிறதோ அதைக் கொண்டே அழகுணர்ச்சியோடு புகைப்படம் எடுக்க வேண்டும். யதார்த்தத் தருணங்களை படம் பிடிப்பதற்காக எந்நேரமும் தயார் நிலையிலேயே இருக்க வேண்டும்.

மணமக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மனிதர்களையும் பதிவு செய்ய வேண்டும். எல்லோரும் ஏதாவதொரு தருணத்தில் மிகவும் அழகான உணர்ச்சியை வெளிப்படுத்துவர். அதை கேமராவுக்குள் கொண்டு வருவதற்கான விழிப்பு நமக்குத் தேவையானது. திருமண வீடுகளை இந்தியாவின் மினியேச்சர் என்றே சொல்லும்படி பலதரப்பு மக்களையும் அங்கு காண முடியும். பலவித கலாச்சாரங்கள் உலவும் இடமாக அது இருக்கும். புது விதமான மனிதர்கள்/ கலாச்சாரங்களை படம் பிடிக்கும்போது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மதங்களைக் கடந்து அனைவரது வீடுகளுக்குள்ளும் நுழைகிற வாய்ப்பு புகைப்படக்காரராகக் கிடைக்கிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், கேரளா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மும்பை என பல பகுதிகளில் இதுவரையிலும் 120 திருமணங்களுக்கும் மேல் புகைப்படம் எடுத்திருக்கிறேன். அனைத்தையும் ஒரே டெம்ப்ளேட்டாக செய்ய மாட்டேன்.

ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்ட முனைவேன். ஸ்டுடியோ ஏ-வில் என்னோடு சேர்த்து 6 புகைப்படக்காரர்கள் இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கில் பயணம் செய்து அந்தப் பகுதி மக்களின் திருமண முறைகளை புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக உள்ளது. கூடிய சீக்கிரத்தில் அதை நிறைவேற்றிடுவேன்’’ என்கிறார்.

நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம், வேளாங்கண்ணி திருவிழா ஆகியவற்றில் திரள் திரளாகக் கூடிய மக்களை புகைப்படம் எடுத்திருக்கிறார் காயத்ரி. மனிதர்கள் மற்றும் அவர்களின்  கலாச்சாரங்களை படம் பிடிப்பதில்தான் ஆர்வம் அதிகம் என்கிறார். ‘‘பெண்ணாக இருந்து  கொண்டு ஏன் இந்தத் துறைக்கு வந்தீர்கள்? என பலரும் என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

உண்மையில் பெண்கள் இத்துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதுதான் உண்மை. பெண்களுக்கு இத்துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. விஸ்காம் படிக்கிற யாரும் தாராளமாக இத்துறைக்கு வரலாம். நிறைய பெண்கள் வர வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. கேண்டிட் போட்டோகிராஃபியில் ஆர்வம் உள்ள பெண்களை உதவியாளராக சேர்த்துக் கொண்டு பயிற்சி தர நான் தயாராக இருக்கிறேன்’’ என்கிறார் காயத்ரி.

- கி.ச.திலீபன்