அன்பெனப்படுவது யாதெனில்தொடக்கப்பள்ளியில் குரங்கும் குல்லா வியாபாரியும் கதையை படிக்காதவர்களே இருக்க முடியாது. படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும் அந்தக் கதை நம்மை குஷிப்படுத்துவதோடு, குரங்கின் இயல்பை, குழந்தைப் பருவத்திலே நமக்கு உணர்த்துவதாய் இருக்கும். மிகச் சமீபத்தில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களுடைய காட்சி  படம் பிடிக்கப்பட்டு, அனைவராலும் பகிரப்பட்டது. அந்தக் காட்சியை பார்க்காமல் சமூக வலைத்தளத்தை கடந்து சென்றவர்களே இல்லை எனும் அளவிற்கு வைரலானது.

காட்சி 1:
சென்னை கோவூரை அடுத்து உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். நான்காமாண்டு மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் இருவர், நான்காவது மாடியில் இருந்து நாயைத் தூக்கி எறிந்து, அது கீழே விழுந்து வலி தாங்காமல் கத்துவதையும், கதறி அழுவதையும் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் காணொளியாக வெளியிட்டிருந்தனர்.

இந்தக் காட்சி வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் வழியாக, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகி, அந்த இரு மருத்துவ மாணவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி ரூபனால், அந்த நாய் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, வேப்பேரியில் உள்ள விலங்குகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்சமயம்  ரூபனின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

காட்சி 2:
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் பயிலும் நான்கு மருத்துவ மாணவர்கள், கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த குரங்கை பிடித்து, அதன் கால்களை கயிரால் கட்டி, உச்சகட்டமான சித்ரவதைகளை செய்து, கொன்று புதைத்த சம்பவம், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், மீண்டும் வைரலாகப் பரவி கண்டனங்களுக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் புதைக்கப்பட்ட பெண் குரங்கின் சடலம், தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்ததில் குரங்கு சித்ரவதை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த இருவேறு சம்பவங்களும் உயிர்களை காப்பாற்றும் பணியைச் செய்ய படித்துக்கொண்டிருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதுதான் வேதனை. உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் மருத்துவ மாணவர்கள், விலங்குகள் படும் துன்பத்தை இன்பமாக ரசிக்கும் செயல் அனைவரின் கண்டனத்திற்கும் உள்ளானது.

வாழ்க்கைக் கல்வியை கற்பித்து, அன்பை போதிக்க வேண்டிய கல்வி நிலையங்கள், மூளையை மழுங்கடிக்கும், இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும், மனிதாபிமானத்துடன் அணுகி, உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவத்துறை, அந்நிலைக்கு எதிராய் மாறிப்போயிருப்பதையுமே, அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இருவேறு சம்பவங்களும் உணர்த்துகின்றன.

சம்பவம் 1:
1923ம் ஆண்டு டோக்கியோவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது. தனியாக நின்றுகொண்டிருந்த குட்டி நாய் ஒன்றை கண்ட பேராசிரியர் யுனோ, அதை எடுத்து வளர்த்தார். அதற்கு “ஹச்சிகோ” எனப் பெயர் வைத்தார். மிகப் புத்திசாலித்தனமாக நடந்துகொண்ட ஹச்சிகோ, பேராசிரியர் யுனோ மீது அளவற்ற அன்பு வைத்திருந்தது. தினமும் காலை அவருடன் ஷிபுயா ரயில் நிலையம் வரை சென்று வழியனுப்பும். மாலை அவர் திரும்பும் நேரம் அவருக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கும். ஒருநாள் யுனோ திரும்பி வரவே இல்லை. அவருக்குத் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அவர் சென்ற இடத்திலேயே இறந்துவிட்டார்.

அடுத்த 9 ஆண்டுகளும் தொடர்ந்து தினமும் ரயில் நிலையத்துக்குச் சென்று, தன்னுடைய எஜமானருக்காகக் காத்திருக்கத் தொடங்கியது ஹச்சிகோ. இந்த விஷயம் ஊடகங்கள் மூலம் ஜப்பான் முழுவதும் பரவியது. நாயின் அன்பைக் கண்டு கண்கலங்காத ஜப்பானியர்களே இல்லை. ஹச்சிகோ சிலை ஒன்றை டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்தில்  நிறுவினர். பள்ளிக் குழந்தைகளிடமும் ஹச்சிகோவின் அன்பைப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தனர்.

சிலை வைத்த ஓராண்டிலேயே ஹச்சிகோ மரணம் அடைந்தது. 1948ம் ஆண்டு ஹச்சிகோ நினைவாக மீண்டும் ஒரு வெண்கலச் சிலையை நிறுவினர். ஹச்சிகோ உலகை விட்டுச் சென்று 80 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும், ஜப்பானிய மக்கள் நினைவை விட்டு நாய் ஹச்சிகோ அகலவில்லை. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் நாய் சிலை அருகே வந்து படங்களை எடுத்துக்கொள்வதுடன், ஹச்சிகோ நாயின் கதையைப் பேசிக்கொள்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவம் ஹாட்சி (HACHI) எனும் பெயரில் படமாக்கப்பட்டு 2009ல் ஜப்பானில் திரையிடப்பட்டது.

சம்பவம் 2:
உத்தரப்பிரதேச ரயில் நிலையம் ஒன்றில், விபத்தில் சிக்கிய குரங்கு ஒன்றை, மற்றொரு குரங்கு காப்பாற்றி மனிதர்களுக்கு படிப்பினை தந்துள்ளது. கான்பூர் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தின் இடையே குரங்கு ஒன்று தூக்கி வீசப்பட்டது. மயக்கமடைந்து கிடந்த அந்த குரங்கை மீட்க, அதனுடன் சுற்றித்திரிந்த மற்றொரு குரங்கு நீண்ட நேரமாக போராடியது. வாயில்லாத அந்த ஜீவனால் மீட்க முடியாமல் நீண்ட நேரம் தவித்தது.

தண்டவாளத்திற்கிடையே சிக்கிக் கிடந்த குரங்கை, பல முறை முயன்றும் சக குரங்கால் மீட்க முடியவில்லை. ஆனாலும் மனம் தளராமல், மயக்கமுற்று கிடந்த குரங்கை விடாமல் முயன்று காப்பாற்றியது. மயக்கம் தெளிவதற்காக அக்குரங்கை, சக குரங்கு தண்ணீரில் தூக்கிப் போட்டது. பின்னர் மயக்கம் தெளிந்த குரங்கு தன்னைக் காப்பாற்றிய குரங்கோடு ஒன்றாக இணைந்து சென்றதை, ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் பார்த்து, வியப்பின் உச்சிக்கே சென்றனர்.  அந்த நிகழ்வை காட்சியாக்கி, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர்.

மனிதர்கள் மறந்துவிட்ட அன்பினை எங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதைப்போல் அமைந்துள்ள இந்த இரு சம்பவங்களும். குரங்கிலிருந்து வந்த நாம், அன்பை புறந்தள்ளி, மனிதம் மரித்தவர்களாய் மாறக் காரணம் என்ன? உயிரை வதைக்கும் கொடூரச் செயலில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் எப்படி மனித உயிர்களை மதித்து சிகிச்சை அளிப்பார்கள் என்ற கேள்விகளும் நமக்குள் எழாமல் இல்லை.

- மகேஸ்வரி