என்ன எடை அழகே! - சீசன் 3பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர்

இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய எடைக் குறைப்புப் பயணம், இதோ 6 மாதங்களைக் கடந்து நிறைவுப் பகுதிக்கு வந்திருக்கிறது. சீசன் 3ல் பங்கேற்ற தோழிகளிடம் தொடர்ந்து இடைவிடாத உற்சாகமும், உத்வேகமும் இருந்தது. குங்குமம் தோழியும், தி பாடி ஃபோகஸ் உரிமையாளரும், டயட்டீஷியனுமான அம்பிகா சேகரும் இணைந்து நடத்தும் ‘என்ன எடை அழகே’ எடை குறைப்பு ரியாலிட்டி தொடரில் சீசன் 3ல் 9 பெண்கள் தேர்வானார்கள்.

கடைசி வரை 5 பேர் மட்டுமே உடல் குறைப்புப் பயணத்தில் தொடர்ந்தனர். இடையில் நின்ற 4 பேரில் உதய சூர்யா ஆரம்ப எடையாக 115ல் இருந்து 110 வரை எடை குறைந்தார். மேனகா 108ல் இருந்து 103 வரை எடை குறைந்திருந்தார். சுஜிதா 79ல் இருந்து 74 வரை எடை குறைவானார்.

சுப்ரியா 76.4ல் இருந்து 69 வரை எடை குறைவானார். பல்வேறு குடும்ப சூழல் மற்றும் வேறு சில காரணங்களால், அவர்களால் எடைக் குறைப்பு பயணத்தில் தொடர்ச்சியாக பங்கேற்க முடியவில்லை. மற்ற 5 பேரில் எடைக் குறைப்பில் நம்பர் 1 இடத்தை அடையப் போவது யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது…இனி ஓவர் டு வின்னர்ஸ்...

தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் அதிகரித்துள்ளது

கீதா பார்த்திபன் (முதல் இடம்)

ஆரம்ப எடை 112 கிலோ,  தற்போதைய எடை 95 கிலோ

‘‘முதலாவது இடத்தைப் பிடித்துள்ளேன். கடந்த 6 மாத காலமாக உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள், யோகா, தியானம் மற்றும் இதில் தரப்பட்ட பயிற்சிகள் மூலம் 17 கிலோ  அளவு எடையை குறைத்துள்ளேன். இது எனது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் அதிகரித்ததுடன், அழகு, ஆரோக்கியம் தொடர்பான எனது நேர்மறை எண்ணங்களையும் முன்னேற்றப் பாதையில் செலுத்துகிறது.

என்ன எடை அழகே சீசன்-3ல் தேர்ந்தெடுக்கப்படும் முன் டாக்டர்களால் பேரியாட்டிக் சர்ஜரிக்கு (எடை குறைப்பிற்கான அறுவை சிகிச்சை) பரிந்துரைக்கப்பட்டிருந்தேன். சிறிது தூரம் நடப்பதற்கே சிரமமாகி, தனியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையிலும், கால்களில் வலி மற்றும் வீக்கம் போன்ற உடல் உபாதைகளாலும் மிகுந்த மனஅழுத்தத்திலும் இருந்தேன். இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடப்பதாகட்டும், நீண்ட தூர நடைப் பயிற்சியாகட்டும், கடினமான உடற்பயிற்சிகளாகட்டும், மிக எளிதாக, சிரமம் இல்லாமல் செய்கிறேன்.’’

எனது வாழ்க்கையே மிகவும் மாறியுள்ளது

இந்துமதி ராஜசேகரன் (இரண்டாம் இடம்)

ஆரம்ப எடை 78.2 கிலோ, தற்போதைய எடை 65 கிலோ

‘‘நான் சென்னை கிண்டியைச் சேர்ந்தவள். எனக்கு சுமார் 10 ஆண்டுகளாக முதுகுவலி இருந்து வந்தது. எனது ஆரம்ப எடை 78.2. இந்தப் பயிற்சி மற்றும், உணவுக் கட்டுப்பாடு முறைகளின் மூலமாகவும் எனது எடை 13 கிலோ குறைந்து உள்ளது. இதன் காரணமாக நான்  மிக்க மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் உள்ளேன். இப்பொழுது நான் 65 கிலோ உள்ளேன். இந்த எடையை தொடர்ந்து இருப்பதற்கே நான் விரும்புகிறேன். நான் இப்பொழுதெல்லாம் மிகவும் சுறுசுறுப்பாகவும் சந்தோஷத்துடனும் காணப்படுவதாக உணர்கிறேன். எனது வாழ்க்கையே மிகவும் மாறியுள்ளது. இவை அனைத்தும் எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.’’

உடல் பயிற்சியில் அக்கறை இன்றி இருந்தேன்

ராதா சம்பத் (மூன்றாவது இடம்)

ஆரம்ப எடை 102 கிலோ, தற்போதைய எடை 89.5 கிலோ

‘‘நான் முதலில் 102 கிலோ எடை  இருந்தேன். என் கணவர் யோகா மாஸ்டராக இருந்தும் நான் உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்யாமல் இருந்தேன். என்ன எடை அழகே சீசன் 3ல் தேர்வான பிறகு எளிய முறையில் உடற்பயிற்சிகளைப் பயின்று, தினமும் பயிற்சியை செய்து வருகிறேன். இதில் வழங்கிய பயிற்சி மிகவும் பயன் அளித்தது.

தினமும் மாலை நேரத்தில் தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதுடன், காலை நேர உணவாக கொய்யாப் பழம், கேரட், இளநீர் இவைகளை மட்டுமே எடுத்துக் கொண்டேன். மதிய உணவுக்கு சிறுதானிய உணவுகளுடன்,  காய்கறிகளையும் சமைத்து உண்டு வந்தேன். வாரம் இரண்டு முறை மிதமான வறுவல் செய்த மீன் மற்றும் மாதம் ஒரு முறை இறைச்சிகளால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவேன். தற்போது 89.5 கிலோவாக எடை குறைந்திருக்கின்றேன்.’’

உடல் எடையை எப்படிக் குறைத்தாய் எனக் கேட்கிறார்கள்

S.அனிதா
 
ஆரம்ப எடை 93 கிலோ, தற்போதைய எடை 83 கிலோ

‘‘என் வாழ்க்கையில் ஒல்லியாக மாறுவது மிகப்பெரிய கடினமான செயல் என்று நினைத்து அதற்கான ஒரு முயற்சிகூட எடுத்ததில்லை. ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு என்னாலும் எடை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. எனக்கு நீர்கட்டி பிரச்னையுடன்(PCOD), மாதவிடாய் பிரச்னையும் இருந்தது. இப்பொழுது அந்தப் பிரச்சனைகள் சரியாகி, மாதவிடாய் தொடர்ச்சியாக வருகிறது. இப்போது மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது. தன்னம்பிக்கை அதிகமாகியுள்ளது. என்னைப் பார்க்கிறவர்கள் எப்படி உடல் எடையை குறைத்தாய் என்று கேட்கிறார்கள். இதில் தரப்பட்ட உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி மற்றும் தொடர் பயிற்சிகள் மூலமே இது சாத்தியமானது. இன்னும்  எடையினை குறைக்க ஆசைப்படுகிறேன்.’’

கோவையிலிருந்து நான் மட்டுமே தேர்வானேன்

K.சசிரேகா

ஆரம்ப எடை 110 கிலோ, தற்போதைய எடை 102 கிலோ

‘‘இதில் வழங்கிய பயிற்சி வகுப்புகளில், கோயம்புத்தூரில் இருந்து தொடர்ந்து என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அவர்களின் ஆலோசனையின் பேரில் உணவுக் கட்டுப்பாடு, யோகா மற்றும் நடைப்பயிற்சி என அனைத்தையும் கடைப்பிடித்து எனது எடையை குறைத்தேன். இருந்தும் என்னால் முதல் இடத்திற்கு வர இயலாமல் போனது, எனக்கு வருத்தமே. சீசன்-3 போட்டி முடிந்தாலும் மீண்டும் முயன்று உடல் எடையை நன்றாக குறைத்து, சரியான அளவில் வைக்க முயற்சிப்பேன்.’’

- மகேஸ்வரி
படங்கள்: ஆர்.கோபால்


வெற்றி பெற்ற தோழிகளுக்கு சேலம் ரதி சில்க்ஸ் வழங்கும் பட்டுப்புடவையுடன் கூடிய கொண்டாட்டம் அடுத்த இதழில்!