காலங்களில் அவள் வசந்தம்



செல்லுலாய்ட் பெண்கள்

-சாவித்திரி

சாவித்திரி ஒரு காவியம், ஒரு சகாப்தம், ஒரு பிம்பம், ஒரு குறியீடு, ஓர் உதாரணம். சாவித்திரி என்றதும் பலருக்கும் ’பாசமலர்’ ராதா பாத்திரம் நினைவுக்கு வரலாம். வேறு சிலருக்கோ ’மணந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவி’ என பி.எஸ்.வீரப்பா கூறுமளவு கிறங்கடித்த மகாதேவி என்ற சோழ இளவரசி நினைவுக்கு வரலாம். ஆனால், எனக்கோ சாவித்திரி என்றவுடனே ’கை கொடுத்த தெய்வம்’ படத்தின் கதாபாத்திரம் கோகிலாவைத்தான் நினைவலைகள் கொண்டு வந்து சேர்க்கின்றன.

கோகிலா ஒரு வெகுளிப்பெண் பாத்திரம். இன்னொசென்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு விளக்கமளிக்கும்போது முட்டாள்தனமே இன்னொசென்டாக மருவுகிறது. வெளுத்ததெல்லாம் பாலென்று நம்புவதால் அவர் முட்டாளாக்கப்படுகிறார். ஆனால் கபடமற்ற தன்மைதான் ஒவ்வொரு சொல்லையும் நம்பச் செய்கிறது. அதற்காக அவர் ஆளுமை அற்றவர் எனச் சொல்ல முடியாது. உண்மையில் ஒவ்வொரு வெகுளியின் ஆளுமை என்பது, தான் நம்புவதை பிடிவாதமாகப் பிடித்துக்கொள்வது. இதற்காக அவர் பகுத்தறிவற்றவர் என்றும் கூறிவிட முடியாது. கோகிலா பாத்திரம் அத்தகையது.

சுதந்திரமான ஒரு சூழலில் வளரும் சுதந்திர மனப்பான்மை கொண்ட பெண் கோகிலா. அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறாள். அவளின் அன்பு நிபந்தனையற்றதாக இருக்கிறது. ஆண், பெண் வேறுபாடெல்லாம் அவளுக்குத் தெரியாது. வீட்டுக்கு வந்த விருந்தினன், தனக்கு யாரென்றே தெரியாத ஒருவன், அவன் தவறுதலாகக் கையை அறுத்துக்கொண்டதும் ஓடிப்போய் காயத்துக்கு மருந்து போடுவதும், அன்பு காட்டுவதும் கோகிலாவின் இயல்பென்றாலும் அது அவளின் எதிர்காலத்தையே இல்லாது அழிக்கிறது.

கோகிலா பாத்திரத்தை சாவித்திரி செதுக்கியிருப்பது உண்மையில் உலகத்தரமானது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், எனக்கென்னவோ சாவித்திரியின் அசல் வாழ்க்கையே கோகிலா பாத்திரம்தானோ என்று நினைக்கத் தோன்றும் அளவுக்குக் குழந்தைத்தனமும், வெகுளித்தனமும், கள்ளம் கபடமற்ற குணாம்சமும் அவரிடம் படிந்து போயிருந்ததைத்தான் அவரது வாழ்க்கையின் நிகழ்வுகளும், அவரின் இறுதிக்காலமும் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றன. குழந்தை உள்ளம் கொண்ட, கள்ளம் கபடமற்ற பெண் கோகிலாவாக அந்தப் படத்தில் நடித்ததன் மூலம், அப்பட நாயகன் பாடுவது போல் ‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ’ என்று நாமும் பாடிக் கொண்டே இருக்கலாம். அந்த அளவு பாத்திரத்துக்கு ஒத்திசைவானவர்.

மகா நடிகை  நடிகையர் திலகம்
உச்சம் தொட்ட திலக நடிகர்களுக்கு மத்தியில் தங்கள் திறமையான நடிப்பாலும் அழகாலும் தங்களைத் தக்க வைத்துக் கொண்ட நடிகையருக்கும் பஞ்சமில்லை. அப்படியான ஒரு மகா திறமைசாலி நடிகைதான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவர் பிறந்த ஆந்திர பூமி ‘சாவித்திரி காரு’ என்றும் ‘மகா நடிகை சாவித்திரி’ என்றும் அவரைக் கொண்டாடுகிறது. 1950-60களில் தன் நடிப்பால் அனைவரையும் வசீகரித்தவர். ஆண்கள், பெண்கள் என வேறுபாடில்லாமல் அனைவரையும் ஒருசேர கவர்ந்திழுத்தவர். ஒப்பற்ற ஒரு சகோதரியாக, ஆலமரமென அனைவருக்குள்ளும் விழுதிறங்கி வேர் பிடித்து நின்றவர்.

விளையும் பயிர் முளையிலே…
சென்னை ராஜதானியில் அமைந்த அன்றைய குண்டூர் மாவட்டம், சிந்த்தாலபுடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவரது பெற்றோர். குருவய்யா ரெட்டி, சுபத்ராம்மா. இத்தம்பதிகளின் இரண்டாவது மகளாக 1935, டிசம்பர் 6 ஆம் தேதி பிறந்தவர் சாவித்திரி. இந்தக் குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் தந்தை காலமானார். சுபத்ராம்மாவின் அக்காள் துர்காம்பா விஜயவாடாவில் வசித்து வந்தார். அவருடைய அழைப்பின் பேரில் சுபத்ராம்மா இரு பெண் குழந்தைகளுடன் அக்காள் வீட்டில் சரண் புகுந்தார். அக்காளின் கணவர் வெங்கட்ராமய்ய சௌத்ரி ஆட்டோமொபைல் வியாபாரி.

இரு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். சகோதரிகள் இருவரும் அருகிலிருக்கும் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள். பள்ளி செல்லும் வழியில் அமைந்திருந்த ஒரு நாட்டியப்பள்ளி 8 வயதான குட்டிப்பெண் சாவித்திரியை வெகுவாக ஈர்த்தது. காலையும் மாலையும் பள்ளி செல்லும்போது அங்கு நின்று கவனிப்பதுடன், வீட்டுக்கு வந்த பின் கண்ணால் பார்த்தவற்றை எல்லாம் ஆடிப் பாடி மகிழ்வது அந்தச் சின்னப் பெண்ணுக்கு பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் இருந்தது.

அதுவே பின்னர் ஆழ்ந்த ஈடுபாடாகவும் மாறியதைக் கண்ட பெரியப்பா சௌத்ரி, குழந்தையை அதே நாட்டியப்பள்ளிக்கு நடனம் கற்க அனுப்பிவைத்தார். சாவித்திரியின் ஆசிரியரான சிஷ்ட்ல பூர்ணய்யா சாஸ்திரி, சிறுமியின் அதீத அறிவாற்றலையும் திறனையும் கண்டு கொண்டார். ஒரு குழந்தை மேதையாக உருவாவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இந்தச் சிறுமியிடம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொண்டவர், ஓராண்டிலேயே அனைத்துவித நாட்டிய முறைகளையும் கற்றுக் கொடுத்ததுடன், பிற மாணவிகளின் மத்தியில் சாவித்திரியை ஆடிக் காட்டவும் பயிற்றுவித்தார்.

பள்ளியில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவும் வைத்தார். அதுவே பயிற்சியாகவும் அமைந்தது. ‘அருணோதய நாட்டிய மண்டலி’ என்ற தொழில்முறை நாட்டியக்குழு சாவித்திரியின் திறமையை கூர் தீட்டும் பட்டறையாக அமைந்தது. கணப்பொழுதையும் வீணடிக்காமல் சாவித்திரியும் அதைப் பயன்படுத்திக்கொண்டார். அந்தக் குழுவின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமானார். மிக விரைவில் ஒரு நட்சத்திரமாகவும் ஒளி வீசத் தொடங்கினார். அங்கிருந்து பல நகரங்களுக்கும் சென்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் பரவலாகவும் அறியப்பட்டார்.

நாட்டியப் பள்ளியிலிருந்து நாடகத்துக்கு…
தன் நாடகக்குழுவுக்கு ஒரு நடனப்பெண் தேவையென்று பார்ப்பதற்கு வந்த இளம் நாடக நடிகர் ஜக்கையா (இவர் பின்னாளில் புகழ் பெற்ற திரைப்பட நடிகரானார்) சாவித்திரியின் நடனத்திறன் கண்டு வியந்து அவரைத் தன் குழுவின் நடனப் பெண்ணாக இணைத்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் நடிப்பதற்கும் பயிற்சியளித்தார். 12 வயதிலேயே திறமையான நடிகையாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டார் சாவித்திரி.

ஜக்கையாவின் நாடகக்குழு தவிர, என்.டி.ராமாராவ் நாடகக்குழு மற்றும் பல குழுக்களிலும் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். சாவித்திரிக்கு உற்ற துணையான பெரியப்பா சௌத்ரி அடுத்தக்கட்டமாக திரைப்படங்களை நோக்கி அவரை அழைத்து வர எண்ணி சாவித்திரியுடன் 1949ல் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டார்.

நடனமே முதல் வாய்ப்பு
ஜெமினி ஸ்டுடியோவில் காஸ்டிங் அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றிய கணேசன், 14 வயது சாவித்திரியைப் பார்த்து, ‘என்னம்மா, ரொம்பவும் சின்னப் பொண்ணா இருக்கியே, ஏதாவது நடிச்சுக் காட்டு’ என்று சொன்னதோடு, ‘மூன்று பிள்ளைகள்’ படத்துக்கு சிபாரிசும் செய்திருக்கிறார். ஆனால், அவரது சிபாரிசு எடுபடவில்லை. தெலுங்கு ‘சம்சாரம்’ படத்தில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் இரண்டாவது நாயகியாக வேடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவருக்கு, சிறு வேடம்தான் அளிக்கப்பட்டது. சாவித்திரியை சிறு பெண் என்று இயக்குநர் பிரசாத் நினைத்ததால் சிறு வேடத்தையே கொடுத்தார்.

1950ல் ‘பாதாள பைரவி’ படத்தில் நடன இயக்குநர் பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து ஒரு நடனம் ஆடுவதற்கான வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இப்படம் தமிழிலும் வெளியானதால், சாவித்திரியின் முதல் தமிழ்ப்படம் என இதையே சொல்லலாம். ஒரு நடனப்பெண்ணாக தமிழில் அறிமுகமானாலும், பின்னர் நடிகையர் திலகமாகவும், தமிழ்நாட்டையே புகுந்த வீடாகவும் மாற்றிக் கொண்டது யாரும் எதிர்பாராத ஒரு பெரும் திருப்பம்தான். 1952ல் ‘பெள்ளி சேசு சூடு’ இதுவே தமிழில் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என வெளியானது. என்.டி.ராமாராவ் கதாநாயகன். சாவித்திரிக்கு இப்படத்தில் சொந்தக் குரலில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை.

பெரும் பாய்ச்சலான திருப்பம்
1953ம் ஆண்டு சாவித்திரியின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. சரத் சந்திரர் எழுதிய வங்காள மூலக்கதையை தழுவி எடுக்கப்பட்ட அமர காதலுக்கு எப்போதும் உதாரணமாகச் சொல்லப்படும் படமான ‘தேவதாஸ்’. வேடிக்கையும் விளையாட்டுமான சிறு பெண், காதல் ஈடேறாமல், வயதில் மூத்த நபரைக் கணவனாக ஏற்று, தேவதாஸை மறக்க முடியாமல் திணறித் திண்டாடும் அந்த வயதுக்கு மீறிய வேடம்.

அதையும் தன் அசாத்திய நடிப்பால் இன்றளவும் நிலை நிறுத்தியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிப்படமாக வெளியாகி, பெண்களின் கண்ணீரில் நனைந்து வசூலை வாரிக் குவித்தது. எத்தனை மொழிகளில் எத்தனை முறை எடுக்கப்பட்டாலும் சாவித்திரி ஏற்ற பார்வதியின் கால் தூசுக்கும் அந்தப் படங்கள் ஈடாகாது. தேவதாஸின் மனதில் மட்டுமல்லாமல், பார்வதி என்றென்றைக்கும் நிலையாக மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தாள்.

இந்த ஆண்டில் இரு மொழியிலும் 12 படங்கள் சாவித்திரிக்கு. அவரது கொடி ஓங்கி உயரப் பறக்கத் தொடங்கியது. சிறு வயதில் பெற்ற நாடக அனுபவம் சாவித்திரியிடம் பண்பட்ட நடிப்பாக வெளிப்பட்டது. கண்களில் குறும்பு மின்ன, கோபம் கொப்புளிக்க, உதடுகள் துடிக்க, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு உடல்மொழியை வெளிப்படுத்த என்று எத்தனை பரிமாணங்கள் அவரின் நடிப்பில் வெளிப்பட்டன.

மனம் போல மாங்கல்யம்
1955 சாவித்திரியின் திரையுலக வாழ்க்கையில் மட்டுமல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஆண்டு. ‘மிஸ்ஸியம்மா’ பானுமதிக்குக் கிடைத்த வாய்ப்பு, இரவல் குரலில் பாட அவர் மறுத்ததால் அது சாவித்திரியின் கைக்குப் போய்ச் சேர்ந்த அரிய பொக்கிஷம். குறும்பும், முன்கோபமும், துடுக்குத்தனமும், கண்களில் மெலிதான ஒரு பயமும், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத தன்மையுமாக மின்னி மறைந்த நொடிகள் மறக்க இயலாதவை. மேரி கதாபாத்திரத்துக்கு மெருகேற்றிய பெருமை சாவித்திரியையே சாரும். இப்படத்தின் மூலம் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

அவர்கள் இருவரையும் வாழ்க்கையில் ஒன்றிணைக்க பிள்ளையார் சுழியாகவும் அமைந்தது. இப்படத்தில் நடிக்கும்போதே இருவருக்குள்ளும் ஆழமான காதலும் அன்பும் அரும்பி வேரோடியது. அதன் பின் இந்த ஜோடி பல படங்களில் ஜொலித்ததுடன் திரைக்கு ஒரு பளபளப்பை ஏற்றியதையும் மறுப்பதற்கில்லை.  இதே ஆண்டில் ‘மனம் போல மாங்கல்யம்’ படத்திலும் இணைந்து நடித்தார்கள்.

திரையுலகில் மட்டுமல்லாமல் அசல் வாழ்க்கையிலும் இப்படத்தின் வழியாக சாவித்திரியின் வாழ்க்கையில் நுழைந்தார் ஜெமினி கணேசன். இருவரும் அப்போதே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்கள். மனம் போல வாழ்வு இருவருக்கும். கணேசனோடு சாவித்திரி இணைந்து நடித்ததுடன், அவரையே தன் வாழ்நாள் துணைவராகவும் ஏற்றுக் கொண்டார். ஆம், அன்றைக்கு ஜெமினி ஸ்டுடியோவில் சாவித்திரிக்கு சிபாரிசு செய்தவர் சாட்சாத் ஜெமினி கணேசனேதான். பிராப்தம் அப்படியல்லவோ அமைந்திருக்கிறது!!

இந்தத் திருமணத்துக்கு முன்னரே ஜெமினிக்கு முதல் மனைவி பாப்ஜி என்ற அலமேலுவுடன் திருமணமாகி கமலா, நாராயணி என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள். இரண்டாவதாக நடிகை புஷ்பவல்லியுடன் இணைந்து வாழ்ந்ததன் மூலம் ரேகா, ராதா என இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இவ்வளவும் தெரிந்த பிறகும் சாவித்திரி விரும்பியே ஜெமினியை மணந்து கொண்டார். காதல் கண்களை மறைத்தது. 1958ல் சாவித்திரியும் ஒரு விஜய சாமுண்டீஸ்வரி என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதன் பின்னர் ராமேஸ்வரம் சென்று வேண்டிப் பெற்ற பிள்ளைதான் சதீஷ்குமார். ஜெமினிக்கு ஏழு பெண்களுக்கு நடுவே பிறந்த ஒரே மகன் சதீஷ் மட்டும்தான்.
 
50களின் சாதனை நாயகி
நடிக்க வந்த எட்டே ஆண்டுகளில் நூறாவது படத்தை எட்டிப் பிடித்ததன் மூலம் அசுர சாதனையையும் நிகழ்த்தினார். தனக்கு முன் ஆந்திராவிலிருந்து நடிக்க வந்தவர்கள் அனைவரைக் காட்டிலும் இது ஓர் அதிசயம், அற்புதம் என்றே சொல்லலாம். பெரிய திரையுலகப் பின்புலம் ஏதுமற்ற, நடுத்தரமான எளிய குடும்பத்திலிருந்து வந்தவருக்கு திறமை மட்டுமே உற்ற துணை. இவர் நடித்த பல படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்டவை. இவர் நடித்த பல படங்கள் தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட இரு மொழிப்படங்கள்.

மாண்புமிகு மகாதேவி
‘பரிசு’, ‘வேட்டைக்காரன்’, ‘மகாதேவி’ என மூன்று படங்கள் எம்.ஜி.ஆருடன் நடித்திருக்கிறார். பொதுவாக எம்.ஜி.ஆர். படங்களில் அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். வசனங்களும் அவரைச் சுற்றியே சுழலும். ‘மகாதேவி’ படத்தின் தலைப்பே கதாநாயகியை முதன்மைப்படுத்துகிறது. அதுவே ஒரு சாதனை. அதற்குக் கொஞ்சமும் வஞ்சனை செய்யாமல் மகாதேவியாக படம் நெடுக வியாபித்து நிற்பார் சாவித்திரி. மகாதேவி என்ற பெண்ணின் மாண்பை மிக உயர்வாகச் சித்தரித்த படம் அது.

குழந்தைக் குரல் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, அற்புதமான பாடல்களைப் பாடியிருப்பார். பெற்ற குழந்தையே தாயின் மானம் காப்பதாகக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் எதுக்கம்மா’ பாடல் கேட்கும்தோறும் காதில் ரீங்கரிப்பதுடன், வீரம் மிக்க பெண் மகாதேவியாக சாவித்திரி நம் மனங்களில் எப்போதும் சிம்மாசனமிட்டு வீற்றிருப்பார். சாவித்திரியின் திரையுலக வாழ்க்கையை ஒரே இதழில் எழுதிவிட முடியுமா என்ன? அடுத்த இதழிலும் சாவித்திரியே வியாபித்திருப்பார்.

(ரசிப்போம்!)