கலைஞர் தாத்தா பாராட்டினாங்க...தட்டாம்பூச்சி பிடித்து விளையாட வேண்டிய பத்து வயதில், தவில் கச்சேரி செய்கிறார் ராகத்தின் பெயரையே தன் பெயராக கொண்டிருக்கும் குட்டிப்பெண் அமிர்தவர்ஷினி. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தவில் கச்சேரியில் அரை சதம் அடித்திருக்கிறார் இவர். மன்னார்குடிதான் இவரது சொந்த ஊர். சிறந்த தவில் கலைஞர் என பெயர் எடுத்திருக்கும் அமிர்தா, முன்னணி நாதஸ்வர கலைஞர் எட அன்னவாசல் மணி சங்கரின் மகள். இவரது அம்மா ஜெயந்தி வயலின் கலைஞர். அண்ணன்களும் நாதஸ்வர கலைஞர்கள்தான். தன் அப்பாவுடன் இணைந்து கச்சேரிகளில் வாசிக்கும் அமிர்தா, தனது தவில் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்...

“நான் அசோகா சிசு விஹார் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். நான் நாலாவது படிக்கும் போதில் இருந்து தவில் கத்துக்கிறேன். 3 வருஷமா கத்துக்கிறேன். ஏ.பி.ராம்தாஸ் தான் என்னுடைய முதல் குரு. கோவிலூர் கலைமாமணி கல்யாணசுந்தரம்தான் என்னுடைய இப்போதைய குரு.
 
நான் பாட்டும் கத்துக்கிறேன். ஆனால் எனக்கு பாட்டை விட தவில் வாசிக்கத்தான் ரொம்பப் பிடிக்கும். ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியில் இருந்து கச்சேரிகள் பண்ண ஆரம்பிச்சேன். அப்பாவுடன் சேர்ந்து கோயில் மற்றும் சில விசேஷ நிகழ்ச்சிகளில் வாசிச்சிட்டு இருக்கிறேன். இது வரைக்கும் மொத்தம் 50 கச்சேரிகள் வாசிச்சு இருப்பேன். ஒரு தரம் டிரம்ஸ் சிவமணி அவர்களுடன் இணைந்து தவில் வாசித்தேன். அந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

எம்.ஆர்.வாசு அங்கிளும் என் கச்சேரியைக் கேட்டுட்டு ரொம்ப பாராட்டினாங்க. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் நிதி அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மகள் திருமணத்தில் வாசிச்சேன். அப்போது என் வாசிப்பைக் கேட்டு கலைஞர் தாத்தா என்னை மிகவும் பாராட்டினாங்க. அது இன்னும் என் மனதில் சந்தோஷமா நிலைச்சிருக்கு. நான் இன்னும் அரங்கேற்றம் பண்ணலை. அரங்கேற்றம் செய்த பிறகு இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவளானதும் தனிக் கச்சேரி பண்ணணும்னு ஆசை இருக்கு.

நிறைய பேர் என் தவில் இசையைப் பாராட்டி இருக்காங்க. ஆனால் இதுக்கெல்லாம் என் அம்மா அப்பாவும் என்னுடைய ஆசிரியர்களும் தான் காரணம். இவங்க எல்லாரும் எனக்கு எப்பவுமே ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்காங்க. அப்பா எனக்கு பயங்கர சப்போர்ட்டிவ்வாக இருப்பாரு. அப்புறம் எனக்கு கச்சேரிக்காக லீவு தேவைப்பட்டால் உடனே எந்த மறுப்பும் சொல்லாம எங்க கரஸ்பாண்டன்ட் கல்பனா மேடம் ரொம்ப உதவியா இருக்காங்க. அவங்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக்கிறேன்”.

படிப்புக்கு நடுவில் இதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் என்றால், “தினமும் ஆறு மணியில் இருந்து எட்டு மணி வரைக்கும் இரண்டு மணி நேரம் பயிற்சி பண்ணுவேன். மற்ற நேரங்களில் படிப்பு. லீவு நாட்கள்ல அரை நாள் தவில் வகுப்புக்கு போவேன். ஃப்ரீயா இருக்கும் மற்ற நேரங்களிலும் பயிற்சி பண்ணுவேன்” என்று சொல்லும் அமிர்தா இனி வெளிநாட்டிலும் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.
 
“எனக்கு ஆஸ்திரேலியா போக வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆமா, ஆஸ்திரேலியாவில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் தவில் வாசிக்க அழைப்பு வந்திருக்கு. இந்த மாதம் இறுதியில் அப்பாவோட ஆஸ்திரேலியா போறேன். அது முடிஞ்ச பிறகு சுவிட்சர்லாந்தில் உள்ள அம்பாள் கோயில் நிகழ்ச்சியிலும் வாசிக்கக் கூப்பிட்டு இருக்காங்க. அங்கேயும் போகப் போறேன். அதுக்காகத்தான் இப்ப நிறைய நேரம் சின்சியரா பிராக்டீஸ் பண்றேன்”. அமிர்தவர்ஷினி - பெயரைப்போலவே இசையோடு வாழட்டும் எந்நாளும்.

- ஸ்ரீதேவிமோகன்
படங்கள்: மு.முகைதீன் பிச்சை


படிப்பிலும் அவ அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட்தான் - அமிர்தாவின் பெற்றோர்

அமிர்தாவின் அப்பா மணி சங்கர் நம்மோடு பேசுகையில், “நாங்க இசை வேளாளர் குடும்பம். என் அப்பா, என் தம்பி, என் மகன்கள் என எல்லாருமே இசைக்கலைஞர்கள் தான். என் மகன்கள் பிஎஸ்.ஸி, பி. இ., இதெல்லாம் படிச்சிட்டு இருந்தாலும் அவங்களும் நல்ல நாதஸ்வரக்கலைஞர்களாக இருப்பது பெருமையா இருக்கு. என் மனைவியும் திருச்சி இசைப்பள்ளியில் வயலின் ஆசிரியராக இருக்கிறார்.

வயலின் இசையில் அவங்க பி.எச்.டி ஸ்காலர் வாங்கி இருக்காங்க. பாட்டு, டான்ஸ் இதில் நிறைய பெண் குழந்தைகள் சாதனை பண்ணி இருக்காங்க. தவில் ராஜ வைத்தியம். ஆனால் தவில் வைத்தியத்தை பெண்கள் யாரும் பெரிசா எடுத்துப் பண்ணதில்லை. அதனால் என் மகளுக்கு தவில் கத்துத்தரணும்னு நினைச்சேன். தவிலிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கு இவ ஒரு உதாரணமாக இருக்கட்டும் என நினைத்தோம்.

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை அவளுக்குமே இயல்பாக தவில் கற்றுக்கொள்வதில் அவ்வளவு ஆர்வம் இருந்தது. எனவே தவில் வகுப்பில் சேர்த்தோம். நான் ஒரு கலைக்குழு வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். என் மக ரொம்ப சின்னப் பெண்ணாக இருப்பதால் இன்னும் கொஞ்சம் வளரும் வரை என்னுடன் அழைத்துச்செல்லலாம் என நினைத்து தற்போதைக்கு என் கூட மட்டும் கச்சேரிக்கு அழைத்துச்செல்கிறேன், மேடை பயம் போகட்டும் என்பதும் ஒரு காரணம். கொஞ்சம் வளர்ந்த பிறகு வேற குழுக்களுடனோ தனியாகவோ அவள் விருப்பம் போல் வாசிக்கட்டும் என்று நானும் என் மனைவியும் நினைக்கிறோம்” என்கிறார் பெருமிதத்துடன்.
 
அமிர்தாவின் அம்மா பேசுகையில், “அவளுக்கு பொதுவாகவே மிருதங்கம், கடம், தவில் போன்ற தாளக்கருவிகளின் மீது ஆர்வம் இருந்தது. அதுவும் அவளுக்கு நாங்கள் தவில் கத்துத் தர ஒரு காரணமாக இருந்தது. அதுமட்டுமின்றி, அவளை எங்களுக்குத் தெரிந்த இசைத்துறையில் வளர்க்கும்போது அவளுக்கு வழிகாட்ட சரியாக இருக்கும் என்பதால் இந்தத் துறைக்கு அழைத்து வந்தோம். ஆனால் அவளோட முயற்சி மற்றும் திறமையால் இன்று பலரும் பாராட்டக்கூடிய ஒரு நல்ல கலைஞராக வளர்ந்திருக்கா. ஆனால் படிப்பிலும் அவ அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் தான். இப்ப அவளை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கு” என்கிறார்