ப்ரியங்களுடன்...



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய தகவல்களை திரட்டித் தந்தது பிரமிப்பாகவே இன்னும் இருக்கின்றது.  ‘க’ உணவகம் பற்றி தந்தவை செம டேஸ்ட். சாலா அவர்கள் லட்சத்(தியத்)தில் ஒருத்தி என பெருமைப்படலாம். ரெஃப்லின் ‘‘ப்ளஸ்’’ அனன்யா நமக்கு கிடைத்திட்ட நல்ல ‘தோழி’கள். சக்தி ஜோதியின் சாட்டையடி வரிகள் உலுக்கி விட்டன. சூர்யநர்மதாவை இனி ‘செடிகளின் ராணி’ என்றே சொல்லிட வேண்டும்.

செடிகளை நேசிக்கவும் கற்றுக் கொடுத்தவர் அல்லவா? காலங்கள் உருண்டோடினாலும் பி. பானுமதியின் மலரும் நினைவுகள் ‘பூவாகி - காயாகி - கனிந்த மரம்’ போன்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையும், ஆங்கிலப் புத்தாண்டும் நெருங்கும் சமயத்தில் ‘கூத்தாநல்லூர்’க்கு ‘தம்’ பிடித்து ஓட ‘ரூட்’ ஒன்றை காண்பித்து விட்டீர்கள்.
- சிம்மவாஹினி, சென்னை-39.

‘போர்க்களத்திலிருந்து ஒரு குரல்’ என்ற தலைப்பின் கீழ் வந்த கட்டுரையைப் படித்து, மிகவும் வேதனையடைந்தேன். ஹார்ட்டிகல்ச்சர் செடிகள் காப்பகம் செய்திகள் மிகவும் பயனுடையதாயிருந்தது. அனைத்து உயிர்களின் அன்பு மனுஷி செய்திகளைப் படித்து நெகிழ்ந்து போனேன். மதிப்பிற்குரிய ஆண்டாள் பிரியதர்ஷினியின் பேட்டி மிக மிக அருமை; அதில் அடக்கமான, அன்பான, பண்புகளோடு பேட்டிகள் பதிவு செய்துள்ளது அவரின் திறமை, அவரின் பேராற்றல் பளிச்சிடுகிறது. அவருக்கு என் வாழ்த்துதலுடன் கூடிய பாராட்டுகள்.
- சு. இலக்குமணசுவாமி, மதுரை-6.

‘‘லட்சத்தில் ஒருத்தி’’ சாலா வாணியின் அனுபவ கட்டுரை படித்ததும் என்னுள்ளும் தன்னம்பிக்கை அதிகமாகியது. ஒவ்வொரு இதழிலும் நம் தோழி இது போன்ற சாதனையாளர்களை கண்டறிந்து வாசகர்களுக்கு அவர்களறியாமலேயே மனதில் கவலை மறக்க வழிவகுத்து தருவது பெருமிதமாக உள்ளது.
- வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம், சென்னை-64.

‘அஷ்டாவதானி’ பி. பானுமதியின் ஆற்றல், சிறப்புகள், பெற்ற பரிசுகள், பட்டங்கள், நடித்த இதர மொழி திரைப்படங்கள் எல்லாவற்றையும் புள்ளிவிவரத்துடன் கொடுத்து வாசகர் - வாசகிகளை கட்டுரை ஆசிரியர் பா. ஜீவசுந்தரி பிரமிக்க வைத்து விட்டார்.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

ஹார்ட்டிகல்ச்சர் தொடர் மூலம் தோட்டங்கள் குறித்தும் செடி கொடிகள் குறித்தும் ஒவ்வொரு வாரமும் அறிந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் என் வீட்டில் தோட்டம் அமைக்க இத்தொடரே காரணம்
- ஜெ. கயல்விழி, விளாங்குடி.

இளம்பிறை எழுதிய தொடர் எளிமையாகவும் இனிமையாகவும் பல செய்திகளை எங்களுக்குத் தந்தது. அவருக்கு என் நன்றி.
- எம். கோமதி, திருவாரூர்.