‘‘மாடலிங் பெண்கள் பட்டினி கிடப்பதில்லை!”‘‘அரிசி சாதம், நெய், சீஸ் எதுவுமே நான் சேர்த்துக் கொள்வதில்லை. நான் டயட்டில் இருக்கேன்...’’ இந்த வாக்கியத்தை நாம் இந்த காலத்து பல கல்லூரி பெண்களிடம் கேட்க முடியும். ஜீரோ சைசுக்கு மாறவேண்டும்  என டயட் என்ற பெயரில் பல பெண்கள் குறிப்பாக கல்லூரி பெண்கள் தப்பான உணவு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள். டயட் என்ற பெயரில் பல வித உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதை விட, பிடித்த உணவினை சாப்பிட்டு அதே சமயம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்’’ என்கிறார் முன்னாள் மாடல் மற்றும் மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ஸ்வேதா ஜெய்சங்கர்.

இவர் ‘கார்ஜியஸ்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாடல்கள் தங்களுக்கு பிடித்தமான உணவின் செய்முறை மற்றும் அவர்களின் உணவுப் பழக்கத்தை பகிர்ந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ ஓர் உணவுப்பட்டியலையும் இதில் இணைத்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மாடல் மற்றும் நடிகை மலைக்கா அரோரா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்தப் புத்தகம் எழுத அவரின் ஒன்றரை ஆண்டு பயணத்தையும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் ஸ்வேதா ஜெய்சங்கர். ‘‘நானும் ஒரு காலத்தில் மாடலிங் துறையில்தான் இருந்தேன். மாடலிங் செய்யும்போது நமக்கான உணவு முறை முற்றிலும் வேறாக இருக்கும். எடை அதிகரிக்கக்கூடாது, பரிணாம வளர்ச்சியும் குறையக்கூடாது. அதற்கான உணவுகளை பார்த்து பார்த்து சாப்பிட்டு வந்தேன்.

மாடலிங் துறையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும், இதை கடைப்பிடிப்பது வழக்கம். மாடலாக இருந்தாலும் எங்களுக்கும் வயதாகும். திருமணம், குழந்தைகள் என்று அவர்களின் முக்கியத்துவம் மாறும். ஒன்றிரண்டு வருஷத்தில் வாழ்க்கை முறை முற்றிலும் மாறும். மாடலிங் செய்யும் போது கடைப்பிடித்த அனைத்து விஷயங்களையும் மறந்து விடுவோம். மாடலாக இருந்த நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

மூன்று வருடங்களில் என் எடை கணிசமாக அதிகரித்தது. இவ்வளவு காலம் வேறு மாதிரியாக பார்த்து பழகிய என்னையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் நாம ஏன் இப்படி இருக்கோம்னு கஷ்டமாக இருந்தது. பொதுவாக எல்லா பெண்களுக்கும் நடக்கக் கூடிய மாற்றம் என்றாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியலை’’ என்று சொன்ன ஸ்வேதா இது குறித்து சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.
 
‘‘மாடல் துறையில் இருந்த நான் உடல் ஆரோக்கியம் குறித்து மிகவும் கவனமாக இருந்தேன். அந்தத் துறையை விட்டுவிலகி கார்ப்பரேட் வேலை, வீடு, குழந்தைகள் என என்னுடைய முக்கியத்துவம் மாறியது. என் உடல் குறித்த ரிதம் மாறியது. எனக்கே இப்படி என்றால் மற்ற பெண்களின் நிலை. பெண்கள் மல்டிடாஸ்கர்கள். அவர்கள் செய்யும் பல வேலைகளுக்கு அவர்களுக்கு சக்தி வேண்டும்.

வயதாகும்போது, நம் மெட்டபாலிசம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதற்கு ஒரே தீர்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறை. இந்த நோக்கம் தான் என்னை புத்தகம் எழுத தூண்டியது’’ என்றவர் சுமார் 27 மாடல்களிடம் அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை குறித்து புத்தகத்தில் தொகுத்துள்ளார்.
 
‘‘ஏன் மாடல்கள்? விளையாட்டு வீராங்கனைகள் மற்ற துறை பெண்களை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி எழலாம். ஒரு கட்டத்தில் எனக்கு உணவு பழக்கத்தில் பிரச்னை ஏற்பட்டது. எந்த உணவுமே ஒத்துக் கொள்ளாமல் போனது. அதனால் அடிப்படை உணவில் இருந்து சாப்பிட ஆரம்பித்தேன். எனக்கு என்ன ஒத்துக் கொள்ளும் என்று எனக்கு நானே ஆய்வு செய்தேன். கடைசியில் சாம்பார் சாதம், கூட்டு போன்ற உணவுகள்தான் எனக்கு இப்போது செட்டாகுது.

மாடலிங் துறையை சேர்ந்த பெண்கள் தங்களின் உடல் கட்டுக் கோப்பாக இருக்கணும்னு அதிகமா மெனக்கெடுகிறார்கள். காரணம், இவர்கள் ஒரு குறிப்பிட்ட எடை மற்றும் உடல் அமைப்பில் இருக்க வேண்டும். இதை தக்கவைத்துக் கொள்ள அவர்கள் என்ன உணவு களை கடைப்பிடிக்கிறார்கள் என்பதை சொல்லும் போது அது மற்ற பெண்களுக்குமே ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்.
 
அந்தக் காலத்தில் சாதம், இட்லி, சப்பாத்தின்னுதான் சாப்பிட்டு வந்தோம். ஆனால் இப்ப உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பேலியோ டயட், வேகன் உணவுகள்னு நிறைய இருக்கு. இதில் எதை சாப்பிடுவது, எதை விடுவதுன்னு குழப்பம் உள்ளது. இந்த குழப்பத்துக்கு தீர்வு தான் ‘கார்ஜியஸ்’ புத்தகம். எல்லாருக்கும் எல்லா உணவும் ஒத்துக் கொள்ளும்னு சொல்ல முடியாது. அவரவர் உடம்புக்கு ஏற்ப மாறுபடும். அதை மாடல்கள் தங்களின் உடலுக்கு ஏற்ப என்ன என்று அறிந்து வைத்துள்ளனர்.

அது குறித்த விழிப்புணர்ச்சி மற்ற பெண்களுக்கும் ஏற்பட வேண்டும்’’ என்றவர் மாடல்கள் டயட் இருப்பதில்லை என்றார். ‘‘டயட் என்றால் பட்டினி இருப்பதுன்னு தான் பலர் நினைத்து இருக்கிறார்கள். உணவு ஆலோசகர் கூட பட்டினி இருக்க வேண்டும் என்ற அறிவுரை அளிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், மாடல்கள் யாருமே பட்டினி இருப்பதில்லை என்பது தான் உண்மை. பசிக்கும்போது சாப்பிட வேண்டும்.

அதே சமயம் அவர்கள் உடலுக்கும் என்ன வேண்டும் என்பதை எல்லாரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாடல் உஜ்வாலா ராவுட் வெண்ணெய் சேர்க்கப்பட்ட ஆம்லெட் மற்றும் காய்கறிகள்தான் சிற்றுண்டி என்றார். அதிதி கோவிட்கர் பழங்கள் என்றார். த்ரிஷா  உணவுப்பிரியை. எல்லா விதமான உணவையும் சுவைக்க பிடிக்கும் அவருக்கு. மலைக்கா அரோராவிற்கு அரிசி சாதம் பிடிக்கும்.

அதே சமயம் வீட்டு உணவுகள் தான் அவர் சாப்பிடுகிறார். நம்முடைய உடலுக்கு என்ன தேவை என்பதை நாம் சமமாக சாப்பிடப் பழகினாலே போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் இனிப்பு மற்றும் அதிக கலோரி உள்ள உணவினை தவிர்க்க முடியாது. அந்த சமயத்தில் சாப்பிட்டு பிறகு உடற்பயிற்சி செய்து தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே போதும். இதை நாம் பின்பற்றுவது இல்லை’’ என்றவர் தான் சந்தித்த மாடல்களை பற்றி விவரித்தார்.
 
‘‘காலம் மாற மாற எல்லா துறையிலும் மாற்றம் ஏற்படவே செய்யும். இந்தத் துறையில் என்னோடு இருந்தவர்கள், எனக்கு பிறகு இந்தத் துறைக்கு வந்தவர்கள் என 27 பேரை சந்தித்தேன். ஒவ்வொருவரிடம் பேசும்போதும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மாடலிங் துறையில் இருந்தாலும், வீட்டில் ஒரு பெண் அம்மா, மனைவி, மருமகள் என பல முகங்களை சுமந்து வருகிறார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிரபல மாடல் மிலிந்த் சோமனை சந்தித்த ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்.

பிரியங்கா சோப்ரா, தன்னுடைய பிசியான நேரத்திலும் எனக்காக ஒதுக்கி, பதிலளித்தார்’’ என்றவர் எல்லா பெண்களும் தனக்காக சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ‘‘குழந்தைகள், குடும்பம் என இருந்தாலும், நமக்கான நேரத்தை நாம் ஒதுக்குவது அவசியம். அதற்கு கொஞ்சம் மெனக்கெடவேண்டும். ஆனால் நமக்காக செய்யும் போது அது கஷ்டமாகத் தெரியாது.

என்ன காலையில கொஞ்சம் சீக்கிரம் எழணும். சமையல் செய்யும் முறையை மாற்றணும். நமக்கான இலக்கு என்ன என்று புரிந்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்தாலே போதும்... ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்’’ என்று சொல்லும் ஸ்வேதா ஜெய்சங்கர் கூடிய விரைவில் மற்றொரு புத்தகம் எழுத இருப்பதாக தெரிவித்தார்.

‘‘இப்பதான் முதல் குழந்தையான ‘கார்ஜியஸை’ வெளியிட்டு இருக்கேன். இந்த ஒன்றரை வருட பயணத்தில் நான் வேறு எதைப் பற்றியுமே யோசிக்கவில்லை. எழுத்து அனுபவம் எனக்குப் பிடிச்சு இருக்கு. கண்டிப்பாக அடுத்த புத்தகம் எழுதுவேன். அது என்ன என்று இன்னும் முடிவாகவில்லை’’ என்றார் திடமாக ஸ்வேதா ஜெய்சங்கர்.
 

- ப்ரியா
படங்கள்: கவுதம்