நிர்க்கதியாக்கப்பட்ட புறநகர் பெண்கள்



சென்னையை தாக்கிய வர்தா புயலால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டாலும் சென்னைக்கு வெளியே பல கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் செம்மஞ்சேரி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிவாரணப் பணிகளிலும் இங்கு சுணக்கம்தான். சென்ற ஆண்டு மழை வெள்ளத்தின்போதும் நீண்ட நாட்களுக்கு வெள்ளம் வடியாமல் அவதிப்பட்டனர் மக்கள்.

இங்குள்ள பெண்கள் பலர் சென்னை மாநகருக்குள்தான் வேலை செய்கின்றனர். அன்றாடம் பேருந்து பிடித்து சென்னைக்கு வந்து செல்கிறார்கள். இந்த வர்தா புயல் இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் சாலையில் சென்னை மாநகராட்சியின் 200ஆவது வார்டாக இருக்கிறது செம்மஞ்சேரி. இங்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இது காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோமையர் மலை ஒன்றிய எல்லைக்குள் தான் உள்ளது.

ஆகவே, இங்குள்ள மக்கள் சென்னைக்கும் காஞ்சிபுரத்துக்குமாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஆறு கிலோ மீட்டர் முக்கிய சாலையிலிருந்து பயணித்து இவ்விடத்தை அடைய வேண்டும் என்பதனாலேயே எவ்வித நிவாரண உதவிகளும் உடனடியாக இங்கு வசிக்கும் மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பது இப்பகுதிவாசிகளின் குற்றச்சாட்டாகவே இருக்கிறது. இங்கு சுமார் 6,700 குடும்பங்களுக்கும் மேலாக உள்ளது. இவற்றில் சுமார் 1800 வீடுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

மீதம் உள்ளவற்றில் சென்னை மாநகரின் குடிசைப் பகுதிகளிலிருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இரண்டடுக்கு கொண்ட கட்டிடத்தில் 8 வீடுகள் வீதம் சுமார் 5000க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும். இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் விளிம்புநிலை மக்கள். இவர்கள் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர்.

சென்னை நகரில் வாழும் பெண்களை விட செம்மஞ்சேரி பெண்களுக்கு  வர்தா புயலால்  இழப்பு அதிகம். அவர்களிடம் நேரில் சந்தித்து விவரம் கேட்டபோது  கொட்டிவிட்டார்கள். ‘‘எங்க ஊர்ல ஆஸ்பத்திரி இருக்கு. ஆனா டாக்டர் இருக்க மாட்டார். மழை பெய்து வெள்ளம் வந்தாலோ, புயலடிச்சாலோ ஏன்னு கேட்கக் கூட ஒரு நாதி கிடையாது. சாப்பிட சோறு இருக்காது, செப்டிக் டேங் நிரம்பிவிடும், ஒருவாரம் கரண்ட் இருக்காது, பெண்கள் இயற்கை உபாதைக்குப் போகமுடியாது” என்கிறார் முத்தார் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் உஷா பாட்டி.

“ஒரு பால் பாக்கெட் 60 ரூபாய் விப்பாங்க. எங்களை மாதிரி ஏழை ஜனங்க ஒரு வேளை சோற்றுக்கே திண்டாடுதுங்க. அந்த சமயத்துல எங்க போய் பால், தக்காளி, வெங்காயமெல்லாம் வாங்குறது? ஒரு அதிகாரியும் எட்டி பாக்க மாட்டாங்க. மழை பேஞ்சு, அதுவா காஞ்சி, கொசு கடிச்சு, நோயில் ஜனங்க செத்து மடியுதுங்க ’’ என்று அங்கலாய்க்கிறார் உஷா பாட்டி.

வர்தா புயலால் சாலையில் விழுந்த மரங்களை ஒரு வாரத்திற்குள் அப்புறப்படுத்திவிட்டதாகவும், ஆனால் 1 வாரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால், மாலை 6 மணிக்குமேல் பெண்கள் வெளியே வருவதற்கு பயந்து வீட்டினுள்ளேயே தஞ்சம் அடைந்ததாக கூறுகிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்தே பேருந்தில் செல்லவேண்டி இருக்கிறது.

கொசுத்தொல்லை என்பது இங்கு நீங்காத ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது. இது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறுகிறார்கள். கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு பள்ளத்தாக்கான பகுதியில் இருந்த சைதாப்பேட்டை, பெரம்பூர், கோட்டூர் புரம், ராமாபுரம், அமைந்தகரை ஆகிய பகுதியில் வசித்த மக்கள் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில்  குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

‘‘போன வருஷம் பெஞ்ச மழைல இங்க கொண்டு வந்து போட்டாங்க. எனனதான் மழைபெஞ்சாலும் அங்க நிம்மதியாக இருந்தோம். இங்க  ஒரு நாள்  மழை பெஞ்சா கூட ஒரு பால் பாக்கெட் வாங்கக் கூட வெளிய போக முடியல. முக்கியமா எங்க வீட்டு ஆம்பளைங்களுக்கு வேலை இல்லாமப் போகுது. புள்ள குட்டிங்களுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு. நாங்களும் அங்க இருக்கும்போது ஏதாவது பூ வித்து, சின்னச் சின்ன வியாபாரம் செஞ்சி பொழச்சிட்டு இருந்தோம்.

இங்க எந்த வசதியும் இல்லாம ஒண்ணுமே பண்ண முடியல. பழைய ஏரியாவுக்குப் போய்தான் ஆம்பளைங்க வேலைக்கு போயிட்டு வராங்க. நைட்ல 10 மணிக்கு மேலதான் வராங்க. அப்படி வரவுங்க கிட்ட போலீஸ்காரங்க புடிச்சி ஏதாச்சும் காரணம் சொல்லி கேஸ் போடுறாங்க. வேலைக்கு போன ஆம்பளைங்க வீட்டுக்கு வந்து சேர்றதுக்குள்ள வீட்டு பொம்பளைங்க வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்குற மாதிரி இருக்கு. மழை, புயல் வந்தா இங்க எங்களுக்கு எந்த வசதியும் கிடையாது.

பாத்ரூம் இருக்கு, வீடு உங்களுக்கு வசதியா இருக்கும்னு சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு வந்து ஒரு தீவுல அடைச்சிட்டாங்க. ஸ்கூலுக்கு போற பொம்பளப்புள்ளைங்க காலையில 6 மணிக்கே கிளம்பவேண்டி இருக்கு. பஸ் வசதி சரியா இல்லை. பொம்பளைப் புள்ளைங்க சாயங்காலம் வீடு வந்து சேர்றதுகுள்ள உடம்புல உயிர் இருக்க மாட்டிங்குது’’என்கிறார் அப்பகுதியில் வசிக்கும் மேரி.

மொத்தம் 8 மாடிகள் கொண்ட 26 கட்டிடங்கள் உள்ளன. ஒரு கட்டிடத்தில் சுமார் 124 வீடுகள் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த பகுதியை சுற்றி ஏரிகள் இருப்பதால் லேசான மழைபெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. ‘‘கொஞ்ச மழை பெஞ்சாலும் தண்ணி தேங்கி செப்டிக் டேங் அடைச்சிக்குது, இல்லனா ரொம்பி வழியுது. மேல் வீட்ல கக்கூஸ் தண்ணிவந்துடுது. ஆம்பளைங்க எங்கேயாவது போயிடுவாங்க, பொம்பளைங்க எங்க போறது? வயசு புள்ளைங்கள எப்படி பார்த்துக்கிறது, மாதவிடாய் நேரத்தில் ரொம்ப கஷ்டப்
படுறாங்க’’என்கிறார் லட்சுமி.

ஒவ்வொரு வீட்டிற்கும் பராமரிப்பு வாடகையாக 450 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்கிறார்கள். மூவாயிரம் குடும்பங்களுக்கும் மேலாக இருக்கக்கூடிய இந்த குடிசை மாற்று வாரிய பகுதியில் ஒரே ஒரு நியாய விலைக் கடைதான் இருக்கிறது. இந்தக் கடையில் இதுவரை ஒரு முறைகூட முழுமையாக எதையுமே மக்கள் பெறவில்லை என்கிறார்கள். சென்னையை உலுக்கி விட்டு சென்ற ’வர்தா’ புயலினால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவில்லாமல் இருந்ததாக கூறுகிறார்கள்.

‘‘காத்து, மழைன்னா கரண்ட் கட் பண்ணிடுவாங்க, தண்ணி வராது. 6வது மாடி 7வது மாடில இருந்து வந்து தண்ணி எடுத்துட்டுப் போகணும். இங்க ஒரு லிஃப்டு இருக்கு, அது ஒரு நாளைக்கு வேல செய்யும். ஒன்பது நாளைக்கு வேலை செய்யாது. ஜெனரேட்டர் இருக்கு, அது வேலை செய்யாது. மழை நேரத்தில் பாம்பு, பூரான் மேயுது. குழந்தை, குட்டிங்களை கீழ கூட்டிக்கிட்டுக் கூட வர முடியலை. வேலை இல்லாம பணம் இல்லாம குடும்பத்தை எப்படி பொம்பளைங்க நடத்தமுடியும்.

பத்தாத குறைக்கு வைரஸ் காய்ச்சல் வேற வருது. இங்க ஒரு தண்ணி டேங் இருக்கு. அதுல ஒரு நாள் நாய் செத்து இருக்கும், எலி செத்து இருக்கும், அந்த தண்ணிய குடிச்சி நாங்களும் சாகணுமா?’’ என்று ஆதங்கத்தோடு கேட்கிறார் பானு. இயற்கை  பேரிடர் காலங்களில் எந்த விதமான உதவிகளும் தங்களுக்கு வருவதில்லையென்றும், மருத்துவமனை வசதி இல்லை என்றும் கூறுகிறார்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

“எங்களுக்கு 8 மாடி கட்டிடம் வேணாம். சென்னைக்குள்ளே இருக்கும்போது கூரையில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தோம். ஆனால் இங்கு பெண்கள் மிகவும் சிரமப்படுகிறோம். நாங்கள் கேட்பது எல்லாம் மருத்துவமனை, பேருந்து நிலையம், வணிக வளாகம். இந்த அடிப்படை வசதியை செய்து கொடுத்தாலே, எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் சரி செய்து கொள்வோம்” என்கிறார்கள் இப்பகுதியில் வசிக்கும் இல்லத்தரசிகள்.

- ஜெ.சதீஷ்