ஒரு பெண் தீப்பாஞ்சமாலையாகிறாள்



-சக்தி ஜோதி

விஜயலட்சுமி என்றொரு பெண். தன்னை அழகாக வைத்திருக்கத் தெரிந்திருந்தவள். என் பள்ளி நாட்களின் தோழி. என்னைவிட இரண்டு வயது மூத்தவள். என்றாலும் என்னோடு மிகுந்த சிநேகத்தோடு இருப்பாள். அவளின் இயல்பும் சில செயல்பாடுகளும் எனக்கு அவள் மீது கவனம் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

அடிக்கடி முகம் கழுவிக்கொண்டும் வாய்க்கும்பொழுதெல்லாம் கண்ணாடி பார்த்துக்கொண்டுமிருப்பாள். கண்ணாடி மட்டுமல்ல, சாப்பிடும் தட்டு, ஆற்று நீர் என தன்னுடைய முகம் பிரதிபலிக்கிற எதனையும் சிறிதுநேரம் ரசித்துப் பார்ப்பது அவளுடைய வழக்கம். தன்னுடைய அழகை, தானே ஆராதிக்கத் தெரியவேண்டும் எனச் சொல்லுவாள். இரட்டைப் பின்னலில் பாலம் அமைத்ததுபோல கனகாம்பரமும் அதன்மேல் சரம் அமைத்து மல்லிகையும் வைத்து வலப்பக்கச் சடையிலுள்ள ரிப்பன் பூவுக்கு வெளியே கொஞ்சம் நீட்டித் தொங்கவிட்டிருப்பாள். கண்களில் மை தீட்டி, அதை மீன்போல இழுத்து விட்டிருப்பாள்.

நாள் முழுக்க கலையாமல் தன்னுடைய உடைகளை வைத்திருக்கவும் அறிந்திருந்தாள். அவளைப் போலவே அவளுடைய புத்தகங்களும் ஒழுங்கு கலையாதவை. ஆண்டு முடிவில் கசங்காத தன்னுடைய புத்தகங்களை யாருக்காவது கொடுக்கும் அவள், பள்ளியின் முதல் மாணவியாக எப்போதுமிருந்தாள். நம்மைப் போலவே  நம்மைச் சுற்றியிருக்கும் பொருட்களையும் மனிதர்களையும் வைத்துக் கொள்ளத் தெரியவேண்டும் எனச் சொல்லுவாள். யாரையும் தொட்டுப் பேசுகிற வழக்கமோ சகதோழிகளிடம்கூட தோளில் கைப்போடுகிற வழக்கமோ இல்லாதவள். தன்னுடைய உடலை அத்தனை தனித்துவமாக நினைத்துக் கொண்டிருந்தாள்.

தன்னை இத்தனை அழகுபடுத்திக் கொள்கிறவள்தான், தன்னுடைய ஆடை கலையாமல் வைத்திருக்கிறவள்தான், பருவத்தில் முளைவிடுகிற சிறிய பருக்களுக்காகக் கவலைப்படுகிறவள்தான் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் சிநேகிதம் கொண்டிருந்தானென தெரிந்துகொண்ட ஒருநாள் தீக்குளித்து செத்துப்போனாள். நகக்கண் அளவு காயம்பட்டாலும் துடித்துப் போகிற அந்தப் பெண், குளியலறையில் முகம் இதுவென்று துளியும் அடையாளம் தெரியாமல் கைகளும் கால்களும் வெடித்துச் சிதறி கருகிக் கிடந்தாள்.

ஒரு பெண் தன்னிடமுள்ள அதிகபட்சமாக தன் உடலையே ஆணுக்குப் பரிசளிக்கிறாள். அவளுடைய அழகு முழுமையும் அவனுக்கானது என நம்புகிறாள். தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கிறாள். அதனாலேயே தன்னுடைய கணவன் தனக்கு மட்டும் உரிமையானவனாக இல்லை என்பதை ஒரு பெண்ணால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. அவனுக்கென பத்திரப்படுத்தியிருக்கும் தன்னுடைய அன்பை புரிந்துகொள்ளாமல் வேறு பெண்ணுடன் தன்னுடைய கணவன் உறவு வைத்திருப்பதை அறிந்தவுடன் அவள் முதலில் மனதளவில் சிதைந்து போகிறாள். அதன் பின்பு மகிழ்வும், கொண்டாட்டமும், உணவும் தவிர்த்து விடுகிறாள்.

எதிலும் ஆர்வம் அற்றவளாய், நிலைகொள்ளாத மனதுடன் தன்னிலை இழந்து, உடலாலும் சிதைந்து போகிற நிலைக்கு நகர்கிறாள். உடல் சிதைவை விடவும் மனதால் ஒரு பெண் சிதைந்து போவது என்பது வேறு ஒருவரால் ஒருபோதும் மீட்டெடுக்க இயலாததாக இருக்கிறது. விஜயலட்சுமியின் மனச்சிதைவே அவளது உடல் சிதைவுக்குக் காரணமாகிறது. அவனுக்குப் பிறகு தனக்கென வேறு எதுவும் இல்லை; அவன்தான் தன்னுடைய வாழ்வின் இறுதியும், நிறைவும் என்றிருந்த ஒரு பெண்ணால் அவனது செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே தன்னை வருத்தி, தன்னை சிதைத்து, தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்கிறாள். அவளை சிதைத்துக் கொள்வதையே அவனுக்குத் தருகிற தண்டனையாக கருதுகிறாள். ஒரு பெண்ணுக்கு அவளுக்கு உரிமையானதாக  அவளிடமிருப்பது அவளுடைய உடல் மட்டும்தான் என நினைத்து, அதனை அவனுக்காக அழித்துவிட நினைக்கிறாள். உண்மையில் பெண்ணுக்கு அவளுடைய உடலும் அவளுக்கானதில்லை என்கிற கற்பிதத்தின் அடிப்படையில்தான் அவளுடைய மனம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணுடல் என்பது ஆணுக்கானது என்பதை ஒருகாலத்தில் நம்பினாள். அதனடிப்படையில் வளர்ந்தவள், அவன் அவளுக்கு மட்டுமேயானவனாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவும் பழக்கப்பட்டிருந்தாள். அதனால் பரத்தையரைத் தேடிச் செல்வது ஆணின் இயல்பு என ஏற்றுக்கொண்டாள். இன்றைய காலகட்டத்தில் இவ்வகையான இயல்புடைய ஆணை ஏற்றுக்கொள்ள இயலாத நிலைக்கு பெண் நகர்ந்திருக்கிறாள். அவளின் இந்த நகர்வு சில சமயம் முழுமையானதாக இல்லை.

அவனிடமிருந்து முழுமையாய் நகர்ந்துவிட்ட பெண், அவனைவிட்டு விலகி வாழவும், வேறு ஒருவரை மணம் செய்துகொள்ளவும் காலம் அனுமதித்திருக்கிறது. ஆனால், இந்த நகர்தலில் ஆண் மீதுள்ள கேள்விகளும் தன்னுடைய நிலை பற்றிய தவிப்பும் அந்த ஆணை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவதாக நினைத்து அல்லது அவனுக்குத் தண்டனை தருவதாக நினைத்து தீயில் மூழ்கி இறந்து போகும் நிலைக்கு ஒரு பெண் தள்ளப்படுகிறாள்.

தன்னுடலை தீயில் அழித்துக்கொள்கிற செயலின் மனப்பதிவு பெண்ணுக்கு அவளின் முன்னோர் செயல்வழியே கற்பிக்கப்பட்டிருக்கிறது. வழிவழிப்பெண்களின் மூத்தவளின் குணங்களுள் ஒன்றாக தலைவனுக்காக தன்னுடலை மாய்த்துக்கொள்ளுதலும் இருந்திருக்கிறது. அவனுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். அவனுக்காகக் காத்திருப்பாள். அவனுக்காகவே தன்னை அழித்துக் கொள்வாள். உருவழிந்து போவதும், உயிரழித்துக் கொள்வதும்கூட அவனுக்கான செயலாகவே அவளிடம் இருந்திருக்கிறது.

கணவன் இறந்து போனவுடன் அந்தக் கணமே உயிர்விடுதல் தலைக்கற்பு என இலக்கியங்கள் சொல்கின்றன. “கணவனை யிழந்தோர்க்குக் காட்டுவது இல்” (சிலம்பு: 20:74-75)எனச் சொல்லி சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் மனைவி அரசி கோப்பெருந்தேவி உயிர்விடுகிறாள். இவள் தலைக்கற்புடையவள் எனக் காட்டப்படுகிறாள். கணவனைத் தவிர வேறு உறவுகளுக்கு மாற்று இருக்கிறது; ஆனால் ஒரு பெண் கணவனை இழந்துவிட்டால் அந்த உறவுக்கு மாற்று இல்லை என கோப்பெருந்தேவியின் சொல்லாக சிலப்பதிகாரம்
காட்டுகிறது.

அவனோடு அவளுடைய அழகும், அவளின் உணவும், அவளின் உறக்கமும் அவளின் அனைத்து மகிழ்வும் இல்லாமல் போய்விடுகிறது. கைம்மை நோன்பு ஏற்று வாழ்கிற நிலையென்பது இழிநிலை எனக் கருதிய பெண்களும் இருந்திருக்கிறார்கள். எனவே இறந்துபோன கணவனின் சிதையில் தன்னையும் சேர்த்து எரித்துக்கொண்டு உயிர்விடுதல் வழியாக அவளுடைய கற்பை நிரூபிக்கிறாள். பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு கணவன் இறந்தவுடன் தீமூட்டி இறந்துபோக நினைக்கிறாள். இவளின் இந்தச் செயலை தடுக்க நினைக்கிற சான்றோர்களை பார்த்துச் சொல்வதாக இவர் எழுதிய புறநானூற்றுப் பாடல்,

“பல்சான் றீரே ; பல்சான் றீரே
செல்க எனச் சொல்லாது, ஒழிக என
விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்
திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எட்  சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி யாகப்,
பரற்பெய் பள்ளிப் பாய்இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு
ஈமம்
நுமக்குஅரி தாகுக தில்ல  எமக்குஎம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென
அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே.”

சான்றோர் பெருமக்களே, “உன்னுடைய தலைவன் இறந்தான். அவனுடன் நீயும் உடன்செல்” என்று சொல்லாது, அதைத் தவிர்த்து விலக்கச் சொல்கிற பொல்லாத எண்ணத்தையுடைய சான்றோர் பெருமக்களே! அணிலின் மேலுள்ள வரிபோல் வரியை உடைய வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்து எடுத்த விதை போன்று நல்ல மணம் மிகுந்த நெய் கலக்காத நீர்ச்சோறு, எள் துவையல், புளி சேர்த்த வேளைக்கீரை ஆகியவற்றை உண்டும், பாய் இல்லாமல் பருக்கைக்கல் மேல் படுத்தும், கைம்மை நோன்பியற்றும் பெண்டிர் அல்ல நான்.

சுடுகாட்டில் உண்டாக்கியதும் கரிய விறகால் அடுக்கப் பட்டதுமான பிணப்படுக்கை உமக்கு அரியதாக இருக்கலாம். ஆனால், பெரிய தோளையுடைய என் கணவன் மாய்ந்தமையால். அந்த ஈமத்தீயே எமக்கு இதழ் மலர்ந்த தாமரையின் தண்ணீர்ப் பொய்கைநீர் போல இன்பம் அளிப்பதாகும். கணவன் இறந்துபோன நிலையில் ஒரு பெண் இந்தப் பாடலை எழுதியிருக்க முடியுமா அல்லது தெளிவும் நிதானமுமாக இப்படியொரு பாடலை எழுதிய பெண் தீப்பாய்ந்து இறந்துபோயிருக்க முடியுமா என்கிற கேள்விகள் எழுந்தாலும் மதுரை பேராலவாயார் என்கிற புலவர் எழுதிய 247ம் புறநானூற்றுப் பாடலில் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்து இறந்தது உறுதியாகிறது.

மேலும் “இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே” என்கிற வரிகளில் இறந்த அந்தப்பெண் இளமையானவர் என்பதும் தெரிகிறது. கணவன் இறந்தவுடன் ஒரு பெண் சமூகத்தில் அடைகிற துன்பங்களை பெருங்கோப்பெண்டு எழுதிய பாடலில் அறிய முடிகிறது. இத்தனைத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டு ஒரு பெண் உயிர் வாழ்வதை விடவும் உயிர்விடுதலே மேலானது என்கிற கருத்தைச் சொல்கிறது கணவனை இழந்து வாழ்பவள் மன்னனின் மனைவியானாலும் அவளின் நிலையும் துன்பத்திற்கு உரியதாகவே இருந்திருக்கிறது. 

“நல்லோள் கணவனொடு நனியழழ்
புகீஇச்
சொல்லிடை இட்ட பாலை நிலையும்” (தொல்:புறத்:19)
  
கணவனோடு எரிமூழ்கி இறப்பவளை நல்லோள் என தொல்காப்பியம் சொல்கிறது. சங்க இலக்கியத்திற்கு முற்பட்ட தொல்காப்பியமும் இவ்வழக்கத்திற்கு இலக்கணம் சொல்லியிருக்கிறது.  இவ்விதமாக ஒரு பெண் தீப்பாய்ந்து இறந்து போகிற வழக்கம் தமிழ் நிலத்தில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சதி என்னும் தற்பலி வழக்கம் தமிழ் நிலத்துக்கு ஆனதில்லை என்கிற ஒரு கருத்தும் இருக்கிறது. இந்த வழக்கம் போர் மரபுக்கானது என்பதே சரியானது. தொடக்கக் காலத்தில் பார்ப்பன சமூகத்தில் இந்த வழக்கம் இல்லை. இவ்வாறு எரிமூழ்க பார்ப்பனப் பெண்ணுக்கு யாராவது உதவி செய்தால் பார்ப்பனனைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என நம்பப்பட்டது.

“உதீர்ஷ்வ நார்யபி ஜீவலோகம் கதா
சுமேத முபசேஷ ஏஹி,
ஹஸ்ததிரா பஸ்யதி திஷோ ஸத வேதம்
பத்யு ஜனித்தவம் பி ஸம்பூத”
என ரிக் வேதத்தில் உள்ளது. “பெண்ணே, இனி ஜீவனுள்ள
உலகத்திற்குச் செல்லவும். இறந்த
வனிடம் நீ ஏன் உட்கார்ந்துள்ளாய், இங்குவா, உன்னை விரும்புபவனை விவாகம் செய்து கொள்ளவும்”

என ரிக் வேதம் சொல்கிறது. வேதகாலத்து ஆண்கள் ஆயுதங்களோடு நெருங்கியவர்களாக இருந்தார்கள். ஓர் ஆண் இறந்துபோனவுடன் அவன் பயன்படுத்திய வில், அம்பு முதலியவற்றை இறந்தவனோடு வைத்து, அவனுடைய மனைவியையும் பக்கத்தில் படுக்க வைத்து அதன்பின் வில்லை கையிலெடுத்துக்கொண்டு அவன் மனைவியையும் எழுந்துவரச் சொல்லி கட்டளையிடுகிற ஒரு சடங்கு முறை இருந்திருக்கிறது. அப்படி எழுந்து வருகிற பெண்ணை வளமுடன் வாழ வாழ்த்துகிற பாடலும் இருந்திருக்கிறது.

அந்த வாழ்த்துத் துதியில் ‘அக்ரே’ Rigveda X.18:7 என்ற சொல்லை ‘அக்னே’ என மாற்றிக்கொண்டு ரிக்வேத காலத்தில் இந்த வழக்கம் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இந்த ஒரு சொல் மாற்றம் ரிக்வேதம் உடன் கட்டையேற உடன்பட்டிருந்ததாக திரித்துக்கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவனோடு அவளையும் வைத்து எரிக்கிற வழக்கம் தொடங்கியிருக்கும். இந்தியா தவிர, நார்வேயிலுள்ள கொத்துக்கள்(Goths), கெல்த்துகள்(Celts), கோல்சுகள்(Gauls), திரேசியர்(Thracians), கசைதியர்(scythians) மற்றும் சீனாவில் சில குறிப்பிட்ட வகையினரிடமும் கணவனுடன் சேர்ந்து இறந்துபோகிற மனைவியர் பற்றிய வழக்கம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது.

உலகம் முழுக்க பல இனங்களில் இந்த வழக்கம் இருந்தமைக்குக் காரணம், இந்த வழக்கம் முதலில் அரசர்களிடமும் போர்வீரர்களிடமும் இருந்திருக்கலாம். போரில் வெற்றிபெற்ற மன்னரும் அவரது படையும் தோல்வியடைந்த மன்னர் மற்றும் படைவீரர்களின் உடமைகளைக் கைப்பற்வது போல மனைவியரையும் கைப்பற்றுகிற வழக்கம் இருந்திருக்கிறது, தோல்வியடைந்தவரின் உடைமைப் பொருட்களை சிதைப்பது போலவே தோல்வியடைந்த நாட்டின் பெண்களையும் சிதைப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது.

எனவே ஒரு மன்னன், சமூகத்தில் உயர்ந்தவன், போர்வீரன் போன்றோர் இறந்தால் அவன் பயன்படுத்திய பொருட்களுடன் குதிரைகள், பணியாட்கள் மற்றும் மனைவியையும் அவனுடன் வைத்து எரிக்கப்படுகிற வழக்கமாக மாறியது. மன்னர்கள், போர்வீரர்கள் தவிர மற்றவர்களிடமும் இந்த வழக்கம் நாளடைவில் பரவியிருக்கக்கூடும். கணவனுடன் சிதையில் மரிப்பது, அவனுடைய பாவங்கள் அத்தனையையும் தீர்த்து தூய்மை செய்தவளாகிறாள் எனவும், அவ்விதமாக இறந்த பெண் அவள் உடலிலுள்ள மயிர்களின் எண்ணிக்கையளவு காலம் (3.5 கோடி ஆண்டுகள்) சொர்க்கத்தில் அவனோடு வாழ்வாள் எனவும் நம்பப்பட்டது.

மேலும் அவளுடைய தந்தை, தாய் வகையினரையும், கணவனின் குடும்பத்தினரையும் தூய்மை செய்தவளாகிறாள் எனவும் நம்பப்பட்டது. அதனாலேயே உடன்கட்டை ஏறுகிற வழக்கம் வலியுறுத்தப்பட்டது. வடநாட்டின் அளவிற்கு தமிழ் நிலத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றாலும் பரவலாக இங்கும் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கல்வெட்டுகளும் வரலாறும் சதி என்னும் உடன்கட்டையேறுகிற வழக்கம் இருந்தது பற்றி நினைவுப்படுத்துகின்றன. உடன்கட்டை ஏறிய பெண்ணிற்கு நடுகல், கோயில் கட்டி வழிபடும் நிலை இருந்துள்ளது.

மாசதிகற்கள், மகாசதிகற்கள், மாஸ்திக்கற்கள், சதிகற்கள் என்ற பெயரில் வழங்கப்படுகிற நடுகற்கள் எரிமூழ்கி இறந்துபோன பெண்களின் நினைவாக வைக்கப்பட்டவை. இக்கற்களில் இருவளையணிந்த கைகள் ஒரு கம்பத்தில் இருப்பதுபோல பொறிக்கப்பட்டுள்ளன. சில கற்களின் சுவற்றில் இறந்த கணவன், மனைவி உருவங்களும் திங்களும் ஞாயிறும் பொறிக்கப்பட்டுள்ளன. வளையணிந்த கை அந்தப் பெண்ணின் கற்பைச் சுட்டுவதாகும்.

ஏழாம், ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்வகைக் கற்கள் தொண்டை மண்டலத்தில் கிடைத்துள்ளன. தீப்பாஞ்ச அம்மன்,  தீப்பாஞ்சாள் கோயில், தீப்பாஞ்சமாலை என்று இவை அழைக்கப்படுகின்றன. கொங்கு நாட்டில் உள்ள வீரமாத்தி கோயில்களும் இவ்வகையானவை. இன்றைய காலகட்டத்தில் இந்த வழக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டாலும் தான் நம்புகிற ஆண் தன்னிடமிருந்து விலகுகிறான் என்று அறிந்தவுடன் ஒரு பெண் மனதளவில் தீக்குள் பாய்ந்துவிட்டவளாகிறாள். நடுகல் வைத்து பின்னாளில் யாரேனும் கைதொழுவார்கள்
என்பதெல்லாம் அல்ல, தன்னளவில் அவனுடைய இழப்பை சமன்செய்துகொள்ள இயலாதவளாக ஆகிவிடுகிறாள். ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் ஒரு விஜயலட்சுமி இருக்கிறாள். ஒவ்வொரு விஜயலட்சுமிக்குள்ளும் ஒரு தீப்பாஞ்சமாலை இருக்கிறாள்.

(சங்கத்தமிழ் அறிவோம்!)

பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது ஒலியமங்கலம் என்று வழங்கப்படும் ஊரானது, பண்டைய காலத்தில் ஒல்லையூர் நாடாக விளங்கியது. இவர் பாடியதாக பொதுவியல் திணையில் ஆனந்தப்பையுள் துறையில் பிரிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பாடல் கிடைத்துள்ளது. புறநானூறு: 246. ஆனந்தப் பையுள் என்றால் கணவன் இறந்தபிறகு அதனால் துன்பமுறுதல் என்று பொருள். கைம்மை நோன்பு ஏற்று வாழ்வதைவிட தீப்பாய்ந்து இறப்பது மேல் எனச் சொல்கிற பெண்பாற்புலவரின் சங்கப்பாடல் அது.

எரிமூழ்குதல் பற்றிய குறிப்புகள்

* எரிபுகுதல், தீப்பாய்தல், உடன்கட்டையேறுதல், சதி என்கிற சொற்களில் வழங்கப்படுகிற எரிமூழ்கும் செயலில் முதல் மூன்று சொற்களும் ஒரு பெண் கணவனின் சிதையில் தீப்பாய்ந்து உயிர்விடுவதைக் குறிப்பிடுகிறது. சதி என்பது வடமொழிச்சொல், இதன் பொருள் இருத்தல் என்பதாகும். ‘அஸ்’ பெயரடைப் பிறந்த பெண்பாற் சொல்லாகவும், ‘சத்’ வினையடைப் பிறந்த நிகழ்கால பெயரெச்சச் சொல்லாகவும்
விளங்குகிறது.

* பௌத்தம் உடன்கட்டையை ஆதரிக்கவில்லை. ஆனால், மணிமேகலை காப்பியத்தில், ஆதிரையின் கணவன் சாதுவன் கடலில் மூழ்கி மாண்ட சேதி கேட்டு, ஆதிரை ஊராரை அழைத்து சுடுகாட்டில் நெருப்பை வளர்த்து தீப்பாய முயன்றதாகவும், கணவனுக்காக உயிர்நீத்த பெண்களுக்கு நினைவாலயங்கள் கட்டப்பட்ட சக்கரவாளக்கோட்டம் பற்றிக் கூறுகிறது. 

* கி.மு. 316ல் இந்து மதத்தைச் சார்ந்த சேனாதிபதி கெயிட்டஸ்(Keteus) என்பவன் போரில் அன்ரிகோணஸ்(Antigonus) என்பவனை எதிர்த்து இறந்தபோது அவனுடைய இளைய மனைவி உடன்கட்டையேறி இறந்து போனாள்  என்பதுதான் வடநாட்டில் கிடைத்துள்ள முதல் சான்று.

* ஹூணர்களுடன் கி.பி.510 ல் போரிட்டு மாய்ந்த கோபராஜன் என்ற சேனாதிபதியின் மனைவி சிதையில் கூடவே எரி மூழ்கினாள்.

* ஹர்ஷ மன்னனின் தாயார் யசோமதி தன் கணவன் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என அவன் உயிர் பிரியும் முன்பாகவே தீப்பாய்ந்து இறந்து போகிறாள்.

* முதலாம் ராஜராஜனின் தந்தை சுந்தரசோழன் கி.பி.969ல் இறந்தபோது அவன் மனைவிகளில் ஒருத்தி வானவன் மாதேவி தாய்ப்பால் உண்ணும் குழந்தையைப் பிரிந்து உடன்கட்டை ஏறிய நிகழ்வை திருக்கோவிலூர் கல்வெட்டும் திருவாலங்காட்டுச் செப்பேடும்
தெரிவிக்கின்றன.

* கி.பி.1057ல் இரண்டாம் ராஜேந்திரசோழன் காலத்துக் கல்வெட்டு மைசூரில் பொந்துரா என்கிற இடத்தில் உள்ளது. நஞ்சநாட்டுத் தலைவன் மகள் திக்கபி என்பவளின் மலையுத்த வீரனான கணவன் இறந்தபோது தீப்பாய்ந்து இறந்து போகிறாள். 

* ‘பையதரஹல்லி’ என்கிற இடத்தில் உள்ள கி.பி.1067ம் ஆண்டைச் சேர்ந்த விஜய ராஜேந்திரச் சோழன் காலத்துக் கல்வெட்டொன்று ஒரு பெண் உடன்கட்டையேறிய செய்தியைச் சொல்கிறது. 

* பாண்டியர், நாயக்கர் காலத்திலும் உடன்கட்டை ஏறும் நிகழ்வு இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. இப்பெண்கள் சமூகத்தால் புகழப்படுதலை மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1659ல் திருமலை நாயக்கர் இறந்தபோது அவனது 200 மனைவிகள் உடன்கட்டை ஏறியதும், கி.பி.1710ல் ராமநாதபுரம் சேதுபதி மரணமுற்றபோது அவனது 47 மனைவிகள் உடன்கட்டை ஏறியதும் நிகழ்ந்திருக்கிறது.

* தஞ்சை மராத்தியர்களிடம் இந்தப் பழக்கம் இருந்தது. அவர்கள் இதை ‘சதி’ அல்லது ‘சககமனம்’ என்று அழைக்கின்றனர். முதலாம் சரபோஜி, பிரதாப சிங், அமரசிங் ஆகியோரின் சில மனைவிகள் உடன்கட்டை ஏறிய குறிப்புகள் உள்ளன.

* செஞ்சியை ஆண்ட தேசிங்குராஜன் கி.பி. 1713ல் போரில் மாண்டபோது, அரண்மனைப் பெண்கள் அனைவரும் தீக்குளித்து மாண்டனர். 

* ராஜாராம் மோகன்ராய் கண்ணெதிரே அவருடைய அண்ணி உடன்கட்டை ஏறிய நிகழ்வைப் பார்த்ததிலிருந்து இந்த வழக்கத்திற்கு எதிராக போராடினார்.

* கி.பி. 1829ல் வில்லியம் பெண்டிங் பிரபு உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் கொண்டுவந்து, அச்சட்டம் 1830ல் தமிழகப் பகுதிகளில் அமலாகும் வரையில் உடன்கட்டை ஏற்றப்படும் நிகழ்வு அரச குடும்பங்களில் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிலும் நிகழ்த்தப்பட்டது. ஒப்பீட்டளவில் வட இந்தியாவை போல் அதிகம் இல்லை என்றாலும் முற்றிலும் இல்லை என்பதோ, அரச குடும்பங்களில் மட்டுமே நிகழ்ந்தது என்பதோ உண்மையல்ல. இதில் ஈடுபட்ட பெண்களின் விருப்பம் என்பது விதவைகளுக்கு அக்காலத்தில் இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளிலிருந்து தப்பிக்க எடுத்த தற்கொலை முடிவு என்பதைத் தவிர வேறில்லை.

* சமீப நிகழ்வுகளாக, ராஜஸ்தான் மாநிலம், தியாரோலே கிராமத்தில் 1987ல் ரூப் கன்வர் (வயது 18) கணவர் இறந்தவுடன் அந்த கிராம மக்கள் முன்னிலையில் உடன்கட்டை ஏற்றப்பட்டார். ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட இடம் ‘சதி ஸ்தல்’ என்ற புனிதத் தகுதியுடன் சுற்றுலாத்தலமாக இருக்கிறது. ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட நாளில் ஆண்டுதோறும் ‘சுன்ரிமகோத்ஸவ்’ என்ற விழா நடத்தப்பட்டு வருகிறது. 1999ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் காச நோயினால் இறந்துபோன கணவருடன் சரண்ஷா என்ற பெண் சிதையில் ஏற்றப்பட்டாள். ஆனால், இதுபோல வெளியே வராத நிகழ்வுகளாக சில பகுதிகளில் சதி நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கலாம்.