இந்தியாவை தலைகுனிய வைக்கும் இருட்டு வணிகம்



பாலியல் வன்முறைகளை எதிர்த்து பெண்கள் ஒரு பக்கம் போராடிக்கொண்டிருக்க, மறு பக்கம் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. உலகின் உயர்ந்த கலாசாரம் என பெருமை பட்டுக்கொள்ளும் இந்தியாவில் பாலியல் வன்புணர்வைவிட அதீத கொடூரம் பெண்களுக்கு நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடக்கிறது என்கிறீர்களா? பாலியல் வன்புணர்வை படம் எடுத்து விற்கும் கேவலமான வியாபாரம்தான் அது. ஆம்! உத்தரப்பிரதேசத்தில் கியோஸ்கியில் ஒரு சாப்பாடு விற்கிற விலைக்கு மார்க்கெட்டில் பெண்களின் பாலியல் வன்புணர்வு வீடியோக்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

அல்ஜசீர் இணைய தளத்தில் வந்த இந்த செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மீரூட் எனும் நகரத்தில்தான் இத்தகைய வீடியோக்கள் சுலபமாக கிடைக்கின்றன. அந்நகரைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் கிடைக்கின்றன. 20 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை மலிவான விலைக்கு இந்த வீடியோக்கள் கிடைக்கின்றன. இந்த வீடியோக்கள் விற்பனை நோக்கத்தில் உருவாக்கப்படுபவை அல்ல. வன்புணர்வு செய்யப்படும் பெண்ணை மிரட்டுவதற்காக எடுக்கப்படுவதுதான்.

அதாவது பாதிக்கப்படும் பெண்கள் வெளியில் சென்று புகார் கொடுத்தால் இந்த வீடியோ வெளியிடப்படும் என்று அவர்களை பயமுறுத்தி தங்களின் குற்றத்தை மறைப்பதற்காக எடுக்கப்படுபவை. ஆனால் அதை பிறகு வியாபாரம் ஆக்குகிறார்கள் அல்லது குற்றம் புரிபவர்களின் செல்போனில் இருந்து இத்தகைய வீடியோக்கள் திருடப்படுகின்றன. சர்வீசுக்காக வரும் செல்போன்களிலிருந்து எடுக்கப்படுகின்றன என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர். 

இந்த வீடியோக்களை ஒருவர் வாங்கினால் போதும்.ஒரு விநாடியில் அது மற்ற சிலரின் செல்லுக்கு ஏற்றம் செய்யப்படுகின்றன. ஒரு ரேப் வீடியோ, ஒரு டீலரிடம் சென்றால் போதும். அங்கிருந்து காட்டுத் தீ போல் அது பரவி விடுகிறது. குறிப்பாக வாட்ஸ் அப் போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் விறுவிறுப்பாக அது பரவுகிறது. வாட்ஸ் அப் வீடியோக்களில் ரேப் வீடியோக்கென்று தனி குரூப்பே இருக்கிறது. இதில் பெண்களுடைய முகமும் குரலும் தெளிவாக இருக்கின்றன. மிருகத்தனமான ஆண்களின் செயல்களும் தெளிவாகத் தெரிகின்றன.

இந்த வீடியோக்கள் வெளியூர் மக்களுக்கு கிடைக்காது. அல்ஜீராவிற்காக அதை வாங்கிக்கொடுக்க மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின், உள்ளூர் குடிமகன் ஒருவர் ஒத்துக்கொண்டார். இவை நேரடியான வார்த்தைகளில் குறிப்பிடப்படுவதில்லை. இலைமறை காயாக கேட்கப்படுகிறது. கஸ்டமர்கள் யார்,  வெளியாள் யார்  என விற்பவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

அந்த வீடியோக்கள் பயமுறுத்துகின்றன. சிறு பெண்களின் மேல் நடத்தப்படும் அந்த பயங்கரம் படபடப்பை ஏற்படுத்துகிறது. ஒரு பெண் தன்னை வல்லாங்கு செய்பவனிடம் கெஞ்சுகிறாள், கதறுகிறாள் அந்த வீடியோவில். இது நேர்ந்தால் தனக்கு தற்கொலை ஒன்றே வழி என்கிறாள். இன்னொரு பெண் குறைந்தபட்சம் வீடியோவாவது எடுக்காதீர்கள் என போராடுகிறாள். ஆனால் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூர் கிராமத்தில் ஒருவர் தொடர்ந்து அடிக்கடி இந்த போர்னோகிராபி வீடியோக்களை வாங்குகிறார்.

அதிலும் குறிப்பாக இந்த ரேப் வீடியோக்களை. இது மாதிரி அதிக வீடியோக்களை தனது லேப்டாப்பில் வைத்திருப்பதாகவும் அதை பார்ப்பது தனக்கு மன நிம்மதி தருவதாகவும் அவர் சொல்கிறார். அல்ஜசீர் அமைப்பு சகரன்பூர் சுற்றுவட்டாரத்தின் டிஐஜி கே.சாஹியை இது குறித்து கேட்ட போது, "ரேப் வீடியோவா அப்படி என்றால் என்ன?" என்கிறார். இந்த மாதிரி வீடியோக்கள் மார்க்கெட்டில் விற்கப்படுவதை தடுக்கவில்லை என்றால் மேலும் பல தற்கொலைகள் நிகழ்வதையும் தடுக்க முடியாது. இந்த வீடியோக்கள் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்ட ஒரு பெண்.

இந்த வீடியோ குறித்து தகவல்கள் திரட்டுவதற்காக காவல்துறை ஆய்வாளர் அஜய் ஆனந்த் நியமிக்கப்பட்டார். அவர் புதிது என்பதால் இதுகுறித்து அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. "நான் இப்போது தான் நியமிக்கப்பட்டுள்ளேன். மார்க்கெட்டில் இந்த வீடியோக்கள் விற்பனை ஆவது குறித்து எனக்கு தகவல்கள் எதுவும் தெரியவில்லை" என்கிறார்."ரேப் வீடியோ குறித்து உலவும் விஷயங்களின் நம்பகத்தன்மை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால் அது குறித்து என்னால் இப்போது எதுவும் பேச முடியாது. அந்த வீடியோக்களை பார்த்த பின்புதான் அது குறித்து என்னால் பேச முடியும்" என்று சொல்கிறார். 

மனித உரிமைகளுக்காக வாதாடும் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மங்களா கூறுகையில், "பாலியல் வன்புணர்வு என்பது முக்கியமாக ஒரு மனிதன் ஒரு பெண் மீது தனது அதிகாரத்தை வலியுறுத்துவதற்காகவே செய்யப்படுகிறது. பல பெண்களின் வாழ்வை சீரழிக்கும் வீடியோ எடுக்கும் மனப்பான்மையும் அத்தகையதுதான். இது ஆணாதிக்கத்தைக் காட்டும் வக்கிர வேலை” என்றும் சொல்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் குழு உறுப்பினரும், பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான பிருந்தா காரத் இது குறித்துக் கூறுகையில், "அரசாங்கத்திற்கு தெரிந்தே நடைபெறும் இந்த வீடியோ விற்பனை ஒரு வெட்கங்கெட்ட செயல். இந்த மாநிலத்தின் அரசு இயந்திரம் இதை முற்றிலுமாக தடுக்க தவறிவிட்டது. இந்த பாலியல் குற்றங்கள் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்கிறார் அவர்.
 
"இது ஒரு அருெவறுப்பான செயல். வன்புணர்வுக்கு ஆளாகும் சமயத்தில் வீடியோ எடுக்கும் போது அந்த பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் உணரமுடியும்" என்கிறார் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான 16 வயது பெண் சிகா. மார்ச் 2015ல் வன்புணர்வுக்கு ஆளான பிறகு அந்த பெண் பள்ளியில் கூடப் படிக்கும் மாணவர்களின் கேலிக்கு ஆளாகி கூனிக்குறுகியே பள்ளியில் நின்றுவிட்டதாக சொல்கிறார்.
 
"இதை எடுப்பவர்கள் திருந்த வேண்டும். இத்தகைய வீடியோக்களில் உள்ள பெண்களின் நிலைமை தற்போது என்ன என்று நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. நிறைய பேர் தற்கொலை முடிவைத்தான் எடுப்பார்கள்” எனும் சிகா, தன்னை வன்புணர்வு செய்து தன்னை இத்தகைய நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது புகார் அளித்துள்ளதால் சிகாவின் குடும்பம் தற்போது அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது என்றும் கூறுகிறார்.
 
2014ல் இந்தியாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வன்புணர்வு வழக்குகள் பதிவாகி உள்ளன. 2015ல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது. தடைபடாமல் இந்த வியாபாரம் நடக்கக் காரணம் என்ன? இந்தியாவில் நடக்கும் இந்த இருட்டு வணிகத்தின் மூல காரணி எது? வேறென்ன? சீரழிந்த வக்கிர மனநிலைதான்.

- ஸ்ரீதேவிமோகன்