பதக்கம் வெல்வது + வறுமையை வெல்வது = இல்ககு



சவால்கள் பெண்களுக்கு எப்போதும் எதிரியாக இருந்ததில்லை. ெநருக்கடிகளே அவர்களை சிகரம் ஏற்றி அழகு பார்க்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள் சகோதரிகள் பத்மாவதி, நந்தினி, அபிராமி ஆகியோர். சேலத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் பளு மற்றும் வலு தூக்குதலில் சாதனை ராணிகளாக வலம் வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பார்ட் டைம் ஜாப். பகலில் பள்ளி, கல்லூரிகளில் படிப்பு, மாலையில் விளையாட்டுப் பயிற்சி என எப்போதும் பிசியாக உள்ளனர்.

அடுத்தடுத்து வெற்றிகளை அள்ளுவது மட்டுமே இவர்களின் இலக்கு. உலக சாதனைக்கு குறி வைத்து உற்சாகமாக வலம் வருகின்றனர் சாதனை சகோதரிகள். சேலம் தாதகாபட்டி பகுதியில் தாகூர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். அங்குள்ள அலுமினியப் பட்டறையில் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி அம்சாதேவி இல்லத்தரசி. இவர்களின் முதல் மகள் பத்மாவதி பாவை பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறார்.

இரண்டாவது மகள் நந்தினி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிப்பைத் தொடர்கிறார். மூன்றாவது மகள் அபிராமி சேலம் மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். மூவரும் விளையாட்டுத் துறைக்கு வந்தது எப்படி? சொல்கிறார் நந்தினி, ‘‘அப்பாவுக்கு கூலி வேலை. மூன்று பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கே பெரும்பாடுபட்டனர். அக்கா பத்மாவுக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை.

அனைவரும் ஆசைகளை மட்டும் சுமந்து கொண்டிருந்த நேரத்தில் குடும்ப கஷ்டத்துக்காக எட்டாம் வகுப்புடன் படிப்பை விட்டு பக்கத்தில் இருந்த பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றேன். எங்கள் பகுதியில் மகாத்மா காந்தி உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் பொன்சடையன் எங்களுக்கு வழிகாட்டினார். விளையாட்டுத் துறையின் வழியாக படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெண்கள்  பெற முடியும் என எங்கள் வீட்டில் பேசினார்.

முதலில் நான் அவரது உடற்பயிற்சி நிலையத்தில் பளு தூக்கும் பயிற்சி பெற்றேன். மாவட்ட மற்றும் மாநிலப் போட்டிகளிலும் கலந்து கொண்டது எனக்கு புதிய அனுபவத்தை தந்தது. இந்த ஆண்டு (2016) தேசிய பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். எனது தங்கை அபிராமியும் என்னோடு பளு தூக்கும் பயிற்சியில் சேர்ந்தார். அவரும் தேசியப் போட்டியில் அவரது பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

வீட்டின் வறுமைச் சூழலால் எங்களது படிப்பு மற்றும் விளையாட்டு செலவுகளுக்கான பணத்தை பார்ட் டைம் வேலைகள் செய்து சம்பாதிக்கிறோம். நானும், அபிராமியும்  காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பால் விற்கும் வேலை பார்க்கிறோம். இதில் தினமும் 100 ரூபாய் கிடைக்கும். பின்பு அவள் பள்ளிக்குச் சென்று விடுவாள். நான் டுட்டோரியல் கல்லூரியில் படித்தபடியே பனியன் கம்பெனியிலும் பகுதி நேர வேலையை தொடர்கிறேன்.

அக்கா பத்மா கல்லூரி முடிந்து வரும் மாலை நேரத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பகுதிநேர வேலை பார்க்கிறார். பத்மாவும் தற்பொழுது பளு தூக்கும் பயிற்சி பெறுகிறார். வீட்டில் பொருளாதார நிலைமை மோசமாக இருந்தாலும் நாங்கள் யாரும் எங்கள் பெற்றோருக்கு பாரமாக இல்லை. பகுதி நேர சம்பாத்தியத்தில் கிடைக்கும் வருவாய் எங்களது கல்விச் செலவுகளுக்கு போதுமானதாக உள்ளது.

ஆனால் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியில் செல்வது மற்றும் சீருடை போன்ற விஷயங்களுக்கு நாங்கள் ஸ்பான்சர்களை நம்பியே இருக்கிறோம். சாதாரணப் பெண்களாக இருந்த எங்களுக்கு விளையாட்டு வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது எங்கள் பயிற்சியாளர் பொன்சடையன்தான். அவரது மகாத்மா காந்தி பயிற்சி மையத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கிறார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள சேலம் மாவட்ட வலு மற்றும் பளு தூக்கும் சங்கத்திடம் உதவிகளை பெற்றுத் தருகிறார்.

விளையாட்டு மாணவி என்பதற்காக அக்கா பத்மாவுக்கு பாவை கல்லூரியில் இலவசமாக எம்.சி.ஏ. படிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார். நானும் ஸ்பான்சர்ஸ் மூலம் பாதியில் விட்ட பள்ளிப் படிப்பை தனியார் டுட்டோரியல் கல்லூரியில் தொடரவும் ஊக்கம் அளித்தார். விளையாட்டு, படிப்பு, வேலை என மூன்று துறையிலும் சாதிக்க முடியும் என நம்பிக்கை விதையை எங்களுக்கும் விதைத்ததும் அவரே. அந்த நம்பிக்கை விதை வெற்றி விருட்சமாக வளரவும் அவரே காரணமாக உள்ளார்.

போட்டிக் களத்தில் நிற்கும்போது எங்கள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற வெறியையும் சேர்த்து இயக்குகிறோம். இந்த உணர்வே எங்களுக்கு தங்கம் அள்ளித் தருகிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எங்களது கனவு. வெளியிடங்களில் போட்டிக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு இடையே நிதி திரட்டி செல்கிறோம். வறுமையோடு போராடியபடியே எங்கள் பயணம் தொடர்கிறது’’ என்கிறார் நந்தினி.

பயிற்சியாளர் பொன்சடையன் கூறுகையில், ‘‘மூன்று பெண் குழந்தைகள் படிக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். விளையாட்டுத் துறையில் எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வறுமையைத் தாண்டிய ஓர் ஒளியை அவர்களிடம் பார்த்தேன். எனது பயிற்சியும் அவர்களது முயற்சியும் இன்று தேசிய சாதனையாளர்களாக அவர்களை உயர்த்தியுள்ளது. அவர்களது கல்விச் செலவுகளுக்காகத்தான் பகுதி நேர வேலைகளிலும் சேர்த்துவிட்டேன். பெண்கள் தற்சார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்குள் உள்ள ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி எதையும் சாதிக்க முடியும். சர்வதேச அளவில் இவர்கள் முத்திரை பதிப்பார்கள்,’’ என்கிறார் பொன்சடையன்.

- யாழ் ஸ்ரீதேவி
படங்கள்: செல்வன்.ஏ