அசத்தும் வரவேற்பறை



வரவேற்பறை எப்போதும் பளிச்சென்று அழகாக இருந்தால்தான் வருபவர்களை வரவேற்கும் அறையாக இருக்கும். நம் நெருங்கிய சொந்தம் அல்லது நட்பைத் தவிர வேற யாரும் படுக்கை மற்றும் மற்ற அறைகளுக்கு அவ்வளவு சீக்கிரம் உள்ளே வரமாட்டார்கள். அனைவரும் பார்க்கும் அறையாக இருப்பதால் வரவேற்பறையை அழகாக வைத்திருக்க வேண்டும். இதற்காக நிபுணர்களைஅழைத்தெல்லாம் அழகுபடுத்தத் தேவையில்லை.

நாமே எளியமுறையில் வரவேற்பறையை அழகாக வைப்பது குறித்து விவரிக்கிறார் வீட்டு உள் அலங்கார நிபுணர் சரஸ்வதி ஸ்ரீனிவாசன். வரவேற்பறை அழகாக இருந்தால்தான் நம் வீட்டின் மீது மரியாதை கூடும். அதற்கு விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை. இருக்கும் பொருட்களை வைத்தே அழகு படுத்தலாம். எளிமையான சிலவிஷயங்களை கையாண்டால் போதும்.

* சுவரின் நிறம்

நாம் அடிக்கும் பெயின்ட் கலருக்கு அறையின் அழகை தீர்மானிப்பதில் பெருமளவு பங்குண்டு. அழுத்தமான நிறங்கள் அறையில் வெளிச்சம் குறைவாக இருப்பது போல் காட்டும். வெளிர் நிறங்களை பயன்படுத்தினால் குளிர்ச்சித் தன்மையை வழங்குவதோடு வரவேற்பறையை பெரிதாக காட்டும்;  வெளிச்சம் இருப்பது போல் காண்பிக்கும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நிறங்களை கட்டுமான நிறுவனமே தீர்மானிப்பதால் நாம் சுவற்றின் நிறத்தை தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

* தரை

வீட்டின் தரைக்கு பயன்படுத்தப்படும் டைல்ஸ் போன்றவையும் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். வெளிர் நிற ஃப்ளோரிங் இடத்தைச் சற்றுப் பெரிதாகக் காட்டும். குறிப்பாக வெள்ளை அல்லது அரை வெள்ளை நிறத்தில் தரை இருத்தல் சிறப்பு.

* சோபா

வரவேற்பறை பெரியதாக இருந்தால், நடப்பதற்கு இடைஞ்சல் இல்லாமல் அறையின் மூலையில் சுவற்றை ஒட்டி எல் வடிவத்தில் சோபா போடலாம். எதிரில் டிவி கேபினட்டை வைக்கலாம். எல்இடி டிவியாக இருந்தாலும் எதிர்பக்கம் மாட்டி வைக்கலாம். அறை சிறியதாக இருந்தால் சோபாவை நடுவிலே போடலாம். சின்ன அறைக்கு பெரிய சோபாக்கள் வாங்கக் கூடாது. சோபா அகலம் குறைவானதாகவும் உயரம் அதிகம் உள்ளதாகவும் வாங்க வேண்டும். கைப்பிடிகள் சின்னதாக இருக்க வேண்டும். முதுகுப்பக்கம் அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சோபாக்களை சின்ன அறையில் போடலாம்.

* சென்டர் டேபிள்

சோபாவிற்கு டீப்பாய் எனப்படும் சென்டர் டேபிள் போடும்போது அது சோபாவை விட உயரமாக இருக்கக்கூடாது. சோபாவின் உயரம்தான் இருக்க வேண்டும் அல்லது அதைவிட குறைவாக இருந்தாலும் நல்லது. டீப்பாய் சோபாவின் நிறத்திற்குத் தகுந்தாற்போல இருக்க வேண்டும். டீப்பாய்களின் மீது அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நாப்கின்களை போட்டு வைக்கலாம். தொலைபேசி மீதும் எம்ப்ராய்டரி டிசைன் அல்லது கட் டிசைன் செய்யப்பட்ட துணிகளை போட்டு வைக்கலாம்.

* உயரமான பொருட்கள்

பெரிய பெரிய  செதுக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் உள்ள மரங்கள், மீன்தொட்டி, ஸ்டாண்டுடன்  உள்ள உயரமான விளக்குகளை போன்ற உயரமான பொருட்களை அறையின் மூலையில் வைத்தால்  எடுப்பாக இருக்கும்.

* செடிகள்

சிலர் வரவேற்பறையில் அழகுக்காக செடிகளை வைத்திருப்பார்கள். அதில் இலைகள் அதிகம் இருக்காது. ஆனால் செடிகள் உயரமாக இருக்கும். அப்படி இருந்தால் அது அழகாக இருக்காது. அதற்குப் பதிலாக உயரம் குறைவாக இருந்தாலும் அடர்த்தியாக உள்ள செடிகளை வைக்க வேண்டும். நல்லச் செடிகளாக இருக்க வேண்டும். அதை அடிக்கடி ட்ரிம் பண்ணி வைக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும். செடிகளை அறையில் வைப்பதால் வீட்டின் அழகு கூடுவதில் இன்னொரு ரகசியமும் உண்டு. அதில் உள்ள அந்தப் பசுமை வீட்டில் உள்ள மற்ற பொருட்களின் நிறத்தோடு ஒத்துப்போய் அறையின் அழகை மேலும் கூட்டும்.

செடிகள் வைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம், செடிகளை சுவரை ஒட்டினாற் போல வைக்கக்கூடாது. சுவரில் கறை படியும். சுவரிலிருந்து கொஞ்சம் தள்ளி வைக்கவும். செடி வைத்திருப்பவர்கள் 2 செட் செடிகளை கைவசம் வைத்துக்கொண்டு ஒன்றை சூரிய வெளிச்சத்தில் வைத்துவிட்டு மற்றொன்றை வீட்டினுள் வைக்கலாம். இயற்கைச் செடிகளுக்கு சூரிய வெளிச்சம் அவசியம். அப்போதுதான் அந்தச் செடிகள் நன்றாக இருக்கும். செடிகளை சோபாவை ஒட்டியும் வைக்கக்கூடாது. சோபாவில் கறைபட வாய்ப்புண்டு. சோபாவின் உயரத்திற்கு செடிகள் வைக்கலாம்.

* கார்ப்பெட்

வரவேற்பறைக்கு கார்ப்பெட் போடும்போது நடக்கும் வழியை விட்டுத் தள்ளி நடுவில் போட வேண்டும். வழியில் போட்டால் மிதியடி போல ஆகிவிடும். சோபா நிறம், சுவரின் நிறம் இவற்றிற்கு தகுந்தாற்போல போட வேண்டும். இப்போது மெரூன், ப்ரவுன், பீச் என பல வண்ணங்களில் கார்ப்பெட் கிடைக்கிறது. பொதுவாக பல வீடுகளில் ப்ரவுன் கலர் கார்ப்பெட் போடுவார்கள். அது நமது நாட்டு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும். ஃபர்னிச்சர்களும் அப்படித்தான்.
 
* திரைச்சீலைகள்

திரைச்சீலைகள் பந்தாவாக போடுவதற்கு நம் பட்ஜெட் இடித்தால் கூடுமானவரை ஹால் வரைக்குமாவது நல்ல திரைச்சீலைகளை போட வேண்டும். கிராண்ட் லுக் டிசைனர் கர்ட்டன்களை போடலாம். நிறைய சுருக்கங்கள் வைத்த கர்ட்டனாக இருப்பது நல்லது. ஜன்னலுக்கு மேலே ஆர்ச் மாதிரி போட்டு அலங்காரம் கூட செய்யலாம். வெர்டிக்கல் பிளைன்ட்ஸ் (ரிப்பன் பட்டைகள் போல் இருக்கும்) கர்ட்டன்களை போடலாம். சுவரின் நிறத்திற்கு தகுந்தாற்போல் போடலாம். சோபா, சுவர், கர்ட்டன் அனைத்தும் மேட்சிங்காக இருந்தால் அழகாக இருக்கும்.  

* ஷோகேஸ்

அடுத்து வரவேற்பறையில், வரும் மக்களின் முக்கிய கவனத்தை ஈர்ப்பது ஷோகேஸ். ஹாலின் அழகைக் கூட்டுவதற்காக வைக்கப்பட்ட விஷயம் இப்போது குப்பைகளை சேர்த்து வைக்கும் இடம் போல்  பல வீடுகளில் இருக்கிறது. தேவையற்றப் பொருட்களை ஷோகேஸில் வைக்காதீர்கள். முக்கியமான மற்றும் அழகான பொருட்களை மட்டும் ஷோகேஸில் வையுங்கள்.

அதன் உள்ளே உள்ள பொருட்களை கொசகொசவென்று நெருக்க நெருக்கமாக அடுக்கி வைக்காமல் போதிய இடைவெளி விட்டு வைக்கவேண்டும். ஷோகேஸில் வைத்திருக்கும் செயற்கையான செடிகளை அடிக்கடி எடுத்து சோப் தண்ணீரால் கழுவி துடைத்து நிழலில் காய வைத்த பின் எடுத்து வைக்கவும். வெயிலில் வைத்தால் அவை நிறமிழந்து போகக்கூடும்.
 
* டெரகோட்டா

டெரகோட்டா பொருட்களைக் கொண்டும் ஹாலை அழகுப்படுத்தலாம். அவற்றை தேவைப்படும்போது தண்ணீரைக்கொண்டு சுத்தப்படுத்தி வைக்கலாம்.

* விளக்குகள்

மேற்கூரையின் உயரம் குறைவாக இருந்தால் இரவு விளக்கு அல்லது அழகுக்காக வைக்கும் விளக்குகளை மேல் நோக்கிப் பார்த்தாற் போல் அமைக்கலாம். மேற்கூரை உயரமாக இருந்தால் கீழ்நோக்கி இருக்கும் டூம் விளக்குகளை பயன்படுத்தலாம். ஹால் பெரிதாக இருக்கும் பட்சத்தில் 4 அல்லது 5 டூம் லைட்டுகளைக் கூட பயன்படுத்தலாம். சாண்ட்லியர் எனப்படும் பெரிய பெரிய சர
விளக்குகள் போடலாம். பார்க்க மிகவும் பிரமாண்டமாக இருக்கும்.
 
* மிதியடிகள்

நாம் பயன்படுத்தும் மிதியடியில் கூட நம் கலைநயத்தைக் காட்டலாம். சின்னச் சின்ன அர்த்தமுள்ள வார்த்தைகள் போடப்பட்ட, அதாவது வெல்கம், நன்றி போன்ற வார்த்தைகள் அமைந்த மிதியடிகளை பயன்படுத்தலாம். பொருட்களை விட, அவற்றை நாம் தேர்ந்தெடுக்கும் விதமும், நமது கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தி அவற்றை நாம் அமைக்கும் விதமும் தான் நமது வீட்டின் அழகை தீர்மானிக்கும்.

சின்னச் சின்னப் பொருட்களாக இருந்தாலும் விலை குறைவான பொருட்களாக இருந்தாலும் அவற்றை தேர்ந்தெடுத்துப் பார்த்து வாங்குங்கள். அதை எந்த இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என ஒன்றுக்கு இரண்டு முறையாக சிந்தித்து வையுங்கள். உங்கள் வீட்டின் வரவேற்பறையும் வருபவர்களை கட்டாயம் கவரக்கூடியதாய் இருக்கும்.

- ஸ்ரீதேவிமோகன்