படம் பிடிக்கும் தொழிலில் தடம் பதிக்கும் பெண்கள்



திருமணம் உட்பட அனைத்து விசேஷ வீடுகளில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக வீடியோகிராஃபர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் இருக்கிறார்கள். அதிலும் புகைப்படக் கலைஞர்கள் என்றாலே ஆண்களாகத்தான் இருப்பார்கள். சில துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரில்லை என்று சொல்வோரின் கூற்றை சுக்குநூறாக உடைத்தெறியும் விதமாக, வீடியோகிராபர் மற்றும் புகைப்படக்கலைஞர்களாக சென்னையை கலக்கிக்  கொண்டிருக்கும் ஐந்து பெண்களை சந்தித்தேன்.

* செளமியா ரகுநாத், படப்பை

“இந்தத் துறையை தேர்ந்தெடுப்பதற்–்கு முக்கிய காரணம் என்னுடைய அப்பா. அவர் ஒரு சிறந்த வெட்டிங் போட்டோகிராஃபர்.  சிறு வயதிலிருந்தே எனக்கும் இதில் ஆர்வம் ஏற்ப்பட்டது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது  போட்டோகிராஃபர் ஆகணும்னு முடிவு எடுத்தேன். ஒரு புது விதமான போட்டோகிராஃபரா ஆகணுங்குற ஆசைதான் இருந்தது. அதுக்காகவே மீடியா கோர்ஸ்  படிச்சேன். படிக்கும் போதே புகைப்படங்கள் வைத்து டாகுமென்ட்ரி செய்ததுண்டு.

அப்பொழுது காலேஜ் இண்டன்ஷிப்  மூலமாக தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேர வேலை கிடைத்தது. காலேஜ் முடிச்சதும் அப்பாவோடு நிகழ்ச்சிகளில் போட்டோ எடுக்கக் கத்துக்கிட்டேன். பின் தனியாக ஆர்டர்கள் எடுக்கத் துவங்கினேன். கம்பெனி தொடங்கி 2 வருடங்களாக சுமார் 28 சுப நிகழ்ச்சிகளுக்கு ஆல்பம் செய்து கொடுத்திருப்பேன். எங்க வீட்ல எல்லோரின் ஆதரவு இருந்தாலும் கூட, நீண்ட தூரப் பயணம் செய்ய வேண்டி இருக்கும்னு அம்மா மட்டும் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு. ஆனால் உனக்கு இந்தத் தொழில் வேண்டாமென்று யாரும் சொன்னது கிடையாது.

வாடிக்கையாளர்களும் தன் குடும்பத்தில் ஒருத்தராகத்தான் என்னைப் பார்ப்பதால் என் வேலையும் சுலபமாகிறது. ஆரம்ப காலகட்டத்தில் தனியாக ஆர்டர் எடுக்கும்போது ஆண் போட்டோகிராஃபர்கள் சிலர், என்ன பொண்ணெல்லாம் போட்டோ எடுக்க வந்துருக்கு, நம்மை விட  நல்லா எடுக்க முடியுமாங்கிற மாதிரி பார்ப்பாங்க. அது மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. பிறகு என்னுடைய திறமையைப் பார்த்து மிரண்டு போனவர்களையும் பார்த்திருக்கேன்.

ஆரம்பத்தில்  வாடிக்கையாளர்கள் ‘ஒரு பொண்ணால நீண்ட நேரம் நின்று போட்டோ எடுக்க முடியுமா’ என்ற சந்தேகத்தோடதான் பார்த்தாங்க. ஒரு சிலர் ஆச்சரியப்பட்டு வந்து என்ன ஊக்கப்படுத்தியதுண்டு. ரெகுலர் வாடிக்கையாளராக மாறியவர்களும் இருக்காங்க. திருமண சடங்குகளின்போது பெண்ணாக இருப்பதால் என்னால சுலபமாக கூட்டத்தில் நுழைந்து படம் பிடிக்க முடியுது. இதுவே ஒரு ஆணாக இருந்தா வழி விடாமல் தள்ளி விட்டுடுவாங்க. வெட்டிங் போட்டோகிராஃபி மட்டுமல்லாமல் மாடல் போட்டோகிராஃபியும் செய்து வருகிறேன்.

போட்டேகிராஃபர் தொழில் பெண்களுக்கு மிகவும் எளிதான  தொழிலாகவும் பிடித்தமான வேலையாகவும் இருக்கும். பல்வேறான அனுபவங்களை கற்றுக்கொடுக்கக்கூடியது. ஒரு முறை  என் அப்பாவுக்கு அவருடைய பால்ய நன்பர் ஒருவர். அவரது வீட்டு திருமணத்திற்கு புகைப்படம் எடுக்குமாறு சொல்லி இருந்தார். அப்போது அப்பா போக முடியாத சூழ்நிலை காரணமாக நான் சென்றிருந்தேன்.

படங்கள் நல்லா எடுப்பாளா என்று அவர்களுக்குப் பெரிய சந்தேகம். படம் சரியாக வரலைன்னா அப்பாவுக்கு கெட்டப் பெயர் வந்துடும். எந்த சூழ்நிலையிலும் முக்கியமான புகைப்படங்களை தவற விடக்கூடாது, படங்களும் நல்லா வரணும்னு கவனிப்பாக எடுத்தது மறக்கவே முடியாது’’.

* ப்ரியதர்ஷினி, மயிலாப்பூர்

‘‘சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேஷன் படிச்சேன். 2012ல் நண்பர் ஒருவர் முஸ்லிம் கல்யாணம் ஒண்ணு இருக்கு. போட்டோ எடுக்க முடியுமா என்று கேட்டாங்க. முஸ்லிம் கல்யாணங்களில் மணமகள் தனியாகவும், மணமகன் தனியாகவும்தான் சடங்குகள் செய்வாங்க. அதனால சில வீடுகளில் ஆண்களை மணமகள் இருக்கும் இடத்திற்கு அனுமதிக்க மாட்டாங்க. அப்பொழுதுதான் எனக்கு இந்த வாய்ப்பு கிடச்சது. முதல் முறை என்பதால் பதட்டமாக  இருந்தது.

ஆனால் இதுதான் என்னுடைய தொழிலாக மாறும்னு நான் அப்போ நினைக்கலை. இஸ்லாமியத் திருமணங்களில் பெண்கள் மட்டுமே இருக்கிறதால எனக்கு பழகுவதற்கு ஈசியா இருந்தது. அந்த அனுபவம் எனக்கு ஆர்வத்தை தூண்டியது. அதன் பின் போட்டோ எடுப்பதையே முழு நேர வேலையா மாத்திக்கிட்டேன். இதனால் பல அனுபவங்கள் எனக்குக் கிடத்தன. வெளியூர்களுக்கு போகக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. பலதரப் பட்ட மக்களை சந்திக்க முடிந்தது. இதெல்லாமே எனக்கு புதுசா இருந்தது. இந்தத் துறையில பெரிசா எந்தப் பிரச்னையையும் சந்திக்கலைன்னாலும் ஒரு சில சின்னச் சின்ன மன வருத்தங்கள் வந்திருக்கு.

திருமணத்திற்கு வர்றவங்க போட்டோகிராஃபரா பார்க்க மாட்றாங்க. ஒரு பொண்ணாத்தான் பார்க்கிறாங்க. இத்தனை ஆண்டுகாலமா ஆண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய துறை என்பதால் அவ்வளவு சீக்கிரம் இருபாலராலும் ஏத்துக்க முடியறது இல்லை. எப்படி சிறுமைப்படுத்தலாம் என்றிருப்பார்கள் சில சமயங்களில். சமூகம் எப்படி பார்க்கிறது என்று ஒரு பக்கம் இருந்தாலும். வீட்டில் இன்னும் பயத்தோடதான் பார்க்கிறாங்க. ‘இது கஷ்டமான வேலை.

இது உனக்கு வேணாம்’ என்று எங்க வீட்ல சொன்னாங்க. கொஞ்ச கொஞ்சமாகதான் அவங்களுக்கு புரிய வைக்க வேண்டி இருந்தது. இப்போ அப்படியான பிரச்னைகள் எதுவும் இல்லை. நண்பர்களோடு சேர்ந்துதான் ஆர்டர் எடுத்து பண்றேன். திருமணம் மட்டுமல்லாமல் எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் எடுக்க ஆரம்பிச்சிட்டோம். கூட்டமா வந்து போட்டோ எடுக்க தடையா நிற்கும்போது  ஆரம்பத்தில் நகர்ந்து போங்கன்னு சொல்றதுக்கு தயக்கமா இருந்தது. பின் கொஞ்சம் சத்தமா சொன்னா எல்லோருமே கேட்கிறாங்க என்பதைக் கண்டுபிடிச்சேன். பெண்கள் ஃப்ளைட் எல்லாம் ஓட்டும்போது நாங்க இதைப் பண்றது பெருசா தெரியலை.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிகழ்ச்சிகள் எடுத்திருக்கேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்ரகோஷ மங்கை கோயில் உள்ளது. இது சுமார் 2000 வருடம் பழமையான கோயில். அங்கு நடைபெற்ற திருமணத்திற்குப் போயிருந்தேன். அது பழங்குடியினர் திருமணம். அவர்கள் மற்றவர்களைவிட மாறுபட்டு இருந்தாங்க. முதலில் ஆச்சர்யப்பட்டவங்க என்னை அவங்க வீட்டுப் பிள்ளையாக நினைச்சு உபசரிச்சாங்க.

அவர்களது அன்பும், அனுசரிப்பும் என்னை அதிலிருந்து மீள முடியாதபடி ஆக்கியது. அதற்குப் பிறகு கிராமங்களில் இருந்து வரக்கூடிய ஆர்டர் எதையும் விட்டது இல்லை. குன்னூர் பகுதியில் படுவா இன மக்கள் வாழும் கிராமத்தில் ஒரு ஆர்டர். சந்தோஷமா போன எனக்கு அங்க பெரிய ஆச்சர்யமே காத்திருந்தது. அவர்களுடைய கலாசாரமும், சடங்குகளும் வித்தியாசமா இருந்தது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் எதிர் எதிராக அமர்ந்து முகத்தைப் பார்க்காமல் தாலி கட்டும் சடங்கு இன்னும் எனக்கு மறக்கலை’’.

* ஷாலினி, திருவான்மியூர்

‘‘டிகிரி முடிச்சிட்டு சில மாதங்கள் சினிமா துறையில் உதவி கேமரா மேனாக வேலைக்குச் சேர்ந்தேன். கருத்து வேறுபாடு காரணமாக  அதிலிருந்து விலகிட்டேன். அப்பொழுதுதான் வெட்டிங் போட்டோகிராஃபரா ஆகலாம்னு முடிவு பண்ணினேன். அதைத் தொடர்ந்து போர்ட்டிரைட்ஸ், பிரிவெட்டிங், போஸ்ட் வெட்டிங், மெட்டநெட் போட்டோகிராஃபி, கிட்ஸ் போர்ட்டிரைட்ஸ் என அனைத்து விதமான போட்டோக்களை எடுக்க தொடங்கிட்டேன்.

முதல் முறையா எடுக்கும் போது எல்லோருமே ஆச்சர்யமா பாத்தாங்க. சிலர் வந்து கேப்பாங்க. நல்லா படிச்சிட்டு ஏன் இந்த வேலைக்கு வந்தீங்க, கஷ்டமா இல்லையா? எப்படி செய்றீங்க என்பார்கள். எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு, ஆர்வமாகவும் இருக்கு. புதுப்புது அனுபவங்கள் இதன் மூலமா எனக்கு கிடைச்சிருக்கு. மன நிறைவா வேலை பார்க்கிறேன்னு அவங்கக்கிட்ட சொல்லி இருக்கேன்.

எங்க வீட்ல எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் கொடுத்தாங்க. நேரத்துக்கு சாப்பிடுவதில்லை, உடம்பை கவனித்துக்கொள்வதில்லை என அறிவுரை சொல்வதுண்டே தவிர எனக்கு எதிர்ப்பு தெரிவிச்சது கிடையாது. தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களுக்கும் அதிகமாக பயணம் செய்ததுண்டு. பெங்களூர், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள் அவர்களது கலாசாரத்தை எனக்கு கற்றுக்கொடுத்தன.

கடந்த வருடம் பெங்களூரில் திருமண நிகழ்ச்சி முடிந்து மழையின் காரணமா திரும்பி வர முடியாத சூழல்ல மாட்டிக்கிட்டேன். எனக்கு அங்கே யாரையும் தெரியாது. என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப கஷ்டப் பட்டு சென்னைக்கு வந்த அனுபவம் மறக்கவே முடியாது. இந்தத் தொழிலை ஆண்கள் மட்டும்தான் செய்ய முடியும், நம்மால முடியாது என பல பெண்கள் நினைக்கிறாங்க. அந்தத் தவறான எண்ணத்தை பெண்கள் மாத்திக்கணும்’’.

* பவானி, அசோக்நகர்

‘‘அடிப்படையில் காலநேரம் பார்க்காமல் வேலை பார்க்கவேண்டும் என்பதாலும், கனமான கருவிகளை தோளில் சுமக்க வேண்டிய கட்டாயம் போன்றவை பெண்களுக்குக் கொஞ்சம் தயக்கம் ஏற்படுத்தலாம். பெண்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமப்பது மற்றும் குடும்பப் பொறுப்புகளை தோளில் சுமப்பதற்கான மன உறுதியெல்லாம் இயற்கையிலே அதிகம் இருக்கும்போது இது நமக்கு நிச்சயமாக சவாலாக இருக்காது என்ற நம்பிக்கையில் இந்தத் தொழிலுக்கு வந்தேன். 15 ஆண்டுகளாக திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் வேலை செய்து கொண்டிருந்தவர் அசோக் நகர் போஸ்.

அவரிடத்தில் உதவியாளராக 2013ம் ஆண்டு சேர்ந்தேன். 6ம் வகுப்பு வரைதான் படித்தேன். போட்டோ மற்றும் வீடியோ பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. தையல் பணியில் போதுமான வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுக்  கொண்டிருந்தபோது இஸ்லாமியத் திருமணங்களில் பெண் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்களுக்கு உள்ள தேவை பற்றி போஸ் சொன்னார்.

ஒவ்வென்றாக கற்றுக் கொண்டு. புகைப்படம் எடுப்பது மற்றும் வீடியோ கவரேஜ் பணி மட்டுமல்லாமல் காட்சித் தொகுப்பு, ஆன்லைன் மிக்சிங், கிராஃபிக்ஸ், ஹெலிகேம் என அனைத்து விதமான பணிகளையும் கற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகிறேன். குறுகிய காலத்தில் இப்படி சிறப்பான முன்னேற்றங்களை எட்டியதற்கு என்னுடைய ஆர்வமும் என் வழிகாட்டியான  போஸ்தான் காரணம்’’.
                       
* புனிதா, மயிலாப்பூர் (வீடியோகிராஃபர்)

‘‘12ம்  வகுப்பு முடிச்சிட்டு வீட்ல இருந்தேன். எங்க அப்பாவுடைய நண்பர் ஒருவர் ஸ்டுடியோவில் வேலை இருக்கு செய்றீங்களான்னு கேட்டார். எங்க அப்பாவும்  மறுப்பு தெரிவிக்காம போகச் சொன்னார். எங்க வீட்ல நாங்க 5 பேர் சகோதரிகள். என்னை எங்க வீட்டில் ஆண் பிள்ளை மாதிரிதான் வளர்த்தாங்க. 1993ம் ஆண்டு நான்  வீடியோகிராஃபர் வேலைக்கு வந்தேன். என்னோட ஆசான் குருமூர்த்தி அய்யா.  ஆரம்பத்தில் ரொம்ப பயம் இருந்தது. 

மெல்ல மெல்லத்தான் கத்துக்கிட்டேன். திருமணம் ஆனதுக்குப் பிறகும் எனக்கு எந்தத் தடையும் வந்தது கிடையாது. என்னுடைய கணவரும் எனக்கு நல்லா உறுதுணையாக இருந்து வருகிறார். சொல்லப்போனால் என்னுடைய கணவரும் கத்துக்கிட்டு என்கூட ேபாட்டோ எடுக்க வர்றாங்க. இப்போதெல்லாம் வெளியூர்ல நிகழ்ச்சி வந்தால் நாங்க குடும்பத்தோடு போயிடுவோம். எனக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்காங்க. சுமார் 24  வருசமா இந்த ஃபீல்டுல இருக்கேன்’’.

- ஜெ.சதீஷ்