தோழர் லட்சுமி



-இளம்பிறை

‘‘ஊரின் நடுவே அழகான குளம். தாமரையும் அல்லியும் பூத்துக் கிடக்கின்றன. பூக்களின் மீது வண்டுகளும் தேனீக்களும் தேன்சிட்டுகளும் ரீங்கரிக்கும். மீன் குஞ்சுகளைக் கவ்வ நீர்ப்பறவைகளும் வருகின்றன. குளத்தின் அழகு மனதைக் கவர்கிறது. ஆனால் நீரின் அடியில் கிடப்பது சகதியும் மலர்களின் தண்டுகளும்தான். இவை மலர்களின் அழகிற்கு ஆதாரம். குளத்தின் அடியிலுள்ள சேற்றை யாரும் விரும்புவதில்லை. அது மக்களுக்கு எந்தப் பயனும் தருவதில்லை.

அந்த சேற்றைப் போன்றதுதான் என் வாழ்க்கை’’ என தோழர் லட்சுமி தான் எழுதியுள்ள ‘லட்சுமி என்னும் பயணி’ என்ற நூலின் முன்னுரையில் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சேற்றை யாரும் விரும்புவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த சேறுதான் குளத்தை அழகாகவும் உயிர்ப்புடனும் வைத்திருக்கிறது என்பதை மறுப்பாருண்டோ அம்மா?

கடந்த ஆறுமாத காலமாக நடமாட்டமின்றி, வீட்டிலேயே முடங்கிப் போன என்னைப் பார்த்து விசாரிப்பதற்காக தோழர் அமரந்தா வந்திருந்தார். எனது துன்பநிலை உணர்ந்து தனது பல்வேறு பணிகளுக்கிடையே எனக்கு ஆறுதலாக இரண்டு நாட்கள் என்னுடன் தங்கியும் சென்றார். பேச்சுவாக்கில் ‘‘இளம்பிறை, நீங்கள் ‘லட்சுமி என்னும் பயணி’ என்ற புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும். நான் கோயம்புத்தூர் சென்றதும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” எனச் சொல்லி சென்றபடி ஓரிரு நாட்களில் அந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பியும் தந்தார்.

‘மைத்ரி’ பதிப்பகம் வெளியிட்டுள்ள 240 பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தை நான் படுத்தபடியே வாசிக்கத் தொடங்கினேன். என்னை மனதளவில் எழுந்து அமர வைத்துவிட்டது அந்த நூல் என்றே கூறலாம். எனது வாசிப்பு அனுபவத்தில் எனக்கு உத்வேகத்தை, எண்ணக் கிளர்வை ஏற்படுத்திய அரிதான நூல்களின் பட்டியலில் தோழர் லட்சுமி அம்மா எழுதிய நூலும் சேர்ந்து கொண்டது.

ஒளிவுமறைவு, பாசாங்கு, பம்மாத்து, பூசல் மெழுகல்கள் இன்றி தன் வாழ்வில் நடந்தவற்றையும் தனக்கு நிகழ்ந்தவற்றையும் தொய்வற்ற எளிய மொழியில் உண்மைகளை நேர்பட சொல்லிச் செல்கிறார் தோழர் லட்சுமி. ஓர் உன்னதமான நாவலைப் போன்ற ஈர்ப்புடன் இந்நூலை படித்து முடித்தேன். ஏனோ உடனடியாக லட்சுமி அம்மாவிடம் பேச வேண்டும் என விருப்பப்பட்டு தோழி கவின்மலரிடம் அவரது கைப்பேசி எண் பெற்று பேசினேன். ‘அம்மா உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.

ஆனால் இப்போது நான் வரமுடியாத நிலையில் உள்ளேன்’ என்றதும் அடுத்த நாளே உயரிய வகை பேரீச்சம்பழங்களுடன் என்னை அவரே பார்க்க வந்து வியப்பில் ஆழ்த்தினார். அதுவும் நான் மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனைக்கு செலவழிக்கும் தொகைக்கு அஞ்சியபடியும், இன்னும் 15 நாட்கள் மருத்துவமனையில் உடன் இருப்பார் யாருமில்லையே  என சித்தம் கலங்கியபடியும் ஆயத்தமாகிக் கொண்டிருந்ததற்கு முதல் நாள் அவர் வந்து என்னைப் பார்த்ததும், நம்பிக்கைச் சொற்கள் பேசியதும் எனக்கு அவ்வளவு தெம்பாக இருந்தது.

இதுதான் லட்சுமி அம்மா. அவர் வாழ்வே, கலக்கமடைந்த பெண்களை தேடிச் செல்லவும் அவர்களுக்குத் தேவை என்னவென்று சிந்திப்பதும், செயல்படுவதுமே. அதையே முதன்மைப் பணியாக மேற்கொண்டு வருகிறார் என்பதற்கு அவர் எழுதியுள்ள புத்தகமே சாட்சி. மெலிந்த உடல்வாகும், அதற்கு முற்றிலும் நேர்மாறான உறுதியான மனவலிமையுமே லட்சுமி அம்மா அவர்களின் தனித்த அடையாளமாக கருதுகிறேன் நான்.

எனது பதின்பருவத்திலேயே திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் பகுதியில் எனக்கு அறிமுகமான தோழர்கள் வழியாக லட்சுமி அம்மாவின் கணவர் தோழர் பெ. மணியரசன் அவர்களை நான் அறிந்திருக்கிறேன். நேரிலும் சந்தித்தும் இருக்கிறேன். அவர் மாதாமாதம் தொடர்ந்து இன்றளவும் வெளிக் கொணரும் ‘‘தமிழர் கண்ணோட்டம்’’ மாத இதழை அவ்வப்போது வாசித்தும் இருக்கிறேன். பாதிக்கப்பட்ட,  புறக்கணிக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கான களப் போராளியாக, அவர்களது மேன்மைக்கும் உரிமைக்கும் மட்டுமின்றி காவிரி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகத்தின் துரோகம், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி ஆகிய தமிழக உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும் போராடியும் வரும் மதிப்புமிக்கத் தோழர் அவர்.

பகட்டோ எவ்வித விளம்பரமோ இன்றி தன் பணியில் மட்டும் தோய்ந்துபோகும் மணியரசன் போன்ற தோழர்களை தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற கோஷ்டியினரை தெரிந்தளவிற்குகூட தமிழக மக்கள் அறியாதிருப்பது நம் தமிழ் தேசத்தின் அறியாமை துயரம் மட்டுமல்ல... இழப்பும்கூட. தோழர் லட்சுமி அவர்களை நேசித்து அவரிடம் தன் காதலை வெளிப்படுத்த தோழர் மணியரசன் எழுதிய கவிதை இது.
 
தோழி
சத்தியத் தரிசனத்திற்கான நமது
தத்துவப் பயணத்தில்
சுத்தியலும் அரிவாளும்போல் நாம்
ஜோடி சேர்ந்துவிட்டோம்.
சொர்க்கத்தில் நமது திருமணம்
நிச்சயிக்கப்படவில்லை - அது
வர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு
வாழ்வுக்கான போரிலே வேர்விட்டது
வேலிக்கட்டி உரிமை ெசால்லும்
வெள்ளாமை நிலங்களைப் போல்
தாலிகட்டும் கொத்தடிமைத்தனம்
வேண்டாம் நம் மனதில்
மொட்டு மலர்ந்து மகரந்தம்
மோதிச் சிதறுகின்ற
இரட்டை மலர்களைப் போல்
மணம் வீசிக் கனியட்டும்
துப்பாக்கியின் இரண்டு குழல்களைப் போல
தோழியும் தோழனுமாய்
எப்போதும் செயல்புரிவோம்.

இந்தியாவை சிவக்க வைப்போம் என அரசியலையும் பெண்ணுரிமைையயும், காதலைச் சொல்ல எழுதிய கவிதையிலும் பேசலாம். எழுதியபடியே வாழவும் மணியரசன் - லட்சுமி போன்ற தோழர்களால் மட்டுமே முடியும். ’லட்சுமி என்னும் பயணி’ என்னும் இந்நூல் தன்வரலாறு கூறும் நூலாக மட்டுமின்றி தான் சார்ந்திருந்த இயக்கங்களின் எண்ணங்கள், செயல்பாடுகள், போராட்டங்கள், தோழர்கள் என பலவற்றைக் கோடிட்டுக் காட்டவும் செய்கிறது. அந்த அடிப்படையிலும் இந்நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சமூக சிந்தனையும் களப்பணிகளுமே வாழ்க்கையாகிப் போன இவரை மானுட வாழ்வின் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டங்கள் வேறு, பிறிதொரு திசை நோக்கி விரட்டிக் கொண்டேயிருக்கிறது. அநேகமாக தஞ்சாவூர் முழுதும் இவர் குடியிருக்காத தெருக்களே இருக்க முடியாது என்கிற ரீதியில் அவ்வளவு வீடுகளில் மாறி மாறி வசித்திருக்கிறார். மருந்துக் கடையில் வேலை, மாவரைத்து விற்பது, துணி தைத்துக் கொடுத்தல், சேலை வியாபாரம் இப்படியாக இன்னும் பல வேலைகளைப் பார்க்க வைத்த சூழ்நிலைகளால் அவர் தன் லட்சிய எண்ணங்களிலிருந்து துளியும் பின்வாங்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்தே எதிர்த்து நிற்கும் மன பலத்தை அவர் இயல்பாக பெற்றிருக்கிறார் என்பதே அவரின் தனித்துவம்.

தாலி இல்லாமல் குழந்தையுடன் குழாயடிக்கு தண்ணீர் பிடிக்கச் செல்லும் இவரை ஏளனமாகப் பார்த்து இழிவாகப் பேசிய மற்றப் பெண்கள் மீது வருத்தம் சிறிதுமற்று அவர்களை ஒன்றிணைத்து அத்தெருவின் தண்ணீர் கஷ்டம் நீங்க உரிய அதிகாரிகளிடம் பேசி, தண்ணீர் லாரி வரவழைத்ததோடு நிரந்தரமாக அங்கே குடிதண்ணீர் பிரச்னை நீங்கவும் வழிவகுக்கிறார்.

தாங்கள் பிறந்ததே இந்த வேலைக்காகத்தான் என சாக்கடை கழிவறை நாற்றத்துடனே வாழப் பழகிய துப்புரவுத் தொழிலாளர்களோடு தனது தோழமை குழுவினரோடு சேர்ந்து அவர்களோடு இணக்கமாகப் பழகி விழிப்புணர்வும், கல்வி அறிவும் பெறுவதற்கு ஆயத்தம் செய்திருக்கிறார். பஞ்சுமில்லில் வேலைநிறுத்தம் செய்து போராடி வேலை இழந்த தொழிலாளர்களின் வயிற்றுப் பசி போக்க தமது தோழியர்களோடு சேர்ந்து அரிசி வசூல் செய்து கொடுத்திருக்கிறார்.

மகளிர் குழுக்கள் என்றால் சேமிப்பு கடன் என்று மட்டுமில்லாது ஊருக்கு நன்மையும் செய்ய வேண்டும் என அக்குழுவில் இணைந்து அப்பகுதிக்கு நியாயவிலைக் கடை வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். இப்படியாக தொடர்கின்றன இவரது பணிகள். ‘‘இந்த உலகத்திலேயே மிகவும் துரதிர்ஷ்டமான பெண் நான்தான். என்னைப் போல துயரப்பட்டவர் யாரும் இருக்கவே முடியாது’’ என சகல வசதி வாய்ப்புகளோடு வாழும் பெண்கள்கூட தன்னைப் பற்றியே எண்ணி, தன்னைப் பற்றியே புலம்பி கவலைப்பட்டு விரக்தியடைந்து சுயநலம் வேரூன்றிப்போன இக்காலகட்டத்தில் தோழர் லட்சுமி அம்மாவின் வாழ்வும், பணிகளும் சக மனுசிகளுக்கு வாழ்வின் பொருளை மட்டும் சொல்லவில்லை உணர்த்தவும் செய்கிறது.

வருத்தங்கள், புகார்கள் என நேரடியாக இவர் எழுத்தில் ஏதும் பதிவாகவில்லையென்றாலும் அவை பல பக்கங்களில் மறைந்து கிடப்பதை யூகிக்க முடிகிறது. வெற்றுப் புகழுக்கும் விளம்பரத்திற்கும் அலையும் நபர்கள் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார். ‘‘ஒருவருக்கு பாராட்டு உந்துசக்தியாக இருக்க வேண்டும். அவரை மழுங்கடித்து விடக் கூடாது. கிராமங்களில் சில தோழர்களை கவனித்திருக்கிறேன். கிளைச் செயலாளராக பொறுப்பு வந்தால்கூட போதும் சிவப்புத் துண்டோடு தெருவில் போராட வருவார். ஆனால் தன் சொந்த வயலில் இறங்கி வேலை செய்யமாட்டார்.

அவர் பொண்டாட்டி உட்பட குடும்பமே அந்த வேலையைச் செய்யும், சம்பாதிக்கும். இவர் தற்பெருமை புகழுக்காக அலைவார்” என தோழர் வேஷம் கட்டுபவர்களையும் இனங்காட்டியிருக்கிறார். ஒரு நாள் இவரது ராசிக்கு ‘இன்று உங்களுக்கு குதூகலமான நாள்’ என போடப்பட்டிருந்ததைப் பார்த்து மகிழ்ந்திருந்த அன்றுதான் கீழே விழுந்து, இடுப்பு மூட்டு விலகி, ஒன்றரையாண்டு அதன்பின் படுக்கையில் கிடந்திருக்கிறார். தனது சொந்த வாழ்வில் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் பிறர் சிரமங்களையே தன் சிரமமாகக் கருதி வாழும் இவர்தம் தோழமை வாழ்வு...

‘வந்து விழுகிற
எல்லா கற்களும்
வீழ்ந்த இடத்தில்
மூழ்கிக் கிடக்க
தன்போக்கில்
போய்க் கொண்டிருக்கிறது நதி’

என்று எப்போதோ நான் எழுதிய கவிதையை மீண்டும் நினைத்து எழுத வைத்து விட்டார் இந்த ‘‘லட்சுமி என்னும் பயணி’’.
 

(மீண்டும் பேசலாம்!)