கார்மேகக் கூந்தல் நிறமே



பெண்களுக்கு பிடித்த அலங்காரங்களில் முக்கியமானது சிகையலங்காரம். முடியைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், அலங்கரிக்கவும் பெண்கள் செய்யும் செலவு மிகமிக அதிகம். அப்படியே செலவு செய்தாலும் தற்போதைய அவசர உலகில் விற்பனைக்கு வரும் பொருட்களில் நம்பகத்தன்மை இல்லை. அதிகமான ரசாயனக் கலப்பினால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படுவதுடன், பக்க விளைவுகளையும் ஒவ்வாமையையும் சில நேரங்களில் இந்தப் பொருட்கள் ஏற்படுத்திவிடுகின்றன.

இவற்றைத் தவிர்க்க இயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நமது இல்லங்களில் அன்றாடம் பயன்படுத்தும் ஆரோக்கியம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி நமது முடியை எவ்வாறு பாதுகாப்பது, பராமரிப்பது என்பதை அறிய சித்த மருத்துவரான நந்தினி சுப்ரமணியத்தை அணுகியபோது அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட சில தகவல்கள் இதோ:

‘‘நமது கருப்பு முடிகளுக்கு நடுவில் ஒரு வெள்ளை முடி தென்பட்டு விட்டால் அப்படி ஒரு பதட்டம் எங்கிருந்துதான் தொற்றிக்கொள்கிறதோ தெரியவில்லை. பதட்டமே வேண்டாம். அதற்காக அதிக விலை கொடுத்து கடைகளில் விற்கும் பலதரப்பட்ட தயாரிப்புகளையும் வாங்கி உங்களுடைய வெள்ளை முடிகளில் தடவி ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ளவும் வேண்டாம். முதலில் வயது காரணமாக நமது உடலில் தோன்றும் சின்னச் சின்ன மாற்றங்களை மகிழ்ச்சியாய் வரவேற்போம். இயற்கை சார்ந்த நமது முதுமையை மதிப்போம்.

அவுரி பொடி நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இயற்கையாகவே இந்த மூலிகை கரு ஊதா நிறத்தைத் தரவல்லது. மருதாணி நமக்கு சிவப்பு நிறத்தை தரக்கூடியது. எனவே முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அவுரி பவுடரை முடிக்கேற்ற அளவு எடுத்து அதையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து தலையை அலசிவிட்டால் கருநீல ஊதாவும் சிவப்பும் கலந்து நமக்கு கருப்பு நிற முடியினை கட்டாயம் தரும்.

இதில் எந்த பக்கவிளைவும் இருக்காது. மேலும் ஆரோக்கியம் சார்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் அமைந்துவிடுகிறது. தேயிலைப் பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணிநேரம் கழித்து அதனை அரைத்து அதனுடன் மருதாணி மற்றும் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து தலை முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தாலும் நரை முடி ஒருவிதமான ப்ரவுன் நிறத்தில் மாறி இருக்கும்” என மேலும் ஒரு கலர் தயாரிப்புக்கான டிப்ஸும் தருகிறார் இவர்.

‘‘கரிசலாங்கண்ணியுடன் கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இவற்றைச் சேர்த்து அரைத்து இந்தக் கலவையை உங்கள் முடிகளின் வேர்க்கால்களில் படும்படி தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தாலும் இந்தக் கலவை வெள்ளை முடி வளர்வதைக் கட்டுப்படுத்தி கருமை நிற முடி வளர்வதற்கு ஒரு பலமான மருந்தாக அமையும். உங்கள் தலையில் தலைமுடிகளின் வேர்க்கால்களுக்கு இடையில் ஏதேனும் நோய்த்தொற்று இருப்பின் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச் சாறு கலந்து தலைமுடியில் தடவினால் அவை முடியின் வேர்க்கால்களில் ஊடுறுவும் ஒரு ஏஜென்டாக வினையாற்றி பித்தத்தைக் குறைத்து தலைமுடி பாதிப்பில் இருந்து உங்கள் முடியினைக் காத்து முடி வளர்ச்சியடைய உதவுகிறது” என்கிறார்.

‘‘மேற்குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் தாராளமாக கிடைக்கும். நூறில் யாராவது ஒருவருக்கு இந்த இயற்கை சார்ந்த பொருட்களில் ஏதாவது ஒன்று சற்று ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவே அவற்றை முழுவதும் தலைகளில் தடவத் தொடங்குவதற்கு முன்பு சில மணித்துளிகள் உங்கள் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் அவற்றை லேசாகத் தடவி உங்களுக்கு அரிப்பு, எரிச்சல் அல்லது தோல் சிவப்புத் தன்மை அடைதல் போன்ற ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை அறிந்த பிறகு பயன்படுத்தினால் மிகவும் நல்லது’’ என கூடுதலாக ஒரு தகவலையும்  வழங்கினார்.

எது எப்படியோ தினம் தினம் சந்தைப் படுத்தப்படும் புதிய புதிய தயாரிப்புகளை வாங்கி அவற்றை உபயோகப்படுத்தி நமது ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் இயற்கை சார்ந்த முறைகளை பின்பற்றி நமது வெளித்தோற்றத்தை மேலும் சிறப்பாக்கலாமே?

- மகேஸ்வரி