இனி பெண்களும் சபரிமலை செல்லலாம்



மாதவிடாய் என்பது பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான். அதை வைத்துத்தான் எத்தனை மூடநம்பிக்கைகள்! மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், காயம்படும், பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்குக் குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும், கோயிலுக்குச் செல்லக்கூடாது - இப்படி பெண்ணை ஒதுக்கி வைக்கும் இம்மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது.

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்று புரிய வைக்கும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. இதற்கு அச்சாரம் போட்டது போல், கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நீண்டகாலமாகவே பெண்கள் செல்ல முடியாமல் இருந்தது. இதற்கு பெண்களின் மாதவிடாயை முக்கிய காரணமாக வைத்து தடைவிதித்திருந்தனர்.

இதை எதிர்த்து கேரளாவில் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக கடந்த 2006ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இந்த வழக்கில் ஆளும் இடது முன்னணி அரசு  அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று ஒப்புதல் அளித்து திருப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதுமாதிரியான வழக்குகளில் பெறக்கூடிய வெற்றியானது ஆணுக்கு பெண் சமம் என்பதை நினைவூட்டுகிறது என்று கூறுகிறார் எழுத்தாளர் ஓவியா.

‘‘மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. என் போன்ற இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இதைப்பற்றி ஏன் பேச வேண்டும் என்பதை விளக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனென்றால் பெண்ணை கோயிலுக்குள் அனுமதிக்காததற்கு சொல்லப்படும் காரணங்கள் பெண்ணாக இருக்கக்கூடிய எங்களையும் பாதிக்கிறது. பெண்ணின் மாதவிடாய் பருவகாலத்தை ைமயப்படுத்தி தீண்டத்தகாதவளாக பெண் மாற்றப்படுகிறாள். சபரிமலை மட்டுமின்றி வீட்டுக்குள்ளேயும்கூட இந்த தீண்டாமை என்பது இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண் புனிதமற்றவளாக இருக்கிறாள்.

ஆகவே கோயிலுக்குள் செல்லக்கூடாது என்று காரணம் கூறுகிறார்கள். மாதத்தில் மூன்று நாட்கள்தானே? கோயிலுக்குப் போனாலும் போகவில்லையென்றாலும் இதை மையப்படுத்தி ஆண்களுக்கு அடுத்தபடியான அடிமட்டமான நிலைக்கு பெண் தள்ளப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆண்களுக்கு இந்தத் தீண்டாமை இல்லை.

ஆனால் பெண் புனிதமற்றவள் என்று சுமத்தப்படுவது எல்லாம் பெண்ணை இழிவுபடுத்தக்கூடிய செயலாக இருக்கிறது. இவை அனைத்துமே மத ரீதியாக மட்டும்தான் திணிக்கப்படுகிறதே தவிர மருத்துவரீதியாக யாரும் சொல்லவில்லை. ஆக, சபரிமலை போன்ற பிரபலமான கோயில்களில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் எனும்போது பெண்களிடையே ஒரு பெரிய புரிதலையும், விடுதலையையும் கண்டிப்பாக ஏற்படுத்தும். இதுமாதிரியான வழக்குகளில் பெறக்கூடிய வெற்றியானது ஆணுக்குப் பெண் சமம் என்பதை நினைவூட்டுகிறது.

பெண்னை இழிவுபடுத்தக்கூடிய நிலையில் இருந்து வெளியில் வரக்கூடிய ஒரு சிறந்த வாய்ப்பாக கேரள அரசின் இந்த அறிவிப்பு இருக்கிறது” என்கிறார் ஓவியா. பெண்ணுக்கு அனுமதி மறுக்கப் படுகிறது எனும்போது அவளுக்கான உரிமை அங்கு பறிக்கப்படுகிறது என்று கூறுகிறார் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி. ‘‘தற்போதைய காலகட்டத்தில் எல்லாவிதமான மரபுகளும், பாரம்பரியங்களும் மாறிக்கொண்டு வருகின்றன. பொதுவாகவே வழிபாட்டு உரிமை என்பது நம் நாட்டை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்து பிரச்னையாகதான் இருந்திருக்கிறது.

எங்களது  பண்பாடு, பாரம்பரியம் என்று கூறி தலித் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத நிலை இப்போதும் இருக்கிறது.  அதுபோலவேதான் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்னும் தடை இருந்து வருகிறது. பெண்களின் உரிமை அங்கு முடக்கப்பட்டிருக்கிறது. வெறும் உடலில் ஏற்படக்கூடிய ஒரு மாற்றத்தை வைத்து பெண்ணை அனுமதிக்காதது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத காரணம். அறிவியல்ரீதியாக பார்க்க வேண்டிய ஒன்றை, தீட்டு, புனிதமற்றது என்று பார்ப்பது தவறு என்று உணர்த்தும் விதமாக இந்த வழக்கு சென்று கொண்டிருக்கிறது.

கோயிலுக்குப் போவதும் போகாமல் இருப்பதும் அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அந்த இடத்தில் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது எனும்போது அவளுக்கான உரிமை அங்கு பறிக்கப்படுகிறது. கேரள அரசின் இத்தகைய முடிவு பெண்களிடத்திலும், இறை நம்பிக்கையாளர்களிடமும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும். மிகவும் வரவேற்கத்தக்க முடிவாகவே பெண்கள் இதைப் பார்க்கிறார்கள்’’ என்கிறார் சுகந்தி.  

- ஜெ.சதீஷ்