வானவில் சந்தை



தொழில்நுட்பத்தின் விலை

2002ல் ஒரு சிறிய மோட்டோரோலா கைப்பேசியை வாங்கினேன். நீல வண்ணத் திரையில் எழுத்துக்கள் தெரியும் அது கைக்கு அடக்கமாக இருந்தது. 90களின் பெரிய டப்பா கைப்பேசியிலிருந்து உருமாறி சிறுத்த கைப்பேசியே அப்போது மக்களால் பெரும்போக்காக விரும்பப்பட்டது. எவ்வளவு சிறியதோ அவ்வளவு நவீனம். நோக்கியாதான் அரசன். சாம்சங் எல்லாம் நினைவிலேயே இருந்ததில்லை.
 
அதற்குப் பிறகு நான் 2007ல் நோக்கியா N73 வாங்கியபோது எனது கைப்பேசி ஒரு டைனோசர் ஆகிவிட்டிருந்தது. சும்மா கொடுத்தால் கூட யாரும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இந்த இடைப்பட்ட ஐந்து வருடங்களில் கைபேசித் தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் பாய்ந்தது. எனது நண்பர்கள் எனக்கு நாள்தோறும் அறிவுரை சொன்னார்கள். இந்த கைப்பேசியை வைத்திருப்பது எனது தொழிலையே பாதிக்கும் என்கிற அளவுக்கு. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கைப்பேசி அப்படி ஆகிவிட்டிருந்தது.

N73 யிலிருந்து ஸ்மார்ட் போனுக்கு நான் 2015ல் மாறிய போதும் இதே அறிவுரைகளை நாள்தோறும் கேட்டுக் கொண்டிருந்தேன். இன்றைக்கு ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவது சவாலான ஒன்று. தேவையையும் விலையையும் கொண்டே அதை முடிவு செய்ய முடியும். அப்படியுமே எண்ணற்ற தேர்வுகள் உள்ள காலம் இது. முதலில் பயன்பாட்டுத் தேவை. என்னுடைய அவதானிப்பில் இன்று ஒரு கைப்பேசியை அதன் முழுத் திறன்களையும் கொண்டு பயன்படுத்துவது பதின்பருவத்தினர் தான். ஆனால் அவர்களால் காசு போட்டு வாங்க முடியாது.

அவர்களுடைய பெற்றோரின் கைப்பேசித் தேர்விலும் இவர்களின் ஆதிக்கமே இருக்கிறது. கைப்பேசிச் சந்தையின் எதிர்காலமே இவர்கள்தான்.  தேவையை பயன்பாட்டு தேவையாகவும் அந்தஸ்து தேவையாகவும் பிரிக்கலாம். அந்தஸ்து தேவையை பெரும்பாலும் பெரிய பிராண்டுகளின் விலை உயர்ந்த கைப்பேசிகள் தீர்த்துவிடுகின்றன. ஆப்பிள் (ஐ போன்), சாம்சங் (கேலக்சி S7) போன்றவை அவற்றில் முதன்மையானவை.  மாணவிகள், பணிபுரியும் பெண்கள், தொழில் முனைவோர், வீட்டு மேலாண்மை செய்பவர்கள், கலைஞர்கள் என நுகர்வோரை வகைப்படுத்தலாம்.

ஒரு கைப்பேசியின் முதன்மையான பயன்பாடான ‘தொலைபேசுவதைத்’ தாண்டி மல்டிமீடியா (காணொளிகளைக் காண்பது, ஒலிக்கோவைகளைக் கேட்பது, விளையாட்டுகளை விளையாடுவது), இணையம், மின்னஞ்சல், சமூக ஊடகச் செயலிகள் (ஃபேஸ்புக், வாட்ஸப் போன்றவை), தொழிற் பயன்பாட்டு மென்பொருள்கள் (மைக்ரோசாஃப்ட் எக்சல், வேர்ட் போன்றவை) என்று அது தனது பயன்பாட்டு எல்லைகளை விரித்துக் கொண்டே போகிறது.

ஒரு கணினியை எப்படி அவரவர் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாமோ (தேவையான மென்பொருளை தரவிறக்கிக்கொண்டு) அப்படியே இன்று ஒரு கைப்பேசி ஆகிவிட்டது. அதனாலேயே நாம் முன்பு கணினியை குறித்துப் பேசியதைப் போலவே எத்தனை ஜிபி ராம், எவ்வளவு மெமரி என்று இப்போது ஒரு கைப்பேசியைக் குறித்துப் பேசுகிறோம். இன்று ஒரு கைப்பேசியை அதன் கட்டுமானத் தரம், நீடித்து உழைக்கும் தன்மை போன்றவற்றைக் கணக்கில்கொண்டு தேர்ந்தெடுப்போர் குறைவு. இவ்வளவு குழப்பத்தில் எப்படி ஒரு கைப்பேசியைத் தேர்ந்தெடுப்பது? தேர்வு வசதிக்காக கைப்பேசியை அதன் விலை அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம். ஆரம்ப நிலை (ரூ.3000 - ரூ.9000), நடுவாந்திரம் (ரூ. 10,000 - ரூ. 25,000) மற்றும் உயர்தரம் (ரூ. 25,000க்கும் மேல்).

விலையை தீர்மானித்த பிறகு கவனிக்க வேண்டியது ஒரு கைப்பேசியின் திரையளவு மற்றும் அதன் திறன். ஒரு கைப்பேசியின் திரையளவே அதைக் கையாளும் தன்மையை தீர்மானிக்கிறது. 4” திரை கைக்கடக்கமாக இருக்கும். 5” பரவாயில்லை. 6”ம் அதற்கும் மேலும் கையாளச் சிரமமாயிருக்கும். ஆனால் மின் புத்தகங்களை படிப்பதற்கும் காணொளிகளைக் காணவும் மிகவும் தோதானவை இவை. இந்த இரண்டு பயன்பாடுகளும் குறைவாகக் கொண்டவர்கள் 5” திரையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனென்றால் திரையளவு குறையக் குறைய மின்கலம்(பேட்டரி) நீண்ட நேரம் தாங்கும்.

திறனை செயல் திறன் (ப்ராஸஸ்சர், ராம்), கொள்ல்ளளவுத் திறன் (மெமரி) மற்றும் மின்கலத் தாங்குதிறன் எனப் பிரித்துக் கொள்ளலாம். இணையப் பயன்பாட்டிலேயே இருப்பது, வீடியோ கேம்களை விளையாடு வது, நிறைய செயலிகளைப் பயன்படுத்துவது போன்றவை கூடுதல் செயல்திறனைக் கோருபவை. ஆரம்ப நிலைக் கைப்பேசிகள் தோராயமாக 1ஜிபி ராம், 2,000 எம்ஏஹெச் மின்கலம் கொண்டிருக்கும். குறைந்தளவுப் பயன்பாட்டாளர்களுக்கு இதுவே போதுமானது.

ரூ.6000 விலையில் நல்ல கைப்பேசிகள் கிடைக்கும். 2ஜிபி ராம் 3000 எம்ஏஹெச் திறன் கொண்டவை ரூ.9000 விலையில் கிடைக்கும். இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டியது பிராண்டுகளின் வரலாறு (எவ்வளவு காலமாகச் சந்தையில் இருக்கிறது) மற்றும் தரம். ஏனென்றால் விற்பனைக்குப் பின்னான சேவையை மிகச் சில நிறுவனங்களே சிறப்பாகக் கையாளுகின்றன. கூடுதல் செயல்திறன் வேண்டுவோர் கூடுதல் விலை (ரூ.15,000 - ரூ.40,000) கொடுக்கவேண்டியிருக்கும்.

தொழில்முனைவோரும் கலைஞர்களும் மாணவிகளும் பயன்படுத்தத் தோதானவை டேப்லெட்டுகள் தான். இவை சிம்கார்டுடன் பயன்படுத்தும் (தொலைபேசிக்கொள்ளவும்) வகையிலும் வருகின்றன. இவை 7” முதல் 11” திரையளவில் வருகின்றன. தோராயமாக ஏழாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் விலையில். நிதி ஆலோசனை கோரி வரும் எனது வாடிக்கையாளரிடம் நான் பட்ஜெட் பற்றிப் பேசும்போது பெரும்பாலானவர்கள் தங்களது செலவு குறித்த ஒரு தோராயமான பிம்பம் கொண்டிருப்பதையே காண்கிறேன்.

ஒருவர் ரூ.30,000க்கு ஒரு கைப்பேசியை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இரண்டு வருடங்கள் கழித்து அதை ரூ.6000க்கு விற்றுவிட்டு புதிய ஒன்றை வாங்குகிறார் என்றால் மாதந்தோறும் அவர் ஆயிரம் ரூபாயை கைப்பேசிக்காக செலவழித்திருக்கிறார் (தொலைபேசிக் கட்டணமும் ப்ராட்பேண்ட் கட்டணமும் சேர்க்காமல்) என்று அர்த்தம். தொழில்நுட்பம் கூடக்கூட இது கூடிக்கொண்டே போகும். இதிலிருந்து விடுதலை இல்லை. இது நாம் தொழில்நுட்பத்திற்கு கொடுக்கும் விலை.

அபூபக்கர் சித்திக்
செபி பதிவு பெற்ற நிதி ஆலோசகர்