நவம்பர் 8 சுதந்திர தினமா? கருப்பு தினமா?



நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணிக்கு 500,1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணியிலிருந்து செல்லுபடியாகாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி. கருப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று கூறுகிறார். டிரெண்டிங்கில் அமெரிக்க அதிபர் தேர்தலையே முந்தி விட்டது மோடியின் இந்த அறிவிப்பு. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் மோடியின் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கின்றனர். இன்றைய இந்தியாவின் சுதந்திர தினம் நவம்பர் 8 என்று கூறும் அளவுக்கு பிரபலங்கள் பலர் அதனைப் பாராட்டினர். உண்மையில் இது வரவேற்கத்தக்கதுதானா? மோடியின் இந்த நடவடிக்கையை எப்படிப் பார்க்கின்றனர்? என பலதரப்பட்ட பெண்களிடம் கேட்டோம்.

கீதா நாராயணன், சமூக செயற்பாட்டாளர்
‘‘விஜய்மல்லையா போன்ற பெருமுதலாளிகளின் வாராக்கடன்களை திரும்பப் பெற முடியாத அரசு கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் எனச் சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அந்த ஒரு நாள் ஒரு எமர்ஜென்சி போலதான் இருந்தது. இதனை வரவேற்கும் யாரும் தெருவில் இறங்கி காய்கறி வாங்குபவர்கள் அல்ல. சந்தையில் காய்கறி வாங்க வேண்டிய நான், இதற்காக சூப்பர் மார்க்கெட் சென்று காய்கறிகள் வாங்கி ஏ.டி.எம்-ல் ஸ்வைப் செய்ய வேண்டுமா? சென்னையில் பல இடங்களில் 500 ரூபாய் நோட்டுக்கு 300 ரூபாய் வழங்கும் வியாபாரமும் நடந்திருக்கிறது. அன்றாட இயல்பு வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் இதனால் பிரச்னையை எதிர்கொண்டவர்கள் ஏழை/நடுத்தர மக்கள்தான்.’’

அருள்மொழி, வழக்குரைஞர்
சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டால் இந்தியர் ஒவ்வொரு வருக்கும் 15 லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்க முடியும் என்று சொல்லப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்ட நடுத்தர/ ஏழை மக்களை நள்ளிரவில் நடுத்தெருவில் அலையும்படி செய்ததுதான் மோடியின் அதிரடி. இது உலக சாதனை ஒன்றும் அல்ல. கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படவில்லை. தங்களது பிள்ளைகளின் திருமணத்துக்காக பணம் சேர்த்து வைத்தவர்கள், வீடு கட்டிக் கொண்டிருக்கிற நடுத்தர மக்கள்தான் இதற்கு இரையாகியுள்ளனர்.

அனைத்து பரிவர்த்தனைகளையும் வங்கி மூலம்தான் மேற்கொள்ள வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. கையிருப்பாக தொகை வைத்துக் கொள்வது சட்ட விரோதமும் அல்ல. நேர்மையாக சம்பாதித்ததை கையிருப்புத் தொகையாக சேமித்து வைத்திருக்கிறவர்கள்தான் இதனால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.’’

சாந்தி, குடும்பத்தலைவி
‘‘நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேவையான அளவு மட்டுமே மளிகை சாமான்கள் வாங்குவார்கள். திடீரென 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவித்தது பேரிடியாக விழுந்தது. பிரதமர் அறிவித்ததுமே நூறு ரூபாய் தாள்களை எடுக்கலாம் எனச் சென்றால் நிறைய ஏ.டி.எம்களில் பணம் காலியாகியிருந்தது. பல ஏ.டி.எம்களில் நிற்க முடியாத அளவுக்குக் கூட்டம். மளிகைக் கடையில் சாமான் கூட வாங்க முடியவில்லை.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது அங்கும் 500 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து விட்டனர். வண்டிக்கு பெட்ரோல் போடச் சென்றால் கூட 500 ரூபாய்க்கும் போட வேண்டும் என்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் இந்நோட்டுகள் வாங்கப்படும் என்கிறார்கள். அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை. ஸ்கேன், லேப் டெஸ்ட் போன்றவற்றுக்குத்தான் பணம் தேவைப்படும். இது எல்லோருக்கும் பொருந்தாது. நடுத்தர மக்களுக்குத் தொந்தரவான முடிவுதான் இது.’’

கமலா, பூ வியாபாரி
‘‘பூவைக் கொள்முதல் பண்ற கடையில் 500 ரூபாய் நோட்டை வாங்க மாட்டேனுட்டாங்க. அதனால கையிலிருந்த கொஞ்ச நஞ்ச நூறு ரூபாய்களுக்குப் பூ வாங்கிட்டு வந்தேன். பூவைக் கட்டி வெச்சுக்கிட்டு பார்க்குறேன். வர்றவங்களெல்லாம் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை கொடுக்கிறியா? அம்பது ரூபாய்க்கு பூ வாங்குறேங்குறாங்க. நான் எங்க போவேன் சில்லறைக்கு? இன்னைக்கு என் வியாபாரமே முழுசாப் போச்சு. இவங்க கருப்புப் பணத்தை ஒழிக்குறாங்களோ இல்லையோ? எங்க வயித்துல அடிச்சதுதான் மிச்சம்”.

மஞ்சுஷா மனோகரன், தனியார் நிறுவன ஊழியர்
‘‘வெளியூரில் வேலைக்குச் செல்கிறவர்கள் நிறைய பிரச்னைகளுக்கு ஆளாகினர். இரவோடு இரவாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும்போது என்ன செய்ய முடியும்? பேருந்தில் சில்லறை தர மறுக்கின்றனர். இதனாலேயே வேலைக்கு விடுப்பு எடுத்தவர்களும் இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது. பெங்களூருவில் இருக்கும் அவர் அங்கிருந்து கிளம்பி வருவதற்கே பெரும்பாடு பட்டதாகக் கூறினார். இதனால் மட்டும் கருப்புப் பணத்தை இவர்களால் ஒழித்து விட முடியுமா? 15 லட்சத்தை ஒவ்வொருவர் அக்கவுன்டிலும் போட்டு விடுவார்களா?’’

கீர்த்தனா, முதுகலை மாணவி
‘‘இரண்டு, மூன்று நாட்கள் இதன் காரணமாக அல்லல்பட நேர்ந்தது. உண்மையிலும் இதனால் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நடக்கும் என்றால் நாங்கள் அல்லல்பட்டதற்கு அர்த்தம் இருக்கும். அப்படி நடக்கவில்லை என்றால் நாங்கள் அடைந்த துயருக்கு இந்த அரசு என்ன விலை கொடுக்கப் போகிறது? ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் டாடா அம்பானிகளுக்கு எந்தப் பிரச்னையும் வருவதில்லையே எப்படி? இது அவர்களால் ஆளப்படும் அரசு. இந்த அரசு அவர்களுக்கு எதிராக எப்படி செயல்படும். இதனை சுதந்திர தினம் என்றெல்லாம்
சொல்லவது அநியாயம். 

- கி.ச.திலீபன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன், ஆ.வின்சென்ட்பால்