தன்னானே சின்னப்பொண்ணு



ஏழு கட்டையையும் தாண்டிப் பாடுகிறாரோ? என்று சந்தேகிக்க வைக்கிறது தஞ்சை சின்னப் பொண்ணுவின் குரல். “ஏ... அட்ராட்ரா நாக்க முக்கா நாக்க முக்கா” என்று எடுத்த எடுப்பிலேயே உச்சஸ்தாதியில் பாடும் சின்னப்பொண்ணுவின் குரல் நம் நினைவை விட்டு அகலாது. பட்டிதொட்டியெங்கும் அந்தப் பாடல் ஒலித்ததற்கு சின்னப்பொண்ணுவின் குரலும் ஓர் முக்கியக் காரணம்.

நாட்டுப்புறப் பாடகியான இவர் ‘சந்திரமுகி’ படத்தில் ‘‘வாழ்த்துறேன் வாழ்த்துறேன்” பாடல் மூலம் திரைப்படப் பாடகியாக அறிமுகமாகி இன்று வரையிலும் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். திரைப்படத்துறைக்குள் நுழைந்து விட்டாலும் நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதைக் கைவிடவில்லை. சின்னப்பொண்ணுவை தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

நாட்டுப்புறப் பாடல்கள் மீதான ஆர்வம் உங்களது இயல்பிலேயே இருந்ததா? உங்களது குடும்பத்தில் யாரேனும் நாட்டுப்புறப் பாடகராக இருந்தார்களா?
‘‘நாட்டுப்புறப் பாடல்கள் மீதான ஆர்வம் என் இயல்பிலேயே இருந்தது. எனது 13வது வயதில் இருந்து அந்த ஆர்வம் தீவிரமடைந்தது. நாட்டுப்புற இசை என்பது கிராமங்களில் வாழக்கூடிய உழைக்கும் மக்களின் இசையாக இருந்தது. வயலில் கூலி வேலை செய்கிறவர்கள் நாட்டுப்புறப் பாடலைப் பாடிக்கொண்டே பணிபுரிவார்கள். திருமணம், சீர் போன்ற சுப காரியங்கள் தொடங்கி இழவு வீடு வரை அனைத்து நிகழ்வுகளிலும் நாட்டுப்புறப் பாடல் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

இழவு வீட்டில் அந்த மரணத்தின் பொருட்டு மார் அடித்துக் கொண்டே பாடப்படும் மாரடிப்பாட்டு பாடப்படும். என் அம்மா சின்னத்தாயி மற்றும் எனது அத்தை சுப்பம்மாள் ஆகியோர் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார்கள். நான் வளர்ந்த சூழல் இப்படியானதால் எனக்குள் இயல்பாகவே நாட்டுப்புறப்பாடல்கள் மீதான ஆர்வம் ஏற்பட்டது. நாட்டுப்புறப்பாடல்களை மேடையேறிப் பாட வேண்டும் என்று சொன்ன போது என் அப்பாவும் தாத்தாவும் இதை யார் கேட்கப்போகிறார்கள்? என்றுதான் சொன்னார்கள். நாட்டுப்புற இசை என்பது மக்கள் அளவில் இருந்ததே தவிர அதற்கென ஓர் அந்தஸ்து கிடைக்காமல் இருந்தது.

இளையராஜாவின் நுழைவுக்குப் பிறகுதான் திரைப்படங்களில் நாட்டுப்புற இசை பயன்படுத்தப்பட்டு பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்லப்பட்டது. நாட்டுப்புற இசை மீதான பரவலான கவனம் ஏற்பட்டதற்கு இளையராஜா மிக முக்கியக் காரணம். நான் கிராமிய இசையை உயிராகக் கற்றுக்கொண்டேன். சினிமா பாடல்களை விடவும் நாட்டுப்புறப் பாடல்கள் மீதுதான் எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது.

நாட்டுப்புற இசையில் உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் யாரேனும் உள்ளனரா? உங்கள் நாட்டுப்புறப் பாடல்களுக்கு குரு அல்லது முன்னோடி என யாரையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
‘‘சிறு வயதிலிருந்தே பலர் பாடக் கேட்டு வளர்ந்தவள் என்பதால் பலரும் எனக்குள்  தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். ‘ஆண்பாவம்’ படத்தில் ‘பேராண்டி பேராண்டி’ பாடலைப் பாடிய ‘கொல்லங்குடி கருப்பாயியின் பாடல்கள் எனக்குள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பச்சேரி அழகர்சாமி வாத்தியார்தான் என்னை முதன்முதலில் மேடை ஏற்றி னார். நாட்டுப்புற இசைக்கலைஞர் கே.ஏ.குணசேகரனின் ‘தன்னானே’ இசைக்குழுவில் இணைந்து பல கலைநிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறேன். நான் எந்தப் பாடல் பாடினாலும் ‘தன்னானே’ என்றுதான் தொடங்குவேன். இதன் காரணமாகவே அக்குழுவுக்கு தன்னானே என்று பெயர் வைத்தார் கே.ஏ.குணசேகரன். இவரையும் எனது முன்னோடியாகக் கூறலாம்.

‘தன்னானே’ இசைக்குழுவில் உங்களது பங்களிப்பு எத்தகையது?
அக்கலைக்குழு சார்பாக தமிழகமெங்கும் பல கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடியிருக்கிறேன். நானும் கே.ஏ.குணசேகரனும் இணைந்து பாடி பதிவு செய்யப்பட்ட ‘தன்னானே’ ஒலிநாடாதான் தமிழின் முதல் நாட்டுப்புறப்பாடல் ஒலிநாடா. 1993ம் ஆண்டு வெளியான அந்த ஒலிநாடாதான் தமிழ்நாடு முழுவதும் தஞ்சை சின்னப்பொண்ணாகிய என்னைக் கொண்டு சேர்த்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ‘‘அம்மா… என் பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே” பாடல் ஏழ்மையின் துயரைச் சொல்லும்படியாக இருந்தது.

வரதட்சணைக் கொடுமையை வைத்து எழுதப்பட்ட “பூ முடிச்சு பொட்டு வெச்சு பொன் நகையும் போட்டு வெச்ச அம்மா… நா கண் கலங்கித் திரும்புறேனே அம்மா” பாடல் மற்றும் “அந்த கருவ மரத்தடியில் என் கவலைகளைச் சொன்னேனம்மா… கருவ எல உதிரும் எனக்கு கருங்கிணறும் தண்ணி ஊறும்’’ ஆகிய பாடல்கள் பெண்களின் மனதுக்கு நெருக்கமான பாடல்களாக இருந்தன. அந்த ஒலிநாடாவில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பரவலானது.

காரணம் என்னவென்றால் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்கள் அனைத்திலும் இப்பாடல்கள் ஒலித்தன. இன்றைக்கும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதற்குப் பிறகு நானும் குணசேகரனும் பாடி வேறு சில ஒலி நாடாக்கள் வெளிவந்திருந்தாலும் ’தன்னானே’ ஒலிநாடா தொட்ட உயரத்தைத் தாண்ட முடியவில்லை. 1994ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரையிலும் கே.ஏ.குணசேகரனோடு தன்னானே கலைக்குழுவில் இணைந்து பணியாற்றினேன். தமிழகமெங்கும் பல பகுதிகளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பாடியிருக்கிறேன்.. மேடையில் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தப்படும் தெருமுனைப் பிரச்சாரங்களிலும் கலந்து கொண்டு பாடியிருக்கிறேன். கம்யூனிஸக் கொள்கையின்பால் எனக்கு ஈர்ப்பு உண்டு. மற்றபடி வேறு எந்தக் கட்சியின் பிரச்சாரத்துக்கும் பாடியதில்லை.

உங்களது நாட்டுப்புறப் பாடல்களுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?
எனது பாடல்களுக்கு எப்போதும் பெரும் வரவேற்பு இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சி மேடை என்றால் கொள்கை சார்ந்த பாடல்களையும், கோயில் திருவிழாக்களில் கொண்டாட்டமான பாடல்களையும் பாடுவேன். பொதுமக்கள் ஆரவாரத்தோடு கைத்தட்டுவார்கள். அவர்கள் எனது பாடலைக் கொண்டாடுவார்கள். பார்வையாளர்கள்தான் எனது ஊக்கமே. சின்னப்பொண்ணு அக்கா என்றே பலரும் என்னை அழைப்பார்கள். உழைக்கும் மக்கள் முன்னால் அவர்களின் குரலாய் நான் பாடுகிறேன். எனது பாடல்களில் அவர்களின் வலியும் இருக்கும் கொண்டாட்டமும் இருக்கும், ஆகவே அவர்களில் ஒருத்தியாக என்னைப் பார்க்கிறார்கள். என் பாடல்களை வரவேற்கிறார்கள்.

எனது பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து 1997ம் ஆண்டு ‘தஞ்சை சின்னப்பொண்ணு வழங்கும் கிராமிய ஆடல்பாடல் நிகழ்ச்சி’யை நானே நடத்தினேன். அக்கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புறக்கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய ஆட்டக்கலைகளும் இடம் பெற்றன. 2007ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரையிலும் சென்னை சங்கமம் கலை நிகழ்வில் பாடியிருக்கிறேன். வேல்முருகனும் நானும் இணைந்து பாடியபோது அந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கலைஞர் ஐயா நல்ல தமிழ்ப்பற்று கொண்ட பாடல்களை பாடுகிறார்கள் என்று எங்கள் இருவர் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்தினார்.

திரைப்படப் பாடகியாக உங்களது நுழைவு எப்படி சாத்தியப்பட்டது?
கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் கலை இரவுக்கு சிறப்பு விருந்தினர்களாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வருவதுண்டு. 1998ம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற கலை இரவில் கலந்து கொண்ட கவிஞர் அறிவுமதி எனது பாடுதிறனை வாழ்த்தினார். அவர் மூலம்தான் ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் ‘வாழ்த்துறேன் வாழ்த்துறேன்’ பாடும் வாய்ப்பு கிடைத்தது. ‘காதலில் விழுந்தேன்’ படத்துக்காக நான் பாடிய ‘நாக்க முக்கா’ பாடல்தான் திரைத்துறையில் எனக்கான அடையாளத்தை ஏற்படுத்தியது. அப்படத்தின் இயக்குநர் பி.வி.பிரசாத் திரைப்படக்கல்லூரியில் படித்த காலத்தில் எனது நாட்டுப்புறப் பாடலை ஒரு மேடையில் கேட்டிருக்கிறார்.

தனது திரைப்படத்தில் என்னைப் பாட வைக்க வேண்டும் என்கிற முடிவு அப்போதே முடிவு செய்ததாக என்னிடம் கூறினார். அப்பாடலைப் பாடியது புது அனுபவமாக இருந்தது. எடுத்த எடுப்பிலேயே உச்சஸ்தாதியில் பாட வேண்டும் என்றனர் இயக்குனரும் இசையமைப்பாளரும். எனக்கு அப்படியாகப் பாடிப் பரிச்சயமில்லாததால் சிறு பதட்டம் இருந்தது. ஒரு வித பயத்தோடுதான் பாடினேன். “ஏ அட்ராட்ரா நாக்க முக்கா” என்று சடரென குரலை உச்சத்துக்குக் கொண்டு சென்று பாடினேன். ஒரே டேக்கில் ஓகேவானது.

நாட்டுப்புறப் பாடகியாக மேடையில் பாடுவதற்கும், திரைப்படங்களில் பாடுவதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி உணர்கிறீர்கள்?
மேடையில் நூற்றுக்கணக்கான மக்கள் முன் பாடுவதற்கும் திரைப்படத்துக்காக ஸ்டுடியோவுக்குள் நின்று பாடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மேடையில் பாடுவதற்கு எனக்கு இம்மியளவு கூட பயம் இல்லை. ஏனென்றால் உழைக்கும் மக்கள் பாடல் வரிகளைக் கேட்டு ரசிப்பார்கள். ஆனால் சினிமாவில் ஸ்டுடியோவுக்குள் தனியாக நின்று பாடினாலும் அது லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும். அவர்களில் இசை அறிவுமிக்கவர்களும் இருப்பர்.

அவர்கள் எவரும் நான் பாடுவதில் குறை சொல்லிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு ஒரு பயமாக எனக்குள் இருக்கிறது. அந்த பயம் முதன் முதலாக பாடும்போது மட்டுமல்ல 300 பாடல்களைப் பாடிவிட்ட பிறகும் இன்றைக்கும் இருக்கிறது. அந்த பயம் தேவை என்றே சொல்வேன். இசையமைப்பாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் எதிர்பார்ப்பதைக் கொடுக்க வேண்டும். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அது எனது பாடலில் கிடைப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

இசையமைப்பாளர் தீனா இசையில் ஆறு படங்களில் பாடியிருக்கிறேன். என்னை விடத் திறமையான நாட்டுப்புறப் பாடகர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்துங்கள் என்று அவரிடம் கூறினேன். ஆனால் அவர் எனக்கு வேண்டியது உங்களது பாடலில்தான் கிடைக்கிறது என்றார். நம் மீது நம்பிக்கை வைத்து பாடல் வாய்ப்பை வழங்கும் இசைஅமைப்பாளரிடம் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.

உங்கள் குடும்பம் பற்றி…
எனது கணவர் செல்வக்குமாரும் நாட்டுப்புற இசைக்கலைஞர்தான். கலை இலக்கியப் பெருமன்ற நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி, காதலித்து திருமணம் புரிந்து கொண்டோம். நாட்டுப்புற இசைப் பயிற்சி வழங்கக் கூடியவர். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் நாட்டுப்புற இசைக்கலைஞர்களாக தமிழகத்தின் பல கலைக்குழுக்களில் பங்காற்றி வருகின்றனர். மகள் மோகனா, மகன் அறிவழகன் இதுதான் என் குடும்பம்.

- கி.ச.திலீபன்
படங்கள்: பரணி