என்னை நானறிவேன்



கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவிட்டு எந்த சலனத்தையும் வெளிக்காட்டாமல், மிகவும் மென்மையான வார்த்தைகளால், சிக்கலான தன் நிலையை நாகரிகமாகக் கையாண்டு உயர்ந்து நிற்கிறார் கௌதமி.

1990களில் ‘குரு சிஷ்யன்’ படத்தில் அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து 100 படங்களுக்கு மேல் நடித்தவர். சொந்த வாழ்வில் மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர் தம்பதிகளான தன் பெற்றோரை அடுத்தடுத்து இழந்த நிலையில், அவரின் திருமண வாழ்விலும் தோல்வி. மார்பகப் புற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகி அதில் இருந்து மீண்டு நம்பிக்கையோடு வெளியில் வந்தார். லைஃப் அகெய்ன் (life again) என்ற அமைப்பையும் துவங்கி புற்றுநோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு நம்பிக்கையும் அளித்து வந்தார்.

18 ஆண்டுகால இடைவெளியில் திரைத் துறையில் உடையலங்கார நிபுணராக நீடித்து விருதுகளையும் வென்றார். இறுதியாக ’பாபநாசம்’ படத்தில் கமலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து தன் நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அண்மையில் தன் வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்பட்ட சறுக்கலில் துணை நின்ற நடிகர் கமல்ஹாசனுடனான உறவில் ஏற்பட்ட பிரிவை மிகவும் பக்குவமாய் கையாண்டிருக்கிறார் கௌதமி. இதோ அவரின் விளக்கம்…

“இதைச் சொல்வதற்கு என் இதயம் வலிக்கிறது.  நானும் திரு. ஹாசனும் இப்போது ஒன்றாக இல்லை. கிட்டத்தட்ட 13 வருட இணை வாழ்விற்குப் பிறகு, என் வாழ்வில் நான் எடுத்த மிகக்கடுமையான முடிவாக இது அமைந்துவிட்டது. இப்படியான ஓர் உறுதியான உறவில், இருவரது பாதையும் வேறு வேறு திசையில் என்று உணரும்போது, கனவுகளோடு சமரசம் செய்து கொண்டு வாழ்வைத் தொடர்வதா அல்லது உண்மையை ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு செல்வதா என்று முடிவெடுப்பது அத்தனை எளிமையன்று.

இந்த இதயத்தை நொறுக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள மிக அதிக காலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எனக்குப் பிடித்தது. இறுதியில் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன். எனது நோக்கம் அனுதாபம் தேடுவதோ அல்லது குற்றம் சொல்வதோ அல்ல. என் வாழ்வின் மூலம், மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அந்த மாற்றங்கள் நாம் எதிர்பார்த்ததுபோல இருக்க வேண்டுமென்பதில்லை. ஒவ்வொருவருக்கும் என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் தாக்கம் நமது பிரிவிற்கான முக்கியத்துவங்களை பாதித்துவிடக்கூடாது.

எந்த ஒரு பெண்ணுக்கும் இம்மாதிரியாக முடிவெடுப்பது மிக கஷ்டமானதாகத்தான் இருக்கும். இருந்தாலும் எனக்கு இந்த முடிவு மிகவும் முக்கியமானது. நான் ஒரு தாய் என்பதுதான் எனக்கு முதலாவதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. நான், என் மகளுக்கு சிறந்த தாயாக இருப்பது என் கடமை. அதற்கான என் மன அமைதி எனக்கு மிகவும் முக்கியம். சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்னிருந்தே, நான் திரு. கமல்ஹாசனின் விசிறி என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

அவரது திறமைகளையும், சாதனைகளையும் எப்போதும் போலவே இனியும் வியந்து பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அவரது உடையலங்கார நிபுணராகப் பணிபுரிந்ததன் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். அவரது கனவுகளுக்கு நேர்மையாக வடிவம் கொடுத்திருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமைதான். இதுவரை அவரது சாதனைகளோடு, இன்னும் பல சாதனைகளையும் அவர் தனது ரசிகர்களுக்காக கொடுக்க இருக்கிறார். அவற்றைப் பார்த்து கைதட்டி ரசிக்கவும் காத்திருக்கிறேன்”.

- இவை கௌதமி தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியவற்றிலிருந்து ஒரு பகுதி. பெரும்பாலானோருக்கு ஓர் உறவை அல்லது பிரிவை எப்படிக் கையாள்வது என்று தெரியாததால்தான் பல சிக்கல்கள் உருவாகின்றன. கௌதமி இந்தப் பிரிவை மிக முதிர்ச்சியாகக் கையாண்டிருக்கிறார். கௌதமி தன்னம்பிக்கை மிக்கவர். அவர் இந்த வலியிலிருந்தும் மீண்டு வருவார்!

- மகேஸ்வரி