பெண்களை உயர்த்தும் ஈகோ கிச்சன்



மிகவும் பின்தங்கிய நிலையில் அல்லது அடுத்த வேளை என்ன செய்வது என்ற திக்கற்ற நிலையில் யாராவது ஒரு பெண் உங்கள் கண்களில் படுகிறாரா? கவலையே வேண்டாம். அவருக்காக வழிகாட்டும் ஒரு நிறுவனமாக ஈகோ கிச்சன்(ECO Kitchen) சென்னை ஈஞ்யசம்பாக்கம் மற்றும் படப்பையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் நிர்வாக மேலாளர் சேதுலெட்சுமியை சந்தித்தேன்.

“என்கேன்ஷிங் கம்யூனிட்டி ஆப்பர்சுனிட்டி கிச்சன்” என்பதன் சுருக்கம்தான் “ஈகோ கிச்சன்”. அதாவது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களின் நிலையை உயர்த்துவதுதான் இதன் நோக்கம். உணவை தரமான முறையில் குறைந்த முதலீட்டில் தயாரிப்பது, அது தொடர்பான அனைத்து வேலைகளிலும் பெண்களையே அதிக அளவில் ஈடுபடுத்துவது, பெண்கள் மூலமே உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வைப்பது, இதிலிருந்து அவர்களின் நிலையை உயர்த்துவதே இந்த ஈகோ கிச்சனின் திட்டம்” என்கிறார் சேதுலெட்சுமி.

எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி தொடர்பான மருத்துவ சேவையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் ஒய்.ஆர்ஜிகேர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் டாக்டர் சுனிதி சாலமன், அவரது கணவர் பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர் சாலமன். டாக்டர் சுனிதி சாலமனின் எண்ணத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாய் துவங்கப்பட்டதுதான் இந்த ஈகோ கிச்சன். இவர்கள் இருவரும் தற்போது உயிரோடு இல்லாத நிலையில் அந்த அமைப்பின் மற்ற நபர்களைக்(trustees) கொண்டு அவரது மகன் மூலம் தொடர்ந்து “ஈகோ கிச்சன்” அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஈஞ்சம்பாக்கம் அருகே உள்ளது இந்த ஈகோ கிச்சன் எனப்படும் சென்டர் கிச்சன். அமைதியான இயற்கை சூழல் மற்றும் சுத்தம் சுகாதாரம் போன்றவை இதன் சிறப்பு. இந்த ஈஞ்சம்பாக்கம் ஈகோ கிச்சன் யூனிட்-I எனவும், படப்பையில் இயங்கி வரும் ஈகோ கிச்சன் யூனிட்-II என்றும் செயல்பட்டு வருகிறது.

“வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், உடல் ஊனமுற்ற பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி வழங்கி, அவர்களது தன்னம்பிக்கையின் அளவை உயர்த்துகிறோம். தொழில் செய்வதற்கான நுணுக்கங்களையும் அவர்களுக்குக் கற்றுத் தருகிறோம். அடிமட்ட நிலையில் இருக்கும் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறும்போது அவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது. எங்கள் ஈகோ கிச்சன் வடிவமைப்பே குறைவான விலையில் நிறைவான உணவை தயாரிப்பதுதான்.

அதற்கான முக்கியமான நடவடிக்கையாக தயாரிப்புச் செலவை குறைக்கும் நோக்கில் எல்.பி.ஜி. சமையல் எரிவாயு மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை தவிர்த்து அதற்குப் பதிலாக சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத எரிபொருளான “பயோமாஸ் பிரிக்கேட்ஸ்” (biomass bricades) எனும் எரிபொருளை பயன்படுத்தி உணவு தயாரிக்கிறோம்.

“பயோமாஸ் பிரிக்கேட்ஸ்” என்பது வேர்க்கடலைத் தோல், தேங்காய் ஓடு, சணல் கழிவு சேர்த்த பொருட்களால் தயாரான ஒரு எரிபொருள். 600 கிலோ பிரிக்கேட்ஸ் 6 முதல் 8 மணி நேரம் வரை எரியும். ஒரு கிலோ 6 ரூபாய் என்ற விலையில் கிடைக்கிறது. பத்து சிலிண்டருக்கான ஒருநாள் சேமிப்பு இதில் மிச்சமாகிறது.  இந்த பிரிக்கேட்ஸினை எரிகலன் பாயிலரில் இட்டு எரிபொருளாக மாற்றி பாயிலரின் மேல்பகுதியில் உள்ள தண்ணீரை கொதிக்கவைத்து அதில் கிடைக்கும் நீராவியினை குழாய்கள் மூலமாக பெரிய பெரிய உணவு தயாரிப்பு “டபுள் ஜாக்கெட்” பாய்லர்களுக்கு அனுப்புகிறோம்.

மேலும் சோலார் மூலமும் தண்ணீரை சூடாக்கி உணவு தயாரிப்பில் சேர்க்கிறோம். இதில் எரிபொருள் செலவு குறைவதுடன் சமையல் நேரமும் எங்களுக்கு மிகவும் குறைகிறது. எங்கள் தயாரிப்பில் முற்றிலும் ஸ்டீம் வகை சமையல் மேலும் ப்ரைடு செய்ய வேண்டிய உணவிற்கான தேவையும் தற்போது அதிகமாக இருக்கிறது. அதற்கான தயாரிப்பு அமைப்பையும் எங்கள் சென்டர் கிச்சனில் வடிவமைத்துள்ளோம் என்கிறார். ஆரோக்கியத்துடன் சுத்தம் மிகவும் முக்கியம். அதையும் நாங்கள் உணவை தயாரிப்பவர்கள், விற்பனையில் ஈடுபடும் பெண்களிடம் அதிகம் வலியுறுத்துகிறோம்.

இந்த சென்டர் கிச்சன் மூலம் எங்களின் சிறப்புத் திட்டமாக “கதிர்” மற்றும் “கதிர்தான்” எனும் இரண்டு திட்டங்களை மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். எங்களின் கதிர் திட்டம் மூலம் இயங்கும் பெண்களுக்கு தரமான உணவைக் குறைவான விலையில் வழங்குகிறோம். ஒரு நாளைக்கு முன்னூற்றி ஐம்பது முதல் நானூறு வரை விற்பனையைப் பொறுத்து அவர்கள் லாபம் பெறுகின்றனர்.

இவை தவிர்த்து சில பெரிய தனியார் நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களும் எங்களிடம் மொத்தமாக உணவுக்கான ஆர்டர் கொடுக்கிறார்கள். பதினோறு பெரிய நிறுவனங்கள் எங்களிடம் தொடர்பில் உள்ளனர். ரோட்டில் நின்று உணவை விற்பனை செய்யத் தயங்கும் பெண்களை அந்த மாதிரி நிறுவனங்களின் கேன்டீனுக்கு உணவு சப்ளைக்கு அனுப்பி வைக்கிறோம். அவர்களுக்கு அந்த நிறுவனங்களே ஒரு நிலையான மாத வருமானத்தை தருகின்றனர்.

அதிகபட்சம் ஒன்பதாயிரம் ரூபாய்வரை கூட அந்நிறுவனங்கள் இப்பெண்களுக்கு ஊதியமாக வழங்குகிறார்கள். எங்களது ஈகோ கிச்சனில் ஒரு தலைமை உணவு தயாரிப்பாளர், ஒரு மேலாளர் மற்றும் முப்பது பணியாளர்கள் குழு உள்ளது. மேலும் உணவு தயாரிப்பில் எங்களுடன் கைகோர்த்து இணைந்து சொடெக்க்ஷோ(sodexo) மற்றும் செஃப் தாமு ஆகியோர் பக்கபலமாக உள்ளனர். அவர்கள் வழங்கும் பயிற்சி எங்கள் ஊழியர்களுக்கு உணவு தயாரிப்பில் ஒரு சிறந்த நிலையை அடைய வைத்திருக்கிறது’’ என்கிறார் சேதுலெட்சுமி.

சந்திப்பு: மகேஸ்வரி
படங்கள்: ஆர்.கோபால்

டேவிட் அலெக்ஸ், ஈகோ கிச்சன் “கதிர் திட்டம் மூலம் வருகிற பெண்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தை முதலில் நாங்களே சென்று கண்டறிந்து அந்தச் சூழலை பார்த்து சரி என்ற நிலையில் இருந்தால், அங்கு அவர்களுக்கு எங்கள் அமைப்பின் பெயரான “ஈகோ கிச்சன்” எனும் பெயரில் சிறிய வடிவிலான வண்டியினை அமைத்துத் தருகிறோம். வண்டி போடுவதில் சூழலியல் பிரச்னைகள் எதுவும் இருப்பின் எங்களால் முடிந்தால் அவற்றை நாங்களே சரிசெய்து தருகிறோம்.

உணவுகள் தயாரானதும் அவர்களின் தேவைக்கேற்ப அவர்கள் கேட்கும் உணவுகளை அதற்கான பாத்திரங்களில் பாதுகாப்பாக எங்கள் அமைப்பின் வாகனங்கள் மூலம் மதியம் 12 மணிக்கு முன்பாகவே அவர்களின் விற்பனை இடத்திற்கே கொண்டு சேர்க்கிறோம். விற்பனை முடிந்ததும் அந்தப் பாத்திரங்களை திரும்பவும் நாங்களே சென்று எமது வாகனங்கள் மூலம் திரும்பப் பெற்றுவருகிறோம்.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையின் பல இடங்களிலும் பழைய மகாபலிபுரம் சாலை, மைலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி எனப் பரவலாக பல இடங்களிலும் எங்களின் அமைப்பால் கண்டறியப்பட்ட பெண்கள் உணவு விற்பனையில் ஈடுபடுகிறார்கள்” என்கிறார்.

லீலா, கிண்டி. கதிர் திட்டம் மூலம் உணவு விற்பனை செய்பவர்
“எனது வயது 45. நான் கே.கே. நகர் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். எனது கணவர் டிரைவராக வேலை செய்கிறார். சரியான வருமானமின்றி மிகவும் வறுமையான நிலையில் என் குழந்தைகளை மேலே படிக்க வைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்னைக் கண்டறிந்து எனக்கு வாழ வழிகாட்டினர். கிண்டி பகுதியில் வண்டி போட்டுக் கொடுத்துள்ளனர். மற்ற தேவையான பொருட்களையும் அவர்களே தந்துள்ளனர்.

உணவை நான் வண்டிபோட்டிருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து கொடுத்துவிட்டு மீண்டும் வந்து பாத்திரத்தை எடுத்துச் சென்று விடுவதால் எனக்கு விற்பனை செய்வது மிகவும் சுலபமாக உள்ளது. வியாபாரம் துவங்கிய நிலையில் ஒரு மாத காலம்வரை அவர்கள் தினமும் வந்து எனது வியாபாரத்தில் உடனிருந்து நான் பழகும்வரை விற்பனைக்காக அனைத்து வகையிலும் என்னைத் தயார் செய்தார்கள். வாடிக்கையாளர்கள் தேவையறிந்து, இன்முகத்துடன் ஆரோக்கியமான சூழலில் உணவு வழங்குவதை நான் நல்லமுறையில் கற்றுக்கொண்டேன்.

விற்பனைச் சூழலைக் கையாளும் முறையையும் கற்றுக்கொண்டேன். ஐ.டியில் வேலை செய்பவர்களில் இருந்து அனைத்து தரப்பினரும் எனது வாடிக்கையாளராக உள்ளனர். 25 கிலோ உணவில் ஆரம்பித்த எனது உணவு விற்பனை இன்று 250 கிலோவை தாண்டி சிறப்பாக நடைபெறுகிறது. சப்பாத்தி, வெரைட்டி உணவுகளுடன் மீல்ஸ் டைப் உணவும் எங்களிடம் கிடைக்கும். ஒரு நாளைக்கு என்னுடைய லாபம் 500 முதல் 600 வரை உள்ளது. 12 மணியிலிருந்து 3 மணி வரையே எனது விற்பனைக்கான வேலை நேரம். கடன் பிரச்னையால் எனது பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியாமல் தவித்த நான் இன்று எனது கடன்களை எல்லாம் அடைத்து இரண்டு மகள்களையும் நன்றாக படிக்க வைக்கிறேன்” என்கிறார் தன்னம்பிக்கையோடு.

கவிதா, ‘கதிர்தான்’ திட்ட ஒருங்கிணைப்பாளர்
“கதிர்தான் எனும் சிறப்புத் திட்டம் மூலம் குடும்பங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், பிறந்தநாள், திருமண நாள், இறந்தவர்களின் நினைவு நாள் ஆகியவற்றுக்கு உணவு வழங்க நினைப்பவர்கள் எங்களை அணுகினால் நாங்கள் அதற்காக அவர்கள் வழங்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பம் அறிந்து அந்த உணவை தயார் செய்து அவர்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடுவோம்.

உணவு தேவைப்படுபவர்களுக்கும் உணவை வழங்கும் நன்கொடையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இந்த “கதிர் தான்” திட்டம் செயல்படுகிறது என்கிறார் இவர். எங்களிடம் 80 தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவர்களின் உணவுத் தேவையை நன்கொடையாளர்களை கண்டறிந்து பெற்றுத் தருகிறோம்” என்கிறார் பெருமையாக.