ஊட்டி ஸ்பெஷல் வர்க்கி



தாளிக்கும் ஓசை சங்கீதம்... தாளிக்கும் மணமோ தெய்வீகம். சமையலில் லயித்து செய்பவர்கள் முதலில் அதன் வாசத்தை வைத்தே ருசியை  கூறிவிடுவார்கள். உப்பு அதிகமா, சர்க்கரை தேவையா, இன்னும் வேகணுமா, புளி எவ்வளவு என்பதெல்லாம் கொதிக்கும்போது  வாசனையிலேயே தெரியும். விசேஷ காலங்களில் பக்கத்து வீட்டிலிருந்து வரும் நறுமணத்தை வைத்தே அங்கே என்ன பலகாரக்கடை  நடைபெறுகிறது என ஊகிக்கிறோம். இனிப்பு செய்யும்போது வரும் நெய்யும் பாகும் கலந்த மணம், எண்ணெயில் பொரிக்கும் போது வரும்  காரல் கலந்த வாசனை, சாக்லெட் செய்யும் போது வரும் லேசான தீயல் வாசனை, பீட்சா வேகும் போது வரும் சீஸ் மணம், எண்ணெய்  கத்தரிக்காய் தாளிக்கும்போது மேலோங்கும் வெந்தய வாசனை, பாயசத்தின் வறுத்த திராட்சை, முந்திரி என எல்லாமே முதலில் நாசி வழி  புகுந்து நாவூறி மனம் நிறைப்பவை. சாதாரண குக்கீஸ், கேக், பிரெட், பீட்சா போன்றவை செய்யும் போதும் முதலில் அந்த இடமெங்கும்  பரவுவது அதன் வாசமே. நீங்கள் ஒரே ஒரு முறையாவது  ‘அடுமனை’ என்று அழகாக அழைக்கப்படும் பேக்கிங் செய்து பாருங்கள்... நிச்சயம்  அதற்கு அடிமையாவீர்கள்!

ஏதேனும் ஒரு ரொட்டிக் கடை, பேக்கரியை கடக்கும்போது அந்த ஏரியாவே மணக்கும். அது போல ஒரு ஊரே ஆங்காங்கே மணக்கும்  என்றால் அது ஊட்டிதான். மெல்லிய போர்வையாக குளிரும் பனியும் நம்மை உரசிச் செல்லும் ஊட்டியின் மேடான சாலைகளில் நடக்கும்  போது பத்தடிக்கு ஒரு கடையிலிருந்து இந்த பேக்கிங் வாசம் வரும். சுற்றுலா பயணிகள் அனைவரும் மறவாமல் வாங்கி வரும் பொருள்  ஊட்டி வர்க்கி. புவிசார் குறியீடுக்காகக் காத்திருக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று.



வர்க்கி... யாரால் இந்தப் பெயர் வந்தது என்று குறிப்பிட்டுக் கூற முடியவில்லை. ஆங்கிலேயர் விரும்பி வசித்த இடம் என்பதால் ரொட்டி,  பன் போன்றவை இங்கு தரமானதாகவே கிடைக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக வர்க்கி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களும்  இருக்கிறார்கள். 50 வருட கடைகளும் இருக்கிறது. சிறிய இடத்தில் கூட தினம் 100 கிலோ வர்க்கி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. ஊட்டி  மற்றும் குன்னூரில் பல கடைகள் வர்க்கிக்கு பிரபலமாக இருந்தாலும், அந்தக் கடைகளுக்கே தயாரித்து விநியோகிப்பவரான எம்.ஆர்.சி.  பேக்கரி உரிமையாளர் ராஜனிடம் வர்க்கி வரலாறு கேட்டோம். ஒரே பதிலாக, ‘குழந்தையா இருக்கும் போதிருந்து இந்த வேலைதாங்க’  என்கிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவரே நேரடியாக வர்க்கி தயாரிப்பில் ஈடுபடுவதால், வர்க்கி பற்றி பேசும்போதே ஒரு வாஞ்சை  இழையோடுகிறது.

உள்ளங்கை அகலத்தில், பொன்னிறத்தில், மெல்லிய அடுக்கடுக்கான வரிசைகளுடன், பிரத்யேக வாசனையோடு, வாயில் கரையும் போதே  மொறுமொறுப்பையும் லேசான இனிப்பையும் உணர வைக்கும் வர்க்கியை சுவைப்பதே பேரின்பம். மலைக்காற்றில் சூடான டீயும்  அதைவிட சூடான மொறுமொறுப்பான வர்க்கியும் மக்கள் இதயம் கவராமல் இருந்தால்தானே அதிசயம்? இந்தியாவில் வேறு எங்கும்  வர்க்கியை இத்தனை ரசித்துத் தயாரிப்பவர்களும் பயன்படுத்துபவர்களும் இருக்க மாட்டார்கள்.

மைதா, டால்டா, நெய் கொண்டு செய்யப்பட்டாலும், இதில் கலக்கும் ஈஸ்ட் மிக முக்கியம். அதையும் இவர்களே தயாரிக்கிறார்கள்.  மைதாவில் சர்க்கரை கலந்து 3 முதல் 4 நாட்கள் நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஈஸ்ட், ‘நேச்சுரல் ஈஸ்ட்’ அல்லது ‘ஃப்ரெஷ் ஈஸ்ட்’  எனப்படும். இது வர்க்கியின் மாவுக்கு மிருதுதன்மையும் சுவையையும் அள்ளித் தரும். ஊட்டியில் தயாராகும் வர்க்கி 100 சதவிகிதம்  வெஜிடேரியன் ரெசிபி. முட்டை சேர்க்கப்படுவதில்லை.



புரோட்டா மாவு பதத்துக்குப் பிசைந்த மைதா மாவு, ஓரிரவு முழுதும் ஊற வைக்கப்பட்டு, மீண்டும் நன்கு பிசையப்பட்டு படிப்படியாக  வர்க்கி செய்யப்படுகிறது. இரவு முழுதும் எரிந்த விறகிலிருந்து கிடைக்கும் தணலில் சுமார் ஒரு மணி நேரம் நான்கு புறமும் வேக  வைக்கப்படுவதால், மொறுமொறுப்பு குறையாமல் - அதே நேரம் வாயில் இட்டதும் கரையும் சுவையுடன் விசேஷ வாசனையுடன் வருகிறது.  ஊட்டியின் நீர் தன்மையும் விறகடுப்பும் அதன் தனிச்சுவைக்கு காரணம் என்றாலும், நாமும் இதை வீட்டில் முயற்சிக்கலாம். கொஞ்சம்  மெனக்கெடல் தேவைப்படும். வர்க்கியைப் பொறுமையாக செய்தால் சுவை பிரமாதமாக வரும் என்பதில் சந்தேகமில்லை. முதலில் குறைந்த  அளவில்  முயற்சிக்கலாம். சரியாக வராவிட்டாலும் புது வித வர்க்கி கண்டுபிடித்ததாக வைத்துக் கொள்வோமே!

சீக்ரெட் ரெசிபி

ஊட்டி வர்க்கி

என்னென்ன தேவை?


மைதா -   2 கப்
சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
டால்டா - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு டீஸ்பூன்
ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்)
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும். மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து  மாவில் ஊற்றி பிசையவும். மாவு, எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும்.  தேவைப்பட்டால் சிறிது டால்டா சேர்த்துக் கொள்ளலாம். ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில்  மாவை குறுக்கு வெட்டாக வெட்டவும். அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும். அவனை (Oven) அதன் அதிகபட்ச  வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும். இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20  முதல் 30 நிமிடம் வேக விடவும். வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.

வீட்டிலேயே  ஈஸ்ட்

என்னென்ன தேவை?


மைதா - கால் கப்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

இவை  அனைத்தும் நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள்  கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட். இதை ஒரு  வாரம் வரை ஃப்ரிட்ஜில்  வைத்திருந்து உபயோகிக்கலாம். இந்த மாவை நாண், ரொட்டி, குல்ச்சா என்று  உபயோகிக்கலாம். ஈஸ்ட்
ஒவ்வொரு பேக்கரியிலும் ஒவ்வொரு முறையில்  தயாரிப்பதால், இங்கே பொதுவான முறை தரப்பட்டிருக்கிறது.

உங்கள் கவனத்துக்கு...

*அவனை குறைந்த அளவு வெப்பத்தில் வைத்து நீண்ட நேரமும் பேக் செய்யலாம். ஆனால், கூடுதல் கவனம் தேவை.
* ஃப்ரெஷ் ஈஸ்ட் பேக்கரிகளில் கிடைக்கும். இல்லையெனில் ட்ரை ஈஸ்ட்டை சிறிது வெதுவெதுப்பான பாலில் கரைத்து சேர்க்கவும்.
* அவன் இப்போது பெரும்பாலான வீடுகளில் உள்ளது, இருந்தாலும் புதிதாக வாங்குபவர்களுக்காக... மைக்ரோவேவ் அவன் வேறு...  ஓடிஜி எனப்படும் அவன் வேறு. மைக்ரோவேவ் அவனை விட ஓடிஜி விலை குறைவு. பயன்பாடும் அதிகம். அவன் (Oven), டோஸ்ட்டர்  (Toaster), க்ரில்லர் (Griller) என்பதே ஓடிஜி.
* சுமார் 4 ஆயிரம் ரூபாயில் தரமான ஓடிஜி வாங்கலாம். அதில் பீட்சா முதல் பர்த்டே கேக் வரை செய்யலாம். கையாளுவதும் சுலபமே.

படங்கள்: அப்பாஸ்