மதுவுக்கு எதிராக ஒரு மங்கை



ஓயாத அலைகள்
நந்தினி


இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, இப்போது மது ஒழிப்புப் போராட்டம் வரையிலும், மாணவர்கள் முன்னெடுக்கக்கூடிய  போராட்டங்கள் அரசையே உலுக்கக்கூடிய அளவுக்கு வீரியம் மிக்கதாகவே இருக்கும். அதனால்தான், வளமான இந்தியாவை கட்டமைக்கிற  சக்தி மாணவர்களின் கரங்களில் இருப்பதாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மாணவர் சக்திக்கு உதாரணமாக நாம் நந்தினியைச் சுட்ட  முடியும். ‘அரசே மதுக்கடைகளை மூடு’ என்று இன்றைக்கு தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற இந்த முழக்கத்தை முன் வைத்து  ஐந்தாண்டுகளாக போராடி வருகிறார் நந்தினி!

மதுரை சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படிப்பைத் தொடங்கிய போது போராட ஆரம்பித்த நந்தினி, படிப்பை நிறைவு செய்த பின்பும்  போராடிக் கொண்டே இருக்கிறார். 5 ஆண்டுகளில் 36 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதே இவரது தீவிரமான போராட்டத்துக்கான  சாட்சியம். இத்தனை கைதுகளுக்குப் பிற்பாடும் அஞ்சாமல் போராடுகிற தீரம் எப்படி வந்தது? ‘‘மதுவினால் ஏற்படும் தீய விளைவுகளைப்  பற்றி நாம் இங்கு விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அன்றாடம் நம் எல்லோரும் கண்கூட பார்த்து வருவதுதானே? குடும்பத்தின்  மீதும் சமூகத்தின் மீதும் அக்கறையற்று மதுவுக்கு அடிமையாகி உள்ளவர்கள் இங்கு ஏராளம். பள்ளி மாணவர்கள் கூட சீருடையில் வந்து மது  வாங்கிச் செல்கிற அவலம் மிக்க மாநிலமாக நம் தமிழ்நாடு இருக்கிறது. இந்திய தண்டனைச் சட்டம் 328ம் பிரிவின்படி, ‘ஒரு மனிதனை  மதிமயக்கம் செய்கிற போதைப் பொருளைக் கொடுப்பவருக்கு 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை வழங்கலாம்’ என  குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இச்சட்டத்தின்படி பார்த்தால் போதைப்பொருளை விற்கும் அரசுதான் குற்றவாளி. அரசே குற்றம் செய்யும்போது பொது மக்களாகிய நாம்  தான் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். என் அப்பா ஆனந்தன் வேளாண் பொறியியல் துறையில் இடைநிலை பொறியாளராகப்  பணிபுரிந்தவர். தொழிற்சங்கங்களில் தீவிரமாக இயங்கி வந்த அப்பா, என்னை கம்யூனிஸ சிந்தாந்தப் போக்கோடுதான் வளர்த்தார்.  விடுதலைப் போராட்டத்துக்காக இளம் வயதிலேயே வீர மரணம் அடைந்த பகத்சிங் வாழ்க்கையே எனது முன் மாதிரி. சமூகப் பிரச்னைகளை  சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சட்டக் கல்லூரியில் இணைந்தேன். சமூக செயல்பாடுகளுக்காக சட்டக் கல்லூரி  மாணவர்கள் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.



2010ம் ஆண்டு சக மாணவர்களுடன் இணைந்து மதுரை இந்திரா நகர் பகுதியில் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் குடும்ப பாதிப்புகள் குறித்து சர்வே செய்தோம். குடிப்பழக்கம் குடும்ப வாழ்க்கையைச் சீரழிக்கிறது... குறிப்பாக பெண்கள் பல விதங்களில் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பது அந்த சர்வேயில் உறுதியானது. இந்திரா நகரில் மட்டுமல்ல... தமிழ்நாடு முழுவதிலும் இதே நிலைதான்  நிலவும் என்பதால் மதுவுக்கு எதிராக போராட முடிவெடுத்தோம். மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி  மதுரையில் உள்ள 10 கல்லூரிகளின் மாணவர்களிடம் கையெழுத்துப் பெற்று, அப்போதைய கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் கொடுத்தோம்.  2012ம் ஆண்டு பொங்கல் அன்று வைகை ஆற்றங்கரையில் 20 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஒன்று கூடி, ‘மதுக்கடைகளைத் திறந்து  மக்களைச் சீரழிக்கும் இந்த அரசு நாசமாகப் போக வேண்டும்’ என்று பொங்கல் வைத்தோம். 2013ம் ஆண்டு மார்ச் மாதம், ‘மது மனிதர்களின்  உயிர்வாழும் உரிமையைப் பறிக்கிறது’ என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை  நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பினோம். ‘மது விற்பனை என்பது மாநில அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்று’ என்கிற பதில்தான் எங்களுக்கு  வந்தது’’ என்கிறார் நந்தினி.

பலரது கையெழுத்துகளைப் பெற்று பலருக்கும் மனு அனுப்பியும் எந்த மாற்றமும் ஏற்படாததால்தான் போராட்டம் ஒன்றே தீர்வு என்கிற  மனநிலைக்கு ஆளானார் நந்தினி. 2013 ஜூலையில் சட்டக்கல்லூரி முன்பு நந்தினியோடு 5 மாணவர்கள் கால வரையற்ற உண்ணாவிரதம்  இருந்துள்ளனர். பல கல்லூரி மாணவர்கள் இவர்களது போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் உண்ணாவிரத மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தார். மனிதச்சங்கிலிப் போராட்டம், மது அரக்கன் பொம்மை எரிப்பு என பல விதங்களில்  போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருந்த நந்தினி, குடியால் தந்தையை இழந்த 100 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று முதல்வருக்கு  கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு எவ்வித பதிலும் வராத சூழலில், முதல்வரை நேரில் சந்திக்கும் முயற்சிகளில் இறங்கியவர் கைதுகளைத்  தான் சந்தித்தார்.

‘‘நானும் என் அப்பாவும், எங்களது கோரிக்கைகளுக்காக முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்கும் நோக்கோடு 2013 டிசம்பர் 23 அன்று  மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பினோம். திருச்சியில் எங்களைக் கைது செய்து பல வித பேச்சுவார்த்தைகள் நடத்தினர். நாங்கள்  எதற்கும் உடன்பட மறுத்ததால், இரவு முழுவதும் காவலில் வைத்து, காலையில்தான் விடுவித்தனர். 24ம் தேதி இரவு சென்னையை அடைந்த  போது குரோம்பேட்டையில் கைது செய்யப்பட்டு 25ம் தேதி காலையில்தான் விடுவிக்கப்பட்டோம். அன்றைக்கு போயஸ் தோட்டத்தில்  அவரது இல்லத்துக்குச் சென்ற போது, ‘முதல்வர் கொடநாடு சென்றுவிட்டார்’ என்று தெரிவித்தனர்.

நானும் அப்பாவும் கொடநாடு வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்காக புறப்பட்டோம். கொடநாடு செல்லும் வழியில்  பெருந்துறையிலேயே கைதானோம். கைதான உடனே எங்களது உண்ணாவிரதத்தைத் தொடங்கினோம். பெருந்துறை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் எங்களை அனுமதித்து சிகிச்சையளித்த பின், மதுரைக்கே எங்களைக் கொண்டு வந்து விட்டுவிட்டனர். எனது  தங்கையையும் சேர்த்துக் கொண்டு மதுரை வைகை ஆற்றங்கரையில் உண்ணாவிரதம் இருந்தோம். பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு
தங்கையை விடுவித்து விட்டு, என்னை திருச்சி பெண்கள் சிறையிலும், அப்பாவை மதுரை சிறையிலும் அடைத்தனர். நான் 11 நாட்களும்,  அப்பா 20 நாட்களும் சிறைவாசம் அனுபவித்து நிபந்தனை பெயிலில்தான் வெளியே வந்தோம்’’ என்கிறார் நந்தினி. எனினும், கைதுகளாலும்  சிறைவாசத்தாலும் இவரது போராட்டத்தை முடக்க முடியவில்லை.

‘‘2014 ஏப்ரல் 22 அன்று முதல்வர் வீட்டின் முன் மண்வாரித் தூற்றும் போராட்டத்தை அறிவித்தோம். 21ம் தேதியே என்னையும் அப்பாவையும்  கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். நான் 14 நாட்களும், அப்பா 20 நாட்களும் சிறைவாசம் அனுபவித்த பின், மீண்டும் நிபந்தனை  பெயிலில் வெளியே வந்தோம். ஜூன் 16ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தோம்.  அப்போராட்டத்தில் பழ.நெடுமாறன் அய்யாவும் கலந்து கொண்டு கைதானார். பல கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து திருப்பாச்சேத்தியில் இருந்த ஒரு மதுக்கடையை மூடினோம். கல்லூரி மாணவர்களுக்கு நிர்வாக ரீதியில் பிரச்னை கொடுத்தனர். தென்  மாவட்டம் முழுவதும் மதுவுக்கெதிராக சைக்கிள் பயணம் மேற்கொண்டோம்...’’ - இப்படியாக தாங்கள் மேற்கொண்ட போராட்டங்களையும்  கைதுகளையும் பட்டியலிட்டு விளக்குகிறார் நந்தினி. இத்தனை அடக்குமுறைகளுக்குப் பிற்பாடும் தனது கொள்கையிலிருந்து விலகாமல்  போராடிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் நம்மை வியக்க வைக்கிறார்.

‘‘கள்ளுக்கடை மறியல் எப்போது முற்றுப் பெறும் என்று காந்தியடிகளிடம் கேட்டபோது அவர், ‘இந்தக் கேள்வியை ஈரோட்டில் இருக்கும்  நாகம்மை, மணியம்மை எனும் இரண்டு பெண்களிடம் கேளுங்கள்’ என்றார். இப்படி, விடுதலைப் போராட்ட காலகட்டத்திலேயே மது  விலக்குக்காக போராடியஸ் மாநிலம் தான் தமிழ்நாடு. அப்படிப்பட்ட மாநிலத்தின் கொள்கை முடிவுகளில்தான் மது விற்பனையும்  அடங்கியிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அவலம்? மதுக்கடைகளைத் திறந்து மக்களின் நலனைச் சீர்குலைக்கும் இந்த அரசுக்கு எதிராக  பலத்த குரல் எழும்ப வேண்டும். எனது போராட்டங்கள் அத்தனையும் அதற்கான விதைகள்தான். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரையில் எனது போராட்டம் ஓயாது’’ என்கிறார் நந்தினி. இக்கட்டுரை அச்சாகி வெளிவருவதற்குள் நந்தினி 37வது முறையாக கைது செய்யப்பட்டிருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

"இந்திய தண்டனைச் சட்டம் 328ம்  பிரிவின்படி, ‘ஒரு மனிதனை மதி மயக்கம் செய்கிற போதைப் பொருளைக்  கொடுப்பவருக்கு 10  ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை வழங்கலாம்’ என  குறிப்பிடப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின்படி பார்த்தால் போதைப் பொருளை   விற்கும் அரசுதான் குற்றவாளி..."

- கி.ச.திலீபன்
படங்கள்: பாலமுத்துக்கிருஷ்ணன்