ட்வின்ஸ்!



ஆர்.வைதேகி

‘உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையேப்பா...’ என்கிற வசனம்தான் இரட்டையரைப் பெற்றெடுத்த எல்லா அம்மாக்களும் அவர்களிடம்  அதிகம் பயன்படுத்தியதாக இருக்கும். பெற்றவளுக்கே புரியாத புதிர் இரட்டையரின் மனநிலை. அவர்கள் எப்போது ஒற்றுமையாக  இருப்பார்கள், எப்போது எலியும் பூனையுமாக மாறுவார்கள் என்பது கணிப்புக்கு அப்பாற்பட்டது! கட்டி உருண்டு, ஒருவன் மேல்  இன்னொருவன் ஏறி உட்கார்ந்து வீடே ரணகளமாகிக் கொண்டிருக்கும். அக்கம்பக்கத்து வீட்டார், அடுத்த தெரு தோழி, 5 கிலோமீட்டர் தள்ளி  இருக்கும் அம்மா, அப்பா என இந்திய ராணுவத்தைத் தவிர மற்ற எல்லாரையும் உதவிக்கு அழைத்துவிடுவேன். அடித்துப் புரளும் அவர்களை  தனி ஒருத்தியால் சமாதானப்படுத்த முடியாது என்கிற நினைப்பில்... ஐந்தே நிமிடங்களில் ஆபத்பாந்தவர்கள் அனைவரும் ஆஜராகி  இருப்பார்கள். `ஏண்டா இப்படி அடிச்சுக்கறீங்க? உங்கம்மா தனியா எப்படி சமாளிப்பா?’ எனக் கேட்டால், `சண்டையா... நாங்களா?  ச்சேச்சே... நாங்க விளையாடிட்டு இல்லே இருந்தோம்’ என எல்.இ.டி. பல்பே கொடுப்பார்கள். அத்தனை பேரின் முறைப்பும் என் பக்கம்  திரும்பும். `குழந்தைங்க விளையாடுதுங்களா... சண்டை போடுதுங்களானு கூடவா ஒரு அம்மாக்காரிக்குத் தெரியாது... முன்னப்பின்ன  ட்வின்ஸை பார்த்திருந்தாதானே...’ என்கிற மாதிரியாக இருக்கும் அதன் அர்த்தம்.

அதே அனுபவத்தில் அடுத்த முறை அவர்கள் கட்டி உருளும் போது, `குழந்தைங்க விளையாடுதுங்க...’ என அலட்சியமாக விட்டு, ஒருவன்  மண்டையை இன்னொருவன் ஸ்லேட்டால் பதம் பார்த்து ரத்தம் சொட்டச் சொட்ட ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடிய அனுபவத்தையும்  சந்தித்திருக்கிறேன். `ரத்தக்காயம் வர்ற அளவு க்கு அடிச்சுக்கிட்டிருக்கானுங்க... இவ விளையாட்டுனு நினைச்சாளாம்... அறிவு கெட்டவ...’ என  அப்போதும் வசவுகள் வாங்கத் தவறியதில்லை. அதுதான் ட்வின்ஸ்!

எப்போதும் ஒற்றுமையாக இருந்து விட்டால் ட்வின்ஸை பெற்றவளுக்கு த்ரில் வேண்டாமா? எப்போதாவது அப்படி இருந்தால்தானே  எதிர்பார்ப்பு கூடும்? என்னதான் 9 மாதங்கள் உள்ளே ஒன்றாகப் பயணித்திருந்தாலும், வெளி உலகம் வந்ததும் அவர்களுக்குள்ளும்  போட்டிகளும் பொறாமைகளும் இருக்கவே செய்யும். `நீங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்... ரெண்டு பேரும் சமம்...’ என்பதை அவர்களுக்குப்  புரிய வைப்பது மிகவும் சிரமம். சண்டையின் போது அம்மாக்கள் கையாள சில டிப்ஸ் தருகிறார் மருத்துவர் நிவேதிதா.

* அவர்கள் சண்டைக்கான காரணத்தை முதலில் கேளுங்கள். இருவரையும் தனித்தனியே அதைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள். ஒருவர்  பேசும்போது இன்னொருவர் குறுக்கிடக் கூடாது என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். இருவரும் சண்டையிட்டுக் கொள்வதால் உங்கள்  மனது எவ்வளவு வேதனை கொள்கிறது, பயப்படுகிறது எனச் சொல்லுங்கள். இருவரில் யார் சரி, யார் தவறு என்கிற தீர்ப்புகளைக் கூடிய வரை தவிர்த்துவிடுங்கள்.



* பலவீனமாகவோ, வயதில் இளைய தாகவோ உள்ள குழந்தையிடம் கொஞ்சம் கூடுதல் கரிசனம் காட்டுவது அம்மாக்களின் வழக்கம்.  இரட்டையர் விஷயத்திலும் அப்படித்தான். அதிலும் தோற்றத்தில் ஒன்று போல அல்லாமல் எடை, உயரம், பிறந்த நிமிடங்கள் என  எல்லாவற்றிலும் வித்தியாசங்கள் இருக்கும் போது, தன்னிச்சையாக இருவரிடமும் அம்மாவுக்கு ஒரு பாரபட்சம் உருவாகும். அதைத்  தவிர்க்கவும். யார் தவறு செய்தாலும் ஒரே மாதிரியான தண்டனைதான் என்பதில் உங்கள் உறுதியைக் காட்டுங்கள்.

* இரட்டையருக்கு இடையில் உண்டாகிற சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க, வெளிநாடுகளில் Fun night என்கிற வழிமுறையைக்  கையாள்கிறார்கள். அதாவது, பெற்றோரின் சிறப்பு கவனிப்புக்கு உள்ளாகும் போது இரட்டையரிடையே இது போன்ற சண்டைகள்  குறைவதாக அங்கே கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் வார இறுதி நாட்களில் அம்மா ஒன்றும் அப்பா ஒன்றுமாக ஆளுக்கொரு  குழந்தையுடன் நேரம் செலவழிக்கிறார்கள். அடுத்த வாரம் குழந்தையை மாற்றி அதே போல நேரம் செலவழிக்கிறார்கள்.

* `உன்கூடப் பிறந்ததுதானே... அது எவ்வளவு சமத்தா நடந்துக்குது?’ என்கிற மாதிரியான ஒப்பீடுகளை எந்தப் பெற்றோராலும் தவிர்க்க  முடியாது. ஆனால், தவிர்த்துதான் ஆகவேண்டும். ஒருவரை உயர்த்தி, இன்னொரு வரை மட்டம் தட்டிப் பேசுகிற வார்த்தைகள்  அவர்களுக்குள் வேறுபாடுகளை அதிகப்படுத்தி, விரோத மனப்பான்மையைக் கூட்டும். அதைத் தவிர்த்து இருவரும் ஒற்றுமையாக ஒன்று  போலச் செய்கிற விஷயங்களைப் பாராட்டுவதுதான் சரியான அணுகுமுறை.

* கடைசியாக ஒரு விஷயம்... உங்கள் இரட்டையருக்கு நீங்களே ரோல் மாடல். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையில் சண்டை  வரும் போது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதையும், எப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள் என்பதையும்  உங்களுடைய முக பாவங்களையும் அவர்கள் கவனிப்பார்கள். அவர்களுக்குள் சண்டை வரும் போது அதே வார்த்தைகளை,  அணுகுமுறையையே பின்பற்ற நினைப்பார்கள். உங்கள் இரட்டையருக்கு நீங்கள் எப்படிப்பட்ட ரோல்மாடலாக இருக்கப் போகிறீர்கள்?

ஹேமலதாவின் டிப்ஸ்

``ட்வின்ஸை சுமக்கிறதும், பெத்தெடுத்து வளர்க்கிறதும் ரொம்பப் பெரிய சவால். அந்தப் போராட்டத்தை தைரியமா கடந்துட்டா, அவங்க  வளர்ந்ததும் உங்களுக்குக் கிடைக்கிறதெல்லாம் மகிழ்ச்சியும் மலர்ச்சியுமா இருக்கும். ரெட்டைக் குழந்தைங்க கிடைக்கிறது கடவுளோட  ஆசீர்வாதம். அதை சவாலா நினைக்காம, சந்தோஷமா ஏத்துக்கோங்க...’’

மகள்களைப் பெற்ற மகராசி!


சீர்காழியில் உள்ள ஹேமலதாவின் வீடு பெண்களால் பெருமை பூண்டு நிற்கிறது. ஷைனி தேவதாஸ், ஜென்சி தேவதாஸ், நான்சி தேவதாஸ்,  மான்சி தேவதாஸ் என ஹேமலதாவுக்கு 4 மகள்கள். கடைசி இருவரும் இரட்டையர். இரட்டையரைப் பெற்றெடுத்து 18 வருடங்கள் கடந்து  விட்ட நிலையிலும் அனுபவம் தந்த இன்பமும் துன்பமும் மறக்கவில்லை ேஹமலதாவுக்கு.

``முதல்ல ரெண்டு பொம்பிளைக் குழந்தைங்க பிறந்ததும், மூணாவது கண்டிப்பா பையனாதான் இருக்கும்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க. எங்கம்மாவுக்கு கல்யாணமாகி 10 வருஷங்கள் குழந்தை இல்லையாம். அப்புறம் வரிசையா நாலு ஆம்பிளைப் புள்ளைங்க பிறந்தாங்க.  அப்புறம் நான் பிறந்தேன். அதுபோல எனக்கும் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும்னு நம்பினாங்க. ஆனா, மூணாவது மாசம் ஸ்கேன்ல  ட்வின்ஸ்... ரெண்டும் பெண் குழந்தைங்கனு சொன்னதும் என் கணவர் உள்பட, சொந்தக்காரங்க எல்லாரும் அப்செட். `ரெண்டோட  போதும்... இந்த கர்ப்பத்தை அபார்ஷன் பண்ணிடு’னு சொன்னாங்க.  ஒரு தாயா என்னால அப்படி யோசிக்க முடியலை. ‘ஆணோ,  பெண்ணோ...  ரெண்டுமே உயிர்தானே’னு சுமக்கவும் பெத்துக்கவும் தயாரானேன். மனசு ஒத்துழைச்ச அளவுக்கு உடம்பு ஒத்துழைக்கலை.  கர்ப்பமா இருந்தப்பவே எனக்கு கேட்டராக்ட் வந்தது. உடனே ஆபரேஷன் பண்ணச் சொன்னாங்க. அந்த வலியையும், சுமக்கிற வலியையும்  சேர்த்தே அனுபவிச்சேன். குழந்தைங்க பிறந்த மூணாவது நாளே கேட்டராக்ட் மறுபடி வெடிச்சிருச்சு. மறுபடி ஆஸ்பத்திரி, ஆபரேஷன்னு  அது பெரிய அவஸ்தை...

எந்தச் சூழல்லயும் என் குழந்தைங்களைக் கவனிக்கிறதை விட்டுக் கொடுக்கலை... ராத்திரி முழுக்க தூங்க மாட்டாங்க. பகல்ல மத்த ரெண்டு  குழந்தைங்களை கவனிக்கணும். 24 மணி நேரமும் ஓய்வோ, தூக்கமோ இருக்காது. என் கணவருக்கு கண்டக்டர் வேலை. அவர் ஒருத்தரோட  சம்பளத்துலதான் நாங்க எல்லாரும் வாழ்ந்திட்டிருந்தோம். ஒரு பால் டின் வாங்கினா பத்து நாளைக்குக் கூட வராது. `வரிசையா நாலு  பொண்ணு பெத்து வச்சிருக்கா... அப்பவே அபார்ஷன் பண்ணிருக்கலாம்... இப்போ எவ்ளோ அவஸ்தைப்படறா பாரு’னு காது படவே  பேசினாங்க. எங்கம்மா அப்பாவுக்கு நாலு ஆம்பிளைப் புள்ளைங்க இருந்தும், கடைசி காலத்துல நான்தான் அவங்களைப் பார்த்துக்கிட்டேன்.  என் நாலு பொண்ணுங்களும் என்னை நிச்சயம் நல்லா வச்சுப்பாங்கனு நம்பினேன். அந்த நம்பிக்கை பொய்யாகலை. முதல் பொண்ணு  இன்ஜினியரிங் முடிச்சிருக்கா. கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். அடுத்தவ நர்ஸா இருக்கா. மூணாவதா பிறந்த ட்வின்ஸ் சென்னையில  லா காலேஜ்ல ரெண்டாவது வருஷம் பி.எல். படிக்கிறாங்க. நாலு பேரும் வளர்ந்து இன்னிக்கு நல்லா இருக்கிறதைப் பார்க்கிறப்ப,  பெருமையா இருக்கு. வேதனைப்படற மாதிரி பேசினவங்க எல்லாம் இன்னிக்கு பொறாமையா பார்க்கிறாங்க. `நாங்க இருக்கோம்மா  உங்களுக்கு’னு நாலு பேரும் ஆதரவா இருக்கிறதைவிட ஒரு தாய்க்கு வேற என்ன வேணும்?’’ - சந்தோஷக் கண்ணீரில் கரைகிறார்  மகள்களைப் பெற்ற மகராசி.

(காத்திருங்கள்!)