ஒரு நடிகையின் மறுபக்கம்



ஹெடி லாமர்

வரலாற்றில் மிக அரிதாகவே இரண்டு துறைகளிலும் சாதிக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஹெடி லாமர் (Hedy Lamarr).  பிரபலமான ஹாலிவுட் நடிகையாகவும் அறிவியல் கண்டுபிடிப்பாளராகவும் வெற்றியை நாட்டியவர்!  

ஆஸ்திரியாவில் பிறந்தவர் ஹெடி லாமர்... அப்பா வங்கி அதிகாரி... அம்மா பியானோ வாசிக்கக்கூடியவர். ஹெடிக்கு 6 வயதான போதே  அவரிடம் இருந்த கலை ஆர்வத்தை அறிந்துகொண்டு, ஒரு தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்றனர். அவர் பெர்லினுக்கு அழைத்துச் சென்று  நடிப்புப் பயிற்சியை அளித்தார். பயிற்சி முடித்தவுடன் மீண்டும் வியன்னா திரும்பினார் ஹெடி. ஆரம்பத்தில் திரைக்கதை எழுத ஆரம்பித்து,  பின்னர் நடிகையாக மாறினார்.

18 வயதில் முதல் திரைப்படம் வெளிவந்தது. அடுத்த ஆண்டே ஆஸ்திரியாவைச் சேர்ந்த ராணுவத் தளவாடங்கள் விற்பனை செய்யும்  தொழிலதிபரான ஃப்ரெட்ரிக் மாண்டிலைத் திருமணம் செய்துகொண்டார்  ஹெடி. ஆனால், மாண்டில் ஹெடியை மிக மோசமாக நடத்தினார்.  வெளியுலகத்துக்கு வராமல் பார்த்துக்கொண்டார். கட்டுப்பாடுகள் விதித்தார். மொத்தத்தில் ஒரு சிறைக்குள் அடைபட்டுப் போனார் ஹெடி.  அரை யூதராக இருந்தாலும் ஆஸ்திரியாவின் மூன்றாவது பெரிய பணக்காரரான மாண்டில், சர்வாதிகாரிகளான ஹிட்லர் மற்றும்  முசோலினியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவர்களுக்கு ராணுவத் தளவாடங்களையும் விற்பனை செய்து வந்தார். மாண்டில்  வீட்டில் நடைபெற்ற பல விருந்துகளில் ஹிட்லர், முசோலினி கலந்து கொண்டிருக்கிறார்கள். பல விஞ்ஞானிகளும் கலந்து  கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ராணுவ ரகசிய நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்வது  என்பது குறித்து விவாதிக்கப்படும். இதுபோன்ற கூட்டங்களை அருகில் இருந்து கவனித்து வந்த ஹெடிக்கு பயன்பாட்டு அறிவியல் மீது ஆர்வம் வந்தது.



ஹிட்லரின் இன அழிப்புக்கு மாண்டில் உதவி செய்வதைக் கண்ட ஹெடி, ‘இனியும் இங்கே இருக்கக்கூடாது’ என்று முடிவு செய்தார்.  வேலைக்கார பெண்ணின் உடையை அணிந்துகொண்டார்... மாண்டிலை மட்டுமல்ல... அந்த நாட்டை விட்டும் வெளியேறினார் ஹெடி.  பாரிஸில் திரைப்படத் தயாரிப்பாளர் லூயி பி மேயரைச் சந்தித்தார். அவர் ஐரோப்பாவையும்  தாண்டி,  ‘உலகின் மிக அழகான பெண்’ என  ஹாலிவுட்டிலும் ஹெடியை அறிமுகப்படுத்தினார்.  அடுத்த பத்தாண்டுகள் ஹாலிவுட்டில் ஹெடியின் கொடி பறந்தது. இந்தக் காலகட்டத்தில்  இரு குழந்தைகளுக்கும் தாயானார் ஹெடி.

தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தாலும் நடிப்பு அலுப்பூட்டியது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த போது, நாஸிகளின் ஹிட்லர்  படைகளுக்கு எதிராக வேலை செய்ய முடிவு செய்தார். தன்னுடைய பிரபல்யத்தைப் பயன்படுத்தி பல காரியங்களைச் செய்தார்.  ஜெர்மன்  நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர்மூழ்கிக் குண்டுகள் வீசுவதைத் தடுத்து நிறுத்த, தான் ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினார்.  இப்படி, கண்டுபிடிப்புகளின் மீது ஏற்பட்ட இவரது ஆர்வமே பல கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. முன்னேற்றமான சிக்னல் விளக்கு,  குளிர்பானம் போன்றவற்றை உருவாக்கினார்.



இசையமைப்பாளர் ஜார்ஜ் அன்திலுடன் இணைந்து பல கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டார். ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வீசப்படும்  நீர்மூழ்கிக் குண்டுகளை ரேடியோ அலைகள் மூலம் செயல் இழக்கச் செய்யும் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். மாண்டிலுடன் வாழ்ந்தபோது  கிடைத்த அனுபவங்களை வைத்து, அவர் இந்தக் கண்டுபிடிப்பைச் செய்திருந்தார். அப்போது இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும்  மதிக்கப்படவில்லை. பிற்காலத்தில்தான் ஹெடியும் ஜார்ஜும் இதற்காகக் கெளரவிக்கப்பட்டனர்.

இன்று கம்பியில்லா தகவல் தொழில்நுட்பம் (வயர்லெஸ்) வளர்வதற்கு ஹெடியின் கண்டுபிடிப்பே மூலக் காரணம். அவர் மேம்படுத்திய  ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம்  தொழில்நுட்பமே இன்றும் வைஃபை, ப்ளூடூத் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. போருக்குப் பின்னர்  ஏற்பட்ட நிலைமைகளைச் சமாளிப்பதற்கு வேண்டிய நிதியுதவிகளைத் திரட்டித் தரும் பணியிலும் ஈடுபட்டார் ஹெடி. நடிகையாகவும்  கண்டுபிடிப்பாளராகவும் வெற்றி பெற்ற ஹெடிக்கு, சொந்த வாழ்க்கை அவ்வளவு நிம்மதியைத் தரவில்லை. 6 திருமணங்கள் செய்திருந்தார். 2  குழந்தைகளையும் 1 வளர்ப்பு மகனையும் வளர்த்து வந்தார்.

பிற்காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரிகளின் மீது அவரது கவனம் திரும்பியது. ஆனால், அந்த சிகிச்சைகள் மூலம் அவரது அழகு மேலும் மேலும்  பொலிவிழந்தது. ஒருகட்டத்தில் வெளியே வராமல், யாரையும் சந்திக்காமல், தொலைபேசியில் மட்டுமே உரையாடிக்கொண்டிருந்தார் ஹெடி. 1990ம் ஆண்டு ஹெடிக்கும் ஜார்ஜுக்கும் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. வாழ்நாள் சாதனையாளர் விருதும்  வழங்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளைத் தனிமையிலேயே கழித்தார் ஹெடி.

85 வயதில் இதய நோய்களால் தாக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார். அவர் விருப்பப்படி சொந்த நாடான ஆஸ்திரியாவில் உடல் அடக்கம்  செய்யப்பட்டது. ஒரு நடிகையாகவும் ஒரு கண்டுபிடிப்பாளராகவும் காலத்துக்கும் புகழுடன் இருப்பார் ஹெடி லாமர்!

"இன்று கம்பியில்லா தகவல் தொழில்நுட்பம் (வயர்லெஸ்) வளர்வதற்கு ஹெடியின் கண்டுபிடிப்பே மூலக் காரணம். அவர் மேம்படுத்திய  ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம்  தொழில்நுட்பமே இன்றும் வைஃபை, ப்ளூடூத் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது."  

"ஹிட்லரின் இன அழிப்புக்கு கணவர் உதவி செய்வதைக் கண்ட ஹெடி, ‘இனியும் இங்கே இருக்கக்கூடாது’ என்று முடிவு செய்தார்.  வேலைக்கார பெண்ணின் உடையை அணிந்து தப்பினார்."

சஹானா