தீ... தீ... தித்திக்கும் தீ



பெண்ணைக் கண்டால் தீயும் அணையும் எனப் புதுமொழி எழுதலாம். பெண்கள் மென்மையானவர்கள் என்ற பொதுக்கருத்தை  உடைத்தெறிந்து தீக்குள் இறங்கி, பெண்மையின் மறுபக்கத்தை நிரூபித்து வருகிறார்  தீயணைப்புப் படை வீராங்கனை ஷாசியா பர்வீன்.

ஆசியக் கண்டத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில்தான் தீயணைப்புப்  படையில் பெண்கள் உள்ளனர். இந்தியாவில் முதன் முதலாக 2012ல் பெண்  வீராங்கனைகளைக் கொண்ட தீயணைப்புப் படைக்குழு ஒன்று  உருவாயிற்று.   பாகிஸ்தானில் ‘மீட்புப்படை 1122’  என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அதில் பெண்களுக்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த மீட்புப்படை 1122ன் மூலம்  பெண்களுக்கு தீ விபத்துகளின் போது மீட்புப் பணியில் ஈடுபடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பஞ்சாபின்  வஹாரி மாவட்டத்தைச் சார்ந்தவர்  பர்வீன், 2010ல் இந்த மீட்புப் படையில்  இணைந்து தனது பயிற்சியினை சிறந்த முறையில் முடித்து வெளிவந்தவர்.

மிகத் திறமையாக செயலாற்றக் கூடிய வீராங்கனையான இவர், தீ விபத்துகளில் சக ஆண்  வீரர்களுக்கு நிகராக பணியாற்றுபவர். அதிலும்  பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாக இருந்தால் சட்டென்று தன் சக வீரர்களோடு அந்த இடத்திற்குச் சென்று  அவர்களுக்கு உதவுவார்.  சினிமாவிலோ, நேரிலோ ஒரு சிவப்பு நிற வேனில் இருந்து வலுவான ஆண்கள் வரிசையாக குதித்து இறங்குவார்கள். அவர்களில் சிலர்  தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது  கொழுந்து விட்டு எரியும் தீயினூடே புகுந்து சிக்கியுள்ள குழந்தைகளையும், பெண்களையும் மீட்டு  எடுப்பர். சிலர் தீயை அணைக்கும் வேலையில் ஈடுபடுவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், பெண்கள் இந்த சாகச வேலைகளில்  ஈடுபடுவதைப் பார்த்திருக்க மாட்டோம்.



பர்வீன் தான் இந்தத் துறைக்கு வந்தது பற்றி கூறும்போது, “தீயணைப்பு வீராங்கனையாவது என் சிறு வயது கனவு என்றும், பாகிஸ்தானின்  மீட்புப்படை 1122 பெண்களுக்கான பிரிவை ஆரம்பித்த உடனேயே அதில் சேர்ந்துவிட்டேன்.  இந்த வேலை எனக்கு எளிதாக  கிடைத்துவிடவில்லை. 600 பெண்கள் இந்த பயிற்சியில் சேர்ந்தனர். ஆனால், ஒருவர்கூட பயிற்சியை முடிக்கவில்லை. நான் மட்டுமே  பயிற்சியை வெற்றிகரமாக முடித்து தீயணைப்புப் படையில் சேர்ந்தேன். பயிற்சியின் போது, நீச்சல், உயரம் தாண்டுதல், கயிறைப் பிடித்துக்  கொண்டு கட்டிடங்களின் கூரைமேல் ஏறுவது, தீயோடு போராடுவது போன்ற கடினமான சோதனைகளுக்குப் பின்தான் என்னைத்  தேர்ந்தெடுத்தார்கள்” என்கிறார்.

“நான் மீட்புப் பணியில் ஈடுபடும் போது, சக ஆண் ஊழியர்களோடு தீயில் குதித்து போராடு வதைக் கண்டு எள்ளி நகையாடும் மக்கள்,  அவர்களின் விலையுயர்ந்த பொருட்களையும் குழந்தைகளையும் மீட்டுத் தந்தவுடன் என்னை பாராட்டு மழையில் நனைய வைப்பார்கள்.  ‘பெண்கள், சமையலறை அடுப்பின் தீயை மூட்டுவதற்கே’ என்று நம்பும் நம் நாட்டினரின் பழைய எண்ணத்தை உடைக்கவே நான்  தீயை  அணைக்கும் வேலையை கையில் எடுத்துக் கொண்டேன்...’’ என அசத்துகிறார் அக்னி தேவதை!