இந்த மாதம் இனிய மாதம்



புவனேஸ்வரி மாமி

என்ன, எல்லாரும் சௌக்யம்தானே! ஆடி மாசம் வந்துட்டாலேயே அடுத்தடுத்துப் பண்டிகைகள்தானே? இந்த மாசம் முக்கியமான இரண்டு  கொண்டாட்டங்கள் - கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி.

செப்டம்பர் 5 - கிருஷ்ண ஜெயந்தி

கோகுலத்ல கண்ணன் ஆயர் பெண்களோட வீடுகள்ல புகுந்து வெண்ணெய், தயிரெல்லாம் ‘திருடி’ சாப்டுட்டு, அவங்களை  ‘சந்தோஷ’ப்படுத்தியதை இன்னிக்கும் நினைவிலே வெச்சுக்கற இனிய நாள் இது. கோகுலத்ல தரையில் சிதறிக் கிடந்த வெண்
ணெயில் கண்ணனின் பிஞ்சுப் பாதங்கள் பதிந்ததையும் நினைவு கொள்ள சிற்றடிக் கோலம் போடறோம்! இதிலேயும் ஒரு நயம் இருக்கு,  பாருங்க. 8ங்கற எண் மாதிரி (அஷ்டாக்ஷர மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ங்கறதைக் குறிக்கிற வகையில்) சின்ன கால் அடியை  மாக்கோலத்தால் இட்டு, அதுக்கு மேலே 5 விரல்கள் (பஞ்சாக்ஷர மந்திரமான ‘ஓம் நமசிவாய’ங்கறதைக் குறிக்கிற வகையில்). வீடு பூராவும்  சின்னக் கண்ணன் ஓடி ஆடி துள்ளிக் குதிச்சு குதூகலத்தை நிறைவிக்கிற பாங்காக அப்படிக் கோலம் இட்டு, கொண்டாடற சந்தோஷ விழா.  மனித உணர்விலே இருக்கற எல்லா அம்சங்களுக்கும் இருக்கற அர்த்தம், அந்த உணர்வுகள் ஒரு எல்லையை மீறாமலிருக்க பகவத் கீதை  மூலமாகச் சொல்லப்பட்ட அறிவுரைன்னு, மனித வளத்தைப் போற்றிய அவதாரம்தான் இந்த கிருஷ்ணாவதாரம். மனசை எப்பவும் நிம்மதி,  உற்சாகத்தோடு வெச்சுக்கற ஒரு குழந்தையைப்போல நாமல்லாம் மாறணுங்கறதுக்காக பாலகிருஷ்ணனோட லீலைகளை இந்த நாள்ல  நினைவுபடுத்திக்கறோம்.

செப்டம்பர் 11 - பாரதியார் நினைவு நாள்

தமிழர்களோட உள்ளங்கள்ல எப்பவும் கோயில் கொண்டிருக்கறவர் மகாகவி பாரதியார். கண்ணனின் காதலனான இவர், கண்ணன் அவதரிச்ச  மாசத்லதான், அவன் திருவடி சேர்ந்திருக்கார். 1921ம் வருஷம் திருவல்லிக்கேணியில தங்கியிருந்தபோது பார்த்தசாரதி சொன்ன கீதையைத்  தானும் எழுதியதாலோ என்னவோ, அந்த கோயில் யானை இவரைப் ‘பாராட்ட’ முயற்சி பண்ணினது... ஆனா, அதுவே பாரதியாருக்கு  பாதிப்பாகப் போய்விட்டது. அதனால நோய்வாய்ப்பட்டு செப்டம்பர் 11ம் தேதி உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றார். வினோதம்  பாருங்களேன், அவர் பிறந்ததும் 11ம் தேதி, மறைந்ததும் 11ம் தேதி! கண்ணனைக் காதலனாக நினைச்சு, வெற்றி எட்டு திக்கும் எட்ட முரசு  கொட்டி, வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பவளைப் பூசித்து, ஆடுவோம், பள்ளுப் பாடுவோம் என்று அகமகிழ்ந்து, காக்கைச் சிறகினில்  நந்தலாலாவைக் கண்ட தீவிர கண்ணன் பக்தரை நினைவிலிருத்தி அஞ்சலி செலுத்துவோம்.



செப்டம்பர் 17 - விநாயகர் சதுர்த்தி

விநாயகர், நான்கு வேதங்களோட ஒருமித்த சக்தியாக உருவானவர்ங்கறது புராணம். அதை அவரோட முகமே சொல்லும் - ‘ஓம்’கற எழுத்தே  முக வடிவமாக அமைந்திருக்கும். நம்ம ஊர்ல அவர் பிரம்மச்சாரி. வட இந்தியாவில சித்தி, புத்தின்னு இரு தேவியரைக் கொண்டவர். அவர்  அருளால் சித்தியும் புத்தியும் பக்தர்களுக்குக் கைவசமாகும். துங்கக்கரி முகத்துத் தூமணி, எதையும் விக்னமின்றி நடத்திக் கொடுப்பார். பாரத  தேசம் முழுவதுமாகக் கொண்டாடப்படற ஒரு பொதுப் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி. ஆவணி மாசம் சுக்ல பட்சத்ல (அமாவாசைக்கு  அடுத்த) நான்காம் நாள், சதுர்த்தி திதியில் இந்த விழா கொண்டாடப்படுது. தன் பூஜையில் தனக்குன்னு தனியா ஒரு உருவம்கூட எதிர்பார்க்க  மாட்டார். ஆமாம்... வெல்லம், மஞ்சள் பொடினு எதிலாவது ஒரு கூம்பாக செய்து வைத்தாலும், அதில் வந்து ஆவாகனம் ஆகிவிடுவார்.  இப்படி எளிய முறையில் எப்படிக் கொண்டாடினாலும், ஓடோடி வந்து அருள்புரிவார் ஆனைமுகன். அறுகம்புல், எருக்கம்பூன்னு அற்பமாகக்  கருதப்படும் பொருட்களை விருப்பத்தோடு ஏற்பார். அவருக்கு ரொம்பவும் பிடிச்ச மோதகத்தை (வெளியே மாவு - அண்டம்;  உள்ளே  பூரணம் - பிரம்மம் என்பது தத்துவம்) நிவேதனம் செய்து பிள்ளையாரை வழிபடுவது வழக்கம்.

செப்டம்பர் 19 - புரட்டாசி முதல் சனிக்கிழமை

உலகத்ல நம்பர் 1 பணக்கார சாமி யார்னா அது வெங்கடாஜலபதிதான்! இந்தத் திருமலைவாசனுக்கு தினந்தினம் திருவிழாதான். குறிப்பாக  புரட்டாசி மாசம் ரொம்பவும் விசேஷமானது. இந்த மாசத்லதான் இவருக்கு பிரம்மோற்சவம் கொண்டாடறது வழக்கம். பொதுவாக புரட்டாசி  சனிக்கிழமைகள்ல அம்மன் கோயில்கள்ல மாவிளக்கு ஏற்றி பிரார்த்தனையை செலுத்தறது பக்தர்களின் வழக்கம். அதே நாட்கள்ல  பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடுவாங்க. அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதம் (19, 26 தேதிகள்) இரண்டு சனிக்கிழமைகளிலும்  இந்த பிரார்த்தனையை நேர்ந்து கொண்டவர்கள் நிறைவேற்றுவார்கள். அக்டோபர் 3, 10, 17 சனிக்கிழமைகள்லேயும் இந்தப் பிரார்த்தனை  தொடரும்.

செப்டம்பர் 28 - மஹாளய பட்சம் ஆரம்பம்

புரட்டாசி மாசம் வரும் அமாவாசையே மஹாளய அமாவாசையாக அனுசரிக்கப்படறது. இதுக்கு முந்தைய கிருஷ்ண பட்சம் (பவுர்ணமிக்கு  அடுத்த) 15 நாட்களும் மஹாளய பட்சம்னு சொல்லப்படற நீத்தாரை நினைவு கொள்ளும் நல்ல நாட்கள். அறிந்தோ, அறியாமலோ  அவங்களுக்கு இழைத்திருக்கக்கூடிய கஷ்டங்களுக்கு மானசீகமாகவும் மந்திரப்பூர்வமாகவும் மன்னிப்பு கேட்டுக்கற காலகட்டம் இது. அவங்க  நம்மளோடு வாழ்ந்தபோது நாம் செய்த தவறுகளுக்குப் பிராயசித்தம் தேடிக்கற காலம். இந்த 15 நாட்கள்ல அவரவர் மூதாதையர் மறைஞ்ச  திதியில இப்படி நீத்தார் கடனை நிறைவேற்றுவது பலரோட வழக்கம். நம்மளோட இந்த நிலைக்குக் காரணமான நம் முன்னோரை நினைத்து  வணங்க, நன்றி சொல்ல இந்த பட்சம் (காலம்) ரொம்பவும் சிறப்பானது. இந்த நாட்கள்ல அவங்க பூமிக்கு வந்து நம்மை ஆசீர்வதிப்பதாக  ஐதீகம். அப்போ அவர்களுக்கு மானசீகமா உரிய மரியாதை செலுத்தி, அவங்களுக்குப் பிடிச்சதைப் படைச்சு வணங்கி வாழ்க்கையில் மேன்  மேலும் உயரலாம்.

செப்டம்பர் 2015
வேற என்ன விசேஷம்?


1    சங்கடஹர சதுர்த்தி
5    கார்த்திகை
4, 19    சஷ்டி
9, 24    ஏகாதசி
10, 25    பிரதோஷம்
11    மாத சிவராத்திரி
12    அமாவாசை
28    பௌர்ணமி