மாநகரப் பயணிகளும் மாநரகப் பயணங்களும்



இளம்பிறை

இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து 15 வருடங்களாக நான் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பேருந்துகளில் தொடர்ந்து  பயணித்து வருகிறேன். கூட்ட நெரிசலில் சில கைப்பேசிகளையும், ஓரிரு பணப்பைகளையும் தவற விட்டிருக்கிறேன். பேருந்துக்காக  காத்திருக்கும் போது ஏற்படும் மன வலியையும் பதற்றத்தையும் எழுத மொழிப் போதாது... எழுதியும் தீராது. இது எனக்கான வலி  மட்டுமல்ல... பேருந்தில் பணிக்குச் சென்று கொண்டிருக்கும் அனைவருக்குமான பொது வலியே.

உள்ளம் நொந்து, உயிர் கரைந்து, கண்கள் இருண்டு போகும். எனக்கு இந்த காலை - மாலை பேருந்துப் பயணங்களின் போது, ‘ஹிட்லரின்  வதை முகாம்களுக்கு நடுங்கும் குளிரில், திறந்த ரயில் பெட்டிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட யூத இன மக்களின் சிரமங்களை,  அம்முகாமிலிருந்து தப்பித்து எழுதிய எலிவீசலின் ‘இரவு’ நாவல்’தான் நினைவிற்கு வரும். ‘இந்த உலகம் இது போன்ற ஒரு மோசமான பயணத்தை இனி சந்திக்கவே கூடாது’ என எழுதியிருப்பார்.

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டும், ஒற்றைக் காலில் நின்று கொண்டும், கம்பிகளை பிடித்துக் கொண்டு நிற்கத் தோது இல்லாமல்,  தோளில் ஒரு பை, கையிலொரு பை, இடையிடையே அலைபேசி அலறல்கள், பயணச்சீட்டிற்கு பையிலிருந்து காசு எடுப்பதற்கும் படாத  பாடுபடும் மோசமான பயணங்கள்...

இடையில், படியில் தொங்கிக் கொண்டு வருபவர்களைப் பார்த்து, ஏதோ நாம் பாதுகாப்பாக பயணிக்கிறோம் என்ற ஆறுதல். உட்கார இடம்  கிடைத்தவர்களோ ‘இந்த பேக்கை கொஞ்சம் வச்சிக்கிறீங்களா?’ என நின்று கொண்டிருப்பவர் யாராவது கேட்டு விடுவார்களோ என்ற  அச்சத்தில் நிற்பவர்களின் முகத்தைத் தவறியும் பார்ப்பதைத் தவிர்த்து, கண்களை மூடிக் கொள்வோரும் உண்டு. இப்படி பயணிக்கும் சொற்ப
நேரத்திலேயே அவரவர் நலன் சார்ந்த பாவனைகளின் பிரதிபலிப்புகளே பேருந்து முழுதும் நிறைந்திருக்கும்.  முகலிவாக்கத்திலிருந்து தினமும்  பேருந்தில் தேனாம்பேட்டைக்கு வேலைக்கு வந்து செல்லும் ஒரு பெண், உறங்குவதற்கு முன் ஒவ்வொரு நாளும் ‘நாளை காலை எனக்குப்  பேருந்தில் சீட் கிடைக்க வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டிக் கொள்வதாகக் கூறினாள். ஒரு பருவப் பெண்ணின் உறங்குவதற்கு  முன்பான கடைசி வேண்டுதல் பேருந்தில் இருக்கை கிடைக்க வேண்டும் என்பதாக இருந்தால், தினந்தோறும் பேருந்தில் அவள் படும்  அவஸ்தைகள் அதற்கான காரணம் என்பதை நம்மால் யூகித்து அறிய முடிகிறது.

காலோடு கால் வைத்து உரசுவது, குடித்தவர்களின் வாயிலிருந்து வீசும் சாராய நாற்றம், பின் கழுத்தில் மூச்சை இழுத்து விடுவது, பின்புறம்  தெரியாமல் கை படுவது போலத் தட்டுவது... இந்த தொல்லைகளை பொறுக்க முடியாமல், ‘சார்... கொஞ்சம் தள்ளி நில்லுங்க’ எனச்  சொல்லி விட்டால் போதும்... ‘கூட்டத்துல ஏறுனா கை கால் மேல படத்தான் செய்யும். இடிபடாம வரணும்னா, நீங்க தனியா கார்  புடிச்சிகிட்டுதான் வரணும்... நீங்க பெரிய ஐஸ்வர்யா ராய், உங்கள ஆசப்பட்டு அப்படியே இடிக்கிறேன் பாருங்க’ என பலர்
மத்தியில் இடித்தவன் திட்டுவதைக் கேட்டும் அவமானப்பட வேண்டும். உலக அழகியாக பிறக்காத பெண்கள், உணர்வைக் கல்லாக்கி,  உடலை மரக்கட்டையாக்கி, வாய் திறக்காமல் இருப்பதுதானோ கௌரவம்? சக பெண்ணுக்காக அங்கே ஒரு பெண்ணும் வாய் திறக்க  மாட்டார்கள்.



சீட்டைக் கிழித்துத் தருவது மட்டும்தான் தன் பணி என்பது போலவே, பல நடத்துனர்கள் நிறுத்தங்களின் பெயர் சொல்வதற்குக்கூட வாய்  திறப்பதில்லை. புதிதாக பயணிப்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருப்போரைக் கேட்டே, தங்கள் நிறுத்தத்தை கண்டு இறங்கிக் கொள்கிறார்கள்.பேருந்துகளில் பெண்களுக்கான இருக்கைகள்கூட சரிசமமான எண்ணிக்கையில் இல்லை. இரண்டு வாசல் படிக்கட்டுகளுக்கு இடையே உள்ள  குறைந்த அளவு இருக்கைகளில்தான் பெண்கள் அமர முடியும். முன் வாசலுக்கு முன்னே இருக்கும் இருக்கைகளையும், கடைசி பின் இருக்கைகளையும்கூட ஆண்கள் பிடித்துக் கொள்கிறார்கள். மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு பேருந்தில் இருக்கைகள் கூட  சமமாக ஒதுக்கப்படாதபோது, அரசிலும் அரசியலிலும் 33%, 50% என்பதை எல்லாம் எப்போது, எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்  இவர்கள்?

‘கம்பெனியிலயும் நின்னுகிட்டே வேல பாத்து, பஸ்லயும் நின்னுகிட்டே போயி, கால் குடைச்சலில் படுத்தா தூக்கம்கூட வருவதில்லை’  என்கிற வலி நிறைந்த பெண்களின் குரலை ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நெரிசலில் சிக்கி, வெகுநேரம்  ஓரிடத்திலேயே நிற்கும் பேருந்தில், நின்று கொண்டிருக்கும் பெண்களுக்கு, மயக்கம் வந்து விழுவது எல்லாம் நான் காணும் தினசரி  காட்சிகளில் ஒன்றாகி விட்டது. பள்ளி மாணவர்களுக்கென விலையில்லா பயண அட்டைகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஏழை  எளிய மாணவர்களின் கல்வி மீதான சிறு அக்கறையாக இருந்தாலும், அவர்கள் பயணிப்பதில் இருக்கும் சிரமங்களையும் பொருட்படுத்த  வேண்டியதும் முக்கியமே. கூட்ட நெரிசலில் சிறு குழந்தைகள், புத்தகப் பையுடன் ஏறவும் இறங்கவும் படுகிற சிரமங்களை குறைக்க  மாணவர்களுக்கு என தனிப்பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவது போன்ற ஏற்பாடுகளை செய்வதன் மூலம் மட்டுமே, அவர்களால் உற்சாகமாக  பயணித்து வந்து கற்க இயலும்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பேருந்தில் ஏறிக்கொண்டே இருந்த போது,  ஓட்டுனர் வண்டியை எடுத்து விட்டார். இதனால் 15 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் தடுமாறி விழ இருந்தான். நல்ல வேளையாக  இன்னொரு மாணவன் கை கொடுத்து மேலே இழுத்து விட்டான். தடுமாறிய அந்த மாணவன் வெலவெலத்துப் போய் விட்டான்.  பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலையே இந்தியாவிலேயே மோசமான சாலையாக இருக்கக் கூடும்... அவ்வளவு மேடு பள்ளம்,  வளைவுகள். அனகாபுத்தூர் வந்ததும் அவன் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். நான் அவனுக்குக் கொடுத்த தண்ணீரை, அவன் தன்  நண்பனுக்கும் குடிக்கக் கொடுத்தான். ‘அடுத்த பஸ்ல வரலாம்ல... நான் பயந்தே போய் விட்டேன்’ என்றேன். ‘எல்லா பஸ்லயுமே  கூட்டம்தான் அம்மா... ஏறிக்கிட்டே இருக்கும் போது எப்புடி வண்டிய வெடுக்குனு இழுக்குறாரு பாருங்க... எல்லாரும் எங்களதான்  திட்றாங்க... குதிச்சு குதிச்சுப் போற பஸ்ல தொங்கிக்கிட்டே போறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உள்ள போக இடமிருந்தால்தானே போக  முடியும்?

ஸ்கூலுக்கும் லேட்டா போக முடியாது. வீட்டுக்கு லேட்டா போனாலும், ‘ஊரச் சுத்திட்டு வர்றியா’னு திட்றாங்க... நாங்க என்னதான்  பண்றது?’ என்ற மாணவன் அருணின் கேள்விக்கு அரசும் போக்குவரத்துத் துறையும்தான் பதில் அளிக்க வேண்டும். பேருந்துகளில்  படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் மாணவர்களை படம் பிடித்து, அதை விளம்பரப் பலகைகளாக ‘இதுவே உங்கள் கடைசிப்  பயணமாகவும் இருக்கலாம்’ என வரிசை வரிசையாக வைத்திருப்பது மட்டும் எப்படி அவர்கள் மீதான அக்கறையாக இருக்க முடியும்? கல்வி  கற்கச் செல்லும் மாணவர்களை இப்படி ‘வாழ்த்தி’ வழியனுப்புவது எல்லாம் போக்குவரத்துத் துறைக்குப் பெருமை சேர்க்காது.

எப்போதாவது மனம் மகிழத்தக்க, அரிய காட்சிகள் சிலவும் பேருந்தில் காணக் கிடைப்பதுண்டு. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு,  சரியான பிடிமானம் இல்லாமல் கூட்ட நெரிசலில் தடுமாறிய ஓர் இளம் தாய்க்கு, கல்லூரி மாணவி போல இருந்த பெண் எழுந்து இடம்  தந்ததோடு, வாந்தியெடுத்த அக்குழந்தையை துடைத்து சுத்தம் செய்ய தன் கைக்குட்டையையும் கொடுத்ததைப் பார்த்தேன்.

இன்னொரு நாள் பாசிமணி விற்கும் பெண், தன் தாகத்துக்கு பேருந்திலிருந்த பெண்களிடம் தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தாள். பலரும்  முகத்தைத் திருப்பிக் கொண்ட போது, கடைசியாக உட்கார்ந்திருந்த ஓர் இளம்பெண் தானே முன் வந்து, தண்ணீர் பாட்டிலை அவளிடம்  நீட்டினாள். இது போன்ற தருணங்களில் எல்லாம், ‘தேவதைகள் தேவதைகள் என்று எழுதுகிறார்களே, பேசுகிறார்களே... அந்தத் தேவதைகள்  இவர்களாகத்தான் இருப்பார்களோ’ என எண்ணிக் கொள்வேன் நான். நதியில் பூக்கள் மிதந்து செல்வதைப் போல நிதானமாகவும்  உற்சாகமாகவும், குறைந்த உயரத்திலிருந்து மட்டும் ஒரு கோடாக நம் கண்களுக்கு தெரிந்து வானத்திலிருந்து பூமிக்கு பயணிக்கும் மழை  போல மகிழ்ச்சியாகவும், காற்று ஏந்திச் செல்லும் ஒரு சிறகின் பயணம் போல மனப்பாரம் அற்றும் மாநகரப் பேருந்தில் மகிழ்வோடு  பயணிக்கும் நாள் எந்நாளோ?

"நதியில் பூக்கள் மிதந்து செல்வதைப்  போல நிதானமாகவும் உற்சாகமாகவும், வானத்திலிருந்து பூமிக்கு பயணிக்கும் மழை  போல  மகிழ்ச்சியாகவும், காற்று ஏந்திச் செல்லும் சிறகின் பயணம் போல  மனப்பாரம் அற்றும் மாநகரப் பேருந்தில் மகிழ்வோடு பயணிக்கும் நாள்  எந்நாளோ?"

"எல்லா பஸ்லயுமே கூட்டம்தான்... எல்லாரும் எங்களதான் திட்றாங்க... குதிச்சு குதிச்சுப் போற பஸ்ல தொங்கிக்கிட்டே போறது எவ்வளவு  கஷ்டம் தெரியுமா? உள்ள போக இடமிருந்தால்தானே போக முடியும்?"

(மீண்டும் பேசலாம்!)