பூவாகி காயாகி கனியாகி புயலானது ஒரு விதை!



பெல்வா லாக்வுட்

விதைக்கும் போது எல்லா விதையும் ஒரே மாதிரி தானே? அது துளிர்விட்டு பலனுக்கு வரும்போதுதான் மற்ற விதைகளிலிருந்து  மாறுபடுகிறது. அமெரிக்க வரலாற்றில் மற்ற பெண்களிலிருந்து மாறுபட்டு சட்டத்துறையில் அழிக்க முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை
ஏற்படுத்திச் சென்றவர் பெல்வா லாக்வுட்!

1830ல் நியூயார்க் நகரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பெல்வா  அன் பென்னட்.  இதுதான் இவரின் இயற்பெயர். 16 வயதிலேயே  கிராமப்புறப் பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியையாக பிரவேசித்தார். பிறகு அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பு படித்தார்.  ஆரம்பத்தில்  ஆசிரியை தரப்பில் சமுதாயக் களம் இறங்கினார். பெண் ஆசிரியைக்கு ஆண்டுக்கு 400  டாலர் ஊதியம். அதே தகுதியில் இருக்கும் ஆண்,  ஆசிரியருக்கு வருட சம்பளம் 600 டாலர். ஏன் இந்த பாகுபாடு? ‘இருவருக்குமான வித்தியாசம் ஆண், பெண் என்பதுதான்’ என்ற பதிலே  அவருக்கும் கிடைத்தது.

ஆண் செய்யும் அதே வேலையை பெண் செய்தா லும் ஆணுக்குரிய ஊதியம் பெண்ணுக்குத் தரப்படாததை கண்டித்தார். ‘பெட்டைக் கோழி  கூவி பொழுதா விடியப் போகிறது’ என்று ஒரு பழமொழி உண்டே... அதே போல இவரது,  எதிர்ப்புக்கும் விடிவில்லை. இவர்  வழக்கறிஞராக பரிணாமம் எடுத்ததை தெரிந்து கொள்வதற்கு முன், இவரது சொந்த வாழ்க்கையின் பக்கம் பார்வையை செலுத்திவிட்டு  வருவோம். அவரது ஊரை சேர்ந்த விவசாயியையே மணந்தார். 5 வருடங்கள் கூட முழுமையாக வாழவில்லை. அதற்குள் அவசரப்பட்டு, 3  வயது மகளோடு பெல்வாவை தனியாக விட்டுவிட்டு, அவசரமாக அவர் மண்ணிலிருந்து விடுதலை வாங்கிக்கொண்டார். 22 வயதில்  விதவையான பெல்வா, புது வாழ்வை ஆரம்பிக்கவும், மகளின் எதிர்காலத்துக்காகவும்  ஊரிலிருந்து வெளியேறி, வாஷிங்டனில் குடியேறினார்.  படிப்பில் அடுத்தடுத்த நிலைகளைக் கடந்தார்.

ஆசிரியையாக வாழ்ந்தார். பாலின பேதத்தை தகர்க்க இருபாலரும் படிக்கும் பள்ளியை ஆரம்பித்தார். இவரை விட வயதில் பல மடங்கு  மூத்த உள்நாட்டு யுத்த போராளி இஸிகேல்  லாக்வுட்டை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிறந்த மகளோ, 2  வயது கூட பூர்த்தியடையாமல்  காலமானாள். சட்டம் படிக்க வேண்டும் என்ற உந்துதலில் சட்டக் கல்லூரியை நாடினார். பெண்களுக்கு  சட்டக் கல்லூரியில் அனுமதி இல்லை என்று எல்லாக் கதவுகளும் இவரது முகத்தில் திருப்பி அறைந்தன. ஆனாலும், மனம் தளரவில்லை.   நேஷனல் சட்ட பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தார். அங்கோ, ‘பெண்களை ஆண்களுடன் சேர்ந்து படிக்க வைக்க முடியாது. ஏனென்றால்,  அவர்களின் கவனம் படிப்பில் செல்லாது வேறு விதத்தில் சிதறும்’ என்றனர்.



அப்போது பெல்வாவுக்கு எவ்வளவு வயது என்பதை தெரிந்துகொண்டால் 100 ஆச்சரியக்குறிகள் உங்கள் முன்னால் வந்து நிற்கும். ‘அப்படியா  சங்கதி? எங்களை தனி வகுப்பறையில் அமர வையுங்கள்... அப்போது அவர்களின்  கவனம் திசை திரும்பாது’ என்று எதிர் குரலெழுப்ப,  இவரோடு சேர்ந்து 14 பெண்கள் சட்டம் படித்திருக்கின்றனர். அப்போது பெல்வாவின் வயது 38. முட்டி மோதி சட்டம் படித்தாயிற்று...  பட்டம் வழங்கும் நாளும் வந்தது. பெண்களுக்கு மட்டும் பட்டம் வழங்க மறுத்துவிட்டனர். பெல்வா பெண் என்பதைத் தவிர, மறுப்புக்கு  வேறென்ன காரணம் இருந்துவிடப் போகிறது?

‘நான் சட்டத்தில் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். இருந்தாலும் எனக்கு பல்கலைக்கழகம் பட்டம் தர மறுக்கிறது’ என்று  தலைவரிடம் புகார் கொடுத்தார். தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஒரே வாரத்தில் பெல்வாவுக்கு பட்டம் கிடைக்க உதவினார்.  இருக்காதா பின்னே... அவர் புகார் கடிதம் எழுதியது அமெரிக்காவின் 18வது குடியரசுத்தலைவர் யூலிசெஸ் கிராண்ட்டுக்கு அல்லவா? எங்கே  தட்டினால் கதவு திறக்கும் என்ற சூத்திரம் அவருக்கு தெரிந்திருந்தது. நீதிமன்றத்தில் வழக்கறிஞராக முழுமையாக அவர் நுழைந்த போது,  வயது 43. படிக்க அனுமதி இல்லை என்றார்கள்... படித்தார். பட்டம் கொடுக்க முடியாது என்றனர்... வாங்கினார். இப்போது வழக்கறிஞர்  கூடத்தில் பதிவு செய்து  நீதிமன்றத்தில் வாதாட முடியாது என்கின்றனர். ‘சரி விட்டுத் தொலைவோம்’ என்று பயந்து பின்னோக்கி அவர்  ஓடவில்லை. பாகுபாடென்றமுட்கள் முன்னே நிரவிக் கிடந்தாலும் அதில் கால் வைத்து நடப்பது என்பதில் உறுதியாக இருந்தார். அவரிடம்  சட்டம் என்ற பட்டம் உளியாக உடனிருக்கும்போது  எதிர்வரும் எதிர்ப்புகளை உடைத்து தூளாக்கி விடமாட்டாரா?

கணவரின் உதவியும் அவருக்கு பூரணமாக கிடைத்தது. தான் வசிக்கும்  வீட்டையே அலுவலகமாக மாற்றினார். கணவரும் லேசுப்பட்டவர்  அல்ல... நீதிமன்றம் வரை செல்வாக்கு மிக்கவர். நீதிமன்றம் நியமிக்கும் பாதுகாவலராகவும்,  பென்ஷன் மற்றும் கிளைம் வாங்கிக்  கொடுக்கும் நபராகவும் கணவர் இருந்ததால், அவரின் தொடர்பால் இவரும் நீதிமன்றத்துக்கு சென்று வந்தார். தான் படித்த சட்டத்தை  பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் பெல்வாவுக்கு அமைந்தது. வந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்தினார்.  வெகு விரைவாக  நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவும் செய்ய அனுமதிக்கப்பட்டார். அடுத்து, இளவர்களுக்கு நீதிமன்றப் பாதுகாவலராகவும்  நியமிக்கப்பட்டார்.   
          
சட்டம் என்பது ஆண்கள் விளையாடும் விளையாட்டு. ஆடுபவர் - எதிராளி என இரண்டு பக்கமும் அவர்கள் மட்டும்தான்  விளையாடுவார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தாலும், தோல்வியே கிடைத்தாலும் மோதிப் பார்த்து விடுவோம் என்று  நினைத்தார் போலும்... அறைக்கு வெளியே 200 காவலர்கள் குவிந்திருக்க, ஆண்கள் கூட்டத்தினுள் நீதிமன்றத்துக்குள் பெண் சிறுத்தையாக  இவர் போகும்போது அந்த நேரத்தில் அவருக்கு கிடைத்த மரியாதையை விவரிக்கவா வேண்டும்!

பென்ஷன், மைனர் கிளைம் என  சின்னச் சின்னதாக ஆரம்பித்து தனி வழக்கறிஞராக முழுமை பெற்றுவிட்டார். யாருடைய உதவியும்  இல்லாமல் தனியாகவே வழக்குகளை நடத்தும் அளவுக்கு முன்னேறினார். கூலித் தொழிலாளிகள், பெயின்டர்ஸ், சிறு முதலாளிகள் என  ஒவ்வொரு நாளும் கட்சிக்காரர்கள் பெருகத் தொடங்கினர். ஆண் வழக்கறிஞர்களுக்கு ஆண்  என்பதால் கிடைக்கும் கிளையன்ட்ஸ் போன்ற  லாபங்கள் இவருக்குக் குறைவு. அது பற்றி இவர் வருந்தவில்லை. கொலம்பியா நகரம் வரை நெடுந்தூரம்  பிரயாணம் செய்து வாதிட
வேண்டியிருந்தாலும் கூட, பயணத்தை, களைப்பை, நேர விரயத்தைப் பொருட்படுத்தாது, தன்னிடம் வரும் வழக்குகளை ஏற்றுக்கொண்டார். 12 ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிக கோர்ட் நடைமுறைகளை நடத்தியிருக்கிறார். விவாகரத்து வேண்டும் மனைவிகள் இவரை அதிகம் நாடி  வந்தனர். பாகப்பிரிவினை வழக்குகளையும் கையாண்டார்.   நீதிமன்றத்துக்கு உள்ளே இவர் நடத்திய வழக்குகள்,  கோர்ட் டாகுமென்ட்களில்  இடம்பெறாமல் சிலர் சதி செய்தனர்.

கிரிமினல் கேஸை பெண் நடத்துவது சுலபமல்ல... குற்றவாளிகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். இவரோ, ‘எந்த வழக்காக இருந்தாலும்,  பிரச்னையை அலசி வாதாடும் திறமையில்தான் இருக்கிறது’ என்றார். அதனால் பாரபட்சம் காட்டாது, வழக்கறிஞரான பத்தே ஆண்டுகளில் 69  கிரிமினல் வழக்குகளுக்கு மேல் வாதிட்டிருக்கிறார். சில வழக்குகளுக்கு மட்டுமே ஆண் வழக்கறிஞரை பார்ட்னராக வைத்துள்ளார். பல  வழக்குகளில் சோலோ பெர்ஃபார்மர்!

பெல்வா கையாண்ட பெரும்பாலான சட்ட ஆவணங்களில் நோட்டரி பப்ளிக் முத்திரையிட்டு கையெழுத்திட்டவர்  கணவர் பிலாக்வுட்.  நீதித்துறையில் பெல்வா நீடித்திருக்க பாடுபட்டதும் அவரே. எனினும் இன்னொரு பேரதிர்ச்சியும் காத்திருந்தது. பெல்வா நீதித்துறையில்  கொடிகட்டி பறப்பதைக் காணும் அதிர்ஷ்டமில்லாமல், அகால மரணமடைந்தார் பிலாக்வுட். முதல் கணவர், இரண்டாவது கணவர்,  இரண்டாவது மகள் என வரிசையாகச் சொந்தங்களை பறிகொடுத்த பிறகும், துவளாமல் நின்றார் இரும்பு மனுஷியான  பெல்வா. அந்தத்  திடம்தான் அவரை வெற்றியை நோக்கி நடத்திச் சென்றது.

அதனால்தான், கணவர் இறந்த நேரத்தில்  சோர்ந்து மூலையில் முடங்கிவிடாமல், ஐந்தே நாட்களில் அலுவலகத்தின் கதவுகளை திறந்து  சட்டப் பணியை தொடங்கிவிட்டார்.  பெல்வாவின் அசிஸ்டென்ட், ஜூனியர், கிளார்க் என அலுவலகத்திலும் இல்லத்திலும் துணையாக  நின்ற சொந்தம் மகள்  லுரா. குடும்பத்தில் நிகழ்ந்த சோக சம்பவத்தால் மனம் தளர்ந்து, வேலையில் நாட்டம் கொள்ளாமல் பெல்வா  முடங்கிவிட்டபோது, அனைத்து வழக்குகளையும்  சமநிலையில் வைத்திருந்தவர் லுரா. ஆனால், இந்தத் துணையும் அவருக்கு  நீடித்திருக்கவில்லை. லுரா 44 வயதிலேயே அகால மரணமடைந்தார். வாஷிங்டனில் வழக்கறிஞர்கள் நிறைந்த தெருவில் அலுவலகம்  நடத்தினார் பெல்வா. ஆண்கள் மட்டுமே பயன்படுத்துவது என்றிருந்த 3 சக்கர வாகனத்தை,  51 வயதான அவர் ஓட்டினார். அதில்தான்  நீதிமன்றம் சென்று வந்தார்.

கொலம்பியா நீதிமன்றத்தில் வாதாட முடிந்த அவரால், மேரிலேண்ட் நீதிமன்றத்திலோ, ஃபெடரல் நீதிமன்றத்திலோ நுழைய முடியவில்லை.  5 வருடங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால், 1879ல் அமெரிக்க உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கூடத்தில் உறுப்பினராக பதிவு செய்ய  அனுமதிக்கப்பட்டார். அப்போதும் வாதாட அனுமதி மறுக்கப்பட்டது. ‘பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாட தனிச் சட்டம் கொண்டு  வரப்பட்ட பிறகே அனுமதிக்க முடியும்’ என்றனர். ‘எனக்கு வாதிட எல்லா தகுதியும் இருக்கும்போது, அதை சட்டம் கொண்டுவந்து ஏன்  மெய்பிக்க வேண்டும்’ என்றார் பெல்வா. வாஷிங்டன் வழக்கறிஞர் ரிட்லி உதவி இவருக்கு இருந்ததால், பெண்களையும் உச்ச  நீதிமன்றத்தில்வாதிட அனுமதிக்கக்கோரி விண்ணப்பித்தனர்.

பெண்கள் நீதிமன்றத்தில் வாதிட அனுமதி மறுத்த  நீதிபதிகள்... பொதுநல நீதிபதி: கடவுளே ஆணும் பெண்ணும் சமமில்லை என்றுதான்  படைத்திருக்கிறார். இது  ஆகாது. (என்ன ஒரு வில்லத்தனம்!) தலைமை நீதிபதி டேவிட் கார்டி: மேடம் நீங்க இங்க வாங்க... ஆனால்,  நாங்க உங்களை ஆணாகத்தான் பாவிப்போம். மேரிலேண்ட் நீதிமன்ற நீதிபதி: பெண்கள் நீதிமன்றத்தில் தேவை கிடையாது. அவங்களுக்கான  இடம் வீடுதான்... அங்கே கணவனுக்காக காத்திருக்க வேண்டும். சமைக்கணும்... குழந்தைகளை வளர்க்கணும்... படுக்கையை தயார் செய்ய  வேண்டும்... மின்விசிறியை சுத்தமாக துடைக்கணும்... மரப்பலகையிலிருந்து தூசு தட்டணும்...  ஒருவழியாக இந்த வாதத்துக்கு முடிவு கட்ட  - பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் நுழைய சட்டம் வந்தது. இப்படியாக, 1880ல் யுனைடெட் ஸ்டேட்ஸ் உச்ச நீதிமன்றத்தில் வாதிட சென்ற  முதல் பெண் வழக்கறிஞர் ஆனார் பெல்வா லாக்வுட்!

உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட முதல் பெண்  வழக்கறிஞர்... கைசர் எதிர்  ஸ்டிக்னி என்ற வழக்கே பெல்வாவுக்கு உச்ச நீதிமன்றத்தில்  நுழையும் வாய்ப்பை அளித்தது. இதற்கு  5 ஆண்டுகளுக்கு முன்பாக கரோலின் கைசர் என்ற  பெண்ணுக்கு வழக்கறிஞராக இருந்தார்  பெல்வா. கீழ் நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பு சாதகமாக இல்லாததால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கரோலின் கைசர்.  முன்பும் அந்த வழக்குக்கு வழக்கறிஞர் பெல்வாதான். அதனால், அதே வழக்கு உச்சநீதிமன்றம் வரும்போது பெல்வாவும்  வரவேண்டியதாயிற்று. அதனால் தடைகளை தகர்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு நீதிமன்றம் தள்ளப்பட்டது. பெல்வா தனது வாதத்தை 20  நிமிடங்கள் நடத்தினார்.

செரோக்கி பழங்குடி யினருக்கு சேர வேண்டிய தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்று ஜிம் டெயிலர் என்பவர்  பெல்வாவை நாடினார். பழங்குடியினருக்கு சேரவேண்டிய தொகைக்கு வட்டி வாங்கிக்கொடுக்க பல வருடங்கள் உச்ச நீதிமன்றத்தில்  வாதாடினார் பெல்வா. இறுதியில், அரசாங்கம் 5 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த  வழக்கு அந்தக்  காலகட்டத்தில் பிரபலமாக பேசப்பட்டது. பெல்வா லாக்வுட்டை கௌரவிக்கும் வகையில் அரசாங்கம் அவரது உருவ தபால் தலையை
வெளியிட்டது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலகட்டத்தில், ஒரு கட்சி கொடுத்த ஆதரவில், பெல்வா குடியரசுத்தலைவர் பதவிக்கு  வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதே பதவிக்கு இரு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த பெல்வா, 86வது வயதில் காலமானார்.  வெள்ளை மாளிகையை பெண்கள் அலங்கரிக்க வேண்டும் என்பதுதான் அவரது கடைசி ஆசையாக இருந்தது. அமெரிக்காவின் சிறந்த  பெண்கள், அமெரிக்க வரலாற்றில் இடம்பிடித்தவர்கள், சட்டத்தில் சாதித்தவர்கள் என  இவரது புகழ் எங்கும் மனம் பரப்புகிறது.

"வரிசையாகச் சொந்தங்களை பறிகொடுத்த பிறகும், துவளாமல் நின்றார் இரும்பு  மனுஷியான  பெல்வா. அந்தத் திடம்தான் அவரை
வெற்றியை நோக்கி நடத்திச்  சென்றது."

"வெள்ளை மாளிகையை பெண்கள் அலங்கரிக்க வேண்டும் என்பதுதான் பெல்வாவின் கடைசி ஆசையாக இருந்தது."
(தேவதைகளைச் சந்திப்போம்!)