இண்டக்சன் ஸ்டவ்



ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!

‘வேகம் வேகம் போகும் தூரம் மேஜிக் மேஜிக்’ என்றொரு பாடல் கேட்டேன்... சேரும் இடம், பயண நேரம் எல்லாம் வேகத்தின்  பொறுத்தே அமைகிறது. எல்லாம்  வேகமாக இருக்க வேண்டும் என்று எல்லாவற்றிலும் வேகத்தோடு பயணிக்கும் ஒரு காலகட்டத்தில்தானே  இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! உலகம் நேற்றை விட இன்று அதிவேகமாக பயணிக்க விரும்புகிறது. நாளை இன்னும்  வேகமாக... இந்த வேகம் தேவையா என்றும் யோசிப்போம். இருப்பினும், இந்த வேகமே பல விஷயங்களுக்கு வித்திடுகிறது. பல  செயல்களை செய்து முடிக்க உதவுகிறது. வேகமும் விவேகமும் கொண்டு  நடைபெறும் செயல்களின் முடிவு வெற்றியை மட்டுமே தருகிறது.

அடுத்து அடுத்து... இன்னும் வேகம் என ஆராய்ச்சியாளர்கள் தினம் தினம் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அப்படித்தான் பல புது  கண்டுபிடிப்புகள் உருவாகின... பல புதிய சிந்தனைகள் சாத்தியமாகின... இப்படி சாத்தியமான சிந்தனைகளில் உருவானவை சமயலறைப்  பகுதிகளிலேயே அதிக இடத்தை ஆக்கிரமித்து வருகின்றன... அவற்றில் ஒவ்வொன்றையும் இங்கு நாம் அலசி வருகிறோம். இந்த இதழில்  இண்டக்சன் அடுப்புகள்!



இன்று பேச்சிலர் அறைகள், கேஸ் கனெக்சன் இல்லாத வீடுகள், தற்காலிக கண்காட்சிகள் என பல்வேறு இடங்களில் நீக்கமற நிறைந்து  இருப்பது இண்டக்சன் அடுப்பே. நெருப்பில்லாமல் புகையுமா? புகை மட்டுமல்ல... எல்லாம் பற்றிக் கொள்ளும். எப்படி சாத்தியம் அது?  அதுதான் நவீன அறிவியல் சாத்தியங்கள்! புகைந்து கொண்டிருப்பதை விட எரிந்து விடுவதே மேல் இல்லையா? வாருங்கள் பார்ப்போம்!

ஒரு தட்டு போல இருக்கிறது... சூடு ஆகவே இல்லை... எப்படி இது உணவை கொதிக்க வைக்கிறது? அதுவும் பாத்திரம் அதிகம்  சூடாகாமல்? தொட்டு, தடவிப் பார்த்து குழந்தைப் போல ஆச்சரியப்படுவோம், முதல் முறை இண்டக்சன் அடுப்பை பார்க்கும்போது!
இந்த டெக்னாலஜி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது இல்லை. 1900 காலகட்டத்தில் இருந்தே இருக்கிறது. GM கம்பெனி இதை முதன்முதலாக  சிகாகோ உலகக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. அதை விளக்கும்போது பாத்திரத்துக்கும் அடுப்புக்கும் நடுவில் பேப்பரை வைத்து  உணவு சூடாவதைக் காட்டினார்கள். ஒரு மந்திரக் காட்சி போல இருந்தது அது!

1973ல், வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனம் ‘கூல் டாப் 2’ என்று இதையே மறு அறிமுகம் செய்தார்கள். அந்தக் காலத்திலேயே 1,500 அமெரிக்க  டாலர் விலை. அந்த நிறுவனம் கற்பனையில் கூட நினைத்து இருக்காது... 2015ல் 1,500 இந்திய ரூபாய்க்குக் கூவிக் கூவி இதை விற்கப்  போகிறார்கள் என்று! அடுத்து நாசாவும் தங்கள் விண்வெளித் திட்டத்துக்காக இதை மேம்படுத்தவே, இன்னும் பரவலாக மார்க்கெட்டில்  வெளி வந்தது. இண்டக்சன் ஸ்டவ் தயாரித்து விற்பதில் அமெரிக்காவை விட ஐரோப்பாவே  முன்னணி வகித்தது. இப்போது ஆசியாவில்  மிகப்பரவலாக பரவி வருகிறது. நாமும் விடுவோமா? தோழியின் கைப்பிடித்து இண்டக்சனை அலசி ஆராய புறப்படுவோம்!



*இண்டக்சன் டெக்னாலஜி எப்படி செயல்படுகிறது?

இண்டக்சன் என்றால் தூண்டல் என்று அர்த்தம். ‘மின்காந்தத் தூண்டல் அடுப்பு’ என்று மொழிபெயர்க்கலாம் இந்த ஸ்டவ்வை. சிறுவயதில்  மந்திர மேஜிக் போல உபயோகப்படுத்தும் ஒரு பொருள் காந்தம். காந்தத்தை வைத்துக் கொண்டு விதம் விதமாக விளையாடுவோமே... ஒரு  பொருளை இழுப்பது, தள்ளுவது என்றெல்லாம். வடக்கு, தெற்கு காந்தப்புலம் பற்றியும் விளையாட்டாக அறிந்து கொண்டோம். அது சார்ந்து  நிறைய படித்தும் இருப்போம்... மின் காந்த மோட்டர் என்றெல்லாம். மின்சாரம் மூலம் மின்காந்தம் உருவாகும் விதமும் அறிவோம்.
மின்சாரத்தை  சுற்றி  மின்காந்தப் புலம் (Electromagnetic Field) இருக்கும். அதே நேரம் ஆல்டர்நேடிவ் மின்சாரத்தை சுற்றி, சம நிலையில்   இல்லாத ஏற்ற இறக்கத்துடன் மின்காந்தப் புலம் உருவாகியிருக்கும். அந்தச் சமநிலை இல்லாத மின்காந்தப் புலங்கள் வெப்ப அலைகளை  உருவாக்கி, அதை  தம் மீது வைக்கப்பட்டுள்ள கண்டக்டர் என்கிற ஃபெர்ரோ மேக்னடிக் பொருட்கள் - அதாவது, காந்தப் புலம் பாயும்  பொருட்கள் மூலமாக பாயும். இது ஃபாரடே விதிகளுக்கு உட்பட்டது.

இதன் மூலம் என்ன அறிகிறோம்?

மின்சாரம் மாற்றத்துக்கு உள்ளாகும்போது, அதை சுற்றி உள்ள மின்காந்தப் புலமும் மாற்றத்துக்கு உள்ளாகும். கண்டக்டர் எனப்படும்  ஃபெர்ரோ மேக்னடிக் பொருள்களுக்கும் ஒரு காந்தப் புலம் இருக்கும். இரண்டும் சேரும்போது அதன் வழியாக வெப்ப அலைகள்  கடத்தப்பட்டு, உள்ளே இருக்கும் மூலக்கூறுகள் பெரும் சலனத்துக்கு உட்பட்டு சூடாகிறது. படங்களில் காட்டப்பட்டு இருப்பது போல...  மின்காந்தப் புலம் சலனத்தை கடத்தும்போது, வெப்ப அலைகள் உருவாகின்றன... அதைச் சுற்றியும் மின்காந்தப் புலம் உண்டு... அதனால்  மூலக்கூறுகளில் அதிக சுழற்சி ஏற்பட்டு உராய்ந்து சலனம் உருவாகி பல மடங்கு பெருகிப் பொருள்கள் சூடாகின்றன. கொஞ்சம் தலை  சுற்றும் விஷயம்தான்... இருந்தாலும் படங்களைப் பாருங்கள்...



இப்படி நெருப்பில்லாமல் அடுப்பு இருப்பதால் என்ன நன்மை?

வெறும் காயில் எலெக்ட்ரிக் அடுப்பு இருக்கிறதே என்ற சந்தேகம் வரலாம். இதன் முக்கிய அம்சமே இதன் வேகம்தான்... இரண்டாயிரம்  வாட்ஸ் அடுப்பில் ஒரு நிமிடத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை மிக எளிதாக எவர்சில்வர் பாத்திரத்தில் சூடாக்க முடியும்.  இதே வெப்பத்தை  எலெக்ட்ரிக் அடுப்பு வெளியிட்டாலும் அது சுற்றுச்சூழலுடன் கலப்பதால் அதிக இழப்பும் நேர விரயமும் ஏற்படும். இதில் மிக முக்கிய  சாதகம் வெப்ப இழப்பு ஏற்படுவதில்லை என்பதுதான். அதனால் சமையலறையில் வெந்து வேகத் தேவையில்லை. வெளி வெப்பம்,  அடுப்பின் வெப்பம் இரண்டும் சேரும்போது, வெயில் காலங்களில் நமக்கு அதிக சோர்வு ஏற்படும். இந்த அடுப்பில் அந்தப் பிரச்னை  இல்லை!
* சாதக  அம்சங்கள்...
* சாதாரண அடுப்புகளை விட விரைவானது.
* சுத்தம் செய்ய எளிதானது. கேஸ் அடுப்பில் சுற்றி கறை படிவதைப் போல இதில் படிவதில்லை. ஒரு துணியைக் கொண்டு துடைத்தாலே  அழுக்கு நீங்கி விடும்.
* ஒரு ப்ளக் பாயின்ட் இருந்தால் போதும். எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கேஸ் இணைப்பு, சிலிண்டர், ஆதார் கார்டு,  அடுப்பெரிக்கக் கூட அட்ரஸ் புரூஃப் என்று எந்தப் பிரச்னையும் இல்லை!
* எலெக்ட்ரிக், கேஸ், மைக்ரோவேவ் அவன் என்று ஒப்பிடும்போது இதன் விலை வாங்கக் கூடிய அளவில் உள்ளது.
* சத்தம் வருவதில்லை..பெரும்பாலும் நேரடி நெருப்பு இல்லாததால் சுட்டுக் கொள்ளும் அபாயம் குறைவு.

இப்போது பொய்யான நெருப்பு எரிவது போன்ற வகையில் கூட வந்து விட்டது. அதில் அடுப்பு எரிவது போன்ற மாயத் தோற்றம் வரும்! உடனே இண்டக்சன் அடுப்பை அடித்து பிடித்து வாங்கப் புறப்பட்டாச்சா? அவசரப்பட வேண்டாம்... வேறு பல விஷயங்களையும்  பார்த்து  விடுவோமே... பலர் நவீன வீடுகளில் இண்டக்சன் குக் டாப்ஸ் பொருத்துகின்றனர். முதலில் சிறு அடுப்பு வாங்கிப் பார்த்துவிட்டு அதில்  சமையல் செய்வது வசதியாக இருந்தால் மட்டுமே நான்கு அடுப்பு உள்ள குக் டாப்புக்கு செல்வது நல்லது. குக் டாப் என்றால் நம் வீட்டுக்கு  பொருத்தமாக வாங்க வேண்டும். பெரும்பாலும் அவை உணவகங்களுக்கு ஏற்றதாகவே தயாரிக்கப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் பெரும்பாலும் எவர்சில்வர் பாத்திரங்களே என்பதால், பல பாத்திரங்களை உபயோகிக்க முடியும். இருப்பினும் அலுமினிய  சட்டி, குக்கர், கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள் வைக்க முடியாது. குக்கரில், தோசைக் கல்லில்  இண்டக்சன் அடிப்பகுதி இருப்பது மிக  முக்கியம். அவை மட்டுமே பயன்படும். குக் டாப் வைக்க முடிவு செய்தால் சரியான எலெக்ட்ரிக் பாயின்டுகள் அடுப்பங்கறை கட்டும்  போதே யோசித்து செய்ய வேண்டும். மிக முக்கியமான விஷயம்... இதில் நேரடி நெருப்பு இல்லை. அதனால்  நேரடியாக நெருப்பில்  செய்யும் பல வேலைகள் செய்ய முடியாது. முக்கியமாக புல்கா சுடுவது, அப்பளம் சுடுவது, அலுமினிய சட்டியில் சிம்மில் வைத்து  செய்யப்படும் உணவு வகைகள் செய்ய இயலாது.

அலுமினியம், செம்பு பாத்திரங்களிலும் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு  நாளாகும். இப்போது ப்ரெஸ்டீஜ் இண்டக்சன் பற்றி மக்கள் மனதில் நல்ல எண்ணம் இருக்கிறது. இருப்பினும் புதிய மாடல்கள் தினம் தினம்  இறங்குகின்றன. இந்த குறிப்புகளை மனதில் வைத்துக் கொண்டால் வாங்குவது எளிது.

"இண்டக்சன் ஸ்டவ்வில் வெப்ப இழப்பு ஏற–்படுவதில்லை. அதனால் சமையலறையில் வெந்து வேகத் தேவையில்லை. வெளி வெப்பம்,  அடுப்பின் வெப்பம் இரண்டும் சேரும்போது, வெயில் காலங்களில் நமக்கு அதிக சோர்வு ஏற்படும். இந்த  அடுப்பில் அந்தப் பிரச்னை  இல்லை!"

"இண்டக்சன் ஸ்டவ்வில் நேரடி நெருப்பு இல்லை. அதனால் நேரடியாக நெருப்பில் செய்யும் சமையல் செய்ய முடியாது. முக்கியமாக புல்கா  சுடுவது, அப்பளம் சுடுவது, அலுமினிய சட்டியில் சிம்மில் வைத்து செய்யப்படும் உணவு வகைகள் செய்ய இயலாது."

"மெதுவாக செயல்படும் இண்டக்சன் அடுப்பு உங்கள் பரபர வேகத்துக்கு உதவாது.  உண்மையான ஸ்பீட் குக்கிங் வசதியை அனுபவிக்க  முடியாமலே போகும்... கவனம்!"

சரி, எப்படி வாங்குவது?

* வாட்ஸ்...

முதலில் கவனிக்க வேண்டியது வோல்டேஜ்... அதாவது, 2000 வாட்ஸ் என்று எழுதி இருக்கும். உண்மையில் 900-1350W மட்டுமே இருக்கும்.  அதை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே தெரியும். சமைக்கும் நேரம் பற்றி அறிந்திருந்தாலும் கண்டுபிடிக்கலாம். அதனால், அது பற்றி நன்கு  விசாரித்து சோதித்து வாங்க வேண்டும். மெதுவாகச் செயல்படும் இண்டக்சன் அடுப்பு உங்கள் பரபர வேகத்துக்கு உதவாது. உண்மையான ஸ்பீட் குக்கிங் வசதியை அனுபவிக்க முடியாமலே போகும்... கவனம்!

* மேல் தட்டு...

இதன் தரம் பார்த்து வாங்க வேண்டும். இப்போது கண்ணாடியில் கிடைக்கிறது.

* அளவு...

மேல் தட்டு எந்த அளவு? பெரிய பாத்திரங்கள் வைக்க முடியுமா? அல்லது சிறிய அளவு போதுமா? ஆலோசித்து வாங்கிக் கொள்ளலாம்.

* வெப்பநிலை...

வெப்பநிலையை மாற்ற முடியுமா என்று பார்த்துக் கொள்வதும் நல்லது.

* எக்ஸ்ட்ரா...

சைல்ட் லாக், சிறிய பாத்திரம் வைத்தால் கண்டுபிடித்து தெரிவிப்பது, டைமர், குக்கிங் ஆப்ஷன்ஸ் போன்றவற்றையும் ஆலோசிக்கலாம்.