நான் அப்படியே உருகிட்டேன்! ஆனந்தி



`கயல்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆனந்தி, `சண்டிவீரன்’ படத்துக்குப் பிறகு ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்து விட்டார்.  `த்ரிஷா அல்லது நயன்தாரா’, `விசாரணை’ என அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் பிசியாகி கொண்டிருக்கிற ஆனந்தியின் தமிழ் அத்தனை  அழகு!

`` ‘கயல்’ படம் பண்றபோது எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது. அப்புறம்தான் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்டேன்... தப்பில்லாம பேசறேனா...’’  எனக் கேட்பவரின் தமிழை தவறிருந்தாலுமே ரசிக்கலாம்! ``எங்கம்மா பேர் ரஜினி. ஹைதராபாத்ல பிரபல பியூட்டிஷியனா இருந்தவங்க.  அப்பா ராஜேஷ்வரராவ், ஜுவல்லரி பிசினஸ்ல இருக்கார். எனக்கொரு தங்கை இருக்கா. பேர் ரோஷிணி, டென்த் படிக்கிறா. என்னோட நிஜப்  பேர் ரக்‌ஷிதா. சினிமாவுக்காக ஆனந்தியா மாறிட்டேன்.

வீட்ல நாங்க நாலு பேருமே ரொம்ப க்ளோஸ். இன்னிக்கும் அம்மாவுக்கு நாங்க ரெண்டு பேரும் குழந்தைங்கதான். இப்பவும் நாங்க  ரெண்டு பேரும் என்ன கேட்டாலும் உடனே அம்மா வாங்கித் தந்துடுவாங்க. நான் 7வது படிக்கிறபோது ஒரு டான்ஸ் ரியாலிட்டி  ஷோவுக்கான அறிவிப்பு வந்தது. அம்மா, அப்பாவை கட்டாயப்படுத்தி அதில கலந்துக்கிட்டேன்...  செலக்ட் ஆயிட்டேன். டான்ஸ்ல எனக்கு  இருக்கிற ஆர்வத்தைப் பார்த்துட்டு, வீட்டுக்கே டான்ஸ் டீச்சரை வரவழைச்சு அம்மா எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் கத்துக் கொடுத்தாங்க.  அம்மா தன்னோட பியூட்டிஷியன் வேலையில ரொம்ப பிசி. ஆனாலும், எனக்கோ, தங்கைக்கோ எந்தக் குறையும் வைக்கலை. எங்களுக்குப்  படிப்பு சொல்லிக் கொடுக்கிறதுலேருந்து, எங்களுக்குப் பிடிச்சதைப் பார்த்துப் பார்த்து சமைச்சுக் கொடுக்கிறதுனு எல்லாமே அம்மாதான்  செய்வாங்க... நான் நடிகையான பிறகு என்கூட அம்மா ஷூட்டிங் வந்துடறாங்க. அதனால என் தங்கையும் அப்பாவும் அவங்களை ரொம்ப  மிஸ் பண்றாங்க பாவம்...’’ என்கிறவர், தான் நடிகையான கதையும் சொல்கிறார்.

``ஆட்டா ஜூனியர்ஸ்னு ஒரு குட்டீஸ் டான்ஸ் ஷோவுல ஃபைனல்ஸ் வரை வந்தேன். அப்புறம் நான் ஒன்பதாவது படிக்கிறப்ப `சேலஞ்ச்’னு  ஒரு ஷோவுல கலந்துக்கிட்டேன். அதுல என்னைப் பார்த்துட்டுதான் `பஸ் ஸ்டாப்’னு ஒரு தெலுங்குப் படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது.  உண்மையைச் சொல்லணும்னா விருப்பமே இல்லாமத்தான் நான் நடிக்க வந்தேன். நடிகையாயிட்டா என்னோட சுதந்திரம் போயிடும்...  ஸ்கூல், காலேஜை எல்லாம் மிஸ் பண்ணுவேன்னு ரொம்ப ேயாசிச்ேசன்.   `அப்படியெல்லாம் ஆகாது... உனக்கு வந்திருக்கிற வாய்ப்பை  மிஸ் பண்ணாதே’னு அப்பவும் அம்மாதான் எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க.



`கயல்’ படத்துல நடிச்சதும் என் மனசு தலைகீழா மாறிடுச்சு. அந்தப் படத்துக்காக நான் செலவழிச்ச அந்த ஒன்றரை வருஷத்துல சினிமா மேல  எனக்கு அளவுகடந்த காதல் வந்திருச்சு... அந்தக் கதை, அதுல என் கேரக்டர், டைரக்டர் பிரபுசாலமன் எனக்கு கதை சொன்ன விதம்னு  எல்லாம்தான் காரணம். அம்மா மட்டும் அட்வைஸ் பண்ணலைன்னா இன்னிக்கு நான் ஒரு நடிகையா உங்கக்கிட்ட பேசிட்டிருக்க
முடியாது...’’ - கயல்விழியின் பார்வையில் நன்றி தெரிகிறது.

``கயல் படத்துல கமிட் ஆன டைம்ல அம்மாவுக்கு ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாது. அதனால அவங்களால யார்கூடவும் பேசக்கூட  முடியாது. அந்தப் படத்துல எனக்கு எமோஷனல் சீன்ஸ் நிறைய வரும். நான் அழுது எங்கம்மா பார்த்ததே இல்லை. படத்துல நான் அழற  சீன்ஸ் வரும் போது அம்மா எழுந்து போயிடுவாங்க. அவங்களைப் பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கும். படம் ரிலீசானதும் என் தாத்தா,  பாட்டி, எங்கப்பா, என் தங்கைனு எல்லாரும் என் நடிப்பைப் பார்த்துட்டு, குறிப்பா அழற சீன்ஸை பாராட்டினப்ப நானும் அம்மாவும்  ஒருத்தரை ஒருத்தர் ஜாடையா பார்த்துக்கிட்டோம். `என்ன இருந்தாலும் நான் உன் அம்மாவாச்சே... என்னதான் நடிப்புன்னாலும் நீ அழறதை  என்னால எப்படித் தாங்கிக்க முடியும்’னு அம்மா சொன்னப்ப நான் அப்படியே உருகிட்டேன்...’’ - சொல்லும் போதே ஆனந்தியின் கண்கள்  கலங்குகின்றன.

``நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடி அம்மாவை பரபரப்பான ஒரு லேடியா தான்  பார்த்திருக்கேன். நான் பிசியானதும் என்கூட ஷூட்டிங்  வரணும்னு தன் பிசினஸை விட்டுட்டாங்க. இப்ப நான் நடிச்சிட்டிருக்கேன். அம்மா கேரவேனுக்குள்ள சும்மா உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்கிறப்ப கஷ்டமா இருக்கு. அதுக்காக ஒருநாள்கூட என்கிட்ட கோபப்பட்டதில்லை. அதுல எனக்கு ஒரு குற்ற உணர்வு எப்பவும் உண்டு. `கயல்’ படம் பண்ணினபோது அம்மா எனக்கு எந்த அட்வைசும் கொடுக்கலை. கிளாமரா நடிக்கிறதில்லைங்கிறதுல நானே தெளிவாதான்  இருந்தேன். டீசன்ட்டான கேரக்டர் மட்டும்தான் பண்றதுனு வெயிட் பண்ணினேன்.

`சண்டிவீரன்’ல வாய்ப்பு வந்தபோது என் கேரக்டர்  மட்டும்தான் தெரியும். கதை தெரியாது. கிராமத்து சப்ஜெக்ட். எனக்கு மிருகங்கள்னா கொஞ்சம் அலர்ஜி. எங்க வீட்லயேகூட நாய்க்குட்டி  இருக்கு. நான் அதை ரொம்பவெல்லாம் கொஞ்ச மாட்டேன். `சண்டிவீரன்’ல நான் மாட்டைப் பிடிச்சுக்கிட்டு நடந்து போகிற மாதிரி சீன்...  வேற வழியில்லாம ஒருமாதிரி நடிச்சு முடிச்சிட்டேன். அந்த சீனை பார்த்துட்டு அம்மா ரொம்பப் பாராட்டினாங்க. அவங்களுக்குப் பெருமை  தாங்கலை. உடனே எங்கப்பாவுக்கு போன் பண்ணி அதைச் சொன்னாங்க. அம்மாவோட அந்த சந்தோஷத்தைப் பார்க்க எனக்கு ரொம்ப  சந்தோஷமா இருந்தது...’’ - அம்மா பெண்ணான ஆனந்திக்கு இந்த வருட அன்னையர் தினம் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்ததாம்.

``எல்லா நாளும் எங்களுக்காகவே உழைக்கிற அம்மாவுக்கு ஏதாவது செய்யணும்னு நானும் என் தங்கையும் பிளான் பண்ணினோம். மதர்ஸ்  டேவை பெரிசா கொண்டாடறதுனு முடிவெடுத்தோம். எங்கம்மா மட்டுமில்லை, எங்க அத்தைகள், ஃப்ரெண்ட்ஸோட அம்மாக்கள்னு எல்லா  அம்மாக்களையும் கூப்பிட்டு, பெரிய பார்ட்டி கொடுத்தோம். அம்மாவுக்கு அழகான ஒரு ஸாரி வாங்கித் தந்தோம். அன்னிக்கு அம்மா  முகத்துல அவ்ளோ சந்தோஷம். அம்மாவையும் அப்பாவையும் வேர்ல்ட் டூர் அனுப்பி வைக்கணும்... அதுவும் என் சம்பளத்துல... அதுதான்  என்னோட பெரிய லட்சியம். சீக்கிரமே செஞ்சிடுவேன்ங்கிற நம்பிக்கை இருக்கு...’’ - ரகசிய ஆசை சொல்கிறார் ரக்‌ஷிதா என்கிற ஆனந்தி.

ஸ்மார்ட்டி... சாஃப்ட்டி... ஸ்வீட்டி!

ஆனந்தியின் அம்மா ரஜினி

``ரக்‌ஷிதாவை நாங்க ‘ஸ்மார்ட்டி’னுதான் கூப்பிடுவோம். நிஜமாவே அவ அவ்வளவு ஸ்மார்ட்! ரொம்ப சாஃப்ட்டான கேரக்டர். பொறுமை அதிகம். அம்மா, அப்பா, தங்கை, தாத்தா, பாட்டினு எல்லார்கிட்டயும் ரொம்ப பாசமா இருப்பா. ஃபேஷன் டிசைனிங் படிக்கணும்னு  ஆசைப்பட்டு, அந்த படிப்புல சேர்ந்தா. நடிப்பு, படிப்புனு ரெண்டையும் அவளால பேலன்ஸ் பண்ண முடியலைனு அதை விட்டுட்டா.  இப்ப செகண்ட் இயர் பி.பி.எம். கரஸ்பாண்டென்ஸ்ல பண்ணிட்டிருக்கா.

எனக்கு ஃபேஷன் டிசைனிங் பிடிக்கும். அவங்கப்பா ஜுவல்லரி டிசைனர். `அம்மாவுக்காக ஃபேஷன் டிசைனிங்கும் அப்பாவுக்காக ஜுவல்லரி  டிசைனிங்கும் பண்ணப் போறேன். எதிர்காலத்துல உங்க ரெண்டு பேருக்கும் ெஹல்ப் பண்ணப் போறேன்’னு அடிக்கடி சொல்லிட்டிருக்கா.  ஆனந்தி நல்ல நடிகைனு பேர் வாங்கிட்டா. அவளுக்கு போதும்னு தோணற வரைக்கும் நடிக்கட்டும். அப்புறம் அவ விருப்பப்படி எந்தத்  துறையை வேணாலும் தேர்ந்தெடுத்துக்கட்டும். அவ என்னவா இருந்தாலும் சந்தோஷமா இருக்கணும்கிறதுதான் ஒரு அம்மாவா என்னோட  ஆசை...’’

- ஆர்.வைதேகி