சமத்துவத்தை நோக்கிய கரடுமுரடான பாதை!



ஆண் - பெண் பாகுபாடுகளுக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் காவல் துறையும் விதிவிலக்கல்ல என அதிர  வைத்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ‘காவல்துறையில் மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்ற மத்திய அரசு  உத்தரவு நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த ஆய்வை நடத்தி இருக்கின்றனர். 23 லட்சம்  காவல்துறையைக் கொண்ட இந்தியாவில் வெறும் 6.11 சதவிகிதம் பெண் போலீசாரே உள்ளனர்.

12 சதவிகிதம் மகளிர் காவல்துறையினரைக் கொண்ட அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானில் 0.9 சதவிகிதம் பெண்களே உள்ளனர்.  இது மாலத்தீவில் 7.4 சதவிகிதமாகவும், வங்காள தேசத்தில் 4.6 சதவிகிதமாகவும் உள்ளது. இந்தியாவில் அதிக பெண் போலீசாரைக் கொண்ட  மாநிலமாக தமிழ்நாடு பெருமை பெற்றிருக்கிறது. ஆனாலும், அது 12 சதவிகிதம் மட்டுமே என்பது வருத்தத்துக்கு உரியது. 0.93 என்ற  அளவில் மிகவும் குறைவான பெண் காவலர்களைக் கொண்ட மாநிலமாக அஸ்ஸாம் பின் தங்கியுள்ளது. இதிலும் இன்னொரு சிக்கலாக,  என்னதான் காவல்துறையில் பெண்கள் அதிகம் பணிபுரியத் தொடங்கினாலும், உயர் பதவிகளை வகிப்பவர்களின் எண்ணிக்கை மிகமிகக்  குறைவானதே. 4 ஆயிரம் ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 928 பெண் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். 80 சதவிகிதம் பெண் போலீசார்  கான்ஸ்டபிள்களாகவே பணிபுரிகின்றனர்.



அதாவது, 7.8 சதவிகிதத்தினர் கான்ஸ்டபிள்களாகவும், 3.35 சதவிகிதம் பேர் அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர்களாகவும், வெறும் 0.02  சதவிகிதத்தினரே ஏ.டி.ஜி.பி., டி.ஜி.பி போன்ற உயர் அதிகாரிகளாகவும் பதவி வகிக்கின்றனர். ‘‘காவல்துறையில் தேர்வாணையத்திலோ,  நேர்முகத் தேர்வு அதிகாரிகளாகவோ பெண்கள் பெரும்பாலும் இல்லை. கிளார்க் போன்ற சாதாரண அலுவலக வேலைகளிலே பெண்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புலனாய்வு போன்ற வேலைகளில் பெண் காவல்துறையினர் இல்லை. 5 மாநிலங்களில் ஆண் - பெண் பாகுபாடு
கடுமையாக நிலவுவதாகவே பல பெண் காவலர்கள் கூறியிருக்கின்றனர். காவல்துறை பணிகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆண்களே  சிறப்பாக செய்ய முடியும் என்றே பல ஆண் காவலர்கள் கருதுகிறார்கள்’’ என்கிறார் ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான தேவிகா  பிரசாத்.

பெண் காவலர்களின் விகிதம் குறைவு என்பதுடன், பாலியல் ரீதியாகவும் பெண் காவலர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பதவி உயர்வு  போன்ற காரணங்களுக்காக ஆண் அதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறது இந்த  ஆய்வு. ‘‘பணியிடங்களில் கொடுக்கப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் இருக்கிறது என்பதை காவலர்களே உணர்வதில்லை.
எப்படி புகார் அளிப்பது என்பதுகூட சிலருக்குத் தெரிவதில்லை என்பது வருத்தத்துக்குரியது’’ என்கிறார் தேவிகா பிரசாத்.

"காவல்துறையில் வெறும் 0.02 சதவிகித பெண்களே உயர் அதிகாரிகளாக பதவி வகிக்கின்றனர்."

- எஸ்.கே.ஞானதேசிகன்