சரித்திரத் தோழிகள்

வரலாற்று நெடுகிலும் பெண்களின் அறிவும் திறமையும் மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. அவற்றில் மிகச்சில பெண்களே தடைகளை மீறி வெளியுலகத்துக்குத் தெரிந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பண்டைய காலம் தொட்டே அறிவுத் தளங்களில் பெண்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அவ்வை என்ற மூதாட்டியின் படைப்புகளில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
அழியாத அவ்வை திருமணம் செய்துகொள்ளாமல், புலமை பெற்ற பெண்களை ‘அவ்வை’ என்று அழைக்கிறார்கள். நாம் ‘அவ்வை’ என்று சொல்பவர் ஒரே ஒரு பெண் அல்ல... பல காலகட்டங்களில் வாழ்ந்த பெண்களின் படைப்புகளை, ஒரே பெயரிட்டு அழைத்து வருகிறோம்.
நமக்கு எல்லாம் நன்கு அறிமுகமான அவ்வை, ‘ஆத்திச்சூடி’, ‘கொன்றை வேந்தன்’, ‘மூதுரை’, ‘நல்வழி நாற்பது’ போன்ற அழியா படைப்புகளைக் கொடுத்தவர். சிறுவர்களையும் பெரியவர்களையும் அசரவைக்கக்கூடிய படைப்பு இந்த அவ்வையுடையது. இவர் சங்க காலத்தில் வாழ்ந்தவர். இவருடைய படைப்புகள் மிகவும் எளிமையாகவும் வலிமையாகவும் இருப்பது சிறப்பு. ஆத்திச்சூடிக்கும் கொன்றை வேந்தனுக்கும் விளக்கவுரையே தேவை இல்லை... அவ்வளவு எளிமையானது.
பெண்கள் அடக்கி வைக்கப்பட்ட காலகட்டத்தில், ஆணாதிக்க சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, தன் படைப்புகளை வெளிப்படுத்திய அவ்வை இன்றைய பெண்களுக்கு உதாரண மனுஷி. எளிமை, நேர்மை, நாணயம், பண்பு போன்றவற்றை போதித்த அவ்வை, தானும் அப்படியே வாழ்ந்தவர். மன்னர்களுடனும் அறிவில் சிறந்த சான்றோர்களுடனும் நட்பு கொண்டவர், விவாதம் செய்தவர். பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டவர். காலம் கடந்தும் தமிழ்ப் பெண்களின் பெருமையை உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார் அவ்வை.
|