ரியோவில் தங்கம் சாய்னா உற்சாகம்!





சாதனை நாயகி சாய்னாவின் அலமாரியை அலங்கரிப்பதில் லண்டன் ஒலிம்பிக் பதக்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. வெண்கலம்தான் என்றாலும் ஒலிம்பிக் பதக்கத்துக்கு ஈடு இணை இருக்க முடியுமா, என்ன? அவரது ஹைதராபாத் இல்லத்தில் கரை புரள்கிறது மகிழ்ச்சி வெள்ளம்!

8 வயது வரை கராத்தேயில் கவனம் செலுத்தி பிரவுன் பெல்ட் வாங்கியவர்தான் சாய்னா. ‘வயிற்றின் மீது பலகையை வைத்து மோட்டார் பைக்கை ஏற்றப் போகிறோம்’ என்பதைக் கேட்டு பயந்துபோய் பேட்மின்டன் பக்கம் ஒதுங்கியவர், இன்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

பாராட்டு விழாக்கள், ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு என்று பரபரத்துக் கொண்டிருக்கிறார். ‘‘வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில், எதிர்த்து விளையாடிய சீன வீராங்கனை காய மடைந்து வெளியேறியதால்தான் சாய்னாவுக்கு பதக்கம் கிடைத்தது என்று அந்த சாதனையை மட்டம் தட்ட முடியாது. அரை இறுதி வரை முன்னேறியதும், முன்னணி வீராங்கனைகளுக்கு ஈடு கொடுத்ததும் மிகப்பெரிய விஷயம். கடுமையான பயிற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை - இந்த மூன்றுமே அவரது வெற்றிக்குக் காரணம். இதை விடப் பெரிய வெற்றிகளும் பதக்கங்களும் அவருக்காகக் காத்திருக்கின்றன’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பயிற்சியாளர் கோபிசந்த்.

ஆந்திர பேட்மின்டன் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில், சாய்னாவிடம் பிஎம்டபுள்யூ சொகுசு கார் சாவியைக் கொடுத்து வாழ்த்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ‘‘சாய்னா நிச்சயம் மகிழ்ச்சியாக இருப்பார் என நம்புகிறேன். ஆனால், அவர் திருப்தியாக இல்லை என்பது மட்டும் உறுதி. நாங்களும் கூட வெண்கலப் பதக்கத்தால் திருப்தியடையவில்லை. உங்களால் இதை விட அதிகமாக சாதிக்க முடியும் என்பதை அறிவோம். அதைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். பதக்கம் வென்ற பிறகும் கூட நீங்கள் காட்டிய அந்தப் பணிவு என்னை வெகுவாகக் கவர்ந்தது. உங்கள் வெற்றியால் நாட்டுக்கே பெருமை’’ என்று புகழ்ந்து தள்ள வெட்கத்துடன் புன்னகைத்தார் சாய்னா.

‘‘சச்சின் சாரை நேரில் சந்தித்ததும் அவரிடம் இருந்து பிஎம்டபுள்யூ கார் சாவியை பெற்றதும் அற்புதமான அனுபவம். எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. ‘தொடர்ந்து கடுமையாகப் பயிற்சி செய்யுங்கள். கடின உழைப்புக்கு பலன் நிச்சயம்’ என்று அவர் கூறியதை மறக்கவே முடியாது. சீன வீராங்கனைகளை எதிர்த்து விளையாடுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. அவர்களுக்கு எல்லா வகையிலும் ஈடு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரை இறுதியில் பதற்றத்துடன் விளையாடியதால் அதிகத் தவறுகள் செய்துவிட்டேன். இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன். ரியோ டி ஜெனிரோவில் நடக்கவுள்ள அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்ல முயற்சிப்பேன். அதற்காகக் கடுமையாக உழைப்பேன்’’ என்று சொல்லும் சாய்னாவின் கண்களில் தெறித்த உறுதி, நிச்சயம் அவர் சாதிப்பார் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. செப்டம்பரில் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் சீரீஸ் தொடரில் சீன வீராங்கனைகளுக்கு பதிலடி கொடுத்து பழி தீர்ப்பார் என எதிர்பார்க்கலாம்!