வாழ்வில் ஒரே ஒருமுறை பூக்கும் திருநாள் திருமண விழா! பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்வது நம் பாரம்பரியப் பழக்கம். மணக்கோலம், பெண்ணுக்கு வாழ்வின் இறுதி வரை மனதில் பதிந்து போகும் ஒரு ஓவியம்!
கல்யாண சீசன் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. மணப்பெண்ணுக்கு ஏற்ற புடவை எது? புடவைக்குப் பொருத்தமான வளையல், ஒட்டியாணம், நெக்லஸ், கம்மல், வங்கி... என்னென்ன? ரிசப்ஷனில் அணிந்து கொள்ள ஏற்ற உடை எது? எது இப்போது ஃபேஷன்? தேடித் தேடி ஓடுகிறவர்களுக்கு வழிகாட்ட இந்த பிரைடல் கலெக்ஷன்!
முகூர்த்தத்துக்கு...

புடவை: பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டு. தங்க ஜரிகை, அதற்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் புடவை முழுக்க பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்ட பாரம்பரிய வேலைப்பாடு, முந்தானையில் நுட்பமாகச் செய்யப்பட்ட அழகான டிசைன்கள் பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும். மணப்பெண்ணுக்கு ராஜ களை தரும் புடவை இது! மாநிறப் பெண்களுக்கு எடுப்பான லுக் தரும். விலை ரூ.16,895.
நகைகள்: இந்தப் புடவையின் நிறத்துக்குப் பொருத்தமானதும், ஹோம்லி லுக் தருவதும் டெம்பிள் ஜுவல்லரி தங்க நகைகள்தான். செட்டிநாட்டு ஸ்பெஷல் நகைகளான இதன் சிறப்பு லட்சுமி உருவம். நெக்லஸ், ஆரம், தோடு, வங்கி எதுவானாலும் அதில் லட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். கூடவே கற்கள் பதிக்கப்பட்ட டிரெடிஷனல் வேலைப்பாடு... பிறகென்ன... மணப்பெண் லட்சுமிகரம்தான்!

சுட்டி: நெற்றியில் திலகத்துக்கு மேல் திலகம் வைத்தது போல அமர்க்களமாகத் தொங்கும் சுட்டி. லட்சுமி உருவத்தின் கீழ் தொங்கும் மெல்லிய வண்ண மணி வேலைப்பாடுகள் முகத்துக்கு பிரத்யேக அழகைத் தந்துவிடும். எடை 12 கிராம்.
சோக்கர் நெக்லஸ்: மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சோக்கர் நெக்லஸ், கழுத்துக்கே தனி கம்பீரம் தரும். லட்சுமியின் உருவம் பொதித்த காசுகள், மேற்புறத்தில் மிகச் சிறிய சிவப்புக் கற்கள், மத்தியில் தாமரைப்பூவில் வீற்றிருக்கும் லட்சுமியின் பெரிய வடிவம், கீழ்புறத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் தொங்கும் சிறு மணிகள்... பார்க்கப் பார்க்கக் கொள்ளை அழகு! எடை 80 கிராம்.
ஆரம்: இந்த மாங்காய் மாலை ஆரத்தை இருபக்கமும் பயன்படுத்தலாம். பளிச்சென இருக்கும் பாரம்பரிய டிசைன். மேற்புறத்தில் வரிசையாக மின்னும் பச்சைக் கற்கள் அபார அழகு! எடை 60 கிராம்.
நீளமான ஆரம்: சின்னஞ்சிறு தங்க மணிகளைக் கோர்த்து, ஐந்து சரங்களாக்கி, ஒன்றிணைக்கப்பட்ட மாலை போன்ற ஆரம். இதை மட்டும் அணிந்தால் போதும், கிராண்ட் லுக் கிடைத்துவிடும். எடை 160 கிராம்.
காதணி: காதை ஒட்டி இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட லட்சுமி உருவக் கம்மல். தொங்கும் குடை ஜிமிக்கியின் கீழ்ப்புறத்தில் வண்ண மணிகள். இந்தக் காதணி... கலர் கண்காட்சி! ஜோடியின் எடை 30 கிராம்.
வங்கி: லட்சுமி உருவம்... இருபுறமும் வளைந்த மயில் உருவம்... சுற்றிலும் பதிக்கப்பட்ட சிவப்பு, பச்சை நிற சிறு கற்கள்... அழகுக்கு அழகு சேர்க்க கீழ்ப்புறம் தொங்கும் வெள்ளி மணிகள்... தொட்டுப் பார்க்கத் தூண்டும் டிரெடிஷனல் வங்கி! ஒன்றின் எடை 86 கிராம்.
ஒட்டியாணம்: கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்ட பாரம்பரிய வேலைப்பாடு. கண்கவரும் மயில், லட்சுமி உருவங்கள்... சுருக்கமாக, ‘இடுப்பில் அணியும் கிரீடம்!’ எடை 340 கிராம்.
வளையல்கள்: வரிசையாக லட்சுமி உருவங்கள்... இடையிடையே பதிக்கப்பட்ட சற்றே பெரிய சிவப்பு நிற கற்கள்... நிச்சயமாகக் கல்யாணப் பெண்கள் கொண்டாடும் வளையல்! ஒன்றின் எடை 35 கிராம். இத்துடன் டிசைனர் வளையல்களையும் சேர்த்து போட்டுக் கொள்ளலாம்.
மோதிரங்கள்: கட்டிய புடவைக்கும் மற்ற நகைகளுக்கும் சிவப்பு கற்கள் பதித்த மோதிரங்கள் கச்சிதமான பொருத்தம்!
டிசைனர் புடவைகளுக்கு ஒன்றிரண்டு ஆபரணம் அணிந்தால் போதும்!
புடவை: சிவப்பு, பச்சை, மெரூன் காம்பினேஷனில் செய்யப்பட்ட கலர்ஃபுல் பட்டுப்புடவை. ஜரிகை வேலைப்பாடுகள் இதன் சிறப்பு. மல்ட்டி டிசைனர் பார்டர் எடுப்பான தோற்றத்தைத் தரும். மென்மையான, உடலை உறுத்தாத பட்டுப்புடவை முகூர்த்தத்துக்கு ஏற்றது. இதைக் கட்டிக்கொள்ளும் மணப்பெண் மகாராணியேதான்! விலை ரூ.12,395.
நகைகள்: இந்தப் புடவையின் வண்ணத்துக்குப் பொருந்திப் போவது டிரெடிஷனல் தங்க செட் நகைகள்தான். ரூபி எமரால்டு கற்கள் பதிக்கப்பட்ட நகைகளையும் போட்டுக் கொள்ளலாம்.
சுட்டி: இலை போல வடிவமைக்கப்பட்ட கொல்கத்தா டிசைன் வேலைப்பாடு. அவற்றில் தொங்கும் சிறு தங்க மணிகள். சுற்றி வந்து பார்க்கத் தூண்டும் சுட்டி! எடை 12 கிராம்.
சோக்கர் நெக்லஸ்: காசுகள், வண்ணக் கற்கள், சிறு மணிகளால் ஆன சோக்கர் நெக்லஸ். இதன் செய்நேர்த்தி, ஹோம்லி லுக்குக்கு உத்தரவாதம்! எடை 50 கிராம்.
ஆரம்: சாவித்திரி டிசைன் வொர்க்கால் ஆன ஆரம். சிம்பிள் லுக் சிறப்பு! எடை 36 கிராம்.
நீளமான ஆரம்: மாங்காய் வடிவ டாலரில் லட்சுமி உருவம்... சிவப்புக்கல் பதிக்கப்பட்ட நீளமான காசுமாலை... அமர்க்கள அழகு! எடை 50 கிராம்.
காதணி: ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட டிரெடிஷனல் லுக் தோடு ஜிமிக்கி ரகம். அசத்தல் அழகு! எடை 36 கிராம்.
வங்கி: ரூபி எமரால்டு கற்கள் பதிக்கப்பட்ட அட்டாச்டு டைப் வங்கி! எளிமையான தோற்றம் இளவரசியாகக் காட்டும்! ஒன்றின் எடை 36 கிராம்.
வளையல்கள்: கார்னரில் அணிந்துள்ள வரிக்காய் வளையல்கள் அசத்தலோ அசத்தல்! ஒன்றின் எடை 16 கிராம். நடுவில் நமக்குப் பிடித்த தங்க வளையல்களை போட்டுக் கொள்ளலாம்.
மோதிரங்கள்: கற்கள் பதிக்கப்படாத தங்க மோதிரங்கள் இந்த செட்டுக்குக் கலக்கல் அழகு!
கல்யாணத்துக்கு மட்டுமில்லாமல் மற்ற விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் நகைகள் இவை. துல்லிய வேலைப்பாடுகள் நிறைந்த இந்த நகைகள் பெண்களின் ஃபேவரிட் சாய்ஸ்.
புடவை: ஜெக்கார்டு ஜரிகை வேலைப்பாடு களால் ஆன புடவை இது! முந்தானையில் மட்டுமின்றி புடவை முழுக்க நுணுக்கமான ஜரிகை வேலைப்பாடு. வளைந்து நெளிந்து போகும் இலை வடிவங்கள் தனி அழகு! இதை அணிந்தால் ரிச் லுக்தான் ரிசல்ட்! விலை ரூ.14,995.
நகைகள்: ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளுக்கு, கான்ட்ராஸ்ட் காம்பினேஷனில் நகைகள் போடுவதுதான் அழகாக இருக்கும். பெயர் பீக்காக் செட்! எனாமல் கோட்டிங் செய்யப்பட்ட தங்க நகைகள் எவர்க்ரீன் சாய்ஸ்!
சுட்டி: தங்க மணிகள் சிணுங்கும் கொல்கத்தா வொர்க் சுட்டி, கண்ணுக்கு விருந்து! எடை 16 கிராம்.
சோக்கர் நெக்லஸ்: சிவப்பு, பச்சை, ஊதா வண்ண காம்பினேஷனில் எனாமல் கோட்டிங் செய்யப்பட்ட சோக்கர் நெக்லஸ். கிராண்ட் லுக்குக்கு கியாரன்டி! எடை 130 கிராம்.
ஆரம்: பூ வடிவத்தில் கலை நுணுக்கத்தோடு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆரம். கச்சிதமான அழகு! எடை 80 கிராம்.
நீளமான ஆரம்: பெரிய சைஸ் டாலர், அதில் நுட்பமான வேலைப்பாடு, அழகான டிசைன்கள். இடுப்பு வரை தொங்கும் ஆரம் இளமைக்கு அழகு! எடை ரூ.160 கிராம்.
காதணி: மயில் உருவம் பதித்த கொல்கத்தா டிசைனர் காதணி. தொங்கும் மணிகள், டாலடிக்கும் கற்கள். பாரம்பரியம் குறையாத புதுமை! எடை 32 கிராம்.
வங்கி: மயில் உருவம் தாங்கிய ஃப்ளெக்ஸிபிள் டைப் வங்கி. தொங்கும் மணிகள், மனம் மயக்கும் வடிவமைப்பு. எடை 36 கிராம்.
வளையல்கள்: எனாமல் பதிக்கப்பட்ட கொல்கத்தா டைப் ஸ்குரூ கடா வளையல் இது! ஒன்றை அணிந்தாலே கை நிரம்பியது போலாகிவிடும். நிறைவைத் தரும் அழகு! ஒன்றின் எடை 158 கிராம்.
ஒட்டியாணம்: மயில் உருவங்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட பெல்ட் டைப் ஒட்டியாணம் இது! அழகு சேர்க்க மணிகளும், வண்ணக் கற்களும்... என்ன அழகு எத்தனை அழகு! எடை 140 கிராம்.
வளையல்கள்: இந்த காம்பினேஷனுக்கு மற்றொரு கையில் பீக்காக் வளையல்களுடன் தங்க அல்லது ஃபேன்ஸி வளையல்கள் அணிந்து கொள்ளலாம். குலுங்கும் வளையல் குறையாத அழகு!
மோதிரங்கள்: இந்த காம்பினேஷனில் எனாமல் கோட்டிங் மோதிரங்களும் கிடைக்கின்றன. பிடித்த டிசைனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இஸ்லாமிய பெண்களின் திருமணத்துக்குப் பொருத்தமான காம்பினேஷன் இது! கொஞ்சம் ஃபேன்ஸியாக நகை அணிய விரும்பும் நம்ம ஊரு பெண்களுக்கும் பெர்ஃபெக்ட் மேட்ச்!
மாடல்: குஷ்பு
உடைகள்: கலாநிகேதன், தி.நகர்
நகைகள்: மலபார் கோல்டு, தி.நகர்- எஸ்.பி.வளர்மதி
படங்கள்: வேணு, லோகு.