ஆணாதிக்கம் தொடங்கும் இடங்களில் தொழில்தான் முதன்மையானது. ‘அறிவும் வலுவும் அவசியப்படும் தொழில்களுக்கு பெண்கள்பொருந்தமாட்டார்கள்’ என்ற எண்ணம் நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. அந்த மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்து தன் கலைநயத்தால் விழிகளை விரிய வைக்கிறார் ஆனந்தி!
உலகத்தை வியக்கச் செய்யும் இந்தியக் கலைநுட்பங்களில் ஐம்பொன் சிலை தயாரிப்பும் ஒன்று. கும்பகோணத்தை ஒட்டியுள்ள சுவாமிமலைதான் ஐம்பொன் சிலைகளின் உற்பத்திக்கூடம். நூற்றுக்கும் அதிக பாரம்பரிய கலைஞர்கள் சிலை செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக, ஐம்பொன் சிலை தயாரிப்பு ஆண் மேலாதிக்கம் நிறைந்த தொழில். பெண்களுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. காரணம், பணியின் கடுமை... அதிவெப்பத்தில் செய்ய வேண்டிய பணி. அதோடு, நுணுக்கமான தொழில்நுட்பமும் கைவர வேண்டும். மேலும், பரம்பரையாக வந்த கலைஞர்களே ஐம்பொன்சிலை வார்க்கும் பணியில் சிறக்க முடியும்.
இந்தச் சரித்திரத்தை மாற்றியிருக்கிறார் ஆனந்தி. சுவாமிமலை வடம் போக்கித் தெருவில் வசிக்கும் ஆனந்தி, அத்தனை பணிகளையும் அட்சர சுத்தமாகச் செய்து வியக்க வைக்கிறார்.
வியர்வை உடல் நனைக்க, கருடாழ்வார் சிலைக்கு நகாசு செய்து கொண்டிருந்த ஆனந்தியிடம் பேசினால் வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்கிறது.
‘‘ஐம்பொன் சிலை செய்றதுல பெயர் பெற்ற குடும்பங்கள்லாம் சுவாமிமலையில இருக்கு. வீட்டுக்காரர் சின்ன வயசுலேயே அவங்ககிட்ட வேலைக்குப் போயிட்டார். ஓரளவு தொழில் கைகூடின உடனே ஈரோட்டுல உள்ள சிலை கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. இவரு ஒருத்தர் வருமானத்தை மட்டும் வச்சு அங்கே வாழ்க்கையை ஓட்ட முடியலே...
வேலையில ஆம்பள வேலை, பொம்பள வேலைன்னு பாக்குறதில எனக்கு நம்பிக்கை இல்லை. உடல் வலுதான் வித்தியாசமே தவிர, பெண்களுக்கு அறிவுல எந்தக் குறைபாடும் இல்லை. இருக்கிற வேலையிலயே கஷ்டமான வேலை வயக்காட்டு வேலைதான். அறுத்த நெல்லுக்கட்டை தூக்கி தலையில வச்சுக்கிட்டு நிமிர்ந்து நடக்கிற பெண்களுக்கு எல்லா வேலையுமே தூசுதான். ‘பீரோ கம்பெனியில பெயின்ட் அடிக்கிற வேலைக்கு ஆள் தேவை’ன்னு சொன்னாங்க. போனேன்... இதெல்லாம் ஆம்பளைங்க செய்ற வேலைம்மா. உனக்கு சரியா வராதுன்னாங்க. இல்லங்கய்யா... என்னால செய்யமுடியும்னு சொல்லி நாலைஞ்சு மாசத்துலயே முழுசா தொழிலைக் கத்துக்கிட்டேன். 50 ரூவா கூலிக்குப் போன எனக்கு நாலே மாசத்துல 200 ரூபாய் கூலி கிடைச்சுச்சு.

நாலைஞ்சு வருஷம் நல்லா ஓடுச்சு. வீட்டுக்காரருக்கு ‘சொந்த ஊருக்கு வரணும்’னு ஆசை. கிளம்பி சுவாமிமலைக்கே வந்துட்டோம். இங்கே நாங்களே ஒரு பட்டறையை போட்டோம். தொடக்கத்துல அவருக்கு உதவியா சில வேலைகள் செஞ்சேன். இப்போ அவருக்கு இணையா கரு போடுறதுல இருந்து நகாசு செஞ்சு கண் திறக்கிறது வரை எல்லா வேலையும் செய்றேன். என் பொண்ணுங்களுக்கும் தொழிலைக் கத்துக்கொடுத்துக்கிட்டு இருக்கேன்...’ என்கிறார் ஆனந்தி.
பொதுவாக கலைத்தொழில் என்பது கண்ணால் கண்டால் கருத்தில் ஒட்டிக்கொள்வதல்ல... விடாத ஆர்வமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. இத்தொழில் ஆனந்திக்கு வாய்க்க இம்மூன்றுமே காரணம். ஐம்பொன்னில் அழகு காட்டும் ஒரு சிலைக்குப் பின்னால் கடும் உழைப்பு இருக்கிறது. முதற்கட்டமாக மெழுகில் கரு உருவாக்கப்படும். மெழுகென்றால் சாதாரண மெழுகல்ல... ஒருவகை மரத்தில் உருகி வழியும் மெழுகு. ‘பாலக்காட்டு மெழுகு’ என்று பெயர். அதோடு சம அளவுக்கு குங்கிலியம் கலந்து உருக்கிக் கொள்கிறார்கள். கைக்கு வாகாக வரும் இம்மெழுகைக் கொண்டு தேவையான அளவுக்கு ஒரு விக்ரகம் உருவாக்கப்படும். காவிரிக்கரையோரம் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ளிவந்து வகைப்படுத்தி, அந்த மெழுகு விக்ரகத்தின் மேல் பூசி ‘மோல்ட்’ செய்யவேண்டும். கீழ்ப்பகுதியில் மட்டும் சிறிய துளை அவசியம். பின்னர் அதை ராட்டி நிரம்பிய அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும்.
‘‘நல்லா சூடாக்கிறப்போ அந்த மோல்டுக்கு உள்ளே இருக்கிற மெழுகு அப்படியே உருகி ஓட்டை வழியா கீழே வந்திடும். மோல்டு மட்டும் கூடா இருக்கும். அந்தக் கூட்டை திரும்பவும் நல்லா சூடு பண்ணி பழுக்க வைக்கணும். அதே நேரத்துல ஐம்பொன்னையும் உருக்கணும்...’’ என்கிறார் ஆனந்தி.
ஐம்பொன் என்றால் பேருக்குத்தான் பொன். செம்பு 70 சதவிகிதம், பித்தளை 20 சதவிகிதம், ஈயம் 10 சதவிகிதம்... வெள்ளியும் தங்கமும் வசதியைப் பொறுத்து. ஒரு குண்டு மணி முதல் எவ்வளவு போட்டாலும் தகும்!
‘‘ஐம்பொன்னை உருக்குறதுக்கு மூசைன்னு ஒரு அடுப்பு இருக்கு. அதுல கரியைப் போட்டு அதிகபட்ச வெப்பத்துல உருக்கணும். அந்த மோல்டு கூட்டையும் செக்கச் சிவக்க சூட்டுலயே வச்சிருக்கணும். ஐம்பொன் உருகி தண்ணியா நிக்குற நேரத்தில கவனமா எடுத்து மோல்டுல இருக்கிற சின்ன ஓட்டை வழியா ஊத்தணும். அப்படியே ஒரு ஓரமா வச்சி ஆறவிடணும். ஒருநாள் கழிச்சு சுத்தியலை வச்சு மண்ணைத் தட்டி உடைச்சா, உள்ளுக்குள்ளே கருவுல இருந்த உருவம் உலோகத்துல பிசிறு தட்டி நிக்கும். அதை அரம் வச்சு ராவி, சீவிளி வச்சு சீவணும். பாலீஷான பிறகு நகாசு வேலை... அதுதான் ரொம்ப முக்கியமான வேலை. எல்லாம் முடிஞ்சு கண்ணு தொறக்கணும்...’’ - உற்சாகம் குறையாமல் பேசுகிறார் ஆனந்தி.
‘‘சுவாமி சிலை செய்றது எங்க பிறப்புக்குக் கிடைச்ச பேறு. எங்க கைபட்ட சிலையை மக்கள் கையெடுத்து கும்புடுறாங்க. பொறுப்போட, சுத்தபத்தமா செஞ்சாத்தான் தொழிலுக்கு மதிப்பு...’’ - என்று நெகிழ்கிற ஆனந்தி, இந்தியாவெங்கும் உள்ள கைவினைப்பொருள் விற்பனை நிலையங்களுக்கு சிலைகள் செய்து அனுப்புகிறார். கோயில் உற்சவர் சிலைகளும் செய்து தருகிறார்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்