24 மணி நேரம்





‘‘திண்டுக்கல்லை ஒட்டி கதிரணம்பட்டின்னு ஒரு கிராமம் இருக்கு. அதுதான் சொந்த ஊர். ரொம்ப பின்தங்கிய கிராமம். டிரெயின் கிழக்கே போயிருச்சு. டிரெயின் மேற்கே போயிருச்சுன்னு தூரத்துல கடந்து போற ரயில் சத்தத்தை வச்சுத்தான் நேரத்தைக் கணிப்பாங்க. விடியுற நேரம் தொட்டு, இருட்டுற நேரம் வரைக்கும் வயல், வாய்க்கால், வரப்புதான் வாழ்க்கை. வயக்காட்டுல கடலை பிடுங்கித் திங்கிறது; மிளகாய் ஒடிச்சுக் கடிக்கிறதுன்னு கிராமத்துப் பொழுதுகள் ரொம்பவே இலகுவா நகர்ந்துச்சு. பிளஸ்டூ படிக்கிறதுக்காக காந்தி கிராமம் போனபிறகுதான் பொறுப்பும் சமூக ஈடுபாடும் வந்துச்சு. ஒழுக்கம், கடமை, நேர நிர்வாகம்... இப்படி இன்னைக்கு வரைக்கும் என்னை வழிநடத்துற எல்லா நல்லவையும் காந்திகிராமம் எனக்குக் கொடுத்த கொடைகள்...’’ - ஈடுபாட்டோடு பேசுகிறார் பாலபாரதி

எவருக்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல், சரியெனப் பட்டதைப் பேசும் மென்மையும் கண்டிப்பும் கலந்த குரல் பாலபாரதியுடையது. இரண்டாம் முறையாக திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். சத்துணவு அமைப்பாளர்களுக்கு சங்கம் கட்டிய முன்னோடி. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தீண்டாமைக் குற்றங்கள், விளிம்பு மக்களுக்கு எதிரான வாழ்வியல் பிரச்னைகளுக்காக தீவிரமாகக் களமாடும் இவர், எளிமையான பொதுவாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு!

‘‘எங்க குடும்பம், கூட்டுக்குடும்பம். அப்பா கதிரியப்பன் ஆசிரியரா இருந்தவர். அந்தப்பணியை விட்டுட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தவர். கொத்தப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவரா 2 முறை இருந்தார். அம்மா பேரு மதவானையம்மாள். கிராமத்துப் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகமிருக்கும். அந்த வகையில அம்மாதான் எனக்கு முன்மாதிரி மனுஷி. எந்தத் துயரத்துக்கும் கலங்காம நிப்பாங்க. மனசுல பட்டதை யோசிக்காம பேசுவாங்க. வீட்டு நிர்வாகத்திலயும் அம்மாக்கிட்ட ஒரு ஒழுங்கு இருக்கும். எனக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பாங்க. அதேநேரம், மேலோட்டமான கண்காணிப்பும் இருக்கும். அம்மாவோட அருகாமையில இருந்த நாட்களை மறக்க முடியாது.

பிளஸ்டூ படிக்க காந்திகிராமம் போனபிறகு என் வாழ்க்கையில பல மாற்றங்கள். அதிகப்பட்ச ஒழுங்கு. குறிப்பிட்ட நேரத்துல எழுந்திரிக்கணும்... எழுந்ததும் வழிபாடு, உடற்பயிற்சி செய்யணும்... காந்திய சிந்தனைகள் வாசிக்கணும்னு நிறைய கட்டுப்பாடுகள்... திட்டமிடல்கள்... அந்த வயசுக்கு அதெல்லாம் கசப்பாத் தெரிஞ்சாலும், அதன் முக்கியத்துவத்தை உணர உணர, என்னையறியாம அதோட கலந்துட்டேன். பாடத்திட்டங்களைத் தாண்டி இந்தியப் பொருளாதாரம், அரசியல்னு பல விஷயங்களை அங்கே கத்துக்க வாய்ப்பு கிடைச்சுச்சு. வாராவாரம் Ôகுரூப் டியூட்டிÕ இருக்கும். மைதானம் சுத்தம் பண்றது, அருகாமையில வசிக்கிற மக்களுக்கு உதவுறது... Ôகாந்திசேனாÕன்னு கிராமப்புற சுகாதார மேம்பாடு, விழிப்புணர்வுக்காக வேலை செய்ற மாணவர் அமைப்பு... எல்லாத்துலயும் முன்னாடி நின்னு வேலை செஞ்சேன். நல்ல புரிதலோட பி.எஸ்சி படிப்பு முடிச்சதும் முத்துராம்பட்டி பள்ளிக்கூடத்துல சத்துணவு அமைப்பாளர் வேலை கிடைச்சுச்சு. மாதம் 300 ரூபா சம்பளம். சத்துணவு அமைப்பாளர்களுக்கு நிறைய பிரச்னைகள் இருந்துச்சு. அதையெல்லாம் அரசோட கவனத்துக்குக் கொண்டுபோக சங்கம் அவசியமா இருந்துச்சு. ஆனா, அதை முன்னெடுத்துப் போராட யாரும் இல்லை. நானே களத்துல இறங்கினேன். நிறைய போராடினோம். ஊர் ஊராச் சுத்தி எல்லாருக்கும் நம்பிக்கை வரவழைச்சு சங்கத்தைக் கட்டுனோம். சங்கத்தோட அமைப்பாளராவும் இருந்தேன். இதற்காக வேலை செஞ்ச தருணத்தில தான் கட்சியோட தொடர்பு கிடைச்சுச்சு. கொள்கைகள் பிடிச்சதால முழுநேர ஊழியரா சேர்ந்துட்டேன்.



கட்சியில முழுநேர ஊழியரா சேர்ந்துட்டா எதையும் நாம தீர்மானிக்க முடியாது. நாம் தனிமனிதர் இல்லை. நம் நேரம், செயல்பாடு, போக்குவரத்து எல்லாத்தையுமே கட்சிதான் தீர்மானிக்கும். எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். ராத்திரி 11 மணிக்கு ‘இந்த இடத்துல தோழர்கள் போராட்டம் நடத்த திட்டமிடுறாங்க... நீங்க அங்கே போங்க’ன்னு கட்சி உத்தரவிட்டா அடுத்த கணம் அதுக்குத் தயாராகணும். கட்சிக்காக முழுமையா நம்மை அர்ப்பணிக்கணும். ஒவ்வொரு மாவட்டத்திலயும் 30 - 50 பேர் என்னை மாதிரி முழுநேர ஊழியரா இருக்காங்க.

முதல்ல ஜனநாயக வாலிபர் சங்கப் பொறுப்புல இருந்தேன். அதுக்குப் பிறகு ஜனநாயக மாதர் சங்க மாநில துணைச் செயலர். கட்சியின் முழுநேர ஊழியரா ஆனபிறகு நேர நிர்வாகத்தோட முக்கியத்துவத்தை இன்னும் ஆழமா உணர்ந்தேன். தொடர் வேலைகள் இருக்கும். ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு நேரம்னு ஒதுக்கிப் பயணம் செய்யணும். இரவு, பகல் வித்தியாசமெல்லாம் இருக்காது. தைரியமும் தன்னம்பிக்கையும் தானா வரும். கட்சி விதிகள்ல உள்ள ஒழுங்குகள்ல நேர நிர்வாகம் முக்கியமானது. ஏழரை மணிக்கு மீட்டிங்னா, 7 மணிக்குத் தயாரா இருக்கணும். அதுவும், முழுநேர ஊழியர்களுக்கு பொறுப்பு இன்னும் அதிகம்..

என் கல்லூரிக் காலங்கள்ல காந்தி கிராமம் என் நேரத்தை தீர்மானிச்சது. அரசியல் களத்துல கட்சி என் நேரத்தை தீர்மானிச்சது. விருப்பமும் ஆர்வமும் இருக்கறதால இந்தப் பரபரப்பான ஓட்டம் எனக்கு சிரமமா இல்லே. சட்டமன்ற உறுப்பினர் ஆனபிறகு, பொறுப்பு இன்னும் அதிகமாச்சு. மக்களுக்கு நெருக்கமா இருந்து செயலாற்றணும்... அதிகாரிகளோட போரடணும்...
சட்டமன்றம் நடக்கிற நாட்கள்ல பரபரப்பு அதிகமாயிடும். அறிக்கைகளை வாசிக்கணும், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எழுதணும்...
எம்.எல்.ஏ. கூட்டங்கள் இருக்கும். அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனசு ரொம்பவும் இறுக்கமா இருந்தா, லீமா, லதா (கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள்)வோட சினிமா பார்க்கப் போவோம்.

வீட்டைப் பொறுத்த வரை பெரிசா எனக்குன்னு எந்தக் கடமையும் இல்லை. அண்ணன் முத்துவடிவேல் சத்துணவு அமைப்பாளரா இருக்கார். அண்ணி பேரு நாகம்மாள். அவங்களுக்கு 2 பொண்ணு, 1 பையன். இதுதான் என் குடும்பம். நான் திருமணம் செஞ்சுக்கலே. அதனால குடும்பத்துல எனக்குன்னு எந்தப் பொறுப்பும் இல்லை. எல்லாத்தையும் அண்ணி பாத்துக்கிறாங்க.



என் நேர நிர்வாகம் மத்தவங்களுக்கு சரிப்படுமான்னு எனக்குத் தெரியலே. ஆனா, பொதுவான சில விஷயங்கள் இருக்கு. ஆண்களைவிட பெண்களுக்கு குடும்பத்தில சுமை அதிகம். இந்த சுமைகூட ஒருவிதத்தில வன்முறைதான். வேலைக்குப் போற பெண்கள் ஒரு நிமிடத்தைக் கூட அவங்களுக்கான நேரமா உபயோகிக்க முடியாது. வீடு, அலுவலகம், கணவர், குழந்தைகள்னு மனசு கிடந்து பரபரக்கும். இதேமாதிரி நகர்ந்தா ஒரு கட்டத்துல வெறுப்பு வந்திடும். பெண்களுக்குன்னு ஒரு சுயம் இருக்கு. விருப்பு, வெறுப்பு இருக்கு... ஒருநாளைக்கு குறைந்தது 1 மணி நேரமாவது உங்களுக்காக வாழ முயற்சி செய்யுங்க. பொறுப்புகளை பிள்ளைகளுக்கும் கணவருக்கும் பகிர்ந்து கொடுங்க. ஒவ்வொரு நாள் கடந்து போற போதும், வாழக்கூடிய நாட்களில் ஒண்ணு கழிந்துகொண்டே இருக்கு. எதைச் செய்தாலும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் செய்யுங்கள்!’’
புன்னகை தவழ சொல்கிறார் பாலபாரதி.

பாலபாரதியின் கால ஓட்டம்

சட்டமன்றமோ, வெளியூர் சுற்றுப்பயணங்களோ இருந்தா எல்லா ஷெட்யூலும் மாறிடும். திண்டுக்கல்ல இருக்கிற நாட்கள்ல ஓரளவுக்கு இப்படித்தான் என் நேரம் ஓடும்.
காலை 6:00 மணி
எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை 6 மணிக்கு எழுந்துடுவேன்.
காலை 7:00 மணி
ரெப்ரஷ் பண்ணிக்கிட்டு அரைமணி நேரம் வாக்கிங் போவேன். பிறகு பேப்பர் படிக்க உட்கார்ந்திருவேன். ‘தீக்கதிர்’ உள்பட ஏழெட்டு நாளிதழ்கள். குறைஞ்சது 1 மணி நேரமாவது பேப்பர் படிக்க ஒதுக்குவேன்.
காலை 9:00 மணி
அலுவலகத்தில் இருந்து ஜீப் வந்திடும். அதுக்குள்ள குளிச்சிட்டு, சாப்பிட்டுக் கிளம்பிடுவேன்.  
காலை 10:00 - நன்பகல் 12:00 மணி
அங்கிருந்து, சட்டமன்ற அலுவலகம். மனுக்கள் வாங்குவேன். வர்றவங்களைச் சந்திப்பேன். உடனடியா தீர்க்க வேண்டிய பிரச்னைகள்னா, அதிகாரிகளை போன்ல கூப்பிட்டுப் பேசி தீர்ப்பேன்.
மதியம் 1:00 மணி
நேரா கட்சி ஆபீஸ். மதிய சாப்பாடு அங்கேயே. கட்சி தொடர்பான விவாதங்கள், கூட்டங்கள், திட்டமிடல்கள், தீர்மானங்கள் பத்தின கலந்துரையாடல்னு நேரம் நகரும். 4 மணிக்கு இங்கிருந்து கிளம்பிடுவேன்.
மாலை 4:00-6:30
உள்ளூர்ல அதிகாரிகள் உள்பட சந்திக்க வேண்டியவர்களைச் சந்திப்பேன். திருமண நிகழ்ச்சிகள் இருந்தால் கலந்துக்குவேன். பொதுக்கூட்டங்கள் இருந்தா 6.30 மணிக்குக் கிளம்பிடுவேன்.
நள்ளிரவு 12:00 - அதிகாலை 3:00
பொதுவா, வீடு திரும்ப 12 மணியாயிடும். மனசுக்கு இதமான நேரம். செயல்திட்டங்கள், சிந்தனைகள் எல்லாத்துக்கும் உகந்த நேரம். அதிகாலை 3 மணி வரைக்கும் வாசிப்பு, எழுத்து. ஒருநாளைக்கு 3 மணி நேரம்தான் தூக்கம். திரும்பவும் 6 மணிக்கு விழிப்பு வந்திடும். பழக்கமாயிடுச்சு!

- வெ.நீலகண்டன்
படங்கள்: லோகநாதன், கண்ணன்