உதவ வருவார் ஓடோடி!





அடுத்த வீட்டில் வசிக்கிறவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வதையே அநாகரிகமாக நினைக்கிற காலம் இது. பக்கத்து வீட்டில் பூகம்பமே வந்தாலும், ‘நமக்கு பாதிப்பில்லாத வரை நல்லது’ என அவர்களைக் கடந்து போகிற சுயநல வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டிருக்கிறவர்களுக்கு மத்தியில், வசந்தா விதிவிலக்காக, வித்தியாசமாக நிற்கிறார்!

‘உதவி’ என்கிற குரலுக்கு நீள்கிற முதல் கரம் இவருடையதாகத்தான் இருக்கும். ‘இந்தியக் குடும்பநலச் சங்க’த்தின் (ஃபேமிலி பிளானிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா... சுருக்கமாக எஃப்.பி.ஏ.) ‘லிங்க் லீடர்’ பொறுப்பிலிருக்கிற வசந்தா, சென்னை கே.கே.நகர் பகுதியில் ரொம்பவே பிரபலம். அறிமுகமில்லாதவர்களிடமும் அன்பையும் அக்கறையையும் கொட்டுகிற அதிசய மனுஷி!
‘‘என்னால காசு, பணம் கொடுத்து யாருக்கும் உதவ முடியாதே தவிர, யார் என்ன பிரச்னைன்னு வந்து நின்னாலும், முடிஞ்ச உதவியை செய்வேன். தெரிஞ்ச வழிகளைக் காட்டுவேன்... அடுத்தவங்க கஷ்டப்படறதை என்னால வேடிக்கை பார்க்க முடியாதுங்க...’’ - 57 வயதிலும், குழந்தையாகச் சிரிக்கிறார் வசந்தா.

‘‘13 வயசுலயே என்னைக் கல்யாணம் கட்டி கொடுத்துட்டாங்க. வீட்டுக்காரருக்கு அப்ப 27 வயசு. அவர் டியூசிஎஸ்ல மாசம் 70 ரூபா சம்பளத்துல வேலை பார்த்திட்டிருந்தார். முதல்ல ஒரு பொம்பிளைக் குழந்தை. ரெண்டாவதும் பொண்ணு. ஆனா, அது கக்குவான் இருமல் வந்து செத்துடுச்சு. அதை நினைச்சு அழுதுட்டே இருப்பேன். வீட்டுக்காரர் காலையில வேலைக்குப் போனா, ராத்திரிதான் வருவார். நான் படற கவலையைப் பார்த்துட்டு, கையில உள்ள காசையெல்லாம் போட்டு, கே.கே.நகர்ல ஆயிரம் ரூபாய்க்கு ஓலை வீடு ஒண்ணை சொந்தமா வாங்கிக் குடி வச்சார்.

பார்த்தசாரதி கோயில், ஜாம்பஜார் மார்க்கெட்னு திருவல்லிக்கேணியில பரபரப்பா வாழ்ந்த எனக்கு, ஆள் நடமாட்டமே இல்லாத கே.கே.நகர் வீட்ல இருக்கப் பிடிக்கலை. குழந்தை இறந்த துக்கம் ஒரு பக்கம்... ஊரும் ஜனங்களும் புதுசா இருந்த மிரட்சி ஒரு பக்கம்னு ரொம்பக் கஷ்டப்பட்டேன். அதுலேருந்து நான் வெளிய வரணும்னா, என்னை வேற ஏதாவது ஒரு வேலையில ஈடுபடுத்திக்கணும்னு நினைச்சேன். மீட்டர் ஒரு ரூபாய் ரேட்டுக்கு காடா துணியை மொத்தமா வாங்கிட்டு வந்து, மேல அம்பது காசு லாபம் வச்சு விப்பேன். மிச்ச நேரத்துல பூ கட்டுவேன்.

அடுத்தடுத்து வரிசையா மூணு பொம்பிளைப் பிள்ளைங்க பிறந்தது. ‘ஆம்பிளை வாரிசு இல்லையே’ங்கிற கவலையில என் வீட்டுக்காரர் குடிக்க ஆரம்பிச்சார். மாமியாரோ, ‘அடுத்ததாவது ஆம்பிளைப் புள்ளை பிறக்குதா பார்ப்போம்’னு எதிர்பார்த்திட்டிருந்தாங்க. ‘இனி என் உடம்பு தாங்காது’ன்னு யார்கிட்டயும் சொல்லாம, நானே போய் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு வந்தேன். என்னை மாதிரி நிறைய பேர் குழந்தை பெத்துக்கிற விஷயத்துல விழிப்புணர்வு இல்லாம இருந்தது தெரிய வந்தது. பார்க்கிறவங்களுக்கெல்லாம் புத்தி சொல்ல ஆரம்பிச்சேன். எங்க ஏரியாவுல கரண்ட் இல்லைன்னா, உடனே இபி ஆபீசுக்கு தகவல் சொல்றது, தெருக்கள்ல குப்பைங்களை எடுக்காம இருந்தா, கார்ப்பரேஷனுக்கு தகவல் சொல்லி எடுக்க வைக்கிறதுன்னு சின்னச் சின்ன வேலைகளை செய்திட்டிருந்தேன்.

1990ல குடும்பநலச் சங்கத்துல ஒரு மீட்டிங் போட்டாங்க. சும்மா வேடிக்கை பார்க்கத்தான் போனேன். கூட்டத்துக்கு வந்திருந்தவங்க எல்லாம் சேர்ந்து, ‘நீதான் சரியான ஆளு’ன்னு என்னை ‘தலைவி’ ஆக்கிட்டாங்க. 25 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நான்தான் பொறுப்பு. மதுரையில பீடி சுத்தற பெண்கள் குழுவைப் பார்த்தோம். ‘எல்லாரும் பொழைப்புக்கு ஏதோ செய்யும் போது, நம்மூர் பொம்பிளைங்க மட்டும் ஏன் சும்மா இருக்கணும்’னு, சோப் பவுடர், ஊதுவத்தி, ஷாம்பு தயாரிக்கிறதுல பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சோம். ‘வருமானத்துல ஒரு பகுதியைக் கட்டாயமா சேமிக்கணும்’னு சொன்னேன்... கேட்டுக்கிட்டாங்க. அவங்க வாழ்க்கை மாற ஆரம்பிச்சது.

குழு உறுப்பினர்களோட பிள்ளைங்க படிப்பு, கல்யாணம் மாதிரியான அவசிய தேவைகளுக்கு கடன் வாங்கிக் கொடுக்கறேன். எய்ட்ஸ் பத்தியும், கர்ப்ப காலத்துல எப்படி ஆரோக்கியமா இருக்கணுங்கிறதைப் பத்தியும், போலியோ சொட்டு மருந்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடு பத்தியும்... இன்னும் எனக்குத் தெரிஞ்ச நல்ல விஷயங்களை நாலு பேருக்குச் சொல்றேன். மனசு சரியில்லைன்னு என்னைத் தேடி வர்றவங்களோட அரை மணி நேரம் மனசு விட்டுப் பேசி, ஆறுதல் சொல்வேன்’’ என்கிற வசந்தாவின் சேவைகளைப் பாராட்டி இந்திய குடும்பநலச் சங்கமும், பிற அமைப்புகளும் பல விருதுகளை வழங்கியிருக்கின்றன.

‘‘எஃப்.பி.ஏ-ல சேரும்போது எனக்கு உலகமே தெரியாதுங்க. ஆனா, அதுதான் எனக்கு அப்பவும், இப்பவும் தாய் வீடு மாதிரி... அங்கதான் வாழ்க்கைன்னா என்னன்னு கத்துக்கிட்டேன். 5 லட்சம் கடனை வச்சுட்டு, வீட்டுக்காரர் திடீர்னு மாரடைப்புல இறந்துட்டார். ‘நாலு பொம்பிளைப் புள்ளைங்களை வச்சுக்கிட்டு, எப்படிக் கரையேத்தப் போறே’ன்னு கேட்காத ஆளே இல்லை. இடிஞ்சு போய் உட்கார்ந்த எனக்கு எஃப்.பி.ஏ. அமைப்பைச் சேர்ந்தவங்கதான் மறுபடிஎழுந்திருக்க தைரியம் தந்தாங்க.

எந்தக் காரணத்துக்காகவும் பிள்ளைங்களோட படிப்பை நிறுத்தலை. என் கஷ்டம் தெரிஞ்சு, நாலு பொண்ணுங்களும், லீவு நாள்ல பூ கட்டி, சம்பாதிச்சுக்கிட்டே படிச்சாங்க. இன்னிக்கு நாலு பேருக்கும் நல்ல இடத்துல கல்யாணம் கட்டிக் கொடுத்து, நல்ல வேலையிலயும் உட்கார வச்சிருக்கேன். பேரக் குழந்தைங்க இன்ஜினீயரிங், அது இதுன்னு பெரிய படிப்பெல்லாம் படிக்கிறாங்க. என்னோட நாலு பொண்ணுங்களையும் என்னை மாதிரியே வளர்த்துட்டேன். இப்பவும் எந்த இடத்துல என்ன மீட்டிங், யாருக்கு உதவின்னாலும் எனக்கு முன்னாடி அவங்க நிப்பாங்க. பேரப்பிள்ளைங்களையும் பழக்கிக்கிட்டிருக்கேன். காசா, பணமா சொல்லுங்க... ஒருத்தருக்கொருத்தர் இந்த உதவிகளைக்கூட செய்யலைன்னா, அப்புறம் என்னங்க மனுஷப் பிறப்பு?’’ கனிவும் கரிசனமுமாகக் கேட்கிறார் அன்பு மனுஷி!
- ஆர்.வைதேகி
படங்கள்: கிஷோர்