இணையம்
மகத்தான மாற்றம் சாத்தியம்!
இணையம் மூலம் மாற்றங்கள் சாத்தியம் என்பதற்கு ‘தாகிர் சதுக்கம்’ ஒரு உதாரணம். அப்படிப்பட்ட மாற்றத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான இணையதளம் இது. கார்ல் மார்க்ஸ் தொடங்கி உலகின் முக்கிய மார்க்சியவாதிகள், பெண்ணியவாதிகள், தத்துவவியலாளர்களின் எழுத்துகளை இத்தளத்தில் படிக்கலாம். எம்.என்.ராய், பகத் சிங், சாரு மஜூம்தார் உள்ளிட்ட இந்திய இடதுசாரித் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளோடு, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதியவையும் இடம் பெற்றிருக்கின்றன. சமகால சிந்தனையாளர்களான நோம் சாம்ஸ்கி, ஸ்லவோய் சைசக் போன்ற அறிஞர்களின் கட்டுரைகளும் உள்ளன. தொடக்க காலம் முதல் இன்று வரையிலான மார்க்சியத்தின் தகவல் கிடங்காக இருக்கும் இத்தளம், அரசியல் ஆர்வம் கொண்ட பலரும் விரும்பும் வகையில் இருக்கிறது. மக்கள் விடுதலையில் நம்பிக்கை கொண்ட சமூக ஆர்வலர்கள் அனைவருக்குமான தளம் இது. http://www.marxists.org
சினிமா
3டியில் விரியும் கனவு!
அனாதையாக கைவிடப்பட்ட 12 வயது ஹூகோ கப்ரேவின் வேலையே பாரீஸ் ரயில் நிலையத்திலுள்ள கடிகாரங்களைப் பராமரிப்பதுதான். காவலரின் பார்வையிலிருந்து தப்பிக்க சந்துபொந்துகளில் மறைந்து வாழும் ஹூகோ, தனது தந்தை முடிக்காமல் விட்டுச்சென்ற இயந்திர மனிதனை இயக்கும் முயற்சியில், அந்த ரயில் நிலையத்திலுள்ள பொம்மைக் கடையில் சில பொருட்களை திருடி மாட்டிக்கொள்கிறான். இயந்திர மனிதனை இயக்க அவனது தந்தை விட்டுச்சென்ற குறிப்புகளை கைப்பற்றுகிறார் கடையின் உரிமையாளர். திருடப்பட்ட பொருட்களுக்கு ஈடாக, ஹூகோ தனது கடையில் வேலை செய்தால் குறிப்புகளை திருப்பித் தருவதாகச் சொல்கிறார் அவர். அப்போது தொடங்கும் ஒரு பயணத்தின் முடிவில், ‘உண்மையிலேயே அந்த பொம்மைக் கடைக்காரர் மகத்தான இயக்குனர் ஜார்ஜ் மெலிஸ்’ என்பது தெரிய வருகிறது. முதலாம் உலகப் போரில் அவர் இறந்துவிட்டதாக உலகம் நம்பிக்கொண்டிருக்க, அவரோ போர் ஏற்படுத்திய வெறுப்பில் ‘சினிமா கலைஞன்’ அடையாளங்கள் முழுவதையும் அழித்துவிட்டு பொம்மைக்கடை வைத்து பிழைப்பு நடத்துகிறார். அவருடைய இயந்திர மனிதனும் தீவிபத்தில் அழிந்துவிட்டதாக நம்புகிறார். ஹூகோவின் மூலம் அவர் மீது மீண்டும் புகழின் வெளிச்சம் படர்கிறது. அவரது பாராட்டு விழாவில் ஹூகோவுக்கு நன்றி சொல்லி, ‘‘மந்திரவாதிகளே, கடற்கன்னிகளே, பயணிகளே, சாகசக்காரர்களே, என்னோடு சேர்ந்து கனவு காணுங்கள்’’ என்று அழைக்கிறார் ஜார்ஜ் மெலிஸ். ஜார்ஜ் மெலிஸ் திரைப்படங்கள் பற்றி விரியும் காட்சிகள் சினிமாவை நேசிப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த மென்காவியம், மார்ட்டின் ஸ்கார்செஸியின் மற்றொரு சாகசம்!
இடம்
புன்னகை புத்தர்?
இலங்கையில் தெருவுக்குத் தெரு புத்தர் நின்று கொண்டிருக்கிறார், நம்மூரில் பிள்ளையார் போல. உலகிலுள்ள எல்லா புத்தர்களும் வந்து குடியிருப்பது போல காட்சியளிக்கிறது தம்புள்ளை பொற்கோயில். கொழும்புக்கு கிழக்கே 148வது கி.மீல் இருக்கும் தம்புள்ளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுமலைக்கு மேலிருக்கும் பொற்கோயிலில் சுமார் 80 குகைகள் இருக்கின்றன. அவற்றுள் 5 குகைகள் முக்கியமானவை. முகப்பிலேயே மிக பிரமாண்டமான தங்க புத்தர் வரவேற்க, குகைகளில் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார் புத்தர். பிரமாண்டமாக நின்றவாறு, அமர்ந்தபடி, சாய்ந்தபடி என்று அந்தக் குகைகளில் ஏராளமான புத்தர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தரும் ஏற்படுத்தும் சிலிர்ப்பும் பிரமிப்பும் சொல்லி மாளாது. புன்னகை தவழும் புத்தர்களின் அமைதியான முகங்களால் சூழப்பட்டிருப்பது ஒரு இசைவான அனுபவம். இருண்மை நிறைந்த குகைகளின் சுவர்களில் நுணுக்கமான சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தலங்களான சிகிரிய, பொலனுறுவ, கண்டி, அனுராதபுரத்துடன் தம்புள்ளையையும் சேர்த்து ‘கலாசார முக்கோணம்’ (cultural triangle) என்று அழைக்கிறார்கள். பௌத்தத்தில் ஈடுபாடுள்ள யாருக்கும் இந்த இடங்களை பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்க வேண்டும். ஆனால், இத்தலங்களில் தமிழர் மீதான வெறுப்பை மயக்க நஞ்சைப் போல ஊட்டுவதை பார்க்க முடிகிறது. இலங்கை அதிபருக்கு ஆலோசகராக இருந்த ஒரு பௌத்த பிக்குவை போருக்குப் பின் ஒரு முறை பேட்டி கண்ட போது, ‘‘போரில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வைவிட பொருளாதாரத்தை சரி செய்வதுதான் இலங்கை அரசுக்கு முக்கியம்’’ என்றார். 153 புத்தர்களில் ஒருவர் கூடவா இவர்களுக்கு அன்பையும் சமாதானத்தையும் போதித்திருக்க மாட்டார்?
பேரினவாதத்தின் எச்சமாக மட்டுமே பௌத்தம் இருக்கும் ஒரு நாட்டில் எவ்வளவு புன்னகை தவழும் புத்தர் இருந்து என்ன பயன்?
புத்தகம்
விழுப்புரம் முதல் பரமக்குடி வரை...
இன்று பெரும்பாலாரோல் மறக்கப்பட்டுவிட்ட விழுப்புரம் படுகொலைகள் பற்றிய முக்கிய ஆவணம் ‘விழுப்புரம் படுகொலை 1978’ என்கிற இந்நூல். ஒரு தலித் பெண்ணை ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததை தலித்துகள் தட்டிக் கேட்க, மூண்ட கலவரத்தில் 12 தலித்துகளை பலி வாங்கிவிட்டுதான் அடங்கியிருக்கிறது ஆதிக்கச் சாதி வெறி. ‘கொல்லப்பட்ட 12 தலித்துகளும் பிரச்னையில் சம்பந்தப்பட்ட விழுப்புரம் பெரிய காலனியை சேர்ந்தவர்கள் அல்ல’ என்கிற செய்தி ஆதிக்கச் சாதியின் வன்மத்தை சுட்டுகிறது. அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்த படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷனின் தலித் விரோத போக்கை எதிர்த்து தலித்துகளின் சார்பாக நின்று பேசும் இந்த நூலில் ஒரு சட்ட வல்லுனரின் லாவகத்தோடு நடந்ததை விளக்கிச் செல்கிறார் ஆசிரியர் டி.டேவிட். விசாரணை கமிஷனின் முன் இடையீடாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆவணத்தை சமீபத்திய கள ஆய்வுகள், பேட்டிகள், புகைப்படங்களோடு விரிவான ஒரு புத்தகமாக பதிப்பித்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தலித்துகளுக்கு எதிராக தொடரும் வன்முறையை ‘சமூக மோதல்’களாகக் குறுக்கிவிடும் அதிகார வர்க்கத்தின் ஆதிக்க சாதி வெறியை விழுப்புரம் படுகொலைகளின் மூலம் இந்த நூல் தக்க சான்றுகளுடன் அம்பலப்படுத்துகிறது. விழுப்புரம் முதல் பரமக்குடி வரை தசாப்தங்கள் கடந்து நீளும் அதிகார வர்க்கத்தின் தலித் விரோத போக்குக்கு ரத்த சாட்சியாக இருக்கிறது இந்நூல். ஆசிரியர்: டி. டேவிட் பதிப்பாசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம் (காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001. Ph: 04652-278525, 044- 28441672, 42155972. Rs125)