மன உறுதி மறு பெயர் மேரி கோம்





இந்தியாவுக்காக ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை மேரி கோமுக்கு கிடைத்துள்ளது. 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருக்கு வெண்கலம் கிடைத்ததில் சற்று ஏமாற்றம்தான். தங்க நம்பிக்கையை சிதைத்ததற்காக நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது அவரது பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு!

மணிப்பூர் மாநிலம் கங்காதீ கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் இன்று சிகரங்களைத் தொட்டு வெற்றி வானில் சிறகடிக்கிறார். ஆரம்பத்தில் தடகளத்தில் ஆர்வம் செலுத்தியவர், 17 வயதில்தான் பாக்சிங் ரிங்கில் இறங்கினார். மாநிலப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாளிதழ்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியானபோதுதான், இவர் குத்துச்சண்டை போடுவார் என்பதே பெற்றோருக்குத் தெரியவந்தது!

திருமணமாகி ரெசுங்வார், குப்நீவார் என இரட்டைக் குழந்தைகள் பெற்ற பிறகும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது என்பது எத்தனை பெரிய சாதனை?
‘‘மேரி கோம் பயிற்சி செய்வதைப் பார்த்து மிரண்டு போனேன். தாய்மைக்குரிய கடமைகளையும் புறக்கணிக்காமல், சாம்பியனாகவும் முத்திரை பதிப்பது எத்தனை கடினம்?’’ என்று வியக்கிறார் கிரிக்கெட் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி.

இதே சந்தேகம்தான் சாய்னாவுக்கும். மேரி கோமிடமே இதை கேட்டுவிட்டார். ஒலிம்பிக் சாதனையாளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய மேரி, ‘‘‘ஒரு நாள் உனக்கும் திருமணம் நடக்கும். குழந்தைகள் பிறக்கும். உனது கணவரும் உன்னை ஊக்குவிப்பார். என்னால் சாதிக்க முடிந்ததைப் போலவே நீயும் சாதிப்பாய்’ என்று நேற்றுதான் சாய்னாவிடம் கூறினேன்’’ என்று கூற, சாய்னாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இரட்டைக் குழந்தைகளில் 2வதாகப் பிறந்த குப்நீவாருக்கு இதயத்தில் துளை இருந்ததால், சண்டிகர் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை. அப்போது, ஆசிய கோப்பை போட்டிக்காக சீனாவில் இருந்த மேரி, கோப்பை வென்ற கையோடு ஓடோடி வந்தார். களத்தில் எதிரியுடன் மோதியபோது ஒரு தாயாக அவரது மனம் எப்படித் துடித்திருக்கும்? லண்டன் ஒலிம்பிக் முதல் சுற்றில் வென்றதும், அன்றைய தினம் 5வது பிறந்த நாளைக் கொண்டாடிய மகன்களுக்கு அந்த வெற்றியை அர்ப்பணித்தார். 30 வயதை நெருங்கிவிட்டாலும், ‘‘பிரேசில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் கோம். அவரது மன உறுதியை நன்கு அறிந்தவர்களுக்கு, அவை வெற்று வார்த்தைகள் அல்ல என்பது புரியும். இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மேரி கோமின் வாழ்க்கையை, சினிமாவாக எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி. சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு அந்தப் படம் ஒரு பாடமாக இருக்கும்!
- பா.சங்கர்