எந்தப் பிரச்னைக்கும் நல்ல தீர்வு உண்டு!





‘தற்காலிகமான ஒரு பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வே தற்கொலை’ என்றொரு பிரபல வாசகமுண்டு.
உண்மைதான்! பிரச்னை இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. பிரச்னைகளை யார், எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது மடுவளவு சிறியதா, மலையளவு பெரியதா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும், எந்தப் பிரச்னைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். ஆனால், அந்தத் தீர்வு எந்தக் காலத்திலும் தற்கொலை என்கிற கோழைத்தனமான முடிவு அல்ல. தற்கொலை எண்ணத்தில் தவிப்பவர்கள், தற்கொலைக்கு முயன்று தோற்றவர்கள், பிடிப்பில்லாமல், விரக்தியின் விளிம்பில் நிற்பவர்கள் என வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும், அவர்களது பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டு, ஆறுதல் அளிக்கிற அமைப்புதான் ‘சிநேகா’.

1986ல் பிரபல மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமாரால் தொடங்கப்பட்டது சிநேகா. டாக்டர் லட்சுமி விஜயகுமார், ஒரு முறை லண்டன் சென்று ‘இந்தியாவில் தற்கொலைகள்’ பற்றி பேசியிருக்கிறார். அங்குள்ள   Samaritans   அமைப்பு, இந்தியாவின் நிலைமை அறிந்து அதுபோன்று இங்கும் ஆரம்பிக்க ஊக்குவித்தது. பின்பு அதன் ஒரு கிளையாக சிநேகா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 10 ‘உலக தற்கொலை தடுப்பு தின’த்தை முன்னிட்டு, ‘சிநேகா’வைத் தொடர்பு கொண்டோம்.

‘‘2011ன் கணக்குப்படி இந்தியாவில் தற்கொலைக்கான காரணங்களில் முதலிடம் குடும்பப் பிரச்னைகளுக்கு... 24 சதவிகிதம். அடுத்து தீராத நோய்கள்... அவை 20 சதவிகிதம். பாலினத்தைப் பொறுத்த வரை ஆண்களே அதிகமாக தற்கொலை செய்கிறார்கள். அவர்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே அதிகம். அடுத்து 30 - 40 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். தற்கொலை செய்து கொள்கிறவர்களில் தூக்கின் மூலம் இறப்பவர்கள் 33 சதவிகிதம் பேர்.  விஷம் குடித்து இறப்பவர்கள் 32 சதவிகிதம் பேர்...’’ - புள்ளிவிவரங்களுடன் பேச ஆரம்பிக்கிறார் டாக்டர் லட்சுமி விஜயகுமார்.

‘‘ஒவ்வொருவர் மனதிலும் சந்தோஷங்கள் நிறைந்திருப்பது போல துக்கங்களும் கவலைகளும் வருத்தங்களும் நிறைந்திருக்கும். சந்தோஷத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதுபோல் துன்பங் களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள பலரால் இயலாது. சிலது உணர்வுப்பூர்வமானவையாக இருக்கலாம். சிலது ரகசியமானவை. இவற்றைப் பகிர்ந்துகொள்ள மிகவும் நம்பிக்கையுள்ள, பின்னாளில் விமர்சிக்காத நட்பு தேவை. பிரச்னைகள் உள்ள எல்லோருக்கும் இதுபோன்ற நட்பு கிடைக்காமல் போகலாம். அப்படி மனதில் புதைந்துள்ள வருத்தம், கவலை, துன்பங்கள் எல்லாம் பகிர்ந்துகொள்ள இயலாமல், சுமந்து சுமந்து மனப்பாரமாகி, பின்னாளில் மன உளைச்சலில் தள்ளும். மன உளைச்சல், மன அழுத்தமாக மாறும். இதன் இறுதிக்கட்டம்தான் தற்கொலை சிந்தனை. மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதால் மனபாரம் குறையலாம். பாரத்தை இறக்கி வைக்க உதவியாக அவரது பலம், பலவீனங்களோடு ஏற்றுக்கொண்டு அவரது உணர்வு, கவலை, துயரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தவிர, தான் பகிர்ந்து கொள்கிற விஷயங்கள் ரகசியமாக இருக்கும் பட்சத்தில் ஒருவரால் மனம் விட்டு எதையும் பேச இயலும். மனபாரம் குறைவதால் அவருக்கு தெளிவு கிடைக்கும். அப்படிப்பட்டவர்களுக்கான அமைப்புதான் ‘சிநேகா’. தான் யார் என்பதை தெரிவிக்காமலே யார் வேண்டுமானாலும் ‘சிநேகா’வைத் தொடர்பு கொண்டு பேசலாம். ( சிநேகா, 11, பார்க் வியூ ரோடு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28. ( 044-24640050. help@snehaindia.org / www.snehaindia.org )
‘‘தற்கொலையே உதவி கேட்கும் கூக்குரல்தான். தற்கொலைக்கு முயன்ற பெரும்பாலானோர், அதைப் பற்றி யாரிடமாவது குறிப்பிட்டுப் பேசியிருப்பார்கள். தற்கொலை செய்து கொண்ட பலர் குறிப்பு எழுதி வைத்துவிட்டு செல்கின்றனர். தற்கொலை எண்ணத்தில் இருப்போரிடம் காணக்கூடிய சில முக்கிய அறிகுறிகள்...

*  தனிமை உணர்வு, கவலை, பதற்றம்
*  எதிலும் ஈடுபாடின்மை
*  சமீபத்தில் மிகப்பெரிய இழப்பு அல்லது மரணம் அல்லது பிரிவு
*  அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் / உணர்ச்சியற்று இருத்தல் / அளவு மீறிய பயம்
*  தன்னிலையில் மாற்றம் / உயில் எழுதுதல்
*  தூக்கமின்மை, உணவுப்பழக்கத்தில் மாற்றம் / குற்ற உணர்வு, அவமானம்
*  மனநிலையில் பெரும் மாற்றம்
*  நெருங்கிய நட்பு, உறவுகளை நேரில் சென்று பார்த்தல்.

இந்த அறிகுறிகளில் சிலது பளிச்செனத் தெரியும்படியும், சிலது புரிந்துகொள்ள முடியாதபடியும் இருக்கலாம். ஒரே ஒரு அறிகுறியோ, பலது சேர்ந்தோகூட தென்படலாம்...’’ - எச்சரிக்கிற டாக்டர், தற்கொலை எண்ணம் வரும்போது மீள்வதற்கான வழிகளைச் சொல்கிறார்.

‘‘தற்கொலை என்பது எந்தப் பிரச்னைக்கும் தீர்வில்லை. ஆனால், பலருக்கும் பிரச்னைக்குரிய நேரத்தில் அந்த பாதிப்போடு தொடர முடியாத நிலையில் தற்கொலை ஒரு மாற்றுத்தீர்வாகத் தோன்றுகிறது. இதை இரட்டை மனநிலை எனலாம். வாழ்வதற்கு விருப்பம் இருப்பினும், அவரது துயரங்களின் தாக்கம் அவ்வாறு முடிவெடுக்க வைக்கிறது. துயரத்தின் தாக்கத்தைக் குறைக்க அவர் மனம்விட்டு பேச வேண்டும். இதற்கான சூழலை, சந்தர்ப்பத்தை சிநேகா உருவாக்கித் தருகிறது. மனம்விட்டுப் பேசுவதால் மனபாரம் குறைந்து ஒரு தெளிவு ஏற்படும். தெளிவு அவர்களை சீராக சிந்திக்க வைக்கும். இந்தத் தெளிவு ஒரே நாளில் ஏற்பட வேண்டும் என அவசியம் இல்லை. மேலும் தன்னைப் புரிந்துகொள்ள ஒருவரும் இல்லையே என்கிற தனிமைத்துயரும் தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைகிறது. அப்படிப்பட்டவர்களுக்குப் புரிந்துகொண்ட நல்ல நபராக இருப்பதுதான் சிநேகா...

வேற்று சாதி திருமணங்கள், கடன் தொல்லை, சமூக அந்தஸ்தில் மாற்றம் போன்றவை நம்மிடையே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்டவர்கள், சமூகத்திலிருந்து தாம் தாழ்ந்துவிட்டதாகவே நினைக்கிறார்கள். அதுவே குடும்பத் தற்கொலைகளுக்குக் காரணம் ஆகிறது. குடும்பத் தற்கொலைகளில் இறந்தவர் அனைவருக்கும் சமபங்கு இருக்காது. சிறுவர்கள் கொலை செய்யப்பட்டபின் பெரியவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு தற்கொலை நிகழ்வு குறைந்தபட்சம் 7 நபர்களை பாதிக்கிறது. மேலும் தற்கொலை எண்ணங்கள் மரபியல் வழியாக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

இயற்கையாக ஏற்படும் மரணம் தவிர எல்லா மரணங்களையும் நாம்தான் துரத்துகிறோம். ஒருமுறை தற்கொலை முயற்சி செய்து மீண்டும் அந்த தற்கொலை எண்ணம் உடையவர்கள் 35 சதவிகிதம் பேர். முழுக்க முழுக்க அந்த எண்ணத்தில் இருந்து வெளியே வந்தவர்கள்தான் அதிகம். அதாவது 65 சதவிகிதம்!’’ என்று இதன் பின்னணி விளக்குகிறார் டாக்டர் லட்சுமி.

சிநேகாவின் பார்வையில் நடிகைகளின் தற்கொலை..?

‘‘மிக முக்கிய மனிதர்கள் (விஐபி) பட்டியலில் நடிகைகள் இருப்பதால் மற்றவர்கள் போல் இவர்கள் தங்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் மனம்விட்டு மற்றவரிடம் பேச முடிவதில்லை. இதனால் பாரமும் இறுக்கமும் அதிகமாகும். இவர்களையும் சக தோழியாக புரிந்துகொண்டு அவர்களது வருத்தங்களை, எண்ணங்களை பகிர்ந்துகொண்டால் தற்கொலை எண்ணம் நீங்க வழி உண்டு.
சிநேகா இவர்களைப் போன்றவர்களுக்கு மிகச் சரியான அமைப்பாக இருக்கும். ஏனெனில், இங்கு தொடர்பு கொண்டு பேசுபவர்கள் தான் யார் என்கிற அறிமுகம் இல்லாமலே பேச முடியும்.’’
வாழ்க்கையை நேசிக்க, பிடிப்பு ஏற்பட சிநேகாவின் ஆலோசனைகள் ஏதாவது டாக்டர்?

‘‘மனிதர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள். ஆனால், பிரச்னையின் தாக்கம் அவர்களை அழுத்திக்கொண்டிருக்கும் போது அவர்களால் சுயமாக சிந்திக்க முடிவதில்லை. பிரச்னைக்குள் அவர்கள் இருப்பதால் இந்த நிலை. தாக்கத்தின் அல்லது அழுத்தத்தின் காரணமாக ஒரே குறுகிய பாதையில் அவர்கள் சிந்திக்கிறார்கள். ஆங்கிலத்தில் Tunnel Vision என்பார்கள். தாக்கத்தின் வேகம் குறைந்தால், மனபாரம் இறக்கி வைக்கப்பட்டால் அவர்களால் பிரச்னைகளை வேறு கோணங்களில் பார்க்கவும் அணுகவும் இயலும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஆலோசனை கொடுப்பதை விட உணர்வுப்பூர்வமாக (Emotional Support)   அவர்களை புரிந்துகொள்வதே சிறப்பு என்பது சிநேகாவின் கருத்து.”வாழ்க்கையை வெற்றிகொள்ள, வாழ்வு மட்டுமே தீர்வு என்பதை உணர்த்துகிறது லட்சுமி விஜயகுமாரின் பேச்சு!
- ஆர்.வைதேகி