ஸ்டார் தோழி



தீபாவாகிய நான்... ‘சர்ர்ர்ரி... சர்ரி வர்றதை வரவில் வை... போறதைச் செலவில் வை’ன்னு நினைக்கும் ஈஸி... ப்ஸி... லெமன் ஸ்குவிஸி டைப்! பேசுவதில் படபட பட்டாசு (தீபாவளி அன்று பிறந்தவளாக்கும்) மூக்கைத் தொடாத அளவு நட்பு வளர்க்கவும் வளர விடவும் பிடிக்கும். கமலோட ‘கட்டிப்புடி வைத்தியம்’ மாதிரி சொந்தபந்தங்களிடம் விட்டுப் பிடித்து நல்லுறவை வளர்த்துக் கொள்வேன். நம் சந்தோஷம் நம் காலடியில்தானே கிடக்கிறது! பள்ளி மற்றும் பட்டம்...

அருப்புக்கோட்டையில் பள்ளிப் படிப்பு. மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ் பட்டப் படிப்பு. ‘ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு ஆவாது... உன் கல்யாணப் பத்திரிகைல போட ஒரு டிகிரி வாங்கிட்டு வா’ன்னு எந்த வித கண்டிஷனும் இன்றி சுதந்திரப் படிப்பு. அதனாலயே நல்லா படிச்சேன். பள்ளி ஆசிரியை தெய்வானை டீச்சர்... நான் கவிதை, பேச்சுன்னு இருப்பதைப் பார்த்து அவ்வளவு ப்ரியம். கல்யாணப் பத்திரிகை வைக்கப் போகும்போது, ‘உங்க க்ளாஸெல்லாம் நான் ஆப்ஸென்ட் ஆகாம வந்தேன்ல? என் கல்யாணத்துக்கு நீங்க வந்து ப்ரெஸன்ட் போடுங்க’ன்னு சொன்னேன். முதல் வரிசையில் டீச்சர்.

ஒரு அம்மாவைப் போல நான் என்ன செய்தாலும் என்னை ரசிக்கும் அன்பு ஆசிரியை! விளையாட்டு... ஒண்ணாப்புல பிஸ்கெட் கடித்தல் போட்டில முதல் பரிசு வாங்கியதன் ருசி (?) கல்லூரி வரை தொடர்ந்தது. பேட்மின்டன், கிரிக்கெட், அத்லெட், கவிதை, பேச்சு, நடனம், நாடகம், ஓவியம், கோலம், அழகுப் போட்டின்னு எதையும் விட்டு வைத்ததில்லை! தீபா பஞ்ச்... கல்லூரித் தோழிகளிடம் டைமிங் பஞ்ச் அடித்து செய்த லூட்டிக்கு அளவே இல்லை - ‘கேட்டுப் பெறுவது... பிச்ச்ச்சை. அது அன்பென்றாலும்!’

வாசித்தல்... ‘பக்கோடா கட்டி வந்த பேப்பரை கூட தீபா படிச்சிட்டுத்தான் கீழ போடுவாள்’ - என் அம்மா அடிக்கடி சொல்வது. புத்தகம் மட்டுமல்ல... மனித முகங்களையும் அகங்களையும் வாசிப்பதில் தீராத தாகம். பயணக் கட்டுரைகளும் பிடிக்கும். நாஞ்சில் நாடன், எஸ்.ரா., வண்ணதாசன் ஆகியோர் என் ஆதர்ஸம். கடைசியாக வாசித்த லீனாவும் கணேசகுமாரனும் விக்கித்துப் போக வைத்துள்ளனர்.

என் கணவன் என் தோழன்... உன்னைச் சந்தித்த அந்தப் புனித நொடியில் திருத்தப்பட்டன என் வாழ்நாள் வரங்கள்! ‘எல்லாரும் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைப்பாங்க. நீங்க எனக்கு மகானைக் கட்டி வச்சிருக்கீங்கம்மா’ன்னு சொல்லுவேன். சாரதி எனக்குக் கிடைத்த பொக்கிஷம். நான் தடாலடி... அவரோ நிதானம். எங்களிருவரின் காலைத் தேநீர் பொழுதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை. சாம்பார்ல இருந்து மாறிப்போன சர்க்கார் வரை அவரிடம் பேசுவேன்! மதிவதனா - மதிமலர்... தாய்மை எனும் ஒளிவட்டத்தை என் தலைக்குப் பின்னால் சுற்ற வைத்து தேவகணங்களை எனக்கு அருளும் குட்டி தேவதைகள்!

கல்யாண சமையல் சாதம்... டிகிரி முடித்த கையோடு திருமணம் (க.பத்திரிகையில் ஙி.கி.ன்னு   போட்டுத்தான்!). நாலு நாளில் சென்னையில் தனிக்குடித்தனம். சமையல், வீட்டுவேலை எதுவும் தெரியாமல், ஒவ்வொண்ணும் நானே வெட்டி, கொட்டி, சுட்டுக் கத்துக்கிட்டேன். என் சமையல்ல ஒவ்வொரு காயும்... ஏன் ஒவ்வொரு கடுகும் கூட நானா போட்டு நானா கத்துக்கிட்ட தாக்கும்! இன்னைக்கு மதுரை, செட்டி நாடு, வட இந்திய உணவுகளில் கில்லி என இந்த வாயாடி, ‘வள்ளிக்கிழவி’ பேர் வாங்கி இருக்கேன் என்பதைப் பெருமையாத்தான் சொல்றேனுங்கோ (கொள்ளுப்பாட்டி வள்ளியின் சாயல் எனக்கு)!

பிடித்த பெண்கள்...

* அப்பா தவறிய பின், எங்க மூன்று பேர் திருமணத்தையும் தனி ஆளாக நின்று ஊரே வியக்கும் படி நடத்திக் காட்டிய என் அம்மா.
* தன் வலியை வெளிக்காட்டாமலே கடைசி வரை வாழ்ந்து முடித்த என் மாமியார்.
* ‘ஜிங்குனமணி’ பாடலை அதிர அதிரக் கேட்கும் எதிர் வீட்டு மாமி, ‘முதுமைக் காலத்தை எப்படி சந்தோஷமா அமைத்துக் கொள்ளணும்’ என்பதை தினமும் இவரைப் பார்த்துக் கற்றுக்
கொள்கிறேன்.

எனது இல்லம் இதுதான்... சுத்தமான வீடு, சுகந்தமான பத்தி நறுமணம், இதோ கதவைத் திறக்கிறேன்... கோயிலுக்கு வந்தது போல் உணர்வீர்கள்தானே!திரைப்படம் - இசை... பாடல்கள் கேட்டுக்கொண்டே... எவ்வளவு வேலை இருந்தாலும் அலுப்பே இல்லாமல் செய்து விடுவேன். தெலுங்கு, ஆங்கில டப்பிங் படம் பார்த்து குடும்பத்தோடு கலாய்ப்பதும் நடக்கும். என் கணவர் அவர் படம் பார்ப்பதை விட, அதே மூன்று மணி நேரம் நான் சொல்லும் கதை கேட்பார்!

அழகென்பது... இறைவன் படைப்பில் அத்தனையும் அழகே. மலர்ந்தும் மலராத பனித்துளி பூ, அதிகாலை எங்கோ ஒலிக்கும் பிடித்த பாடல், பிறந்த குழந்தை, மருதாணி விரல். பொண்ணு மாப்பிள்ளை, முழு நிலா, மொட்டை மாடி, சிரிக்கும் கண்கள், புள்ளிமான், மயில். மனம் ஒத்த தம்பதி, கர்ப்பிணிகள், திருவிழா நேர சொந்த பந்தம் நிறைந்த வீடு... எவ்வளவோ இருக்கு... எல்லாவற்றையும் விட நிறைவான மனிதனின் புன்சிரிப்பு!

புகைப்படக்கலை புகுந்த விதம்... தடுக்கி விழுந்தவன் கையில் புதையலுடன் எழுந்து நின்றது போல, வீட்டில் தூசி தட்டிக் கொண்டிருந்த போது, கேமராவில் கை பட்டது. ஃபேஸ்புக் தந்த ஊக்கத்தில் தொட்ட கேமரா அள்ளித் தந்து கொண்டிருக்கும் சந்தோஷங்கள் நான் நினைத்துப் பார்த்திராத உயரங்களை எல்லாம் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கின்றன. கல்யாண நாள், பிறந்த நாளுக்கெல்லாம் லென்ஸ் பரிசளிக்கும் கணவருக்கும் புகைப்படக்கலையில் ஆர்வம் இருப்பதால் சேர்ந்து பயணிக்க முடிகிறது.

போவோமா ஊர்கோலம்... பயணம் - ஆசையாகவும் அலுக்காமலும் அடிக்கடி கிளம்பிவிடுவோம். கோட்டை, கோயில் சிற்பங்கள், அருங்காட்சியகம், அருவி, பூங்கா, வயல் என ஞாயிற்றுக்கிழமைகள் இதற்காகவே படைக்கப்பட்டது போல, புதுப்புது இடங்கள் புறப்பட்டுவிடுவோம். அதனாலேயே விதவிதமான புகைப்படங்கள் சுட்டுத்தள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது.

சமீபத்திய சாதனை... ரோடு க்ராஸ் பண்ணவே ரொம்ப பயம். ஆட்டோவும் தண்ணி லாரியும் ஸ்லீப்பர் செல் போலவே தோன்றும். சென்னை ட்ராஃபிக் அந்தளவு என்னை மிரட்டி வைத்திருந்தது. ஒரு வைராக்கியத்தில் ட்ரைவிங் க்ளாஸ்  சேர்ந்தேன். அப்புறம்  ‘What Risk?   I call it Opportunity!’  என்ற   னிuஷீtமீ   எனக்குப் பிடிக்கும் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இன்றைக்கு என் ஸ்கூட்டி புதிய சுதந்திரச் சிறகை எனக்குத் தந்துள்ளது!
நான் எழுதியதில் எனக்குப் பிடித்தது...

* தனிமைப் பொழுதுகளில்
உனது கோப்பையில் பருகுகிறேன்
நமக்கான தேநீரை.

* ஒரு இல்லத்தரசி
தேவதையாகப் பரிமளிக்க
ராட்சஸி போல
உழைக்க வேண்டியுள்ளது.

* வார்த்தைகள் கூட
வாசமிக்கவைதான்.
அது பாசத்தைச் சுமந்து
மலரும் போது.

* இம்மியளவும்
சஞ்சலம் ஏதுமன்றி
சமாதானம்
செய்து கொள்கிறது
சாத்தானின் மனது.

* சாளர வானம் போதும்
சாகசப் பறவை நான்!