என் சமையலறையில்!



* திக்கான பாலை கொதிக்க வைத்து அதனுடன் சிறிது மில்க்மெய்டு, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்துக் கலக்கவும். இடியாப்பத்தில் இந்தப் பாலை ஊற்றிச் சாப்பிட தனிச்சுவை!
- வெ.தாரகை, கும்பகோணம்-1.

*  எண்ணெய் கத்தரிக்காய் கறிக்கு வதக்கும் போது, அது சூடாக இருக்கும்போதே அரை கப் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறினால் ருசி கூடும்.

* பொரி உருண்டை, கடலை உருண்டை செய்யும் போது, வெல்லப்பாகில் சிறிது இஞ்சிச்சாறு சேர்க்கவும். சுவை பிரமாதமாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.

* மைதா மாவை ஒரு மெல்லிய துணியில் கட்டி ஆவியில் வேக வைக்கவும். அதில் ஓமம், சீரகம், உப்புச் சேர்த்துப் பிசைந்து சீடை செய்தால் மொறு மொறுவென இருக்கும்.

- கிருத்திகா, பூனாம்பாளையம்.

* புளி உப்புமா செய்யும் போது, காய்ந்த மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் சேர்த்தால் தனிச்சுவை.
- பி.கவிதா, கோவிலாம்பூண்டி.

* வெண்டைக்காய், கத்தரி, முருங்கைக்காய் - மூன்றிலும் வற்றல் குழம்பு வைக்கப் போகிறீர்களா? சிறிது கடுகு, வெந்தயம், சிறிய துணுக்கு மஞ்சள், ஒன்றிரண்டு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, இடித்து குழம்பு கொதித்து கீழே இறக்கும் முன் போட்டால், வாசனை கமகமக்கும்.

- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

* இட்லி மிளகாய்ப் பொடிக்கு, சிறிது தேங்காய்த் துருவலை வறுத்துச் சேர்த்தோ, சிறிது கொப்பரைத் துருவல் கலந்தோ அரைத்தால் சுவையும் மணமும் கூடும். கர்நாடகாவில் இதை ‘சட்னி பொடி’ என்று கூறுகிறார்கள்.

-ஆர்.பத்மப்ரியா, சென்னை-49.

* மோர்க் குழம்புக்கு, கடலைப் பருப்புக்கு பதிலாக துவரம் பருப்பை ஊற வைத்து அரைத்து விடவும். வித்தியாசமான ருசி கிடைக்கும்.

* கேசரி செய்வதற்கு முன், ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைக்கவும். பிறகு, சர்க்கரைப்பாகு வைத்து கேசரி கிளறவும். அதிக நெய் தேவைப்படாது... ருசியும் இரட்டிப்பாகும்.

* தண்ணீரிலேயே போட்டு வைத்திருந்தால், வாழைக்காய் நான்கைந்து நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்.

* மைதா, ரவா தோசைக்கு கரைத்த மாவிலேயே மொத்தமாக தேவையான அளவு எண்ணெயை ஊற்றிவிடவும். ஒவ்வொரு தோசைக்கும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்க வேண்டியிருக்காது. தோசையும் வார்ப்பதற்கு நன்றாக வரும்.

- கே.ராகவி, வந்தவாசி.

* வெஜிடபிள் பிரியாணி பரிமாறுவதற்கு முன், சிறிது ஃபிரெஞ்ச் ஃபிரை முறுகலாகப் பொரித்து கலந்தால் அட்டகாசமான ருசி!

- என்.கோமதி, நெல்லை-7.

* கத்தரிக்காய் கூட்டோ, பொரியலோ செய்து முடித்ததும் அதன் மேல் கொஞ்சம் கடலை மாவு தூவவும். 5 நிமிடம் கழித்து இறக்கவும். ருசியும் மணமும் தூக்கலாக இருக்கும்.

- இ.டி. ஹேமமாலினி, சென்னை-23.

* பாகற்காயை வதக்கும்போது, புளிக்கு பதில் சிறிது எலுமிச்சைச்சாறு பிழிந்து விடவும். காய் பச்சை நிறம் மாறாமலும், துளிகூட கசப்பில்லாமலும் இருக்கும்.
* உருளைக்கிழங்கை அரை வேக்காடாக வேக வைத்து, நன்கு வடித்தெடுக்கவும். பிறகு, அதில் ரோஸ்ட் செய்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது. 

- ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை.

* புடலங்காயை பாதி வெட்டி சமைத்துவிட்டு, மீதியை ஃப்ரிட்ஜில் அப்படியே வைத்தால் வெம்பி விடும். புடலங்காயை வட்ட வட்டமாக வெட்டி, உப்புக் கலந்த நீரில் போட்டு, காற்றுப் புகாத ஜாடியில் நீரோடு வைத்து மூடி, ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரமானாலும் நன்றாக இருக்கும்.

- ஹெச்.அஹமது தஸ்மிலா, கீழக்கரை.

* குழம்பில் பெருங்காயம் தூக்கலாகிவிட்டதா? ஒரு பெரிய வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி குழம்பில் போட்டுக் கொதிக்க விடவும். பெருங்காய வாசனை நீங்கிவிடும்.

* மாங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சாம்பார், ரசம் செய்யும் போது அரை டீஸ்பூன் சேர்க்கவும். பிரமாதமான ருசி கிடைக்கும்.

- கி.சினேகா பூனாம்பாளையம்.