முட்டை இல்லா ப்ளூ பெர்ரி பான்கேக்ஸ்



ராஜேஸ்வரி விஜயானந்த் www.rakskitchen.net


என்னென்ன தேவை?

மைதா    1 கப் (கோபுரமாக குவித்தது) 
பால்     1 கப்
ப்ளூ பெர்ரி     3/4 கப்
சர்க்கரை     1 டேபிள்ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய்     1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர்     1 டேபிள்ஸ்பூன்
உப்பு     1/2 டீஸ்பூன்
தேன்     மேலே ஊற்றி பரிமாற.

எப்படிச் செய்வது?

1. முதலில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு
ஆகியவற்றை வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
2. விஸ்க் கொண்டு நன்கு கலக்கவும். நடுவே ஒரு குழி செய்யவும்.
3. இதில் பால் மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்க்கவும்.
4. விஸ்க் கொண்டு, நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும். தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்.
5. ப்ளூ பெர்ரி சேர்க்கவும்.
6. லேசாக கலக்கவும். 10 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.
7. ஒரு இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்யவும். அடுப்பை அணைத்து, 5 நிமிடம் கழித்து மீண்டும் அடுப்பை ஏற்றி மிதமான தீயில் வைக்கவும். சிறிது வெண்ணெயை தோசைக்கல்லில் தடவவும். 1/4 கப் அளவு மாவை எடுத்து சூடான கல்லில் ஊற்றவும்.
8. கரண்டி கொண்டு பரப்ப வேண்டாம். அதுவே ஊற்றும்போது வட்டமாக பரவும். அப்படியே விட்டுவிட வேண்டும். அதற்கு தகுந்தாற் போல மாவின் பால் அளவை மாற்றிக் கொள்ளவும்.
9. மூடி இட்டு 2 நிமிடம் மிதமான தீயிலே வேக விடவும். மூடாமலும் வேக வைக்கலாம். மூடினால் எளிதில் வெந்துவிடும். தோசை திருப்பி கொண்டு திருப்பவும்.
10. மிதமான தீயில் மீண்டும் பொன்னிறமாக மாறும் வரை வேக விடவும். சுட்டு ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, தேனை மேலே தாராளமாக ஊற்றி உடனே பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

♦ பேக்கிங் பவுடர் நிறைய சேர்ப்பதால் எளிதில் வெந்தும் விடும்... மிருதுவாகவும் இருக்கும்.
♦ அடுக்கிய பான்கேக்ஸ் மேலே வெண்ணெய் வைத்தும்பரிமாறலாம்.
♦ ப்ளூபெர்ரி இல்லாமல் வெறும் பான் கேக்காகவும் செய்யலாம். அதற்கு, மாவில் 1/2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் கலக்கிக் கொள்ளவும்.