நல்ல மாற்றமுண்டு ஏற்றமுண்டு உலகிலே!



ஜன்னல் வழியாக, தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, முகம் வருடும் காற்று... தூக்கம் கலையும் நொடியில் கேட்கும் குயிலின் ஓசை... சாப்பாடு ஊட்டும் போது பார்க்கக் கிடைக்கும் அணில் குட்டியின் விளையாட்டு...

மருதாணிப்பூவின் மகரந்த வாசனை... எட்டு வைத்து நடந்து தடுக்கி விழும் போது கால்கள் உணரும் மண்ணுடனான பரிச்சயம்... இப்படி எத்தனையோ பார்த்தல்களும் கேட்டல்களும் குழந்தைகளுக்கு மிக அழகாக இயற்கையையும் இயங்குதலையும் கற்றுத் தருகின்றன ‘‘வளரும் சூழல், குழந்தைகளின் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அடைக்கப்பட்டிருக்கும் ஜன்னல்,

சுழலும் மின் விசிறி, தினமும் பார்க்கும் அதே முகங்கள், தொலைக்காட்சிப் பெட்டி கொட்டிவிட்டுப் போகும் அழுகுரல்கள், தொடுதிரையில் தனித்து ஆடும் கார்ட்டூன் விளையாட்டுகள்... பெரும்பாலும் இப்படியான இயந்திரச் சூழலே குழந்தைக்கு வாய்க்கிறது. இயற்கைச் சூழலை இழந்த நிலையில் அவர்களின் மூளை குறிப்பிட்ட காலத்தில் தூண்டப்படாமல் விடப்படுகிறது. ‘கருவிலேயே கற்பிக்கிறோம்’ என்று ஃபிளாஷ் கார்டையும் வண்ணங்களையும் உரிய பருவத்துக்கு முன்பே அறிமுகப்படுத்துவதால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக மாற்றப்படுகிறார்கள். அந்தந்த காலகட்டத்தில் குழந்தைகளின் மூளையில் செல்கள் தூண்டப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்கிறார் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் அருணா விண்ணரசி.

‘‘எல்லாக் குழந்தைகளுமே போதுமான திறன்களுடன்தான் பிறக்கிறார்கள். இதில் 20 சதவிகிதம் மரபுரீதியான விஷயங்கள் பதிவாகியிருக்கும். பிரசவ காலத்தில் தாய்க்குக் கொடுக்கும் சத்தான உணவும் மகிழ்ச்சியான உணர்வும் மரபான விஷயங்களைக் கூட மாற்றக்கூடும். மீதம் உள்ள 80 சதவிகித அறிவை அனுபவங்களின் வாயிலாகவே குழந்தைகள் பெறுகிறார்கள்.
3 வயதுக்குட்பட்ட காலத்தில் மூளை வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். இதற்குள் மூளையின் அனைத்து பகுதிகளிலும் இணைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தூண்டப்படும் செல்கள் அதற்கான வேலைகளை சிறப்பாக செய்து விடுகின்றன.

பிறந்த குழந்தை எதையும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது. முதல் 5 ஆண்டுகளில் பெறும் அனுபவங்களே வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. சத்தான உணவும் விளையாட்டின் மூலம் கிடைக்கும் உடற்பயிற்சிகளும் ஆரோக்கியத்தை பலப்படுத்தும். குழந்தை விரும்பும் மொழியான விளையாட்டின் வழியாகத்தான் எந்த விஷயமும் ஊட்டப்பட வேண்டும். பார்ப்பது, கேட்பது, செய்து பார்ப்பது என புலன்களின் வழியாக மூளை எந்த அளவுக்கு பயன்படுத்தப்படுகிறதோ அந்தளவுக்கு வளர்ச்சியும் இருக்கும்.

ஒரு விஷயத்தை எட்டி நின்று பார்த்து கற்றுக் கொள்வதைவிட செய்து பார்க்கும் போது - தொடுதல், புரிதல், கேட்டல், புதிதாக மாற்றுதல் என பல செல்களும் மூளையில் தூண்டப்
படுகின்றன. இதற்கான வாய்ப்புகள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும். நட்சத்திரங்களை எண்ணுவது கணிதம். கண்ணாமூச்சியில் ஓசையைக் கூர்ந்து கவனிக்கலாம். பல்லாங்குழி, அஞ்சாங்கல் விளையாட்டுகள் மூட்டு, தசைகளுக்கு வேலை அளித்து மூளையிலும் இணைப்புகளை உருவாக்குகின்றன. இனிய இசை, அன்பான அணுகுமுறை, இயற்கைக்கு நெருக்கமான பகிர்வுகள், செல்லப் பிராணிகள்,

விரியும் பூக்கள், பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் அனைத்தும் சேர்ந்தே குழந்தைகளின் அறிவுக்கான ஊற்றுக் கண்களைத் திறக்கின்றன. மூளையில் இயக்கப்படும் இந்தத் தூண்டல்களே நாளை குழந்தை என்னவாக வரப்போகிறது என்பதைக் கட்டமைக்கிறது. எவ்வளவு பரபர சூழலில் வாழ்பவர்களாக இருந்தாலும் குழந்தைக்கான நேரத்தை ஒதுக்குவதில் பெற்றோர்
கவனம் செலுத்த வேண்டும்.

‘முடியாது’ என்பதற்கு 99 காரணங்கள் இருந்தாலும், ‘முடியும்’ என்பதற்கு ஒன்றாவது இருக்கும். குழந்தையுடன் இருக்கும் நேரம் அவர்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். துறுதுறுப்பான குழந்தை தன் சக்தியை வெளிப்படுத்த, விரும்பிய துறையில் விளையாட வாய்ப்பளிக்கலாம். இது பெற்றோரின் மிக முக்கியமான கடமை. குழந்தைக்கான நேரத்தைப் பிடுங்கி சம்பாதிக்கும் பணத்தைவிட முக்கியமானது அவர்களது மூளையில் சேமிக்க வேண்டிய விஷயங்களே!’’

மகிழ்ச்சி ஓட்டத்துக்கு ரெடி!

‘அப்பா, டப்பா, டுப்பா, தப்பா’ - தமிழிசை கோபத்தோடு அப்பாவைத் திட்டும் வார்த்தைகள் கூட மத்தாப்பு களே! அவளுக்குப் பிடித்த பாடல் தொலைக்காட்சியில் வரும் போது ரிமோட்டை பதுக்குகிறாள். சாப்பிட, தூங்க வைப்பதற்கு அம்மா சொல்லும் கதைகள் இவளது கற்பனைக் கம்பளத்தில் உருமாறி, தடம்மாறி புதுப்புது திசைகளில் பயணம் செய்கின்றன. வீட்டுக்கு வரும் பாட்டியை ‘இவங்கதானே கதையில் வந்து வடை சுட்டாங்க’ என்றபடி வரவேற்று நகைக்க வைக்கிறாள்.

‘பிரபா’ திரைப்படத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் தம்பதியின் மகளாக நடிக்கிறாள் தமிழிசை. இயக்குனர் நந்தன்-தேன்மொழி தம்பதியின் மகள் தமிழிசை. இரண்டே கால் வயதில் ஆலிவ் ஆயில் விளம்பரத்தில், இயல்பான நடிப்பால் எல்லோரையும் வியக்க வைத்த சுட்டிப் பெண். தமிழிசைக்குள் இருக்கும் நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளித்திருப்பது தமிழிசைக்கு வாய்த்திருக்கும் சூழலே. தமிழிசையை நடிப்புத் துறைக்கு அழைத்து வந்த காரணத்தை நினைவுகூர்கிறார் நந்தன்...

‘‘பாடல்களை கூர்ந்து கேட்பாள். சிறிய வயதிலேயே புகைப்படம் எடுத்தால் அழகாக போஸ் கொடுப்பாள். அப்படித்தான் ஆலிவ் ஆயில் விளம்பரத்தில் நடிக்க அழைக்கப்பட்டாள். மகிழ்ச்சி, சோகம், கோபம் என எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அப்படியே செய்து காட்டுவாள். ஷூட்டிங் ஸ்பாட்... அவளுக்கு விளையாட்டு மைதானம். இந்த நெருக்கம் நடிப்பை அவளுக்கு இயல்பாக்கியிருக்கிறது. பிடித்த காட்சியை திரும்பத் திரும்ப நடிப்பது போலவே, ஓய்வெடுக்க நினைத்தால் ‘இனி என்னால் முடியாது’ என்பதையும் அழுத்தமாக வெளிப்படுத்துவாள்.

இசை, பாட்டு, கதை, வார்த்தை விளையாட்டு, சுட்டித்தனமான பேச்சு என அவளது போக்கில் விடும் போது அவளது சிந்தனைத்தளம் விரிவடைந்து கொண்டே போகிறது. குழந்தைகளுக்கு மிகச்சரியான சூழலும் புரிதல் உள்ள பெற்றோரும் அமைந்து விட்டால் வெற்றிப் பாதையை வகுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பார்கள். அது மகிழ்ச்சியான ஓட்டமாக இருக்கும். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியும் அவளுக்கு சரளமாக வருகிறது. மொழி ஆளுமை கற்றலை எளிமையாக்கியிருக்கிறது. வகுப்பறையில் படிப்பதும் அவளுக்கு இன்னொரு விளையாட்டுதான். நடிப்பு, படிப்பு இரண்டுமே தமிழிசைக்கு இனிக்கிறது...’’

80 சதவிகித அறிவை அனுபவங்களின் வாயிலாகவே குழந்தைகள் பெறுகிறார்கள்!

(வளர்ப்போம்)
 ஸ்ரீதேவி