நான் நவீன சிரவணகுமாரன்! நகுல்



என் அம்மா

நொடிக்கொரு முறை உதிர்க்கிற ‘உம்மா’வும், நிமிடத்துக்கொரு முறை உச்சரிக்கிற ‘அம்மா’வுமாக நகுலின் அம்மா பாசம் கரை புரண்டு ஓடுகிறது. அம்மாவைப் பற்றிய அவரது ஒரு மணி நேர உரையாடலில், நடிகர் நகுல் காணாமல் போகிறார். அம்மாவின் மடி மீது தவழ்கிற மழலையாகவே மாறுகிறார்!

‘‘அம்மாதான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். சின்ன வயசு லேருந்து இப்ப வரைக்கும் எனக்கு அன்பை மட்டுமே கொடுத்து வளர்த்திருக்காங்க. அக்கா தேவயானி, அண்ணன் மயூர்னு ரெண்டு பேருக்கு அடுத்து பிறந்த கடைக்குட்டி நான். அதனால கூடுதல் செல்லம். அக்கா சினிமாவுல பிஸியாக ஆரம்பிச்ச நேரம்... அம்மா எப்போதும் அக்கா கூடவே ஷூட்டிங் போயிடுவாங்க. அந்த நேரம் நான் அம்மாவை பயங்கரமா மிஸ் பண்ணியிருக்கேன். அப்பாதான் என்னையும் அண்ணனையும் பார்த்துப்பார்.

சின்ன வயசுல நான் அம்மாவை அநியாயத்துக்குப் படுத்தியிருக்கேன். மும்பையில எங்க வீட்டுக்கும் நான் படிச்ச ஸ்கூலுக்கும் 1 கிலோமீட்டர் தூரம்தான். வழியெல்லாம் கடைகளா இருக்கும். தினம் எனக்கு ஏதாவது பொம்மை வாங்கிக் கொடுத்தாதான் வீட்டுக்கு வருவேன்னு நடுரோட்ல உட்கார்ந்து அடம் பண்ணியிருக்கேன். அம்மாவும் வேற வழியில்லாம வாங்கிக் கொடுத்துக் கூட்டிட்டு வருவாங்க. சாப்பாடு வேண்டாம்னு படுத்துத் தூங்கிடுவேன். இனிமே எங்கேருந்து எழுந்திருக்கப் போறான்னு, எனக்கு மிச்சம் வைக்காம எல்லாரும் சாப்பிட்டுப் படுத்துடுவாங்க. நடு ராத்திரியில எழுந்து, ‘பசிக்குது, சாப்பாடு வேணும்’னு அமர்க்களம்பண்ணுவேன்.

‘நீ என் வயித்துக்குள்ள இருந்தப்ப கூட இவ்வளவு படுத்தலைடா... தால் சாவல் பண்ணி வச்சிட்டு, பிரசவ வலி வந்ததும், கொட்டற மழையில உங்கப்பா கூட ஸ்கூட்டர்ல உட்கார்ந்து ஆஸ்பத்திரிக்கு போனேன். வெளியில வந்ததும் நீ படுத்தற பாடு தாங்க முடியலைடா’னு அம்மா அடிக்கடி சொல்வாங்க.

நடிப்புல பெரிசா இன்ட்ரஸ்ட்டெல்லாம் இல்லாத டைம்லதான் ‘பாய்ஸ்’ படத்துக்கு ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு கூப்பிட்டாங்க. முதல்ல நான் வேண்டாம்னுதான் சொன்னேன். அம்மாதான் என்னை என்கரேஜ் பண்ணி அனுப்பி வச்சாங்க. ஸ்க்ரீன் டெஸ்ட் போன இடத்துல ஒண்ணும் தகவல் சொல்லலை. நாம செலக்ட் ஆகலை போலனு அம்மாகிட்ட, ‘எனக்கு அந்தப் படம் பிடிக்கலைம்மா... படத்துல நான் ஹீரோ இல்லை. அதான் வேணாம்னு சொல்லிட்டேன்’னு பொய் சொல்லிட்டேன். அன்னிக்கு ராத்திரியே ஷங்கர் சார் ஆபீஸ்லேருந்து போன். நான் செலக்ட் ஆயிட்டதா சொன்னதும், எனக்குத் தலை, கால் புரியலை. உடனே அம்மாகிட்ட போய், நான் பொய் சொன்னதையும், படத்துல செலக்ட் ஆனதையும் சொன்னேன். அம்மாவுக்கு அவ்ளோ
சந்தோஷம்!

‘பாய்ஸ்’ படம் பெரிய ஹிட். ஆனாலும், அதுக்குப் பிறகு எனக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. எனக்கு ஆர்மில சேரணும்னு ஆசை. அதனால தான் உடம்பைக் குறைச்சேன். அதுவும் ஒர்க் அவுட் ஆகலை. சரியான படங்களும் அமையலை. ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகான நாலு வருஷ வாழ்க்கையை நான் திரும்பிக்கூடப் பார்க்க விரும் பலைனுதான் சொல்லணும். உடம்பைக் குறைக்கிறதுக்காக கடுமையான டயட், எக்சர்சைஸ்னு வெறித்தனமா இருந்த நேரம் அது. முதல்ல சில நாள், சரியான வழிகாட்டுதல் இல்லாம, தப்புத் தப்பா டயட் பண்ணிட்டிருந்தேன். தவறான டயட், நம்ம மனசையும் பாதிக்கும்கிறதை அப்பதான் புரிஞ்சுக்கிட்டேன். பயங்கரமான கோபம் வரும்.

டென்ஷனாவேன். எல்லா வெறுப்பையும் எங்கம்மா மேலதான் காட்டியிருக்கேன். ஒரு நாள்கூட அதுக்காக அம்மா என்கிட்ட கோபப்பட்டதில்லை. வேலைக்கும் போகாம, நடிப்பையும் தொடராம வீட்டுல வெட்டியா உட்கார்ந்துக்கிட்டிருந்ததை ஒருநாளும் சுட்டிக் காட்டினதில்லை. ‘நீ என்னிக்காவது ஒரு நாள் நிச்சயம் மேல வருவேடா... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு...’னு அடிக்கடி சொல்வாங்க. ஸ்கூல்ல படிக்கிற போது, பாடத்துல மார்க் குறைஞ்சாலோ,

ஏதாவது போட்டியில நான் தோத்துப் போனாலோ, ‘வெற்றி, தோல்வியைப் பத்தி என்னிக்குமே கவலைப்படாதே... ஜெயிச்சா சந்தோஷம். தோத்துப் போனா வருத்தப்பட வேண்டியதில்லை. அந்த அனுபவம்தான், அடுத்த முறை உன்னை வெற்றியை நோக்கி ஓட வைக்கும்’னு சொல்லியே வளர்த்தாங்க. சினிமாவுல வாய்ப்புகள் இல்லாத நேரத்துலயும் அம்மா இதே வார்த்தைகளாலதான் எனக்கு தைரியம் சொன்னாங்க. அம்மாவோட வார்த்தைகள் பலிச்சது.

‘காதலில் விழுந்தேன்’ படம் எனக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அந்தப் படத்துக்காக ஒரே மாசத்துல10 கிலோ வெயிட் குறைச்சேன். எங்கக்கா தேவயானி லவ் மேரேஜ் பண்ணிட்டுப் போனதுல, எங்கம்மாவும் அப்பாவும் பயங்கர அப்செட். எப்போதும் தலை நிமிர்ந்து, கம்பீரமா நடக்கிற எங்கம்மா, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தலைகுனிஞ்சிட்டாங்க. வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டாங்க. அம்மாவையும் அப்பாவையும் அந்தக் கோலத்துல பார்க்கவே எனக்குக் கஷ்டமா இருந்தது. அவங்களை மறுபடி தலைநிமிர்ந்து வெளியில நடமாட வைக்கணும்னு எனக்குள்ள ஒரு வைராக்கியம்... அதுவரைக்கும் சினிமாவுல ஹீரோவாகிறதை பத்தி ஐடியா இல்லாத எனக்கு அப்பதான் ஒரு வெறிவந்தது.

என் நல்ல நேரம்... ‘காதலில் விழுந்தேன்’னு ஒரு நல்ல படம் அமைஞ்சு, என் கனவு நனவாச்சு. ஒரு ஹீரோவோட அம்மாவா, எங்கம்மா முகத்துல தொலைஞ்சு போன சிரிப்பையும் சந்தோஷத்தையும் பார்த்தேன். அந்த சிரிப்பையும் சந்தோஷத்தையும் அவங்க முகத்துல கடைசி வரைக்கும் பார்த்துக்கிட்டேஇருக்கணும்னு ஆசைப்படறேன்.

நிறைய நல்ல படங்கள்... சவாலான கேரக்டர்ஸ்னு என்னோட செகண்ட் இன்னிங்ஸ் சந்தோஷமா போயிட்டிருக்கு. சமீபத்துல நான் நடிச்ச ‘வல்லினம்’ படத்துக்குப் பரவலா நல்ல ரெஸ்பான்ஸ். அம்மாவுக்கும் ரொம்பப் பிடிச்ச படம் அது. தன் மகன் நடிச்ச படம்னு ஸ்பெஷல் கண்ணாடி போட்டுக்கிட்டுப் பார்க்காம,ரசிகர்களோட ரசிகரா உட்கார்ந்து ரசிப்பாங்க. அவங்களோட விமர்சனத்துல உண்மை இருக்கும். அவங்களோட அந்த வெளிப்படையான குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தோளுக்கு மேல வளர்ந்துட்டா தோழன்னு சொல்வாங்க. எங்கம்மாவைப் பொறுத்தவரைக்கும் நான் இன்னும் அவங்க மடியில தவழற குழந்தைதான். ‘சோனு’ ‘நன்னு’னு செல்லப் பேர் வச்சுக் கூப்பிட்டு, இப்பவும் என்னைக் கொஞ்சுவாங்க. அம்மா ரொம்ப ஃப்ரெண்ட்லி. அக்காகூட ஷூட்டிங் போன போது, லைட் பாய்லேருந்து, டச்சப் பாய் வரைக்கும் எல்லார்கிட்டயும் அன்பா பேசி பழகுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்.

இப்ப நான் ஹீரோவாகி, ஷூட்டிங் போகும் போது, என்னைச் சந்திக்கிற எல்லாரும் கேட்கற முதல் கேள்வி, ‘அம்மா எப்படி இருக்காங்க...’ன்றதுதான். அம்மாவோட பிளஸ்ஸும் மைனஸும் அந்த அதீத அன்புதான். ஏன் மைனஸ்னு சொல்றேன்னு பார்க்கறீங்களா....’ ஒரு படத்துக்காக வெயிட்டை குறைக்கணும்னு மணிக்கணக்கா ஜிம்ல ஒர்க் அவுட் பண்ணிட்டு, டயட் சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டிருப்பேன். அந்த நேரம் பார்த்து, மணக்க மணக்க பிரியாணியும் ஃபிஷ் கறியும் செய்து வச்சுக்கிட்டு, சாப்பிடச் சொல்வாங்க. அந்த அன்பை என்னனு சொல்ல?

அம்மாவுக்கு நான் நிறைய செய்யக் கடமைப்பட்டிருக்கேன். எனக்கு எப்போதும் அம்மா கூடவே இருக்கணும்னு ஆசை. அப்படி இல்லாதப்ப, எனக்கு அந்தக் குறை கூடாதுனு வாழைப்பழம் சாப்பிடற ஒரு குரங்கு பொம்மையை அம்மாவுக்காக வாங்கிக் கொடுத்திருக்கேன். ஒரு ஃபாரின் கார் வாங்கணும். அதுல எங்கம்மா-அப்பாவை உட்கார வச்சு, ஊரைச் சுத்தி வரணும்னு ரொம்ப நாளா ஒரு ஆசை.

நான் சின்னவனா இருந்தப்ப, தன் அம்மா-அப்பாவைத் தன் தோள் மேல சுமந்துக்கிட்டுப் போன ராமாயண காலத்து சிரவணகுமாரன் கதையை அடிக்கடி சொல்லியிருக் காங்க. அது என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு எங்கம்மா-அப்பாவுக்கு வயசானா, அவங்களை நானும் அப்படி தோள்ல சுமந்தாவது அவங்க விரும்பற இடங்களுக்குக் கூட்டிட்டுப் போவேன். கேட்கறவங்களுக்கு இது செயற்கையா தெரியலாம். ஆனா, இதுதான் உண்மை. அம்மாவை மனசுல சுமக்கிற ஒருத்தனால, தோள்ல சுமக்க முடியாதா என்ன..?’’

அத்தனை நேரம் குழந்தையாகக் குதூகலித்த நகுல், திடீரென தாயாகி, தன் அம்மாவைக் கட்டி அணைக்கிறார். அந்த அணைப்பே சொல்கிறது அவரது அன்பின் அழுத்தத்தை!
‘‘ஒரு படத்துக்காக வெயிட்டை குறைக்கணும்னு மணிக்கணக்கா ஜிம்ல ஒர்க் அவுட் பண்ணிட்டு, டயட் சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டிருப்பேன். அந்த நேரம் பார்த்து, மணக்க மணக்க பிரியாணியும் ஃபிஷ் கறியும் செய்து வச்சுக்கிட்டு, சாப்பிடச் சொல்வாங்க. அந்த அன்பை என்னனு சொல்ல?’’

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்