ஒரு கேள்வி... ஒரு மனசு!



மிகப் பிடித்த திரைப்பட நடிகை யார்? ஏன்?
நஸ்ரியா ரொம்பப் பிடிக்கும்.
ஏன்னா, அவங்க ஆளும்
துறுதுறு...
அவங்க கண்ணும் துறுதுறு!
- ஸ்ரீநிதி அசோகன்

சோம்பேறிப் பொழுதும் நீங்களும்... என்ன செய்வீர்கள்
அப்போது?
ஜில்லுனு இருக்குற தண்ணியில சும்மா சில்லுனு ஒரு குளியலை போட்டுட்டு வந்தா அத்தனை சோம்பலும் சல்லுனு பறந்துடாது?
பிரியவர்ஷிணி அசோகன்

குழந்தைகளிடம் வாங்கிய பல்பு?
நான்: கண்ணா தப்பு பண்ணக் கூடாது.
அப்படிப் பண்ணினா சாமிக்குத் தெரிஞ்சிடும்.
குழந்தை: சாமி எங்க இருக்கார்?
நான்: அவர் எல்லா இடத்திலும் இருக்கார்.
குழந்தை: அப்ப ஏன் நம்ம
கண்ணுக்கு அவர் தெரிய மாட்டேங்குறார்?
நான்: பூஜை ரூம் போட்டோல இருக்காரே!
குழந்தை: அப்டின்னா அவர் செத்துப்
போய்ட்டாரா?
நான்: ஙே..!
- வர்ஷா

நண்பர்கள்... உங்களைப் பொறுத்த வரை?
நண்பர்கள்கிறவங்க உப்பைப் போல!
இல்லாமலும் இருக்க
முடியாது...
அதிகமா சேத்துக்கிட்டாலும் சீக்கு வந்துரும்!
- பாரு குமார்

சின்னச் சின்ன ஆசைகள் மூன்று..?
1. வாழ்நாள் முடியறதுக்குள்ள எந்தெந்த நாட்டையெல்லாம் பார்க்க முடியுமோ அத்தனையையும் பார்த்துடணும்...
2. தனியா தொழில் தொடங்கி, ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட கஷ்டப்படுறவங்க வீட்டுல எல்லாம் அன்னவிளக்கு ஏத்தி வைக்கணும்...
3. ரொம்பவும் பின்தங்கியுள்ள இமாலய கிராம மக்களுக்கு என்னாலான உதவிகளை
செய்யணும்.

-சாஷ்வதி கோஷ்

நீங்க தீர்க்கமாக எடுத்த முடிவொன்று?
‘கேன்சராக மாறலாம்... கருப்பை அறுவை சிகிச்சைதான் தீர்வு’ என டாக்டர் சொல்லியதும், 70 வயதில் எதுக்கு அதெல்லாம் என யோசிக்கவில்லை... பயப்படவில்லை...
சட்டென முடிவெடுத்தேன்... ‘சரி... பண்ணிக்குவோம்’ என சிகிச்சை முடிந்து, இதோ 2 வருடங்கள்
ஆகிறது. பிள்ளைகளுக்குத்
தெம்பூட்டியபடி இருக்கிறேன்!

- சரோஜா பன்னீர்செல்வம்

பிறரால் ஏமாற்றப்படும்போது அதனை எப்படிக் கடக்கிறீர்கள்?
இவரிடம் ஏமாந்ததால் நாம்
எதிலும் குறைந்துவிடவில்லை என நினைத்துக் கடப்பேன்.

- நிர்மலா ஸ்ரீதரன்

வாழ்க்கை ஒளியிழந்து காணப்படும் தருணங்களில்
ஒளியேற்றும் அந்தப் பாவை விளக்கு எது?
குழந்தைகளின் அன்பு!
- மாலதி ஸ்ரீநிவாசன்

சிறு வயதுத் தோழி பற்றிய ஞாபகக் குறிப்பொன்று..?
அவள் பவானி. என் ஆரம்பப் பள்ளித் தோழி.
அன்பும் பண்பும் தைரியமும் அதீத பொறுப்பும் நிறைந்தவள்.
‘இத்தனை சிறிய வயதில் இத்தனை
முதிர்ச்சியா’ என ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன்.

அதற்கான பதில் அவளது கிராமத்து வீட்டுச் சூழலைக் கண்டதும் கிடைத்தது...
தன் தந்தை, தம்பி, மனநிலை சரியில்லாத தாய் என அனைவரையும் ஒரு தாயின் இடத்தில் நின்று அவள் கவனித்துக் கொண்டிருந்தாள்.
மிக உன்னதமான பெண்... இப்போதும் அவள் எங்கிருந்தாவது இதனை வாசிக்கக் கூடும் என்கிற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.
என்றும் அன்புனக்கு பவானி...
- யசோதா கணேஷ்குமார்

அந்த உயிர் உருக்கும் வார்த்தை எது? ஏன்?
எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன்னைத்தானே உருக்கிக் கொள்கிறவள்தான் நம் அம்மா... ‘அம்மா’ என்கிற வார்த்தையே என்னைப் பொறுத்த வரை உயிர் உருக்கும் வார்த்தை!
- ராதா வடுவூர்